புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால வெற்றிப்பயணத்தை நினைவு கூறும் வகையில் 2022 டிசம்பர் 15 அன்று விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் – அழகாபுரியில் சம நீதி – சமூக நீதி – சமய நீதியை வென்றெடுக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள்; ஆன்மீகப் பெரியோர்கள்; தோழமை கட்சிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டுத் தொடக்கம் (கொடியேற்றம்)
புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டைச் சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மாநாடு திடல் வரை இருபுறமும் சிகப்பு – பச்சைக் கொடி பட்டொளி வீசி பறந்த காட்சி – விழா கோலமாக இருந்த நிலையில் வாழும் புரட்சியாளர் டாக்டர் அய்யா அவர்கள் மாநாட்டில் திரண்டு இருந்த இலட்சக்கணக்கான மக்களைக் காண ஆவலோடு சரியாக மாலை 3:30 மணியளவில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் புடை சூழ மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார்கள். அந்நேரம் திடலில் வான வேடிக்கைகள் விண் அதிர; மேள தாளங்கள் முழங்க; தாரை தப்பட்டைகள் ஒலிக்க; கரகோஷம் விண்ணைப் பிளக்க; தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டிருந்த வானுயரக் கொடிக் கம்பத்தில் எளிய மக்களின் சுதந்திரக் கொடியான, புதிய தமிழகம் கட்சியின் சிவப்பு – பச்சை வர்ணக் கொடியைத் தொண்டர்களின் பலத்த கரகோஷங்களுக்கும்; வெல்லட்டும்! வெல்லட்டும்! புதிய தமிழகம் வெல்லட்டும்!; வாழ்க! வாழ்க! வாழ்கவே! புதிய தமிழகம் வாழ்கவே!; வளர்க! வளர்க! வளர்கவே! புதிய தமிழகம் வளர்கவே!; வாழ்க! வாழ்க !வாழ்கவே! டாக்டர் அய்யா வாழ்கவே! என்ற கோஷங்களுக்கும் மத்தியில் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்கள், கொடியேற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்கள்; அப்போது மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களும் உடனிருந்தார். பின்பு, பல இலட்சக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் பார் பெருத்ததோ; படை பெருத்ததோ என்ற சொல்லுக்கு இலக்கணமாய் பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் டாக்டர் அய்யா அவர்கள் மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்து மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்க வந்திருந்த தமிழகத்தின் சமூக நல்லிணக்க தலைவர்களோடு ஒன்றாக அமர்ந்து நாட்டுப்புற கலை – இசை நிகழ்ச்சிகளைப் புன்முறுவலோடு கண்டு களித்தார். இந்த கண் கொள்ளாக் காட்சிகளுக்கு இடையே மாலை சரியாக நான்கு மணி அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டு மேடையில் தலைவர் அவர்கள் நின்று புதிய தமிழகம் கட்சியினரைப் பார்த்து கையை அசைத்த பொழுது, எழுந்த கரகோஷமும் டாக்டர் அய்யா எனும் ஆரவாரமும் வானைப் பிளந்தது. இந்த நிகழ்வோடு புதிய தமிழகம் கட்சியின் வரலாற்றில் 25 ஆவது வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாடு நிகழ்வுகள் துவங்கப்பட்டது.
வரவேற்புரை
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆவது வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாட்டின் நாயகனாக மேடையில் வீற்றிருக்கிற தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்களே.! எழுச்சியுரை ஆற்ற இருக்கிற புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே!
புதிய தமிழகம் கட்சியை வாழ்த்தி பாராட்டி ஆசியுரை வழங்க வந்திருக்கின்ற ஆன்மீக பெரியோர்கள் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் திரு.S வேதாந்தம் ஜி அவர்களே! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் ஜீயர் திரு.சடகோப ராமானுஜர் அவர்களே! தமிழ்நாடு விஷ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் மற்றும் நாக சக்தியம்மன் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் திரு. ஜெகத்குரு குரு பாபுஜி சுவாமி அவர்களே!
மேலும், இம்மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நமது இயக்கத்தின் பெருமைகளை, வரலாறுகளை எடுத்துரைத்து மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்கி சிறப்புச் சேர்க்க வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் திரு ஆர்.விஸ்வநாதன் அவர்களே!, முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு. கடம்பூர் செ.ராஜூ அவர்களே! முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு. கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்களே! முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழ கருப்பையா அவர்களே! இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு.தி. தேவநாதன் யாதவ் அவர்களே! தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு.உ.தனியரசு அவர்களே!
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு. N.R.தனபாலன் அவர்களே! பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களே! இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு.ரவி பச்சமுத்து அவர்களே! இந்திய குடியரசு கட்சி(அத்வாலே) தமிழ்நாடு மாநில தலைவர் திரு M.A.சூசை அவர்களே! தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திரு.கே.சி.திருமாறன் ஜி அவர்களே! பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திருமதி மா. திலகபாமா அவர்களே! தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க தலைவர் திரு. A.கணேசன் அவர்களே! தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்க தலைவர் திரு எம்.தங்கராஜ் அவர்களே! தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் எம். சிவலிங்கம் அவர்களே! இங்கு பெருந்திரளாக கடல் அலை போல் கலந்து கொண்டுள்ள டாக்டர் அய்யா அவர்களின் பேரன்பைப் பெற்ற புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளே! தொண்டர்களே.! தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களே.! இளைஞர்களே.! பெரியோர்களே.! தாய்மார்களே.! உங்கள் அனைவருக்கும் எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து, வருக வருக என அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.!
மாநாட்டு அழைப்பிதழ்
வெள்ளி விழா மாநாட்டு அழைப்பிதழ்
வெள்ளி விழா மாநாட்டு அழைப்பிதழ்
புதிய தமிழகம் கட்சியின் அறிமுகம்:
தமிழகத்தில் திராவிட சித்தாந்தங்களுக்கு மாற்று சமூக, அரசியல் இயக்கமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, உதித்தெழுந்த இயக்கமே புதிய தமிழகம் கட்சி. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு எனும் சமூக இயக்கமாகத் தோன்றி, 1997-ஆம் ஆண்டு இதே டிசம்பர் திங்கள் 15-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி என்ற மகத்தான அரசியல் கட்சியாக, தமிழக மக்களின் பாதுகாவலனாகத் தன்னை நிலைநிறுத்தியது. கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தக்குடி என்ற பெருமைக்குரிய தமிழர்களிடத்தில் தமிழ் மண்ணில் தொன்றுதொட்டு நிலவிவந்த சமத்துவ உணர்வுகள் மங்கி, ஊரெங்கும் நாடெங்கும் சாதிய மற்றும் பொருளாதார பேதங்களே தலைதூக்கி நின்றன. ஏறக்குறைய நூறாண்டுகாலம் போராடிப்பெற்ற சுதந்திரம் கடைக்கோடியில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் சென்றடையவில்லை. ஜமீன்கள், பாளையப்பட்டுகள், ஆங்கிலேயத் துரைமார்கள் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டு, ஜனநாயகம் அரசியல் சாசனமானது. அது ஏட்டளவிலே இருந்ததே தவிர செயலுக்கு வரவில்லை. அனைத்து மக்களுக்கும் சமத்துவமும், சுதந்திரமும், சகோதரத்துவமும் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் எதார்த்தமாகின. அதிகார மமதையில் ஏழை, எளிய தமிழ் வேளாண்குடி மக்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டன; தீண்டாமைகள் தலைவிரித்தாடின. சுதந்திரத்திற்காகப் போராடியவர்களாலும், ஆட்சியாளர்களாலும் கூட அந்தச் சுதந்திரத்தை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியவில்லை. முந்தைய ஆட்சிகளை மிட்டா மிராசுகளுடைய ஆட்சி என்று ஏசி, முற்போக்கு வீராவேசம் பேசி வந்தவர்களும் ஒடுக்குமுறையாளர்களின் கூட்டாளிகள் ஆயினர். கீழவெண்மணிகளும், விழுப்புரங்களும், உஞ்சனைகளும், போடி-மீனாட்சிபுரங்களும், அய்யாபுரங்களும், செகுடந்தாளிகளும் வன்முறைக் களங்களாயின.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் காலத்தில் மட்டும் அரிசனக் கரிசனம் பேசி வந்தவர்கள் ஆபத்துக் காலங்களில் உதவவில்லை. அப்பொழுது அந்த மக்களுக்கு மதமாற்றம் என்ற ஒரு வழி மட்டுமே தென்பட்டது. ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன; அரசு இயந்திரமும் ஒடுக்குமுறையாளர்களோடு கைகோர்த்தது. அதனுடைய விளைவாக கொடியங்குளம் எனும் கொடுமை அரங்கேறியது. 44 சட்டமன்ற உறுப்பினர்கள், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அவர்களால் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் வாய்திறக்க முடியவில்லை. கட்சிக் கட்டுப்பாடுகள் அவர்களைக் கட்டிப்போட்டன. சமூகக் கொடுமைகளையும் பொருளாதாரக் கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டு, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது என்ற எல்லைக்கே இம்மண்ணின் மூத்தக்குடி மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். தேசியக் கட்சிகளும், சமூகநீதி பேசிய திராவிடக் கட்சிகளும் ஆண்ட இம்மண்ணில், கிராமந்தோறும் இரட்டைக்குவளைகளும், இரட்டைச் சுடுகாடுகளும், பேருந்துகளில் கூட இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கமுடியாத நிலைகளும், கூடுதலாகக் காசு கொடுத்தாலும் கூட தங்களுடைய முடியைக் கூட அலங்கரித்துக் கொள்ள முடியாத நிலைகளும், தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட அநீதிகளை காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கொடுக்கக் கூட முடியாத சொல்லி மாளா அவல நிலைகளே அன்று தமிழகத்தில் தலைதூக்கி நின்றன. குறிப்பாக தென் தமிழகம் கலவர பூமியாகவேக் காட்சியளித்தது. வெட்டும் குத்தும் அரிவாள் கலாச்சாரமும் மட்டுமே பெருமைக்குரிய அடையாளங்களாகப் போற்றப்பட்டன. மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகியவை ஆட்சியாளர்களின் துணையோடு காலில் போட்டு மிதிக்கப்பட்டன. இனி விடிவுகாலம் என்பதே இல்லையா? இதுதானா வாழ்க்கை? என்று ஏங்கித் தவித்த காலத்தில், ஓடோடி வந்து தென்தமிழக மக்களுடையப் பாதுகாவலராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் பாதுகாவலராகக் களத்தில் நின்று போராடி, சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் கண்ணெதிரே நிலைநாட்டியது மட்டுமல்ல, சமூக விடுதலை மற்றும் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் பொருட்டு, புதிய தமிழகம் என்ற மகத்தான இயக்கம், பார்போற்றும் உன்னதத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
அன்று ”இரத்தத்தால் சிவந்து கிடந்த தென்தமிழகம், இன்று பசுமை – அமைதிப் போர்வையைப் போர்த்தி இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் இம்மியளவும் பிசகாமல் வழிநடத்துவதால், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மட்டுமின்றி, இந்து என்று சொல்வதற்கே அஞ்சிக் கொண்டிருந்த கோடானகோடி இந்துக்களும் இன்று எழுச்சி பெற முடிகிறது. சாதிய பேதங்கள், மோதல்கள், காழ்ப்புணர்வுகள் மறைந்து, தமிழர்கள் – பாரதத்தாயின் புதல்வர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் ஒன்றுபடுத்தும் அந்த மகத்தான பணியை இந்துக்களின் பாதுகாவலர், சமூகநீதிக் காவலர், வாழ்நாள் பிறவிப் போராளி, தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அவர்கள் காட்டிய வழியில், புதிய தமிழகம் கட்சி நிகழ்த்திக் காட்டியுள்ளது. எத்தனை முறை ஆட்சியிலிருந்தோம் என்பதும், குடும்பத்தில் எத்தனை பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் என்பதும் சிலருக்கு வரலாறாக இருக்கலாம்; ஆனால், இன்றுக் கடைக்கோடியில் உள்ள ஒவ்வொரு தமிழரையும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்த பெருமை, புதிய தமிழகம் கட்சியையும், தலைவர் டாக்டர் அய்யா அவர்களையும் மட்டுமே சாரும். பணம் படைத்தோர் கட்சிகளைத் தோற்றுவித்தார்கள். ஆனால் அவர்களால் ஒரு தேர்தலுக்கு மேல் அக்கட்சிகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. அரசியல் தோல்விகளைக் கூட சமுதாயப் பணிக்காக உரமாக்கி, இன்று இந்த மண்ணில் நாங்களும் இந்தியக் குடிமக்கள்; எங்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது; நாங்களும் சுதந்திரமான மனிதர்கள் என்ற உணர்வையும் பாதுகாப்பையும் கோடானகோடி மக்களுக்கு மீட்டுக்கொடுத்து, 25 ஆண்டுகள் வழிகாட்டிய தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கும், அவரது கொள்கை வழி நின்றத் தொண்டர்களுக்கும், மக்களுக்கும், உற்றத்துணையாக விளங்கிய அனைவருக்கும் நெஞ்சம்நிறைந்த நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய தமிழகம் தியாகிகளுக்குப் புகழஞ்சலி
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால போராட்ட வரலாற்றில், கண்ணீர் சிந்தியோரும், இரத்தம் சிந்தியோரும், சிறைப்பட்டோரும் சித்திரவதைப்பட்டோரும், சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தோரும் ஏராளம் ஏராளம்… அவர்களில் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்து, கோடானகோடி மக்களின் தலைநிமிர்வுக்கு வித்திட்ட, இதோ இந்த தியாக சீலர்களின் நினைவைப் போற்றுவோம்.
தியாகிகள்
1. பரமக்குடி பஞ்சவர்ணம் | 12. மாஞ்சோலை இரத்தினமேரி | 23. திருநெல்வேலி அப்துல்ரஹ்மான் |
2. ஆலந்தா பலவேசம் | 13. மாஞ்சோலை அந்தோணி | 24. திருநெல்வேலி ஷாநவாஸ் |
3. திரிசூலம் சிவஞானம் | 14. தாழையூத்து ஜோஸ்பின் | 25. சிங்கம்பட்டி வேலாயுதம் |
4. திரிசூலம் சுப்பிரமணியம் | 15. மங்களபுரம் இரத்தினசாமி | 26. பாளை ஜான்பூபாலராயன் |
5. சுந்தரராஜபுரம் பிலிப்ஸ் | 16. முதுகுடி ராஜூ | 27. திருச்சி பாரதி தேவேந்திரன் |
6. துறையூர் பிலிப்ஸ் | 17. மலையங்குளம் முருகன் | 28. திருமங்கலக்குறிச்சி செல்லத்துரை |
7. ஆலந்தா சண்முகம் | 18. மேலப்பாட்டம் ஆறுமுகம் | 29. கோட்டைப்பட்டி சுரேஷ் |
8. துரைச்சாமிபுரம் பெரியசாமி | 19. நடுநாலுமூலைக்கிணறு ஜெயசீலன் | 30. திருவைகுண்டம் பாஸ்கர் |
9. துரைச்சாமிபுரம் மாரியப்பன் | 20. பொட்டல்நகர் இன்னாசி மாணிக்கம் | 31. வீரணாபுரம் முத்துராஜ் |
10. தேவிபட்டினம் குருசாமி | 21. சவலாப்பேரி குமார் | 32. முதுகுடி இராஜலிங்கம் |
11. மாஞ்சோலை விக்னேஷ் | 22. சென்னை கெய்சர் |
மாநாட்டுப் பிரகடனம்:
சுதந்திரமாகப் பிறக்கின்ற மனிதர்கள், சுதந்திரமாக வாழ வேண்டுமென்பது தான் சமூகநீதியாகும். இந்த நியதியை அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வழங்கிட இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கியுள்ள அனைத்து சரத்துகளும் இன்று வரை அனைத்து மக்களுக்கும் சென்றடையாமல் இருப்பது வேதனையிலும் வேதனையாகும். தமிழகத்தைப் பொருத்தமட்டில், சமூகநீதியும் சமநீதியும் காலத்திற்கு ஒவ்வாத பெரியாரிசம், அண்ணாயிசக் கொள்கைகளும் செல்லரித்துப் போய்விட்டன. ஆரிய மாயைப் பற்றி பேசியவர்கள் திராவிட மாயையை நிரந்தரமாக்கப் பார்க்கிறார்கள். திராவிட மாயையிலிருந்தும், திராவிட ஸ்டாக்கிஸ்டிடுகளிடமிருந்தும் 7 கோடி தமிழ் மக்களை முற்றாக விடுவிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நேரங்களில் ஆசை வார்த்தைகளைக் காட்டி, எப்படியாவது ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற அதிகார வெறியில், தமிழக வாக்காளர்களிடம் 500, 1000-த்திற்கு அவர்களுடைய வாக்குகளை விலைக்கு வாங்கி, ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு குடும்பம் கோலோச்சும் திராவிட மாயையை ஒழித்து, ஊழலற்ற, சுரண்டலற்ற, எவ்வித ஏற்றத்தாழ்வற்றத் தமிழ் சமுதாயத்தை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் சீரிய தலைமையில் படைப்போம் என்று, 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு மாநாட்டில் புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் சபதமேற்போம்.
