’மே 1 – தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்’

செய்திகள்
s2 45 Views
  • May Day
  • May Day
Published: 01 May 2024

Loading

உலகெங்குமுள்ள தொழிலாளர்களுக்கு எனது ‘மே தின’ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மேற்கத்திய நாடுகள் மாறிய பின்னரும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ’அதிக உற்பத்தி, அதிக லாபம்’ என்ற ஒரே குறிக்கோளோடு உணவு உண்ணவும், உறங்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் கூடச் செய்ய விடாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள்.

இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற ’8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணிநேர ஓய்வு’ என்று போராடிப் பெற்றதே ’மே 1 அல்லது சர்வதேச தொழிலாளர் தின’மாக அனுசரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நாடுகளைக் கடந்து ’தொழிலாளர்கள்’ என்ற ஒற்றை அடையாளத்தோடு அணிதிரட்டப் படவும், அதன்மூலம் உற்பத்தி முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து ஏழை, எளிய தொழிலாளர் வர்க்கங்களுக்கான அரசுகளை அமைக்கவும் வேண்டுமென்ற உணர்வுகளை ஊட்டுவதே ’மே 1 – தொழிலாளர் தின’த்தின் நோக்கமாகும்.

பல்லாண்டு காலம் போராடி, அல்லல்பட்டு, ரத்தம் சிந்திப் பெறப்பட்டதே அந்த உரிமை ஆகும். அதன் மகிமையை முழுமையாக உணராமலேயே இயந்திரத்தனமாக ’மே1’ ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அது தொழிலாளர்களுக்கான தினமாகத் துவங்கப் பட்டிருந்தாலும், வர்க்க விடுதலையையும், உழைக்கும் வர்க்கம் ஆட்சி-அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்கான நோக்கத்தை நிறைவேற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்தாலும், நிறுவனப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிந்தாலும், உதிரிப் பாட்டாளிகளாக இருந்தாலும், ஜாதி, மொழி, இனம், தேச எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு, அதற்கு முன்னோடியாக நாம் வாழுகின்ற தமிழ் மண்ணில் உழைக்கின்ற வர்க்கம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றை சிந்தனையில் செயல்பட ’மே 1 ஆம் நாள்’ உறுதி ஏற்றிட அனைத்து உழைப்பாளிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
01.05.2024