இந்தியாவில் ஏற்பட்ட நாடு பிரிவினைகள், மாவட்டப் பிரிவினைகள், மதப் பிரிவினைகள், சாதிப் பிரிவினைகள், தொழில் ரீதியாக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த பிளவுகளால் மட்டுமே இந்திய சமுதாயம் தங்களுடைய பாரம்பரிய, பண்பாட்டு, பழக்கவழக்கங்களை இழக்க நேரிட்டது. அதனுடைய விளைவாக, தமிழ் – இந்திய சமுதாயம், சாதி என்ற பாகுபாடுகளால் பிளவுண்டு மிகப்பெரிய பின்னடைவுக்கு ஆளாகியுள்ளது. பாரத தேசம் மீண்டெழ இந்திய பாரம்பரிய, பண்பாடுகளும், கலை, இலக்கிய, கலாச்சாரங்களும் மீட்சி பெற இடைப்பட்டக் காலங்களில் தோன்றிய சாதிய பேதங்களை முற்றாக ஒழித்து, இந்து என்ற ஒற்றை அடையாளத்தில் ஒன்று திரள இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு தனி மனிதனின் நம்பிக்கை மற்றும் உரிமை சார்ந்ததாகும். இந்த உணர்வை வைத்து மனிதர்களிடத்தில் எவ்விதமான சாதி, சமய பேதங்களை உருவாக்கவோ, மனித சமூகத்தைப் பிளவுபடுத்தவோ கூடாது. எந்த நம்பிக்கையானாலும் அவர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
தமிழக மக்களிடத்தில் அடுத்தப் பத்தாண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, ஏழை – பணக்கார வர்க்கத்திடையே இருக்கக்கூடிய இடைவெளியை குறைத்து, EQUALITY & EQUITY என்ற சித்தாந்தத்தை நிலைநாட்டி, சமூக சமநிலையை உருவாக்கும் பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டு வந்து, தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய ஆட்சியில் பங்கு பெற, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் புதிய தமிழகம் கட்சி தனித்தோ, நேச சக்திகளோடு இணைந்தோ புத்தம் புதிய ஆட்சியை மலர வைக்க புத்துணர்வுடனும், புத்தெழுச்சியுடனும் புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் தங்களுடையக் களப்பணிகளைத் துவங்கிட இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
தமிழ்ச்சமூகங்களின் மறைக்கப்பட்ட அடையாளங்களை மீட்டெடுக்கவும், அவர்களுடைய வாழ்வுரிமையை மீட்டெடுக்கவும், சமூகநீதி, சமநீதி, சமயநீதியை வென்றெடுக்கவும் அனைத்து சமுதாய, சமய மக்களும் இந்தத் திராவிட மாடல் ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்கு புதிய தமிழகம் தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்போம்.
கடந்த 25 ஆண்டுகாலம் நம்முடைய சுய கஷ்டங்களிலிருந்து விடுதலைப் பெறுவதற்காகப் போராடியிருக்கிறோம். இனி ஒட்டுமொத்தத் தமிழர்களின் விடுதலைக்காக, புதிய தமிழகம் கட்சியினர் எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
”அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமூக மாற்றம் தேவை;
சமூக மாற்றத்தைத் தக்கவைக்க அரசியல் அதிகாரம் தேவை”
என்றப் புரிதலோடு,
”கொள்கை ரீதியாகவும்,
சித்தாந்த ரீதியாகவும்,
செயல்பாட்டு ரீதியாகவும்,
அரசியல் ரீதியாகவும்,
தமிழகத்தில் திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு மாற்று புதிய தமிழகமே”
என்ற முழக்கத்தோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒன்றிணைக்கும் பணியை சிரமேற்கொண்டு நிறைவேற்றிட புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் இம்மாநாட்டின் மூலம் சபதமேற்போம்.
ஆன்மீகப் பெரியோர்களின் ஆசியுரைகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் ஜீயர் திரு.சடகோப ராமானுஜர் அவர்களின் ஆசியுரை:
ஜீயர் திரு. சடகோப ராமானுஜர்
இன்றைய தினம் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா சிறப்பு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள புதிய தமிழகம் கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும்; இந்த இயக்கத்தை 25 ஆண்டுகள் கட்டிக் காத்து, ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நினைக்கும் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களுக்கும்; இங்கே வந்திருக்கிற முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் அவர்களுக்கும், திரு கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும், திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும், பழ. கருப்பையா அவர்களுக்கும், திரு.தேவநாதன் யாதவ் அவர்களுக்கும், திரு.என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கும், தனியரசு அவர்களுக்கும், கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும், ரவி பச்சமுத்து அவர்களுக்கும், திரு. சூசை அவர்களுக்கும், கே.சி.திருமாறன் ஜி அவர்களுக்கும், திலகபாமா அவர்களுக்கும், எம். கணேசன் அவர்களுக்கும், எம்.தங்கராஜ் அவர்களுக்கும், சிவலிங்கம் அவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எங்களுடைய ஆசீர்வாதங்கள்.!
இன்றைய தினம் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா – மாநாடு தொண்டர்கள் அனைவரும் 100வது ஆண்டு விழாவை சேர்ந்திருந்து கொண்டாட வேண்டும். ஆண்டாள் சொன்னது போல் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் இவ்வளவு தொண்டர்களைத் தயார்ப்படுத்தி உள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. புதிய தமிழகம் கட்சி குறை ஒன்றும் இல்லாமல், இன்னும் நூறாண்டு காலம் வெற்றி பெறுவதற்கு நாங்கள் ஆண்டாள் ரங்கமன்னாரை பிரார்த்தனை செய்துகொண்டு, அதேபோல் ஜெகதாசாரர் ராமானுஜரையும், மணவாள அம்மனையும் பிரார்த்தனை செய்து, ஆசீர்வாதம் செய்கிறோம்.
ஜெய் ஜெய் ராமானுஜா.! ஜெய் ஜெய் ராமானுஜா.!!
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் திரு.S வேதாந்தம் ஜி அவர்களின் ஆசியுரை:
எஸ். வேதாந்தம் ஜி
புதிய தமிழகம் என்ற கட்சி மிக கட்டுப்பாடான தொண்டர்களைக் கொண்டது. அந்த கட்டுப்பாட்டை இங்கே காண்பிக்க வேண்டும். நான் பேசும்போது ஆரவாரம் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். உங்களைப் பார்ப்பதற்கு, உங்களுடைய முயற்சியைப் பாராட்டுவதற்காக இங்கே அனைத்து தலைவர்களும் வந்திருக்கிறார்கள். நீங்கள் அமைதியாக இருப்பீர்களா?(தொண்டர்கள்: அமைதியாக இருப்போம்).
”புதிய தமிழகம் நீடூடி வாழ்க” என்று நான் சொல்வேன். நீங்கள் சொல்வீர்களா?(தொண்டர்கள்: “புதிய தமிழகம் நீடூடி வாழ்க”) சத்தம் போதாது, எல்லோரும் கூற வேண்டும்.! ”டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நீடூடி வாழ்க! அனைவரும் கூற வேண்டும்.(அனைவரும் கூறினர்)
அனைவரும் நமது ஒற்றுமையைக் கட்டுப்பாட்டோடு காண்பிக்க வேண்டும். மேடையில் அமர்ந்திருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு எனது ஆசீர்வாதம். மேடையில் அமர்ந்திருக்கும் முன்னணி அரசியல் இயக்க தலைவர்கள், சாதி சங்க தலைவர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.!
இந்த மாநாடு என்பது என்னுடைய பார்வையில் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைய போகிறது. ஏனென்றால், இன்று ஆன்மீகமும், அரசியலும் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பணிக்காக நம்முடைய குருமார்கள், ஆச்சாரியார்கள், சங்கராச்சாரியார் ஆகியோர் நமக்கு ஆசியைக் கொடுக்கப் போகிறார்கள். ஆகவே, அந்த பணியானது வெற்றி பெற்று தான் ஆக வேண்டும். அன்று பாண்டவர்களுக்கு வழிகாட்டியாக யார் அமைந்தார்கள்? பகவான் கண்ணன் அமைந்தார்கள்; இன்று கிருஷ்ணன் அமைந்திருக்கிறார்.
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் கிருஷ்ணசாமி. இன்று அதே கிருஷ்ணசாமி தான் அனைத்து சாதி சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தமிழகத்தில் ஒரு விடியல் உருவாக்குவதற்காக நமக்கெல்லாம் உறுதுணையாக இருக்கிறார். தமிழகத்தில் உண்மையான விடியல் இனிமேல்தான் வர போகிறது. அதற்கு நமது பெரிய முயற்சி தேவை. இன்றைக்கு தமிழகத்தில் சொல்ல இயலாத அளவிற்கு துயரங்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்த இனிமையான தருணத்தில் அவற்றை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால், நமது ஒட்டுமொத்த பலம்; நம்முடைய இலக்கு; இலட்சியம் இந்த நாட்டை உன்னத நிலைக்குக் கொண்டு செல்வது. அதற்காக நாம் பின்பற்றக் கூடிய வழி நேர்மையாக இருக்கவேண்டும்; அதில் வன்முறைக்கு இடம் இருக்கக் கூடாது; பொய்க்கு இடம் இருக்கக் கூடாது; அவையெல்லாம் நீண்ட நாட்கள் நிற்காது.
ஆகையால், இந்த நல்ல தருணத்தை பயன்படுத்தி, நமது உற்சாகத்தை செயலில் காட்டவேண்டும். ஒவ்வொருடைய பூத்திலும் நாம் கமிட்டி அமைக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும். குறிப்பாக டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சட்டப்பேரவைக்கு நமது முயற்சியில் செல்ல வேண்டும்; அதற்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும்; அதற்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். அதாவது நம்முடைய இயக்கத்திற்கு மாற்றே கிடையாது. அவ்வாறு முயற்சி செய்தால் தான், இந்த நாட்டுக்கே ஒரு நல்ல விடியல் ஏற்படும். இந்த செய்தியை சொல்வதற்காகத்தான் வந்தேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி நீடூடி இருக்க வேண்டும்; இந்த கட்சி நீடூடி இருந்து, மக்களுக்கு அரும்பெரும் தொண்டுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.! நன்றி வணக்கம்.!
தமிழ்நாடு – பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் நாக சக்தியம்மன் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் திரு.ஜெகத்க்குரு குரு பாபுஜி சுவாமி அவர்களின் ஆசியுரை:
ஜெகத்க்குரு குரு பாபுஜி சுவாமி
’ஓம் பிராட் விஸ்வ பிரமனே போற்றி! போற்றி!!
நாளும் கோலும் பொருந்திய இந்த திரு நன்னாளிலே; நம்மையெல்லாம் இமயத்திலே கொண்டு போய் வைக்கின்ற ஒரு அற்புதமான திருநாளிலே புதிய தமிழகம் கட்சியினுடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா – வெற்றி விழா சிறப்பு மாநாட்டிலே இங்கே கூடியிருக்கின்ற மக்களுக்கு மட்டுமில்லாமல், பல்லாயிரக்கணக்கான இந்து மக்களுக்கும் விடிவெள்ளியாக வீற்றிருக்கிற ’தர்மசக்தி நாயகர்’ டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்களே!
நமக்கு முன்பாக ஆசியுரை வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் அவர்களே.! வேதாந்தம் ஜி அவர்களே.! இன்று நான் மறைந்தாலும் இந்த கழகம்(அதிமுக) நூறு ஆண்டு காலம் வாழும் என்று கூறிய அம்மா அவர்களுடைய ஆசியைப் பெற்று வந்திருக்கிற பாசத்திற்குரிய முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் அவர்களே.! விஸ்வகர்மா சமுதாய மக்களின் விடிவெள்ளி, எங்களுக்கு கிடைத்திருக்கின்ற வைரக்கல் மாணிக்கம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களே.! முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களே.! சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ. கருப்பையா அவர்களே.! இங்கே யாதவ மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற தேவநாத யாதவ் அவர்களே.! உ. தனியரசு அவர்களே.! தனபாலன் அவர்களே.! பாரதிய ஜனதா கட்சியிலே இன்று தமிழகத்திற்கு ஒரு சிங்கம் அண்ணாமலை அவர்களுக்கு துணையாக வீற்றிருக்கின்ற கருப்பு முருகானந்தம் ஜி அவர்களே.! திரு ரவி பச்சைமுத்து அவர்களே.! நமது பாசத்திற்குரிய இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் திரு. சூசை அவர்களே.! சிறிது நேரத்திற்கு முன்பாக முத்துராமலிங்கத் தேவரை போலவே ஒரு சிங்கமாக உருமாறி அருமையான கருத்துக்களை சொன்ன தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருமாறன் ஜி அவர்களே.! இங்கே நல்லதொரு விஷயத்தை சொல்வதற்கு வந்திருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா அவர்களே.! நமது தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கத்தினுடைய மாநில தலைவர் தங்கராஜ் ஆச்சாரியார் அவர்களே.! சிவலிங்கம் அவர்களே.! இங்கே கூடியிருக்கிற பெரியோர்களே.! தாய்மார்களே.! இங்கே இருக்கின்ற லட்சோப லட்சமான தேவேந்திரகுல இளம் சிங்கங்களே.! எல்லோருக்கும் எனது அன்பு கலந்த ஆசீர்வாதம்.!!
”அரிது! அரிது! மானிடத்தராய் பிறத்தல் அரிது!! அதிலும் ஒரு மனிதன் கூன், குருடு செவிடில்லாமல் பிறப்பது அரிதிலும் அரிதானது” என்பது அவ்வையின் வாக்கு. ஆனால், அந்த அவ்வை இன்று இருந்திருந்தால் ”ஒரு தேவேந்திர குல வேளாளராக பிறப்பதுதான் அரிது” என்று தான் சொல்லி இருப்பார். இதை ஏன் இன்று சொல்கிறேன் என்றால், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்ற கூற்றுக்கு இணங்க உலகிற்கு சோறு போட்ட வம்சம் இந்த ’தேவேந்திர குல வம்சம்’.
”ஜாதிகள் இல்லையடி பாப்பா, குழல் தாழ்த்தி சொல்லல் பாவம்” என்பது முண்டாசு கவிஞனின் வாசகம். யார் இங்கு தாழ்த்தப்பட்டார்கள்? எந்த ஒரு கால சூழ்நிலையிலும் என் இனம் தாழ்த்தப்பட்ட இனம் அல்ல. ’பட்டியல் இன வெளியேற்றமே! என் உயிர் மூச்சு’ என்று உங்கள் முன்னால் இருக்கின்ற வாழும் மகாத்மா, நமது அண்ணல் அம்பேத்கரின் மறு உருவமாக இருக்கின்ற பாசத்திற்குரிய டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்களே.!
நான் அரசியல் பேசமாட்டேன்! ஏனென்றால், எனக்கு அரசியல் பற்றி பேச விருப்பமில்லை. அரசியலிலே வேண்டுமென்றால் வாரிசு வரலாம்; ஆன்மீகத்திலும் வாரிசு வரலாம். ஆனால், ஒரு போராளி தன்னுடைய போராட்டத்திற்கு ஒரு வாரிசாக இளம் சிங்கம் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். இதுதான் உண்மையான வாரிசு; இதுதான் உண்மையான போராளியின் வாரிசு. இந்த சமுதாய மக்களுக்கு இன்று ஒரு பொன்னாள் – வெள்ளி விழா – வெற்றி விழா. கூடிய விரைவிலே பாராளுமன்றத்திலே உங்கள் தலைவருக்கு மணி மகுடம் சூட்டுகின்ற விழா நடைபெறும். கடந்த வெள்ளி விழா துவக்க மாநாட்டிலே பாபுஜி சுவாமிகள் அப்போது நான் கூறினேன். தலைவர் அவர்களே.! நீங்கள் ’இந்து மக்கள் எல்லோருக்கும் தலைவர்’ என்று அன்று சொன்னேன். அதைத்தான் இன்று செய்து காண்பித்திருக்கிறார். இந்து மதத்திலே உள்ள அனைத்து ஜாதி தலைவர்களையும் ஒரே மேடையில் உட்கார வைத்த பெருமை டாக்டர் கிருஷ்ணசாமி ஒருவரையே சேரும். ஒருத்தர் அழைத்தால் ஒருத்தர் வரமாட்டார்கள். ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் பிற ஜாதிகளுடன் பகைமை உள்ளது என்பதையெல்லாம் முறியடித்து இன்று ”நாம் எங்கு பிரிந்தோம்! நம்மை பிரித்து தானே ஆண்டார்கள்” என்று தேவர் சமுதாயத்தை சேர்ந்த திருமாறன் ஜி சொன்னதைப் போல இன்று பிரியாமல் எல்லோரும் ஒரே இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இந்து மதத்தினுடைய காவலராக வீற்றிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்.
பகவத் கீதையிலே ஒரு வாசகம் உள்ளது. ”பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே – உலகில் எங்கெல்லாம் அதர்மம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றதோ, எங்கெல்லாம் அதர்மத்தினால் மக்கள் துன்பப்படுகிறார்களோ, அதர்மத்தினால் யாரையெல்லாம் அடிமைப்படுத்துகிறார்களோ, அங்கெல்லாம் நானே கிருஷ்ணனாக பிறப்பேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் சொன்னாரே அதற்கேற்ப இன்று எட்டாவது குழந்தையாக, நமக்கு அற்புதமான மனிதராக பிறந்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். இதை நான் ஏதோ முக சுதிக்காக சொல்லவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பாக தென் மாவட்டம் செல்ல வேண்டுமென்றால் எல்லோருக்கும் ஒரு வித பயம் இருக்கும். ஏனென்றால் பிரித்தாலும் என்ற சூழ்ச்சி, சண்டை கலவரங்கள். இன்று தென் மாவட்டங்களை அமைதி பூங்காவாக்கிய ஒரே பெருமை டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மட்டும் தான் சேரும்; வேறு யாருக்கும் சேராது.
தென் மாவட்டம் என்றாலே, தென் மாவட்டத்துக்காரர்கள் என்றாலே கலவரம், கத்தி, வெடிகுண்டு என்பது மாதிரி இருந்தது. அந்த சூழலில் ”கத்தியை கீழே போடு கல்வியைக் கையிலே எடு” என்று எடுத்துரைத்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயத்திலிருந்து வந்தார்கள் என்றால் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபையில் 1997 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர் இடத்திலே கேட்டாரே ஒரு வெள்ளை அறிக்கை. அதன் மூலமாக அன்று பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுக்களில் பட்டியலின மக்கள் இருக்கக் காரணம் டாக்டர் கிருஷ்ணசாமி தான்.
இன்று தனக்காக எதையும் கேட்கவில்லை; தன் வாரிசுக்காக எதையும் கேட்கவில்லை; இந்த சமூகம் முன்னுக்கு வரவேண்டும்; தன் தேவேந்திரகுல சமூகம் பட்டியலினத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கிலே செயல்படும் ஒரே தன்மான சிங்கம் டாக்டர் அய்யா அவர்கள். என்னிடத்தில் ”பாபுஜி சுவாமிகளே! நீங்கள் ஏன் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரிக்கிறீர்கள்? அவர் ஜாதி தலைவர்” என்று பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் என்னிடம் கேட்பார்கள்.
அட முட்டாளே! அவர் ஒரு ஜாதிக்கு மட்டும் தலைவர் அல்ல! இந்து மதத்திற்கே தலைவராகிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட போது முதல் குரல் கொடுத்து, சென்னையிலே போராட்டம் நடத்திய பெருமை டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தான் சேரும். கிட்டத்தட்ட 40-50 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்திலே தமிழர்கள் தாக்கப்பட்ட போது, அங்கு தாக்கப்படுவது தமிழர்களல்ல ’இந்து தமிழர்கள்’ என்று குரல் கொடுத்த முதல் மனிதர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இன்று அனைத்து மக்களுக்கும் சொந்தக்காரர். அவர் ஏதோ ஒரு மாயைக்காக தென் மாவட்டம் வந்தவர் அல்ல. படிக்கும் போதே தன்னுடைய மருத்துவ படிப்பிற்கான தேர்வை எங்கே எழுதினார்? தெரியுமா? சிறைச்சாலையில் எழுதினார். அன்றே சிறை கண்ட சிங்கம் தான் டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் சாதாரணமானவர் அல்ல.!
நான் அவரைப் பற்றிய வரலாறுகளை தற்போது நிறையத் தெரிந்து கொண்டு வருகிறேன். ஒருவரை பற்றி தெரியாமல் அவரிடத்தில் கூட்டு சேர முடியாது. விஸ்வகர்மா சமுதாயம் மிக நுணுக்கமான சமுதாயம். அந்த சமுதாயம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது என்றால், அவர் ஆட்சி கட்டிலிலே அலங்கரிக்கப் போகிறார் என்றுதான் அர்த்தம். இதைத்தான் இன்று சொல்லுகின்றோம்.
அன்புக்குரியவர்களே.! உங்கள் எல்லோரிடத்திலும் சொல்லப்படுவது என்னவென்றால், இந்து மதத்திலே ’ஜாதி தீண்டாமை’ என்ற ஒரு கறை இருக்கவே கூடாது. ‘சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ள படி’ என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று இத்தனை பேருக்கும் சோறு போடுபவர்களா? இழி குலத்தோர். இவர்கள்தான் உலகத்தில் உயர்ந்த மனிதர்கள்.’ஒரு தேவேந்திரன் இந்து சமுதாயத்திற்கு தலைமை ஏற்பான்” என்று அன்று சொன்னது இன்று நடந்து கொண்டிருக்கிறது. இன்று அனைத்து ஜாதி தலைவர்களும் ஓரணியில் நிற்கிறார்கள்.
தேவேந்திரர்கள் யார்! இந்திரலோகத்திற்கு அதிபதி.! அதனுடைய வம்சம் அல்லவா நீங்கள்!! டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மதுரையில் எங்கள் மாநாட்டிலே சொன்னார்கள். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தது இரண்டு சமுதாயம். அதில் பல்வேறு சமூகங்கள் துணை புரிந்தது; அதில் ஒரு முக்கியமான சமூகம் விஸ்வகர்மா சமூகம்; விஸ்வகர்மா சமூகத்திற்கு துணையாக இருந்தது தேவேந்திர குல சமூகம்.! ஆகவே, விஸ்வகர்மா சமுதாயத்தையும் தேவேந்திரகுல சமுதாயத்தையும் பிரித்தே பார்க்கவே முடியாது. எப்பொழுதுமே தேவேந்திரகுல வேளாளர்களுடைய கூட்டங்கள் எல்லாம் விஸ்வகர்மா கொல்லனுடைய பட்டரையில் தான் நடக்கும். அப்படிப்பட்ட சமூக ஒற்றுமையை நாம் காண வேண்டும். டாக்டர் அவர்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக மாறிக் கொண்டிருக்கிறார் என்றால், இந்து மதத்தினுடைய தத்துவத்தை உணர்ந்து, இந்துக்களை எல்லாம் ஒரு நிலையில் கொண்டு வர வேண்டும்; இந்து மதத்தினுடைய சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும்” என்றெல்லாம் என்னிடத்தில் அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பார்.
ஏனென்றால், நமக்கு பதினெட்டாம் படி கருப்பசாமி வேண்டும். பலி கொடுக்கின்ற முனியப்ப சாமி வேண்டும்; பேச்சியம்மாள் வேண்டும். அந்த அம்மாள் பேச்சியம்மாள் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. நாமெல்லாம் அப்படி இருக்கக்கூடிய சமூக மக்கள். அந்த சமூக மக்களிடத்திலே நாம் சொல்லிக் கொள்வது என்னவென்றால், உங்களை உயர்த்திக் கொள்வதற்கு கல்வி ஒன்று தான் பெரிய ஆயுதம். கத்தி, கடப்பாரை இல்லை பெரிய ஆயுதம். கல்வி ஒன்று தான் பெரிய ஆயுதம். அந்த கல்வியைக் கையில் எடுக்கச் சொன்ன மிகப்பெரிய நாணுவான் டாக்டர் கிருஷ்ணசாமி.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களை வைத்துக் குளிர்காய வேண்டும் என்று நினைத்திருந்தால் ”கத்தியை எடு, அவனை வெட்டு, இவனை வெட்டு” என்று தான் கூறி இருப்பார். ஆனால் எந்த காலகட்டங்களிலும் அவர் அப்படி கூறவில்லை. ”அன்பிலார் எல்லாம் தமக்குடையார் அன்பிலார் என்றும் உயிர் பிறர்க்கு” என்பதைப் போல அன்பை போதித்து வந்திருக்கிறார்.
முன்னோர்கள் ”அபிராமி எந்தன் கடைக்கண் பார்வையே” என்பார்கள். அதேபோல அவர் பார்வை ஒன்று போதும்; அவர் சிரித்த பார்வை ஒன்று பார்த்தால் போதும்; டாக்டர் அவர்களின் பார்வை பெற்றாலே போதும், இங்கே ஆயிரக்கணக்கான தேவேந்திர குல வேளாளர்களுடைய ரத்தத்திலே புது ரத்தம் பாய்ச்சப்பட்டது போல இருக்கும். இன்றைக்கு இந்த விழா வெற்றி விழா. இது ஒரு மிகப்பெரிய முக்கியமான விஷயம்.
கடந்த காலகட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா சட்டமன்றத் தேர்தலிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இல்லை. ஆனால் இப்பொழுது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கிறார். நிச்சயம் அடுத்து எடப்பாடி ஆட்சி நடக்கும். அதிமுக ஆட்சி – அம்மாவின் ஆட்சி நடப்பதற்கு தேவேந்திர குல மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு நல்ல தருணம் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள்; பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னதே போல ”தாய் வழி வந்த தங்கங்களெல்லாம் ஓரணியில் நின்றால் எதிரிகள் நிச்சயமாக பொடிப்பொடியாக்கப்படுவார்கள்”. இதைத்தான் நான் உங்களுக்கு சொல்கிறேன். நாமெல்லாம் வந்து என்றைக்குமே நல்லவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கின்ற பாலமாக நாம் இருந்து கொண்டிருப்போமாக.!
அன்புக்குரியவர்களே.! டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களை பற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் விடிய விடியப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களுடைய தியாகத்தால் தான் இன்று தென் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. ஏன் என்றால் இன்று மாஞ்சோலை தொழிலாளர்கள் ரூபாய் 456 கூலி வாங்கி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக 17 பேர் தியாகம் செய்தார்களே, புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் அந்த தியாகம் தான் அவர்களை உயர்த்தி இருக்கின்றது. இதுபோன்று எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். இன்னமும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது.
இதுவரை சட்டசபையில் ஒரு சிங்கம் சீறிக் கொண்டிருந்தது; இனி அந்த சிங்கம் பாராளுமன்றத்திலே சீறும் என்று நான் நினைக்கிறேன். அது என் கையில் அல்ல. உங்கள் கையிலே இருக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் எல்லோரும் எல்லா இன மக்களிடத்திலேயும் உங்களது தலைவருடைய புகழைப் பரப்புங்கள்; எல்லோரிடத்திலும் ஒன்றுபட்டு, அன்பாக நடந்து கொள்ளுங்கள்; எல்லோரிடத்திலும் சமூக இணக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள்; சமூக நல்லிணக்கமே உங்களுடைய வெற்றிக்கு அடையாளம். புதிய தமிழகம் கட்சியினுடைய வெள்ளி விழா என்பது டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்களுக்கு மணிமகுடம் சூட்டும் விழாவாக நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, எல்லா வல்ல ஆதிபராசக்தியினுடைய பூரண அருளால் நல்லது நடக்கட்டும்! நன்மைகள் நடக்கட்டும்! வாழ்க வளமுடன்!
ஓம் சக்தி! ஓம் சக்தி!! ஓம் சக்தி!!
அரசியல், தோழமை தலைவர்களின் வாழ்த்துரைகள்:
முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் திரு நத்தம் ஆர்.விஸ்வநாதன் அவர்களின் வாழ்த்துரை:
நத்தம் ஆர்.விஸ்வநாதன்
புதிய தமிழகம் கட்சியின் நிறைவு வெள்ளி விழா சிறப்பு மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், நமது தென் தமிழக மக்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற பெருமதிப்பிற்குரிய அருமை அண்ணன் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களே!
அவருக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றி, அவரது பதவியை பகிர்ந்து கொள்வதற்காக அல்ல, அவர் படுகின்ற கஷ்டத்திலும், உழைப்பிலும் தங்கள் பங்கினை கொடுத்து அவரது லட்சியத்தை நிறைவேற்ற, டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் குறிக்கோளை வென்றெடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றக் களம் கண்டிருக்கக்கூடிய, எழுச்சியுரை ஆற்ற இருக்கின்ற அன்பு சகோதரர் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை தங்களது உயிரினும் மேலான தலைவராக மதிக்கின்ற லட்சோபலட்சம் உடன்பிறப்புகளே.! தொண்டர்களே.! அனைவருக்கும் எங்களது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் சார்பாகவும் எங்களது வாழ்த்துக்களை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் அவர்கள் எங்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை அனுப்பி இருந்தார். மாநாட்டிலே நான் கலந்து கொள்ள பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களிடம் தொடர்பு கொண்டு அனுமதி வாங்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரே(எடப்பாடியார்) எங்களை நேரில் தொடர்பு கொண்டு அதிமுக சார்பாக, நமது இயக்கத்தின் மீது மரியாதையும் அன்பும் வைத்திருக்கிற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் அருமை அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நடத்துகின்ற மாநாட்டிற்கு நீங்களும், ராஜேந்திர பாலாஜி அவர்களும், கடம்பூர் ராஜூ அவர்களும் கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு எனது சார்பாகவும், கட்சியின் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வாருங்கள் என்று சொன்னார்கள்.
அதுமட்டுமல்ல, திரு. எடப்பாடி அவர்களும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதற்கும் மேலாக, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்; அன்பு செலுத்தினார்கள். நான் எதற்காக இதை இங்கே சொல்கிறேன் என்று சொன்னால், டாக்டர் அவர்களை பற்றி எங்களுக்கு மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அவருடன் நெருங்கிய தொடர்பிலே இருக்கக் கூடியவர்கள் நாங்கள். அந்த வகையில் டாக்டர் அவர்களுக்கும் தெரியும். 1996 முதல் 2001 வரையிலே முதல் முறையாக அவர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார். நானும் அப்பொழுது நத்தம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்று பணியாற்றினேன். ஆக சக சட்டமன்ற உறுப்பினர்களாக 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றாகப் பயணித்தோம். அன்று பார்த்தது முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை அவருடைய போராட்ட உணர்வும், போராட்ட குணமும், எடுத்த கொள்கையிலே உறுதியான நிலைப்பாடும், எதற்கும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் களமாடுவதை 25 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த இடத்திலும் அவரது கொள்கையில் compromise சமாதானப்படுத்திக் கொண்டதாக நான் பார்க்கவே இல்லை.
அதோடு மட்டுமில்லாமல் நாங்கள் கூட்டணியிலும் இருந்திருக்கிறோம்; கூட்டணியை விட்டு வெளியேயும் இருந்திருக்கிறோம். கூட்டணியில் இருந்த போதும் சரி, கூட்டணியிலே இல்லாத போதும் சரி கொள்கையை மட்டும் விட்டுக் கொடுத்துப் பார்த்ததே இல்லை. அதோடு மட்டுமல்ல கூட்டணி மாறுபட்டாலும் கூட, கூட்டணியிலிருந்த பொழுது எங்கள் மீது எப்படி பாசமும் அன்பும் செலுத்தினாரோ, நட்பு பாராட்டினாரோ அதே அளவிற்கு கூட்டணியை விட்டு விலகினாலும் இப்பொழுதும் தனிப்பட்ட முறையிலே அவருடைய நட்பு, பழக்கவழக்கங்களில் மிகவும் பக்குவப்பட்டவராக, முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதியாக, அவருடைய நடவடிக்கைகளும், பேச்சும் கண்ணியமாகத்தான் இருந்திருக்கிறது.
எங்களை எதிர்க்கின்ற பொழுதும் கூட அவருடைய நடவடிக்கைகளிலோ, வார்த்தைகளிலோ எவ்வித கண்ணிய குறைவையும் நாங்கள் பார்த்ததோ, கேட்டதோ இல்லை. அந்த அளவிற்கு ஒரு நாகரிகத்தோடு, பண்பாடுள்ள மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு அவருடைய சிறப்பான நடவடிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அது மட்டுமல்ல, சட்டமன்றத்திற்கு முதல்முறையாக வந்த பொழுது, குறுகிய காலத்தில் அவர் சாதித்து இருக்கின்ற சாதனைகளை உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
விளிம்பு நிலை மக்களுக்காக அவர் போராடி இருக்கின்ற போராட்டங்கள்; அவர் செய்திருக்கின்ற அளப்பரிய சாதனைகளை எல்லாம் நான் இங்கே பட்டியலிட்டால் பல மணி நேரம் ஆகும். ஆனால், குறிப்பாக ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம்’ என்பதை போல நான் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். 1996 முதல் 2001 வரை 25 வருடங்களுக்கு முன்பாக, சட்டமன்றத்திற்கு அவர் வந்தவுடன் சட்டமன்றத்தில் முதல் பிரச்சினையாக மிக முக்கிய பிரச்சினையை ஒன்றைக் கையில் எடுத்தார்.
அதுவரை அரசு செயல்படுத்தி இருக்கின்ற இட ஒதுக்கீட்டில் விளிம்பு நிலை மக்களுக்கு எத்தனை சதவீதம் செயல்படுத்தி இருக்கிறீர்கள்? என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டுமென்ற முதல் கோரிக்கையை அங்கே வைத்தார். அந்த கோரிக்கை இன்று வேண்டுமென்றால் உங்களுக்கு மிகச் சாதரணமாக தெரியலாம். ஆனால், அதற்கு அன்றைக்கு இருந்த திமுக அரசு சாதாரணமாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் டாக்டர் அவர்கள் தன்னுடைய போராட்ட குணத்தினால், முயற்சியினால் அந்த வெள்ளை அறிக்கையை பெற்று, சாதித்துக் காட்டினார்கள். அதோடு மட்டுமல்லாமல் அதன் தொடர்ச்சியாக ஏறத்தாழ இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் புதிதாக இவர் எழுப்பிய பிரச்சினையின் காரணமாக இட ஒதுக்கீட்டின் மூலம் விடுபட்டுப்போனவர்கள் எல்லாம் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்கள்; எண்ணற்றோருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அதாவது, backwise appointments பின்னேற்பு இட ஒதுக்கீட்டிலே நிறைவேற்றப்பட்டதற்கு பின்பாக மீதம் இருப்பவர்களுக்கு பின்னேற்பாக, கடந்த காலங்களில் விட்டுப் போனவர்களுக்கான சதவிகித அளவையும் சேர்ந்து பெற்றுக் கொடுத்தார் என்று சொன்னால் அது தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் முதல் வெற்றி.
அடுத்தபடியாக சட்டமன்றத்திலே நாங்கள் திமுகவை எதிர்க்கின்ற பொழுது, நாங்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகவும் சொற்பம். அதிக மெஜாரிட்டியிலே திமுக இருந்தது. நாங்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் நான்கு பேர். பாமகவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், அருமை அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், அவரும் தனியாக வந்திருந்தார். ஆனால் தனி நபர் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவருடைய சக்தி, அவர் எழுப்பிய பிரச்சினைகள் சட்டமன்றத்தை அவரே முன் நின்று நடத்துவது போல, எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல செயல்பட்டு, ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார். எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்த ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதிலே அவருக்கென்று சில தனித்திறமை உண்டு.
ஆனால், அவருடைய சுயநலத்திற்காக எந்த பிரச்சினையையும் பயன்படுத்தியது இல்லை. ஆனால், மாறாக தன்னை நம்பி இருக்கின்ற மக்களுக்காக, குறிப்பாக தேவேந்திர குல மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக, அழுத்தப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் பாடுபட்டு வந்திருக்கிறார். அதிலும் தன்னுடைய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கான முன்னேற்றத்திற்காக தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவர் செய்திருக்கிற இன்னொரு சாதனை என்னவென்றால் நீண்ட நாட்களாக ’தேவேந்திர குல வேளாளர்’ என்ற பெயர் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்று அவர் தொடர்ந்து போராடி வந்ததன் விளைவாக, இன்று அவருடைய விடா முயற்சியினால், அவருடைய போராட்ட குணத்தினால் இன்றைக்கு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசிலே இருக்கின்ற மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் மற்றும் மாண்புமிகு முதல்வராக இருந்த அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய ஒத்துழைப்போடும், அவருடைய பரிந்துரையின் பேரிலும் மத்திய அரசு இன்றைக்கு இந்த சமுதாயத்திற்கு ஒரு பெருமையையும் சிறப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்று சொன்னால் அதற்கு முழு முதற்காரணம் அருமை அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்.!
அந்த அளவிலே இப்பொழுது மேடையிலே கூட ஒத்த கருத்துடைய அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். ”யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள்” அதற்கேற்ப ஒரு கூட்டணிக்கு முன்னேற்பாடாக இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கிறாரோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக ஒத்த கருத்துடையவர்களை இங்கே அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
25 வருடங்கள் முடிந்திருக்கிறது என்று சொன்னால் அவர் கடந்து வந்த பாதை மலர் பாதை அல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதைகள். அவர் சந்திக்காத இன்னல்கள் இல்லை, துயரங்கள் இல்லை, அத்தனையும் எதிர்கொண்டு, இன்றைக்கு 25-வது ஆண்டு வெற்றி விழாவை நடத்தி, புதிய தமிழகம் கட்சியை ஒரு தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இன்று மாற்றி இருக்கிறார் என்று சொன்னால் அது அவருடைய உழைப்பு, கடின உழைப்பு, அவருடைய விடாமுயற்சியால் நிகழ்ந்தவை. அந்த வகையிலே இன்றைக்கும் அவரை தலைவராக பெற்றிருக்கின்ற நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அவரை நம்பியவர்கள் வீண் போனதில்லை. 2011ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழக கூட்டணிக்கு டாக்டர் அவர்கள் வந்திருந்தார் என்று சொன்னால் அன்றைக்கு ”இராமனுக்கு அணில் உதவியது” போல அந்த கூட்டணி உருவாக்குவதற்கு நானும் ஒரு காரணம் என்பது டாக்டர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த அளவிற்கு அந்த கூட்டணியை அம்மா அவர்களிடம் முதலில் எடுத்துச் சொல்லி, அந்த கூட்டணியை உருவாக்கினோம். அந்த கூட்டணி இன்று மீண்டும் அம்மா அவர்களின் ஆசியோடு, அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியில் அந்த கூட்டணி வெற்றிகரமாக இன்னும் தொடர்கிறது என்று சொல்லுகின்ற போது எங்கள் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவருக்குத் தெரிவித்து கொள்கிறோம்.
அவருடைய போராட்ட குணம், அவருடைய விடா முயற்சி, தன்னை நம்பிய மக்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அந்த குணம் இப்படிப்பட்ட பண்புகள் தான் அவரை இந்த அளவிற்கு உயர்ந்த இடத்திலே நிறுத்தி இருக்கிறது. அவருடைய முயற்சி வெற்றி பெற நாங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்திலும் அவர் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே வந்திருக்கிறார்; இன்னும் பல்வேறு பதவிகளைப் பெற்று மென்மேலும் வளர்ந்து, இந்த தமிழக மக்களுக்கும், அவரை நம்பி இருக்கிற மக்களுக்கும், அடித்தள மக்களுக்கும், ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 25 ஆவது ஆண்டு விழா நடத்துகிற புதிய தமிழகம் கட்சிக்கு நூறாவது ஆண்டு விழாவும் நடைபெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்து, டாக்டர் தான் இருந்தாலும் இன்னும் நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க!! அவரும் வாழ்க! அவருடைய இயக்கமும் வாழ்க!! என்று கூறி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும், எங்களது பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் சார்பாகவும் எங்களது அன்பான வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து இந்த வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.!
நன்றி! வணக்கம்!!
முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வாழ்த்துரை:
கே.டி. ராஜேந்திர பாலாஜி
ஒரு வெற்றி விழா மாநாடு போல் நடந்து கொண்டிருக்கின்ற புதிய தமிழகம் கட்சியினுடைய வெள்ளி விழா நிறைவு மாநாட்டிற்கு தலைமை பொறுப்பேற்று தலைமை உரையாற்ற அமர்ந்திருக்கிற ஏழைகளின் பங்காளன், உழைப்பாளி, படைப்பாளி, தொழிலாளி, நெசவாளி, விவசாயி என அத்தனை பேரின் பரிணாமமாக விளங்கக்கூடிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் எனது பாசத்திற்குரிய அருமை அண்ணாச்சி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே.! இங்கே எழுச்சி உரையாற்ற இருக்கிற டாக்டரின் அருமை புதல்வரும், சிரித்த முகத்தோடு அனைவரிடத்திலும் கரம் கூப்பி வணக்கம் செலுத்தி, அன்போடு தான் ஒரு போராளியாகத் திகழ்வேன்; தமிழ் சமுதாயத்திற்கு உழைப்பேன் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற அருமை தம்பி டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! ”அவசரமாக எனக்கு பல வேலை இருக்கிறது” என்று இந்த வெள்ளிவிழா மாநாட்டிலே நீங்கள் மூன்று பேரும் சென்று கலந்து வாருங்கள் என்றும்; என்னுடைய சார்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்; புதிய தமிழகம் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்; புதிய தமிழகம் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் என்று எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இங்கே வந்திருக்கின்ற அனைத்து சமுதாய தலைவர்களே.! எல்லா கட்சிகளிலிருந்தும் வந்திருக்கிற அனைத்து பிரதிநிதிகளே.! புதிய தமிழகம் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகளே.! தொண்டர்களே.! தாய்மார்களே.! உங்கள் அத்தனை பேருக்கும் பணிவான, கனிவான நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, அருமை அண்ணன் அண்ணாச்சி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை பற்றி கடம்பூர் ராஜூ அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார் சட்டமன்றத்தில் 2011 நாங்கள் அமைச்சராக இருந்த பொழுது, எங்களுடைய அருமை அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பேச எழுந்து விட்டாலே எல்லோரும் கூர்மையாகப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். காரணம் என்னவெனில், ஏதோ ஒரு பிரச்சனையைக் கிளப்பப் போகிறார்; ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது. ஆனால், அது நிச்சயமாக நியாயமான பிரச்சினையாகத் தான் இருக்கும். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசுவார்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பற்றி பேசுவார்; காவேரி மேலாண்மை வாரியம் பற்றி பேசுவார்; ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் உள்ளே இருந்த ஏழு பேர் விடுதலைக்காகப் பேசுவார். எழுந்து நின்று பேண்ட் – சட்டையைத் தூக்கி விட்டு பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு விட்டார் என்றால் இன்று ஏதோ பிரச்சனை கிளப்பப் போகிறார் என்று தெரியும்; புரட்சித்தலைவி அம்மா அவர்களும் அதை இன்முகத்தோடே பார்ப்பார்; சிரித்த முகத்தோடு பார்ப்பார்.
என்ன கூக்குரல் வந்தாலும், எதிர்ப்பு வந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தைச் சரியாகச் சொல்லிவிட்டுத் தான் அமர்வார். என்ன எதிர்ப்பு, பிரச்சினை வந்தாலும் சரி தைரியமாக பேசக்கூடிய ஒரு வல்லமையான ஒரு போராளி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசியில் போட்டியிடுகின்றபோது அவரைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, எல்லா சமூக மக்களின் பிரதிநிதியாகச் செயல்படக் கூடியவர்; எல்லா சமூக மக்களையும் அரவணைத்து செல்லக் கூடியவர்; எல்லா சமூக மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலித்தவர்; சட்டமன்றத்தில் பேசியவர்; எல்லா சமுதாயத்திற்காகவும் பேசி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு பண்பாளர் ஒரு இயக்கத்தை நடத்தி வெள்ளி விழா காண்பது என்பது இலேசான காரியம் அல்ல. ஒரு சங்கம் நடத்தினாலே அதில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் வருகிறது. ஒரு கட்சி நடத்தினால் எப்படி?
1996-இல் அவர் முதல் முதலாக சட்டமன்றம் சென்றபோது, கட்சி ஆரம்பித்துச் செல்லவில்லை. சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக ஓட்டப்பிடாரத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பணியாற்றினார். சட்டமன்றத்திற்கு உள்ளே முதன்முறையாகச் சென்றபோதே தனி ஒருவராக, தேவேந்திரகுல மக்களின் பிரதிநிதியாக உள்ளே சென்றார். ஆனால், அனைத்து சமூக மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினராக அங்கு பணியாற்றிய காட்சியை நாங்கள் பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு ஒரு வல்லமையான தலைவர்; ஒரு வலிமையான தலைவர்; ஒரு வலிமையான போராளி. வெள்ளி விழா என்பதே ஒரு கட்சிக்கு திருப்புமுனையாக இருக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வீர வரலாறு கூறும் வெள்ளிவிழா மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதற்கு பின்பு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது; டெல்லியிலே ஆட்சி அமைவதற்கு அதிமுக காரணமாக இருந்தது.
எடப்பாடியார் எங்களிடத்தில் சொல்லியே அனுப்பினார். என்னிடத்தில் நேற்று இதே நேரத்தில் ஏழு மணிக்கு பேசினார். அருமை அண்ணன் நத்தம் விஸ்வநாதன் அவர்களிடத்தில் பேசியிருக்கிறார்; அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களிடத்திலே பேசியிருக்கிறார். என் சார்பாக வாழ்த்துக்களை சொல்லி, அவருக்கு மாலை அணிவியுங்கள்; அவருக்கு சால்வை அணியுங்கள்; நான் கலந்து கொள்ளவில்லை என்று அவர் வருத்தப்படக்கூடாது; அதற்காக நீங்கள் மூன்று முன்னாள் அமைச்சர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். எங்களுடைய ஆசீர்வாதம் அவருக்கும் உண்டு. அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் உண்டு. ஆகவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு திருப்புமுனை ஏற்படப் போகிறது. இந்த மேடையில் பாஜகவை சேர்ந்தவர் இருக்கிறார்கள். இந்தியாவை பொருத்தமற்றிலும் டெல்லியை ஆளக்கூடிய மோடி ஜி தான் வேண்டுமென்று இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய எல்லா சமுதாய மக்களும் விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு ஒரு வலிமையான தலைமை மோடி ஜி தலைமை. இந்தியாவினுடைய இரும்பு மனிதராக மோடி ஜொலிக்கிறார். அவர் பிரதமராக வரவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருக்கிறோம். இங்கே அமர்ந்திருக்கக் கூடியவர்கள் அனைவரும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காக்க கூடியவர்கள்; மத நல்லிணக்கத்திற்காகப் போராடக் கூடியவர்கள்; இந்தியாவை மிரட்டக்கூடிய அந்நிய சக்திகளை எதிர்த்து மிரட்டக்கூடிய வல்லமை படைத்த தலைவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
வங்காள தேசத்திலேயே ஒருவருக்குப் பிரச்சினை என்றால் குரல் கொடுக்கக்கூடிய தலைவராக டாக்டர் கிருஷ்ணசாமி இன்று உயர்ந்திருக்கிறார்; இலங்கையிலே தமிழ் மக்களுக்குப் பிரச்சனை என்று சொன்னால் குரல் கொடுக்க தலைவராக டாக்டர் கிருஷ்ணசாமி உயர்ந்திருக்கிறார்; இங்கே ஒருவர் பேசினார் ஏழு பேர் தூக்குத் தண்டனை பிரச்சனை வந்த போது, அதற்காகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்; விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஆணித்தரமாக சட்டமன்றத்தில் பதிவு செய்தவர் நம்முடைய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அப்படிப்பட்டவர்.
எனக்குத் தெரிய வேறு கட்சியினுடைய மாநாட்டிலோ, இலக்கிய மாநாட்டிலோ தான் அண்ணாச்சி பழ. கருப்பையா அவர்களை பார்த்து இருக்கிறோம். ஒரு கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் பிடித்து ஓடி வந்திருக்கிறார் என்று சொன்னால் இங்கே வந்து கரம் பிடித்து அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாழ்த்து சொல்கிறார் என்றால் அதுதான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பெற்றிருக்கக் கூடிய மிகப்பெரிய மனிதாபிமானம். அவரை தெரிந்தவர்களுக்கு தெரியும், அவர் ஒரு நல்லவர், வல்லவர், தீர்க்கதரிசி, எல்லா சமுதாய மக்களையும் அனுசரித்துச் செல்லக்கூடியவர். அப்படிப்பட்டவர் வேண்டும் என்பதற்காகத்தான் இன்று சென்னையிலிருந்து பல பேர் இங்கு வந்திருக்கிறார்கள்; மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் ஏதோ அவர் கூப்பிட்டார் என்பதற்காக வரவில்லை; அவரை பிடித்த காரணத்தினால் தான் வந்திருக்கிறார்கள். அவருடைய நடவடிக்கை பிடித்த காரணத்தினால் தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அவருடைய முற்போக்கு சிந்தனை பிடித்த காரணத்தினால் தான் நாங்கள் இன்று மேடையில் பேசிக் கொண்டிருக்கிறோம். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் புகழ் ஓங்க வேண்டும். புதிய தமிழகம் கட்சியின் வரலாறு வெள்ளிவிழா அல்ல, பவள விழா அல்ல. நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று வாழ்த்தி அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்து, நன்றியோடு விடைபெறுகிறேன்.!
நன்றி! வணக்கம்.!
சட்டமன்ற உறுப்பினர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் கடம்பூர் செ.ராஜூ அவர்களின் வாழ்த்துரை:
கடம்பூர் செ. ராஜூ
வரலாற்றுப் புகழ்மிக்க ஆன்மீக தலமான ரங்க மன்னாரும், ஆண்டாளும் குடிகொண்டு, அரசின் அடையாளமாக உயர்ந்த கோபுரம் இருக்கக்கூடிய வரலாற்றுச் சின்னமாக இருக்கின்ற இந்த திருத்தலத்திலே புதிய தமிழகம் கட்சியினுடைய எழுச்சி மிக்க மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். எழுச்சிமிக்க மாநாடு என்று சொல்வதை விட பாபுஜி சுவாமிகள் சொன்னதைப்போல இது வெள்ளி விழா மாநாடு அல்ல ’வெற்றி விழா மாநாடு’ என்ற வகையிலே மிகச் சிறப்பான மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கின்ற புதிய தமிழகம் கட்சியினுடைய நிறுவனத் தலைவர் – வரலாற்று நாயகன் டாக்டர் அய்யா அவர்கள். ஏன் வரலாற்று நாயகன் என்று சொன்னால் நாங்கள் இன்றைக்கு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கூட 1996-லே டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் முதன்முதலாக சட்டமன்றத்திலே காலடி எடுத்து வைத்த நேரத்தில் அவர் ஆளுகின்ற கட்சிகளையும் எதிர்த்து; அன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த எதிர்க்கட்சியையும் எதிர்த்து; அத்தனை அரசியல் கட்சிகளையும் எதிர்த்து எங்களுடைய ஓட்டப்பிடாரம் தொகுதியிலே தனக்கென்று ஒரு தனி அடையாளத்துடன் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் கால் பதித்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் என்பதை இந்த தருணத்திலே நாங்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அந்த வகையிலே இந்த நிறைவு வெள்ளிவிழா மாநாட்டைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிற டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு துணையாக தந்தை வழியில் தனயன் என்ற வகையிலே இளைஞர்களின் எழுச்சி நாயகராக சிறப்பு செய்திருக்கின்ற மரியாதைக்குரிய அன்பு தம்பி டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.!
நான் முதலிலேயே சொன்னதைப் போல, டாக்டர் அவர்களை உண்மையிலேயே பாராட்டுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, தொலைபேசியில் என்னை அழைத்தார்கள்; மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என்னிடத்தில் அழைப்பிதழைக் கொண்டு வந்தார்கள்; மாநாடு எங்கே வைத்திருக்கிறார்? என்று கேட்டேன். ஸ்ரீவில்லிபுத்தூரில் என்று சொன்னார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரிலே என்று சொன்னதிலேயே தான் டாக்டர் அவர்களின் சாதுரியத்தை, மதி நுட்பத்தை, அரசியல் அனுபவத்தை நான் எண்ணிப் பார்த்தேன். ஏன் என்று சொன்னால், இங்கே தமிழக அரசின் அடையாளமாக இருக்கக்கூடிய கோபுரம் இருக்கிறது. ”இந்த அரசு மாற வேண்டும், அரசின் அடையாளம் மாற வேண்டும்” என்பதற்கு முதல் அத்தியாயமாகத்தான் இந்த மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப் பொருத்தமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காக உங்கள் அனைவரின் சார்பாக டாக்டர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
அதுவும் ஆன்மீக தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். நான் முதலில் சொன்னதைப் போல, அருள் பாலிக்கும் ரங்க மன்னர் – ஆண்டாளின் ஆசி இருக்கிறது. ஆசியுரை வழங்குவதற்கு யாரை அழைத்திருக்கிறார் என்று சொன்னால், இங்கு இருக்கக்கூடிய ஜீயர். மதிப்பிற்குரிய ராமானுஜ ஜீயர் அருளாசி வழங்கி இருக்கிறார் என்று சொன்னால் அவர்கள் ஆன்மீகத்தை தவிர, மடத்தைத் தவிர ஒரு அரசியல் மாநாட்டிற்கு ஒரு ஜீயர் வந்திருக்கிறார் என்றால் முதன்முதலாக புதிய தமிழகம் மாநாட்டிற்கு தான் அவர் வந்திருக்கிறார். அதேபோல விஸ்வ இந்து பரிசத்தின் நிறுவனர் வேதாந்தம் ஜி அவர்கள் ஆசியுரை வழங்கி இருக்கிறார்கள். அதே போல, எங்கள் அன்பு நண்பர் அவர் இங்கு மட்டுமல்ல, விஸ்வகர்மா சங்கத்திற்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, உலகெங்கும் வாழக்கூடிய, கடல் கடந்து வாழக்கூடிய தமிழர்களுடைய செல்வாக்கை பெற்று; அவர் டாக்டர் அவர்களின் பக்கத்தில் இருக்கிறார். டாக்டர் அவர்களின் பக்கத்தில் மலுமிச்சம்பட்டியில் இருந்தாலும் கூட, மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் டாக்டர் அவர்கள் விஸ்வகர்மா சமுதாயத்திற்கும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பது குறித்துப் பேசினார். இன்று பாபுஜி சுவாமிகளும் அதே கருத்தை முன்மொழிந்து டாக்டர் அவர்களுக்கு அருளாசி வழங்கி இருக்கிறார்கள். ஆகவே, ஆண்டவனுடைய அருளும் இந்த மாநாட்டிற்கு இருக்கிறது; அருளாசி வழங்குகிற பெரியோர்களின் ஆசியும் இந்த மாநாட்டிற்கு இருக்கிறது.
மேடையில் இருக்கக் கூடிய அரசியல் கட்சியின் எண்ணிக்கையை எண்ணிப் பார்த்தேன். இன்று புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழா மாநாடு. ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்திருக்கிறது என்று சொன்னால், அது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் ஒரு சாமானிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அந்த கட்சி இன்று வெள்ளி விழாவைத் தாண்டி வெற்றி நடை போடுகிறது என்று சொன்னால் நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் நேற்று பெய்த மழையிலே முளைத்த காளான்களைப் போல, அதாவது காளான்கள் எப்படி முளைத்த சில நாட்களிலேயே காணாமல் போகுமோ? அதுபோல எத்தனையோ கட்சிகள் காணாமல் போன நிலையிலே இன்றைய திராவிட கட்சிகளுக்கு எங்களுக்கு மாற்றாக ஒரே ஒரு கட்சி வெள்ளிவிழா மாநாட்டைத் தாண்டி நிற்கிறது என்று சொன்னால் அது புதிய தமிழகம் கட்சி மட்டுமே!
கட்சியின் வெள்ளி விழா மாநாட்டை நடத்துகிறார் என்று சொன்னால் அதில் டாக்டரின் உழைப்பு, சிந்தனை, ஆற்றல் என அனைத்தும் இருக்கிறது என்பதுதான் பொருள் என்பது இங்கு மேடையில் உள்ள அனைவருக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும். இந்த மேடையிலே வாழ்த்துவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மட்டும் இல்லாமல், 13 அரசியல் கட்சிகள் இங்கே பங்கேற்று இருக்கிறோம். இங்கே தேசிய கட்சியின் சார்பாகவும் பங்கேற்று இருக்கிறார்கள்.
தமிழகத்தில் என்றைக்கு தேர்தல் நடைபெற்றாலும் மீண்டும் ஜெயின் ஜார்ஜ் கோட்டையிலே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை முதல்வராக அமர்த்தும் நிலையிலே தான் இன்றைய தமிழக மக்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த ஆட்சியாளர்களுக்கு ஆளத் தெரியவில்லை. மக்களை வழி நடத்த தெரியவில்லை; இந்த ஆட்சியாளர்கள் மக்களை போட்டு வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்; எப்பொழுது விடியல் வரும் என்று மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த விடியலை தருவதற்கு அச்சாரமாகத்தான் புதிய தமிழகத்தின் மாநாடு என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். ஆகவே, அண்ணன் எடப்பாடி அவர்கள் எங்களை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் அந்த வெள்ளிவிழா மாநாட்டில் பங்கு பெற்று, உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்; என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் என்று அனுப்பி வைத்த அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திற்கும் மேலாக, நான் முதலிலேயே கூறியதை போல ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு ஆன்மீக தலம் – புண்ணிய தலம். ஆண்டவனுடைய அருளும் இருக்கிறது; அருளாசி வழங்குவதற்கு ஆன்மீக பெரியோர்கள் வந்திருக்கிறார்கள். இளைஞர்கள் எழுச்சி ஒரு பக்கம். நானும் வந்ததிலிருந்து பார்த்தேன். நீண்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் மாநாட்டில் தான் விசில் சத்தத்தையும், எழுச்சியையும் பார்க்கிறேன். அந்த அளவிற்கு இன்றைக்கு இளைஞர்கள் எழுச்சி ஒரு புறம்; தாய்மார்கள் சாரை சாரையாக பால்குடம், முளைப்பாரி ஊர்வலத்தோடு வந்தார்கள்.
முளைப்பாரி – ஊர்வலம் என்றால் ஒரு காரியத்தை எண்ணி அது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வணங்கி தான் தாய்மார்கள் முளைப்பாரி எடுப்பார்கள். நீங்கள் வைக்கக்கூடிய வேண்டுதல் டாக்டருக்கு வலு சேர்க்கும் வண்ணம் முளைப்பாரிகளை சுமந்து வந்திருக்கிறீர்கள். ஆக இவ்வளவு ஆசியோடு இன்று நடைபெறுகிறது இந்த வெற்றி விழா மாநாடு – வெள்ளி விழா மாநாடு.
ஒரு வெள்ளிவிழா மாநாடு என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. 1996ஆம் ஆண்டு தேர்தலிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாங்கள் பெரிய சரிவைச் சந்தித்தோம். அதற்குப் பிறகு, 1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி சீமையிலே நடைபெற்ற அதிமுக வீர வரலாற்றின் வெற்றி விழா மாநாடு என்று சொல்லி வெள்ளி விழா மாநாடு நடந்த பிறகு தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இமாலய வெற்றியைப் பெற்றோம். அதே போல இன்று புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழா மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் மூலமாக மிகப் பெரிய இமாலய வெற்றியைப் பெற்று, அதற்கு டாக்டர் அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இங்கு பேசிய அத்தனை பேரும் டாக்டர் அவர்கள் டெல்லி செங்கோட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை டெல்லி செங்கோட்டைக்கு செல்ல டாக்டர் விரும்பினாலும் செல்லலாம். இனிமேல் அவரது சாய்ஸ்தான். அரசியல் களத்தில் மக்கள் அந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். இனி தேர்தல் மட்டும் தான் அறிவிக்கப்பட வேண்டும். இந்த கூட்டணியை வெல்வதற்கு எந்த சக்தியும் இல்லை என்ற நிலையிலே தான் லட்சக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர் டெல்லிக்கு செல்ல விரும்பினாலும் டெல்லி ரயிலில் ஏறலாம், அது செங்கோட்டைக்கு போகும்; அவர் செயிண்ட் சார்ஜ் கோட்டைக்குச் சட்டமன்ற உறுப்பினராக வர விரும்பினாலும் அதை தடுப்பதற்கும் எந்த சக்தியாலும் முடியாது என்பதை இந்த தருணத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நாங்கள் டாக்டர் அவர்களின் செயல்பாட்டைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். எங்கள் கூட்டணியிலே வெற்றி பெற்று வந்தார். சட்டமன்றத்திலே அம்மா இருப்பார்கள். ஆனால், தான் நினைத்த எண்ணங்களை – கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்வதற்கு கொஞ்சம் கூட தயங்க மாட்டார்.
டாக்டர் அவர்கள் எந்திரிப்பார். ஏதாவது ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு ஸ்டைலா நின்று அப்படி திரும்பினார் என்றால் அன்று விவகாரம் என்று பொருள். அந்த சட்டமன்றத்தில் விவகாரம் வந்துடுச்சு என்று அர்த்தம். ஆனால், எதற்கும் சளைக்கவே மாட்டார். நாங்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என 150 பேரும் சத்தமிட்டாலும், எத்தனை கூக்குரலிட்டாலும் சரி, எதற்கும் அஞ்சாமல் தான் சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாகச் சட்டமன்றத்தில் பதியக்கூடிய நிலையிலே அன்பு சகோதரர் டாக்டர் இருப்பார். தன்னை அனுப்புகின்ற அந்த மக்களின் குரலாக ஒலிக்கின்ற டாக்டர் அவருடைய குரல் தமிழகத்தில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்; அதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.! நன்றி! வணக்கம்.!!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழ கருப்பையா அவர்களின் வாழ்த்துரை:
பழ கருப்பையா
”பழைய தமிழகம் சமத்துவமற்றது” என்று கருதி எல்லா மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தமிழகம் ஒன்றினை தோற்றுவித்து, அதில் உங்களை எல்லாம் இணைத்து அதனுடைய தலைவராக 25 ஆண்டு காலமாக கோலோச்சிக் கொண்டிருக்கிற பெருமதிப்பிற்குரிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே.! அனைத்து அரசியல், சமூகங்களை சார்ந்த தலைவர்களே.! உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.!
நான் வந்து கொண்டிருந்த பொழுது ஒரு பெரும் கூட்டம் வந்து கொண்டிருந்தது. வந்த கூட்டம் பெரியதா? அல்லது வந்து கொண்டிருக்கிற கூட்டம் பெரியதா? என்று சொல்ல முடியாத அளவிற்கு ’அலைகடல்’ போல திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சங்க இலக்கியத்திலே ஒரு வரி உண்டு ”படை பெருத்ததால் பார் சிறுத்ததோ? என்று சங்க இலக்கியம் சொல்லும். உலகம் பெரியது தான். ஆனால், படை அதைவிட பெரியதாக இருந்த காரணத்தினாலே பார் சிறுத்துவிட்டது என்று சங்க இலக்கியம் சொல்லும். அதுபோல படைபெருத்ததால் பார் சிறுத்ததோ? என்பது போல அலைகடலென திரண்டு வந்திருக்கிற தேவேந்திரகுல வேளாளர் பெருமக்களே.! எனக்கு முன்னாலே பேசிய ஒரு தலைவர் பேசுகின்ற பொழுது சொன்னார் ‘இன்னார் பிறந்திருந்தால் இந்த சமூகத்தில் பிறந்திருப்பார்’ என்று.
நான் சொல்லுகின்றேன் உங்கள் சமூகம் 13 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, வீழ்ந்துவிட்ட பொழுது, வேற்று மொழிகள் தலை தூக்கி இருந்த காலத்தில், தமிழ் மொழி போற்றுவார் அற்று இருந்த காலத்தில் தமிழ் இலக்கியத்தைத் தூக்கி நிறுத்திய பள்ளு இலக்கியங்களைப் படைத்தவர்கள் நீங்கள்தான். பெரிய அளவிற்கு நீங்கள் பல பேர் பள்ளு இலக்கியங்களை படிப்பதில்லை. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் பள்ளு இலக்கியங்கள் கோலோச்சி இருக்கின்றன. இரண்டு பள்ளிகளும், பள்ளர்களும் சேர்ந்து போடுகின்ற சண்டை, விவசாயத்தில் நீங்கள் காட்டுகின்ற ஆர்வம், உங்களுடைய வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றை மிகச் சிறப்பாக விளக்குகின்ற இலக்கியங்கள் பள்ளு இலக்கியங்கள்.
முக்கூடற்பள்ளு என்ற ஒரு பள்ளு 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அந்தப் பள்ளு இலக்கியம்தான் மூன்று, நான்கு நூற்றாண்டுகளுக்கு தமிழின் இலக்கியமாக போற்றப்பட்டது என்பதை நீங்கள் அறிய வேண்டும். ஆகவே, நான் சொல்லுகிறேன் நீங்கள் பழம்பெரும் சமூகம் மட்டும் இல்லை; தமிழ்நாட்டின் பண்பாட்டைக் கட்டியமைத்த சமூகங்களில் ஒன்று. ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமி என்னை அழைத்த போது, ஒரு கூட்டத்தைக் கூட்டி வைப்பார் என்று கருதினேன். ஒரு கடலையே இங்கு திரட்டி வைத்திருப்பார் என்று கருதவில்லை.
சிங்கம் கர்ஜிப்பது கேட்கும்; புலி உறுமுவது கேட்கும்; பறவை அகவுவது கேட்காது. நீங்கள் சிங்கம் போல் உறுமுனீர்கள், பாராளுமன்றத்திற்கு கேட்டது. இதற்கு முன்னாலே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். வெள்ளைக்காரன் காலத்தில் ஒவ்வொரு சமூகமும் வெள்ளைக்காரனிடம் மனு போடும். நாங்கள் ஒன்றும் குறைவான சமூகம் இல்லை; நாங்கள் பெருமையான சமூகம்; உயர்வான சமூகம் எங்களை மேல் தட்டில் வை என்று ஒவ்வொரு சமூகமும் வெள்ளைக்காரனிடம் மனு போடும். ஆனால், நமது சுதந்திர இந்தியாவில் எல்லா சமூகமும் ”எங்களை கீழே இறக்கு, எங்களை கீழே இறக்கு” என்று மனு போட்டார்களே தவிர, ’எங்களை மேலே வை’ என்று எந்த ஒரு சமூகமும் சொல்லவில்லை.”தூக்கு என்னை மேலே” என்று ஒரே ஒரு சமூகம் தான் சொன்னது. கீழே இறக்கு! கீழே இறக்கு!! என்று சொல்லப்பட்ட காலத்தில், எங்களை மேலே ஏத்து, மேலே தூக்கு.! மேலே தூக்கு!! என்று சொல்லப்பட்ட குரல் புதிய குரலாக இருந்தது.
’மேலே தூக்கு’ என்பது ”புதிதாக மேலே தூக்கு என்ற பொருளினால் அல்ல, நாங்கள் இருந்த இடத்தில் எங்களை மீண்டும் வை” என்பதுதான் அது. இறக்கிவிட்டீர்கள், விழிப்பற்று இருந்தோம், மேலும் இறக்கிவிட்டீர்கள். மீண்டும் எங்களை பழைய இடத்தில் விவசாய சமூகமாக, வேளாண்மை சமூகமாக மீண்டும் தூக்கி, தமிழின் பழம் பெருமை சமூகமாக அமர வையுங்கள் என்று சொல்லி, நீங்கள் இங்கே பெரிய மாநாடாக திரண்டு இருக்கிறீர்கள்.
நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன். உங்களுடைய குரல் பாராளுமன்றத்திற்கு கேட்டது. ’You cannot be ignore’ உங்களைப் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகம் என்பது numerical state counts in a democracy என்று சொல்வார்கள். ஊக்க வலிமை உள்ள ஒருவரை – சமூகத்தை ஜனநாயகம் புறக்கணித்து விட்டு நிலை பெற முடியாது. ஆகவே பெருங்கூட்டமாக, பெருந்திரளாக இருக்கிற உங்கள் குரலை பாராளுமன்றம் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
தேவேந்திரகுல வேளாளர் என்று பெயரிடுங்கள். அதுதான் எங்கள் பெயர் என்று நீங்கள் சொன்னபோது, அதிலே இன்னென்ன பிரிவுகளைச் சேருங்கள், ஏழு பிரிவுகளைச் சேருங்கள்; ஒன்றாக இருந்த நாங்கள் பிரிந்து விட்டோம்; எல்லா பிரிவுகளையும் ஒன்றாக்கி “தேவேந்திரகுல வேளாளர்” என்று ஆக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன பொழுது, தமிழ்நாட்டின் காதிலே விழுமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், அது பாராளுமன்றத்தின் காதிலே விழுந்தது. அந்தப் பெயரை பாராளுமன்றத்தில் தனிச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
இந்தியாவிலேயே ஒரு சமூகத்திற்கு பெயரிடுவதற்கு பாராளுமன்றத்திலே தனிச்சட்டம் கொண்டு வந்த ஒரு வரலாறு என்பது உங்களுக்கான வரலாறு தான். ஆனாலும் சொல்லுகிறேன், கருப்பு முருகானந்தம் இங்கே வந்திருக்கிற காரணத்தால் சொல்லுகிறேன். நீங்கள் மேலிடத்திற்கு வேண்டியவர்கள்; அவர்களின் காதுக்குள் போய் நெருக்கமாக சென்று பேசக் கூடியவர்கள் என்ற காரணத்தினால் சொல்லுகிறேன்.
நீங்கள் அவர்களுக்கு பெயரிட்டது சரி, அதுதான் அவர்களுடைய பெயர். அந்தப் பெயரிலே வழங்கப்படுவது சரி, அதை மதித்து நீங்கள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது சரி. ஆனால் அவர்களை இருக்கின்ற இடத்திலேயே இருக்க வைத்து விட்டு, வெறும் பெயரிடுவதால் மட்டும் ஆகப்போகின்ற நன்மை என்ன என்று கேட்கின்றேன்?
அவர்கள் ’என்னைத் தூக்கு’ என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு சமூகம் தான் தமிழ்நாட்டில் ’என்னை மேலே தூக்கு’ என்று சொல்கிறது. ஒவ்வொரு சமூகமும் ”என்னை மேலே தூக்கு, என்னை மேலே தூக்கு” என்று சொல்லி கடைசியில் ஒரு நாள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையே இல்லாமல் போகின்ற அந்த காலம் தான் நம்முடைய சிறந்த காலம். இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு கொடுத்த அந்த பெயரால் என்ன ஆகிவிடப் போகின்றது? என்று கேட்கிறேன். இந்த பெயரால் தான் நீங்கள் ஏற்கனவே அழைக்கப்படுகிறீர்கள்; வழங்கப்படுகிறீர்கள்! இந்த பெயரால் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகின்றது? இந்த பெயரால் விளைந்த நன்மை என்ன?
முக்கியமாக செய்ய வேண்டியது அந்த இடத்திலிருந்து தூக்கி எங்களை பழைய இடத்தில் வை என்று நீங்கள் சொன்ன பொழுது, அதைச் செய்யாமல் அங்கேயே வைத்துவிட்டு, அதே கோட்டாவிலேயே வைத்துவிட்டு, மேலே தூக்காமல் வெறும் பயனில்லை. பொன்னை வைத்த இடத்தில் பூவை வைத்தோமே பெயர் வைக்கவில்லையா? என்று முருகானந்தம் கேட்டால், ஏதோ வைக்க வேண்டும் என்று தோன்றியதற்காக வேண்டுமென்றால் நான் பாராட்டுவேனே தவிர, அதனால் பலன் ஒன்றுமில்லை.
ஒரு காரியத்தை அதிகாரம் இருக்கிற பொழுதே செய்து விட வேண்டும். இதைப் பாராட்ட உங்களுடைய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்குத் தெரிந்தது. இப்படி ஒரு குரல் தெற்கே கேட்கிறது; மிகவும் தெற்கே கேட்கிறது. என்னை மேலே தூக்கு என்று சொல்கிற குரல் கேட்கிறது என்று அமித்ஷா பாராட்டினாரே. உங்களுடைய உள்துறை அமைச்சர் புரிந்து கொள்கின்ற அளவிற்கு இந்த சிக்கல் மேலே போயிருக்கிற பொழுது, அதற்குரிய தீர்வுகளைச் சரியாக கண்டு உங்கள் ஆட்சிக் காலத்திலேயே இந்த சாதனையை முடித்து விட வேண்டாமா? என்று கேட்கிறேன்.
நான் கேட்கிறேன் வெறும் பெயரால் ஆகப்போவது என்ன? ராஜாதி ராஜா, ராஜவிக்கிரம, ராஜபராகிராம என்று நம்முடைய சமூகத்தின் முன்னால் போட்டுக் கொள்வதினால் ஆகப்போகிற நன்மை என்ன? நான் சொல்லுகிறேன் பெயரைக் கூட நீங்கள் வைத்திருக்க வேண்டாம். அந்த இடத்தை விட்டுத் தூக்குங்கள் என்று தான் சொன்னார்கள். பெயரை அந்த மக்களே வைத்துக் கொள்வார்கள்.
ஆகவே சொல்லுகின்றேன் பெருமக்களே.! ஒருவர் மனதிலே தைப்பது என்பது பெரிய காரியம். ஆட்சியில் இருப்பவர்களுக்கு மனதிலே தைத்து விட்டால் அதிகாரம் இருக்கின்ற பொழுது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்ய வேண்டியதைச் செய்து விட வேண்டும். மனித வாழ்க்கை குறுகியது அதற்குள்ளாகவே என்னென்னவோ செய்து விட வேண்டும் என நினைப்பது போல, ஒரு ஆட்சியினுடைய போக்கும் எப்போதும் குறுகியதுதான். எந்த ஒன்றும் நிலைத்து நீடிக்கக்கூடியது அல்ல. ஆனாலும் சொல்லுகிறேன் இருக்கின்ற காலத்தில் இதைப் புரிந்து கொண்டார்கள்; செய்தார்கள் என்று மக்கள் போற்றுகின்ற ஒரு காரியத்தை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். ஆகவே கூடினோம்; கலைந்தோம் என்றில்லாமல் உங்களுக்காக சரியாக சிந்திக்கக் கூடிய ஒரு தலைமை வாய்த்திருக்கிறது. அதுதான் மிகப்பெரிய சிறப்பு.
எனக்கு ரொம்ப ஆச்சரியமாக ஒன்று இருந்தது PCR என்கிற ஒரு Act-ஐ டாக்டர் ராமதாஸ் மற்றும் எத்தனையோ தலைவர்கள் எதிர்த்தார்கள். மேற்கே கோவை மாவட்டங்களில் எல்லாம் எதிர்த்தார்கள். ஆனால், அந்த Act ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த PCR Act என்று சொல்லப்படுகிற ஒரு Act-ஐ தூக்கிவிட வேண்டும். அதனால் அவர்கள் வலியின் காரணமாக அந்த Act பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்பட்ட பொழுது டாக்டர் கிருஷ்ணசாமி உங்களிடம் சொன்னாராம் ”அடித்தான் என்று சொன்னால் அடித்தான் என்று சொல்லி வழக்குப் போடு; குத்தினான் என்று சொன்னால் குத்தினான் என்று சொல்லி வழக்குப் போடு”. ஆனால் ’PCR Act-ல் வேண்டுமென்றே வழக்குப் போடாதே’ என்று சொன்னார் என்று சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாம் பாதிக்கப்படுகின்ற பொழுது வழக்கிற்குப் போவது சரியானது. ஆனால், ஒரு குறிப்பிட்ட PCR Act ன் மீது போக வேண்டாம் என்று சொல்லி உங்களை வழிநடத்தத் தெரிந்த தலைவராக டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. உன்னை அடித்தானா சரி? அவனை செருப்பால் அடிப்போம்; எந்த Act வேண்டுமானாலும் போடு; வா அவனைப் பதிலுக்கு பதில் பழிவாங்குவோம் என்று சொல்லவில்லை. அடித்ததற்கு அடித்தான் என்று போடு; அதற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொடு; PCR Act மீது போகாதே என்று சொல்வதற்கு உன்னுடைய கையில் இருக்கிற கத்தியை பயன்படுத்த வேண்டாம்; நீ கீழே போட்டு விடு என்று சொல்வதற்கு உரிய ஒரு தலைமை உங்களுக்கு வாய்த்திருக்கிறது என்பது மிகவும் பெருமைக்குரியது என்று நான் சொல்கிறேன்.
ஒரு காலகட்டத்தில் என்னிடம் புதிய தமிழகத்திற்கு நான் தான் பொதுச்செயலாளர் என்று அய்யர் சொன்னார். இருக்கிற கட்சியை எல்லாம் விட்டுவிட்டு அய்யர்கள் எல்லாம் உங்கள் கட்சியிலும் வந்து சேர்ந்து விட்டார்களா? என்று கேட்டேன். அவர் சொன்னார் என் பெயர்தான் ’அய்யர்’, நான் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். அவரிடம் எதற்காக இந்த பெயர் என்று கேட்டேன்? என்னுடைய அப்பா நினைத்தார் ”இவர்தானா அய்யன், இவருக்கும் மேல் நம் சமூகம் – நம்முடைய பையனுக்கு வைப்போம் அய்யர் என்று” அந்த பெருமித உணர்வு போன தலைமுறைகளிலேயே உங்களுக்கு உண்டாகியிருக்கிறது என்பது ரொம்பவும் பாராட்டத்தக்கது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு பள்ளு இலக்கியங்களை வழங்கினீர்கள்; தமிழ்நாட்டில் பண்பாட்டு வழியில் பள்ளு இலக்கியங்களைக் காத்தீர்கள். ”நெல் வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது” அப்படி ஒரு பழமொழி உண்டு. எத்தனை நெல் வகையை உண்டோ அவைகளைக் கூட எண்ணி விடலாம். ஆனால் நீங்கள் பாடியிருக்கிற பள்ளு வகைகளை எண்ண முடியாது என்று தெற்கத்தி மக்களெல்லாம் உங்களைப் பாராட்டி இருக்கிறார்கள்.
கடைசியாக ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன் ’இட ஒதுக்கீடு’ என்ற கொள்கை தோன்றி நூறாண்டுகள் ஆகிவிட்டது. இந்த நூறாண்டுக் காலத்தில் ஒரு கொள்கை தோன்றினால் கொஞ்சம் கொஞ்சமாக காலப் போக்கில் அந்த கொள்கையினால் வளர்ச்சி பெறுகின்ற பொழுது, கொள்கை தேய்ந்து கொண்டே வர வேண்டும்.
நூறாண்டுகளுக்கு முன்பு, அழுத்தப்பட்ட மக்களை தூக்கிவிடவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கை ஏறத்தாழ நீதி கட்சி காலத்தில் தோன்றியது. அந்தக் கொள்கை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வலிமையாக இருக்கிறதே தவிர, அது தேயவே இல்லை. இந்தக் கொள்கையில் ஒரு படி மேலே ஏற வேண்டும் என்று நீங்கள் மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்களே தவிர, தமிழ்நாட்டில் பிற சமூகங்கள் சொல்லவில்லை.
இதை ஒரு சமயத்தில் நான் ஒரு கட்டுரை ஒன்று எழுதினேன். தினமணியில் ”பிற்பட்டோருக்கு பிற்பட்டோரே பகை”. உங்களுடைய இடத்தை முற்பட்ட சமூகத்தவர் பறித்துக் கொள்ள முடியாது; உங்களுடைய இடம் உங்களிடமே இருக்கிறது. ஆனால், ஒரு பத்து சதவீதம் பேர் உங்களுக்குள் டாக்டராகி, இன்ஜினியராகி, பெரிய தொழிலதிபராகி முன்னுக்கு வந்து விட்டால், பிறகு அந்த வரிசையில் விட்டு வெளியே வந்து நம்முடைய இடத்திற்கு வருகின்ற தேவேந்திர குல வேளாளர் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும். ஏற்கனவே வரிசையில் நின்றவர் எல்லாம் வந்து பந்தியில் அமர்ந்து கொள்வாரென்றால் அவன் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் கூட உங்களுடைய இடத்தை அடைகிறான் என்று நான் அப்பொழுது எழுதினேன். அதற்காக என்னை கருணாநிதி ரொம்ப கடுமையாக முரசொலியிலே ”பழைய கருப்பா, அந்த கருப்பா, இந்த கருப்பா” என்று சொல்லி என்னைப் போட்டு அர்ச்சித்து எடுத்து விட்டார்.
இட ஒதுக்கீட்டின் மூலம் பத்து பத்து சதவீதமாக முன்னேறியவர்கள் எல்லாம் வெளியேறி, தன்னுடைய செல்வம், தன்னுடைய வசதி இவற்றின் அடிப்படையில் கல்வியை தொடர முன்னேறாத அதே சமூகத்தைச் சேர்ந்த மக்களை எல்லாம் அடுத்தடுத்த இடங்களைப் பெறுவார்களேயானால், இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை தேவை இல்லாமல் போய்விடும். ஆனால், அது நடக்காமல் அடைந்தவர்களே, திரும்பத் திரும்ப அடைகின்ற காரணத்தினால் பல சமயங்களில் முன்னேறிய சமூகங்கள் அல்ல, உங்கள் சமூகமே உங்களுக்கு பகையாக இருக்கிறது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, கடைசியாக ஒன்றே ஒன்று சொல்லுகிறேன். திராவிட இயக்கங்களில் தோற்றத்திற்கு காரணம் ’ஜாதியை ஒழிக்க வேண்டும்’ என்பதுதான். ஆனால், அந்த ஜாதி ஒழிப்பு என்பது கருணாநிதி காலத்தில் கலப்பு மனம் செய்பவர்களுக்கு 5000 ரூபாய் அறிவிப்பு செய்தார். கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பது தான் நோக்கம் என்று சொன்னார். ஆனால் கடைசியிலே இப்பொழுது அரசாங்கத்தில் கலப்பு திருமணம் செய்பவர்களை சாதியற்றவர்களாக மாற்றுவதற்குப் பதிலாக தகப்பன் ஜாதி வழியாகவோ, தாயின் ஜாதி வழியாகவோ அடையாளப்படுத்துவது என்ற நிலை ஏற்படுமாயின் ஒரு விதத்தில் முரணாக இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த வரலாறு உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒரு பிராமண பெண் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பையனை மணந்து கொண்டார். அவளும் அவனும் பழகியிருக்கிறார்கள்; அவர்களுக்குள் பிடித்தது; மணந்து கொண்டார்கள். அவன் MBA பட்டம் படித்திருக்கிறான். ஆனால், அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், அந்த பெண்ணிற்கு வேலை கிடைத்திருக்கிறது. ஒரு ஆசிரியர் வேலை என்ன சொல்லி அந்த பெண் வேலையை கோவையில் பெற்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரை நான் மணந்து கொண்டிருக்கிறேன்; அவருக்கு இரண்டு பிள்ளைகள் பெற்றிருக்கிறேன்; நான் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரின் பிள்ளைகளைச் சுமந்தவள்; அவரோடு வாழ்பவள்; இந்த குலத்தாள் என்றுதான் எங்கள் சமூகத்தினர் என்னை ஒதுக்கி விட்டார்கள்; நான் பிராமண சமூகத்திற்குத் திரும்பவும் முடியாது; நான் இந்த சமூகத்தில் ஒருத்தியாக நான் வாழ்கிறேன். ஆகவே, அவர் கூறிய இட ஒதுக்கீட்டின்படி எனக்கு ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். அப்படிக் கேட்டுக் கொண்ட பொழுது, ஒரு பெரிய அதிகாரி ஒருவர் செயலாளராக இருந்திருக்கிறார். அவர் இந்த வாதத்திற்குள் உள்ள நியாயத்தை உணர்ந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்டான கோட்டாவில் அந்த பெண்ணிற்கு ஆசிரியர் வேலை கொடுத்தார். அந்த பெண் மூன்று-நான்கு ஆண்டுகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு, கருணாநிதியினுடைய ஆட்சி வந்தது. இது ஏற்கனவே பெரிய விவகாரமாகியிருந்தது. இவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு வழக்குத் தொடுத்தார் என்னதான் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை ஒரு பிராமண பெண் அடைய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், பிறகு இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு மேலே உள்ள மற்ற உயர் சாதியினரெல்லாம் இந்த இடத்தை நோக்கிப் பாய்வார்கள். ஆகவே, இந்த கோட்டாவை இவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர, பார்ப்பன பெண் எவரும் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னார்.
நான் சொல்லுகிறேன். ஒரு பார்ப்பன பெண் ஒரு ஆசிரியர் வேலைக்காகவா?
அந்த பையனை விரும்பினாள்; மணந்து கொண்டாள்; பிள்ளை பெற்றுக் கொண்டாள். பிள்ளைகளை வளர்ப்பதற்கு அந்த சமூகத்தின் பெயரால், அந்த சமூகத்தில் ஒருத்தியாகி விட்ட காரணத்தால் இடம் கோரினாரே தவிர, வேறு ஒன்றும் இல்லை. தன்னுடன் இருப்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு, இட ஒதுக்கீட்டுக்காக மணந்து கொள்வார்கள்; ஆகவே தான் கோட்டா சிஸ்டம் என்பது அழிந்து விடும்; மேல் ஜாதியினர் இந்த கோட்டாவை பெற்றுக் கொள்வார்கள் என்று சொல்லி கருணாநிதி நினைத்தது பெரிய கொடுமை.
நான் சொல்லுகிறேன். அப்படி எல்லா பிராமண ஜாதியினரும், எல்லா உயர் சாதியினரும் அடிமட்ட மக்களை மணந்து கொள்ளத் தயாராகிவிட்டார்களானால் ஜாதி தானாக ஒழிந்து விடாதா? என்ன? என்று கேட்கிறேன். அவர்களுக்கு அந்த சலுகையைக் கொடுத்தால் தான் என்ன தவறு என்று கேட்கிறேன்?
அவர்களுக்கு இந்த சலுகை மூலம் இந்த சமூகம் சாதியற்ற சமூகமாகும் என்று சொன்னால் மேல் ஜாதி பெண் ஒருத்தி தன்னை கீழ் ஜாதி மருமகளாக நினைத்துக் கொள்ளும் என்ற நிலை வருமேயானால் சமூக மாற்றம் ஏற்படாதா? என்ன என்று கேட்கிறேன். வாதமற்ற வாதத்தினை வைத்து கருணாநிதியினுடைய ஆட்சியில் அந்தப் பெண்ணை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்கள். பிறகு அந்தந்த ஜாதிகளில் பிறந்தால்தான் இட ஒதுக்கீடு என்ற நிலைமை ஏற்பட்டது. ஆகவே சொல்லுகிறேன். நாம் ஜாதியை ஒழிப்பதாக ஒரு பக்கம் சொல்லுவோம்; இன்னொரு பக்கம் ஜாதி ஒழிவதற்கான காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறபொழுது, அதைத் தடுப்போம். இப்படிப்பட்ட முரண்பாடுகள் இடையே தான் தமிழ்நாடு நூறாண்டுகள், ஐம்பது ஆண்டுகள், 80 ஆண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லி, ஒரே ஒரு நிலையால் இந்த மாற்றம் ஏற்படும்.
உங்கள் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ’என்னை மேலே தூக்கு’ என்று சொல்வது போல, ஒவ்வொரு சமூகமும் ’என்னை மேலே தூக்கு! மேலே தூக்கு!!’ என்று சொல்லிக் கொண்டே போய் ஒரு நாள் மேலே இருக்கின்றவனும் ஒரு நாள் நானும் வெளியே வந்து விடுகிறேன்; எதுவும் தேவையில்லை; எல்லோரும் சமமே என்று ஒற்றுமையாக வாழுகின்ற காலம் வருவது தான் இந்த உலகத்தின் மிகச் சிறந்த காலம். தமிழ்நாட்டின் மிக மிகச் சிறந்த காலம்; அதுதான் நீங்கள் நடத்துகின்ற புதிய தமிழகம் படைக்கின்ற காலம்; அதற்கு கிருஷ்ணசாமி ஒரு முன்னோடி.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனர் – தலைவர் திரு.தி. தேவநாதன் யாதவ் அவர்களின் வாழ்த்துரை:
தி. தேவநாதன் யாதவ்
அன்பிற்கினிய புதிய தமிழகம் கட்சியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு மாநாட்டிற்கு தலைமை பொறுப்பேற்று இருக்கக்கூடிய தலைவர் – அன்பு நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே! எழுச்சியுரை ஆற்ற இருக்கிற புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புத்தம்பி மருத்துவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே! அதனினும் மேலாக விண்ணுலகை ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி தேவேந்திரன் வழிவந்த தேவேந்திரகுல வேளாளர்களே.! வீராங்கனைகளே.! அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.!
இன்றைய தினம் 25 ஆம் ஆண்டு அது புதிய தமிழகத்திற்கு தான். ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமியின் தொண்டு என்பது 45 ஆண்டுகள். அவர் சட்டமன்ற உறுப்பினரானதற்கு பிறகு தான் இயக்கம் கண்டார். இயக்கம் காண்பதற்கு முன்பாகவே இந்த இந்தியாவிலே சட்டமன்றத்திற்கு சென்ற ஒரு தலைவன் என்றால் அது தேவேந்திரகுல வேளாளர்களின் பிரதிநிதி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். அவர் நினைத்திருந்தால் திராவிட உலகத்திலேயே பயணித்து, அங்கு அமைச்சராக பவனி வந்திருக்க முடியும். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அடித்தட்டு மக்களின் எதிரி என்பதை 90-களிலேயே அடையாளம் காண்பித்தவர்; திராவிட முன்னேற்றக் கழகத்தை மன்னிக்கவே முடியாது என்று முதல் சூளுரைத்தவர்.
1995 மறக்க முடியுமா? கொடியங்குளத்தை மறக்க முடியுமா? தாமிரபரணியை மறக்க முடியுமா ? 17 வீரர்களை பழிகொடுத்த இயக்கத்தை – திராவிட முன்னேற்றக் கழகத்தை மறக்க முடியுமா?
நேற்றைய தினம் முடிசூட்டுவிழா! உதயநிதிக்கு முடிசூட்டுவிழா!! இங்கே அன்புத்தம்பி டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அமர்ந்திருகிறார். முடிசூட்டு விழா அல்ல, ஒரு போராளிக்கு இன்னொரு போராளி வந்திருக்கிறார். இது போராட்டக்களம்; இது ஆட்சிக் களம் அல்ல. போராட்டக் களத்திற்கு ”இவன் தந்தை என்னோற்றான் செய்” என்ற திருக்குறளின் அடித்தளமாக ஷியாம் வந்திருக்கிறார் என்றால் எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. எப்படி தன்னுடைய குழந்தையை வார்த்து எடுத்திருக்கிறார் என்று.
உதயநிதி போன்ற ஆட்கள் பதவிக்குத் தான் வருவார்கள். இதே உதயநிதி ஸ்டாலின் அவருடைய தாத்தா போராட்டத்திலே இருந்தபோது வந்தாரா? ஆனால், இன்று ஷியாம் வந்திருக்கிறார் என்றால் பதவிக்காக வரவில்லை; உங்களுடன் சேர்ந்து போராட வந்திருக்கிறார்; இந்த இனத்தின் உரிமையை மீட்க வந்திருக்கிறார்.
இந்த இனம் சாதாரண இனமா? எனக்கு முன்னதாக திருமாறன் பேசினார். வெண்ணிக்காலாடி இல்லாமல் பூலித்தேவன் இல்லை; சுந்தரலிங்கமும் வெள்ளையத்தேவனும் இல்லாமல் கட்டபொம்மன் இல்லை. சுந்தரலிங்கமும் அவருடைய முறை பெண் வடிவும் இதுவரை வரலாற்றில் எழுதப்படாத ஒரு சித்திரம். முதல் தற்கொலை படை இருக்கலாம். ஆனால், ‘முதல் தற்கொலை படை ஜோடி’ என்றால் அது சுந்தரலிங்கமும் வடிவும் தான்.
அன்பிற்கினிய தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களே.! யார் யாருடைய படத்தையோ போட்டு நீங்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சேகுவாராவின் படத்தை போட்டுத் திரிந்து கொண்டிருக்கிறீர்கள். நமக்கு சேகுவாரா வேண்டாம்; சுந்தரலிங்கம் போதும். சுந்தரலிங்கம் தெரியவில்லையா, டாக்டர் கிருஷ்ணசாமியை பாருங்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் உருவத்திலேயே சுந்தரலிங்கம்.!
மரியாதைக்குரிய தேவேந்திர குல வேளாளர் சொந்தங்களே.! இன்றைய தினம் பாரதப் பிரதமர் “நான் நரேந்திரன்; நீங்கள் தேவேந்திரன்” என்று பெருமையோடு மார் தட்டுகிறார் என்றால் நீங்கள் சாதாரண இனமல்ல. ஜாதிய ஒற்றுமை மிகப் பெருமையானது. அனைத்து ஜாதிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தான் மரியாதைக்குரிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மேடையிலேயே அனைத்து சாதி தலைவர்களையும் வரவழைத்து அமர்த்தியிருக்கிறார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. கொடியங்குளம் பிரச்சினைகளிலே அனைத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வேறொரு மதத்திற்கு போவதை தடுத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். இந்து மதத்தைக் காத்துக் கொண்டிருப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஜாதி இருந்தால் தான், மதம் இருக்கும்; மதம் இருந்தால்தான் நாடு இருக்கும். நாடு செழிக்க அனைத்து சாதிகளும் ஒன்றிணைந்து இங்கே போராடுவோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை வேரறுக்கும் வரை ஒன்றிணைந்து இருப்போம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். ஜெய்ஹிந்த்.!
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – தலைவர் திரு.உ.தனியரசு அவர்களின் வாழ்த்துரை:
உ. தனியரசு
உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற தாய் தமிழ் சமூகத்தினுடைய தலை நிமிரத் தன் வாழ்நாளெல்லாம் அரசியலில் களமாடி வருகின்ற என் ஆருயிர், நம்முடைய தலைவர் புதிய தமிழகம் கட்சியைத் துவங்கி, தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியலை, எழுச்சியை, புரட்சியை நடத்திக் காட்டி 25 ஆண்டு காலம் நிறைவடைவதை ஒட்டி நடைபெறுகின்ற இந்த வெள்ளிவிழா மாநாட்டிற்கு தலைமை ஏற்று இருக்கக்கூடிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்களே.!
இளம் தலைவர், அடுத்த தலைமுறைக்கு இந்தத் தாய் தமிழ் சமூகத்தை வழி நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினுடைய இளைஞர் அணிக்குப் பொறுப்பேற்றிருக்கும் என்னுடைய ஆருயிர் இளவல் மருத்துவர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! வெள்ளம் போல் இந்த நிகழ்ச்சியிலே வந்து குழுமி இருக்கிற என் உயிருக்குயிரான தாய்த்தமிழ் சமூக உறவுகளே.!! உங்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தைத் பரிசாக்குகிறேன்.!
புதிய தமிழகம் கட்சி தமிழ்நாட்டில் பல்வேறு சமூக நெருக்கடிகளை தாண்டி நெருப்பாற்றில் நீந்தி வெற்றி கண்ட மகத்தான இயக்கம். தமிழ் சமூகத்தினுடைய உழவர் குடிமக்களாக இருக்கக்கூடிய வேளாண் தொழிலில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உழைத்து வாழுகின்ற இந்த தாய் தமிழ் சமூகத்தின் மூலச் சமூகமாய் இருக்கின்ற நம்முடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினுடைய மிகப்பெரிய அரசியல் எழுச்சியை உலகிற்கு அடையாளம் காட்டிய இயக்கம் புதிய தமிழகம் கட்சி; அதனுடைய நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
சட்டமன்றத்திலே புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலே அவருடைய ஐந்து ஆண்டுகால கூட்டணியிலிருந்து மிகுந்த மென்மையாக அணுகவேண்டிய கருத்துக்களுக்கு மென்மையாகவும், எரிமலையை போல் சீற்றம் கொண்டு உரிமைகளுக்காக போராடுகிற அரிய நற்குணத்தை பெற்றவர் நம்முடைய மருத்துவர் அய்யா அவர்கள். சட்டமன்றத்திற்கு உள்ளே இந்தியாவிலேயே யாரும் பேச தயங்குகிற கருத்துக்களை, கோரிக்கைகளை, தீர்மானங்களை எல்லாம் யாருக்கும் அஞ்சாமல் தீர்மானங்களை கொண்டு வந்து சட்டமன்ற கவனத்தை, தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தலைவர்; புரட்சித்தலைவி அம்மாவின் பேரன்பை பெற்ற மருத்துவர் நம்முடைய மருத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்கள்.
நம் அனைவருக்கும் தெரியும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுடைய விடுதலையிலேயே அன்புத்தம்பி பேரறிவாளனின் அன்புத் தாய் அற்புதம்மாளை சட்டமன்றத்திற்கு உள்ளே அழைத்து வருவதற்கு அனைத்துக் கட்சிகளும் தயங்கிய பொழுது, மருத்துவர் தான் தன்னுடைய உயரத்திலே உயர்ந்ததை போல, சட்டமன்றத்தின் எல்லா தடுப்புகளையும் தாண்டி முதன்முதலாக தலைமைச் செயலகத்தின் உள்ளே சட்டமன்ற பேரவை வரை அழைத்து வந்து, ஆட்சியாளர்களிடத்திலே அறிமுகப்படுத்தி, கோரிக்கைகளை பரிவோடு பரிசீலிக்க செய்தவர். இன்று அன்புத்தம்பிகள் 7 தமிழர்களும் விடுதலை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதிலே புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யாவின் பங்கு அளப்பரியது. புரட்சி தலைவி அம்மா அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள்; அந்தத் தீர்மானத்தை அற்புத தாய் அற்புதம்மாளுடைய கண்ணீரை தலைமைச் செயலகத்தில் இருந்த ஆட்சியாளர்களிடத்தில் கொண்டு நிறுத்தி, அந்த தாய்க்கும் நீதியை பெற்றுத் தருவதில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தேவேந்திரகுல வேளாளர் பச்சை தமிழர்களை கொண்டு, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் வழி நடத்தினார்.
கச்சத்தீவு மீட்பா? மீனவர் உரிமையா? தேவேந்திர குல மக்களின் இட ஒதுக்கீடு பிரச்சனையா? பட்டியல் வெளியேற்றமா? எல்லா நிலைகளிலும் ஒரு மூத்த அரசியல் போராளியாக களத்திலே நின்று, பல்வேறு பொய் வழக்குகளை சுமந்து, மிக கடுமையான துன்பங்களை – துயரங்களை சுமந்து நின்று, ஏழை-எளிய, காடு கழனியிலே உழைத்து வாழும் இந்த சமூகத்திற்கு; வேளாண் உயர்குடி மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை – அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திய மகத்தான இயக்கம் புதிய தமிழகம் கட்சி.
உலகளாவிய அரசியலை உள்வாங்கிய தலைவர்; தமிழ் சமூகத்தினுடைய அரசியலை உள்வாங்கிய தலைவர். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து வந்த தலைவர். இந்த மகத்தான தலைவரின் தலைமையில், இளைய மருத்துவரின் தலைமையில் இந்தியாவிலேயே, உலகத்திலேயே தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு; உலகின் தாய்நாடு இந்தியாவை மிகச் சிறந்த நாடாக உருவாக்குவதற்கு, வலிமை பெறச் செய்வதற்கு புதிய தமிழகம் கட்சியினுடைய அரசியல் பாதையை நாம் பின்பற்றி – இணைந்து சாதி, மதங்களை கடந்து மனித நேயத்தோடு அரசியல் களத்தில் இந்த நவீன சமூகத்தில் களமாடுவதற்கு வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் கட்டாயமாக புதிய தமிழகம் கட்சி ஒரு மகத்தான வெற்றியை பெற்று, முதன் முதலாக 2024 நாளிலே பாராளுமன்றத்திலேயே நம்முடைய மருத்துவர் அய்யா அவர்கள் பயணிக்கிற காலம் நெருங்கி வருகிறது என்பதை லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, எழுச்சியோடு நடைபெறும் புதிய தமிழகம் கட்சியினுடைய வெள்ளி விழா மாநாட்டில் உறுதி ஏற்று, புதிய தமிழகம் கட்சியினுடைய எல்லா வகையான கோரிக்கைகளுக்காக, மனிதநேயத்தோடு உரிமைகளுக்காக போராடுகின்ற – வைக்கின்ற கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும், தனியரசும், மேடையில் இருக்கிற என் ஆருயிர் உறவுகளும் துணை நிற்போம்.
அதே போன்று மிக இலகுவாக தமிழ்நாட்டினுடைய தமிழர்களையும், தமிழ் இனத்திற்காக தொண்டாற்றுகின்ற பழ.கருப்பையா அவர்கள் அவ்வளவு இலகுவாக ஒரு மேடைக்கு வர மாட்டார். நெருப்பு கருத்துக்களை மிகச்சிறந்த அறிவுஜீவியாக தமிழ் சமூகத்தினுடைய கடைசி மூத்தமகன் பழ.கருப்பையா வந்திருந்து புதிய தமிழகம் கட்சிக்கு வெள்ளி விழா மாநாட்டிலே வாழ்த்துரை வழங்குவது நமக்கு கூடுதல் பெருமை அதையும் பதிவு செய்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை புதிய தமிழகம் கட்சிக்கு என்றென்றும் துணைநிற்கும். தாய் தமிழ் சமூகத்தின் தலை நிமிர்வுக்காக, தன்மானத்தோடு, சுயமரியாதையோடு, கௌரவத்தோடு நம் இனம் தலை நிமிர, உலகத்தில் உள்ள தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்காக பாடுபட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை புதிய தமிழகம் கட்சியுடன் எப்பொழுதும் கரம்பற்றி பயணிக்கும் என்பதை உறுதிபட சொல்லி, வாய்ப்புக்கு நன்றிபாராட்டி நிறைவு செய்கிறேன்.! நன்றி! வணக்கம்.!
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு. என். ஆர். தனபாலன் அவர்களின் வாழ்த்துரை:
என். ஆர். தனபாலன்
புதிய தமிழகம் கட்சியினுடைய 25 ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாட்டினுடைய தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற புதிய தமிழகம் கட்சியினுடைய நிறுவனத் தலைவர் அருமை அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே.! மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! மற்றும் மேடையிலே அமர்ந்திருக்கின்ற அனைத்து சமுதாய தலைவர்களே! அரசியல் கட்சி தலைவர்களே!! என் முன்னே கடலென திரண்டு இருக்கின்ற தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் அத்தனை சொந்தங்களுக்கும் என்னுடைய முதற்கண் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.!
அண்ணன் கிருஷ்ணசாமி அவருடைய உறவு என்பது எனக்கு இன்று நேற்றல்ல, 20 ஆண்டுகளுக்கு முன்பாக கிட்டத்தட்ட டாக்டர் அவர்கள் முதன்முறையாக அதாவது பாராளுமன்ற தேர்தலில் நின்ற போது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும், கண்ணப்பன் அவர்களும், நானும் ஒன்றாக சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தோம். அன்றிலிருந்து இன்று வரை எங்களுடைய தொடர்பு என்பது நாங்கள் கூட்டணியில் மாறி இருந்தாலும் எங்களுடைய உறவு என்பது பலப்பட்டு கொண்டே வருகிறது. அவரை பொருத்தமட்டிலும் நாங்கள் நன்கு அறிவோம். 25 ஆண்டு கால புதிய தமிழகம் கட்சியின் வரலாறு என்பது அனைவருடைய தியாகத்தால் வளர்ந்தது. அவரை பொறுத்தமட்டிலும் டாக்டராக அவர் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் கொங்கு மண்டலத்திலே கோயமுத்தூரில் அமைதியாக ஒரு பெரிய மருத்துவமனையிலே தன்னுடைய வாழ்க்கையை நடத்தி இருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த மக்களுக்காக அதாவது இந்த ஜாதி, அந்த ஜாதி என்று இல்லாமல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை மக்களின் தலைவராக அனைவருக்காகவும் அவர் போராடினார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
டாக்டர் அவர்களை பொறுத்தமட்டிலே கொடியங்குளம் கதாநாயகனாக, மாஞ்சோலையின் மாமன்னராக திகழ்ந்தார் என்றால் ஒரு சமுதாயத்திற்காக அல்ல. அத்தனை சமுதாயத்தில் உள்ளவர்களும் அவர்கள் உரிமை பெற வேண்டும் என்பதற்காக; அவர்களை பொருத்தமட்டிலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற காரணத்தினால் தான் ”எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்; எங்களை பொறுத்த அளவிலே நாங்கள் நாடாண்ட பரம்பரை” எங்களுக்கு பெயர் மாற்றம் வேண்டுமென்றுதான் அவர்கள் போராடி பெற்றார்கள். அன்று அவர்களுக்கு உறுதுணையாக எடப்பாடி அவர்களும் இருந்தார்கள். நம்முடைய மோடி அவர்கள் வாயிலாகவும் தேவேந்திரகுல வேளாளர் பெயர் பெற்றதை நாம் அனைவரும் அறிவோம். இன்னும் அவர்களை பொருத்தமட்டிலே 25 ஆண்டு காலத்தில் எத்தனையோ வழக்குகள், எத்தனையோ முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். அதோடு மட்டுமல்ல அவரைப் பொறுத்தமட்டிலும் இன்று வரை அவருடைய இந்த சமுதாயப் பணிகளிலும், இந்த நாட்டினுடைய பணிகளிலும் கொஞ்சம் கூட தொய்வு வந்ததில்லை.
இங்கு மட்டுமல்ல கடல் கடந்து இலங்கையிலே வாழுகின்ற ரத்த சொந்தங்களுக்காக, தொப்புள்கொடி உறவுகளுக்காக குரல் கொடுத்தவர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இன்றுவரை பார்த்தீர்களேயானால் அவர் எத்தனை தோல்விகளை கண்டாலும் இந்த சமுதாயத்திற்கு; ஏழை, எளிய மக்களுக்கு உழைப்பதை நிறுத்தவில்லை. அந்த ஒரு காலத்திலே இரட்டை குவளை இருந்ததை, கோவிலுக்கு நுழைய முடியாத சூழல் இருந்ததை நாம் அறிவோம். இன்றும் அவர் அமைதியாக இல்லை; அதே போராட்ட குணத்துடன் தான் இன்றும் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் எண்ணம் புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும்; புதிய தமிழகத்தின் மூலம் ஒரு புரட்சி வர வேண்டும் என்று இருக்கிறார். நிச்சயமாக அவரது கனவு நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
வருகிற 2024 அவர் பாராளுமன்ற தேர்தலிலே களம் காணுவார்; களம் கண்டு வெற்றி பெறுவார். பாராளுமன்றத்தில் அமர்ந்து நமக்காக, நம் மக்களுக்காக குரல் கொடுப்பார் என்பதை சொல்லிக் கொண்டு, இந்த அருமையான சந்தர்ப்பத்தை அளித்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.! நன்றி! வணக்கம்.!
பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் வாழ்த்துரை:
கருப்பு முருகானந்தம்
வெள்ளி விழா மாநாட்டின் தலைவர் அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே.! எழுச்சியுரை ஆற்ற இருக்கக்கூடிய மரியாதைக்குரிய மருத்துவர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! மற்றும் இந்த மாநாட்டிலே கலந்து கொண்டு டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்களை மட்டுமல்லாமல், எழுச்சியோடு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கக்கூடிய புதிய தமிழகம் கட்சியினுடைய நிர்வாகிகளே.! தொண்டர்களே.! உங்கள் அத்தனை பேருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும், எங்களுடைய மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்களின் சார்பாகவும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சார்பாகவும் மரியாதைக்குரிய டாக்டர் அய்யா அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சியை துவங்கி, கிட்டத்தட்ட 25 ஆண்டு நிறைவு செய்து இருக்கிறார் டாக்டர் அவர்கள். 1997-ல் துவங்கப்பட்ட இயக்கம். ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் அவர்கள், தான் படித்தால் போதாது; தன்னுடைய குடும்பம் படித்தால் போதாது; தன்னுடைய சமுதாயம் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருக்க கூடியவர். தான் முன்னேறினால் போதாது; தன்னுடைய குடும்பம் முன்னேறினால் போதாது; தன்னுடைய சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதற்காக சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அதே போல இந்த சமூகத்தின் பெயரை அரும்பாடுபட்டு, பெரும் முயற்சி எடுத்து, தமிழக அரசியல் கட்சிகளிடமும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிடமும் எடுத்துச் சென்று ”தேவேந்திரகுல வேளாளர்” என்ற அரசாணையை பாரத பிரதமர் அவர்களால் வெளியிடச் செய்தவர் டாக்டர் அவர்கள்.
அவருடைய ஒரு கட்டம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கின்றார்; தற்பொழுது அவருடைய இரண்டாவது கட்டம் பார்த்தோம் என்று சொன்னால், அனைத்து சமுதாயத்திற்கும் போராடக் கூடிய தலைவராக, இந்து சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பவராக, பிரிவினைவாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடியவராக, இந்த நாட்டைப் பற்றி விமர்சிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உடனடியாக பதிலடி கொடுத்து களத்தில் இறங்கக்கூடிய தலைவராக, தேசத்தை நேசிப்பதில் தன்னைவிட சிறந்தவர் எவரும் இல்லை என்பதை எடுத்துக் காட்டக் கூடிய வகையிலே இன்று இரண்டாவது கட்டத்திலே டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார். அடுத்ததாக அவருடைய மூன்றாவது கட்டம், நவீன இந்தியாவை கட்டமைப்பதிலே, நவீன இந்தியாவை கட்டமைக்க கூடியவர்களில் ஒருவராக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய ஆட்சியிலே பங்கேற்க கூடிய நபர்களில் ஒருவராக 2024 நாடாளுமன்ற தேர்தலிலே மரியாதைக்குரிய டாக்டர் அவர்கள் வருவார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஒரே வேண்டுகோள் மட்டும் இளைஞர்களுக்கு, டாக்டர் அவர்களை சாதி தலைவராகப் பார்க்கக் கூடாது. ஏனென்று சொன்னால் நமது நாட்டிலே அரசியல் சாசன சட்டத்தை கொடுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களை இன்றைக்கு சாதிய தலைவராக மாற்றிவிட்டார்கள்; இந்திய சுதந்திரத்திற்காக செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார் அவர்களை சாதி தலைவராக மாற்றி விட்டார்கள். அதுபோல தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இன்றைக்கு சாதி தலைவராக மாற்றி விட்டார்கள். அதுபோல அல்லாமல், அண்ணன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை அனைத்து சமுதாயத்திற்குமான தலைவராக, தேசிய தலைவராக, தேச தலைவராக மாற்றுவதற்காக நீங்கள் பாடுபட வேண்மென கேட்டுக் கொள்கிறேன்.
ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கட்சியினுடைய வாழ்த்துக்களையும், தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய வாழ்த்துக்கள் மட்டுமல்ல, தமிழக தலைவர் மட்டுமல்ல, தேசிய பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடி என அத்தனை பேருடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு, டாக்டர் அவர்கள் மேலும் மேலும் வளர்ந்து, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி.! வணக்கம்.!
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு.ரவி பச்சமுத்து அவர்களின் வாழ்த்துரை:
ரவி பச்சமுத்து
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய்யா கிருஷ்ணசாமி அவர்களே.! புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் நான் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், 25 ஆண்டு காலம் இந்த கட்சியை கட்டி காப்பாற்றி அதன் பொலிவு கொஞ்சமும் குறையாமல், கூட கூட வைத்திருப்பது என்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. டாக்டர் அய்யா அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தால் கட்சியை இந்த நிலைமையில் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். புதிய தமிழகம் கட்சிக்கும் இந்திய ஜனநாயக கட்சிக்கும் ஒரே மாதிரி சிம்டம்ஸ் நிறைய இருக்கிறது. என்னவென்றால் இரண்டு கட்சிகளுமே தான் படித்து விட்டோம்; தன் குடும்பம் படித்து விட்டது; தான் சாதித்து விட்டோம். நாம் இந்த சமூகத்திற்கு எதையாவது திருப்பி கொடுக்க வேண்டும் என்ற நினைப்பினில் துவங்கப்பட்டது. அய்யா பாரிவேந்தர் அவர்களும், அய்யா டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் ஒரே எண்ணம் கொண்டவர்கள்; இருவரும் தன்மானத்தை முதலில் நிறுத்துபவர்கள். அதாவது எனக்கு முன்னால் பேசியவர்கள் கூறினார்கள் ’எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்’ என்று. உண்மையிலே நீங்களெல்லாம் தன்மான சிங்கங்கள். இன்றைக்கு பார்த்தோம் என்றால் அனைத்து சாதிகளுமே பெரியது என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்து விட்டால், நம்மை யாராலும் பிரித்து ஆள முடியாது; பிரித்து ஆளவும் கூடாது; எதற்கு பிரித்து ஆள வேண்டும்? நமக்கு இருக்கின்ற அறிவு, ஆற்றல், பண்பு, அன்பு எல்லோருக்கும் உண்டு; எல்லா மக்களும் ஒருவரே. எல்லோரும் கூறுகிறார்களே.! ஏன் நமக்குள் பிரிவினை; இதற்கு முன் நமக்குள் எப்படி வந்தது பிரிவினை; இனிமேல் வேண்டாம் பிரிவினை. இனிமேல் அய்யா டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழியிலும்; பாரிவேந்தர் வழியிலும் பின்பற்றி ஒரு சமுதாயம் என்பது மக்கள் ஒரு இடத்தில் கூடி நன்மை செய்வதற்காகதான்.
நீங்களெல்லாம் படித்து நன்றாக வர வேண்டும்; மருத்துவராக வேண்டும்; இன்ஜினியராக வேண்டும்; தொழில் முனைவோராக வேண்டும்; கடை வைத்து பிழைப்பவராக இருக்க வேண்டும்; நல்ல வேலையில் இருக்க வேண்டும். அதுதான் நமது நோக்கம். இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால் கண்டிப்பாக இனிமேல் நமது பிள்ளைகள், நமது நாட்டில் வருகின்றவர்கள் எல்லாம் கடின உழைப்போடு, நம்மை யாரும் பிரித்துப் பார்க்க மட்டும் இடம் கொடுத்து விடக் கூடாது. அதில் மட்டும் உறுதியாக இருந்தால் நீங்கள் நினைப்பதை கண்டிப்பாக சாதிக்க முடியும். அதற்கு இந்த மேடையே ஒரு உதாரணம்.
இந்த மேடையில் எல்லோரும் சேர்ந்து இருக்கிறோம். யாரெல்லாம் பிரிந்து இருப்பார்கள் என்று நினைத்தார்களோ? அவர்கள் அனைவரும் இந்த மேடையிலே ஒன்றாக அமர்ந்திருக்கின்றோம். இன்று நாட்டிற்கு தேவையானது என்ன? நமக்கு தேவை என்ன? பொருளாதாரம் எப்படி இருக்கிறது? வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது? ஒரு மனிதருக்கு தேவையானவற்றை வாங்க முடிகிறதா? விலைவாசி எப்படி இருக்கிறது? படித்து விட்டேன் என்றால் வேலை இருக்கிறதா? இல்லை. அப்பொழுது நாமெல்லாம் ஒன்றுகூடி, நமது குறிக்கோள் என்னவென்றால் உங்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பையும், கல்வியையும், மருத்துவமும் பெற, குடும்பம் வாழ, விவசாயத்தில் விஞ்ஞானத்தை பொருத்தி நீங்களெல்லாம் விவசாயி என்றாலும் கால்நடை வளர்ப்பு என்றால் அதில் சிறப்பாக வர வேண்டும். அதற்காகத்தான் நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்; நம்மை பிரித்து யாரும் ஆளமால் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்திய ஜனநாயக கட்சியும், நமது புதிய தமிழகம் கட்சியும் ஒரே மாதிரி கட்சிகள். கிட்டதட்ட டாக்டர் அய்யா அவர்களை எனக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அங்கே வந்தார்கள்; அய்யா பாரிவேந்தர் அவர்களும் டாக்டர் அய்யா அவர்களுக்கு அங்கே வந்து நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக பணியாற்றினார்கள். இருவரும் ஒரு கூட்டணியில் போட்டியிட்டு 2,40,000 வாக்குகள் பெற்றார்கள். அது சாதாரண விசயம் அல்ல. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒன்றாக இருந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக சந்திப்போம் என்று கூறி எனக்கு பேச வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்! நன்றி, வணக்கம்!!
இந்திய குடியரசுக் கட்சி(அத்வாலே) மாநில தலைவர் திரு. எம்.ஏ. சூசை அவர்களின் வாழ்த்துரை:
எம்.ஏ. சூசை
நல்லதொரு தருணம் தமிழகத்தில் புதிய எழுச்சியை 25 ஆண்டுக்கு முன்பு உருவானாலும், இன்றைக்கு தமிழக மண்ணிலே வேரூன்றி விருட்சமாக வளர்ந்து இருக்கிறது என்றால் அது மாண்புமிகு மதிப்பிற்குரிய தென்னகத்தின் புரட்சியாளர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களால் உருவானது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடைய தெய்வமாக வணங்குகின்ற கருப்பசாமி, மாடசாமி கையிலே வீச்சருவாள் இருக்கும். அதேபோல இன்று மாண்புமிகு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் ஆணைக்கிணங்க வீரவாளை அய்யா டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், இந்த சமூகத்தை இன்னமும் எழுச்சியோடு நடத்துகின்ற இளைய தலைமுறை டாக்டர் ஷியாம் அவர்களுடைய கையிலேயும் வழங்கி இருக்கிறோம். ”இந்த வீரவாள் அநீதியை வீழ்த்தும்,(மீண்டும் ஆக்ரோசமாக) இந்த வீரவாள் அநீதியை வீழ்த்தும்; சமநிலையை, சம தர்மத்தை இந்த மண்ணிலே விதைக்கும்”.
யாரும் சொல்ல முடியாத, யாருக்கும் துணிவில்லாத ஒரு கருத்தை தமிழகத்தில் முன்வைத்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். பட்டியல் இன வெளியேற்றம் என்பது யாராலும் சொல்ல இயலாது. ஆனால். இந்த 25வது ஆண்டிலே அந்த விதை 50 ஆண்டிலேயே மறுமலர்ச்சியாக மாறும்; இந்த சமூகம் பெரிய ஒரு மாற்றத்தை காணும். ஏனென்றால் இந்த சமூகம் சுரண்டுகிற சமூகமல்ல, உழைக்கிற சமூகம். உழைக்கிற சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஒரே அணியிலே நிறுத்துகின்ற ஒரு வலிமை டாக்டர் அய்யா அவர்களுக்கு உண்டு.
மாபெரும் ஒரு புரட்சியாளர். ஏனென்றால் சலுகை வேண்டும் என்று நாங்கள் கிறிஸ்துவ மதத்தில் இருக்கிற கிறிஸ்தவர்கள் 50 ஆண்டுகளாக சலுகைகளுக்காக வேண்டுகிறோம்; எங்களை பட்டியலினத்தில் சேருங்கள் என்று சொல்லுகிறோம். ஆனால், எங்களுக்கு சலுகை வேண்டாம்; தன்மானம் வேண்டுமென்று பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுகிற இந்த வார்த்தை 25 ஆண்டுகளுக்கு பின்பு, ஐம்பதாவது ஆண்டிலே அதாவது புதிய தமிழகம் கட்சியினுடைய ஐம்பதாவது ஆண்டு கொண்டாடும்போது நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலையிலே, உயர்ந்த இடத்திலே உன்னதமான நிலைக்கு வருவீர்கள். அப்படிப்பட்ட விதையை விதைத்தவர் மருத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்கள்.
ஆகவே, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே போல வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று, தென்னகத்திலிருந்து ஒரு மத்திய அமைச்சராக வரவேண்டும் என்று சொல்லிக் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.! நன்றி வணக்கம்.!!
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திரு.கே.சி.திருமாறன் ஜி அவர்களின் வாழ்த்துரை:
கே.சி.திருமாறன் ஜி
புதிய தமிழகத்தினுடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நாளிலேயே இங்கே ஒரு புதிய தமிழகத்தை படைத்து, அனைத்து சமுதாய மக்களையும் ஓரணியிலே திரட்டி, ஒரே சிந்தனையாளர்களை ஓரணியிலே திரட்டி இந்த மேடையிலே ஒரு புதிய தமிழகத்தை படைத்திருக்கக்கூடிய இந்த விழாவினுடைய நாயகன் – அருமை அய்யா டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே.! இளைஞர்களின் எதிர்காலமாக கருதப்படக் கூடிய அருமை தம்பி டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.!
இங்கே ஆசியுரை வழங்கி அமர்ந்திருக்க கூடிய ராமானுஜர் ஜி அவர்களே.! வேதாந்தம் ஜி அவர்களே.! பாபுஜி அவர்களே.!! அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சர்கள் நத்தம் R.விஸ்வநாதன் அவர்களே.! K.T. ராஜேந்திர பாலாஜி அவர்களே.! கடம்பூர் ராஜி அவர்களே.! இந்திய மக்கள் கல்வி முன்னேற்றத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்களே.! தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களே.! பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் N.R தனபாலன் அவர்களே.! இங்கே வருகை தரக்கூடிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கருப்புமுருகானந்தம் அவர்களே.! இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த அன்பு சகோதரர் ரவி பச்சமுத்து அவர்களே.! இந்திய குடியரசு கட்சியினுடைய தலைவர் M.A. சூசை அவர்களே.! வீர முத்தரையர் சங்கத் தலைவர் அருமை சகோதரர் K.K. செல்வகுமார் அவர்களே.! பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த திலகபாமா அவர்களே.! கணேசன் அவர்களே.! சிவலிங்கம் அவர்களே.! தங்கராஜ் அவர்களே.! என் தொப்புள்கொடி மக்களான தேவேந்திர குல உறவுகளே.!
நான் இங்கே வந்த போது அனைத்து இளைஞர்களும் என்னிடத்தில் எழுச்சியோடு வந்து, “நாம் ஒன்றிணைந்து விட்டோம் அண்ணா” என்று சொன்னார்கள். அந்த தம்பிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் ”நாம் என்று பிரிந்தோம்” உங்கள் மனதில் சந்தேகம் வைக்கக் கூடாது.
பூலித்தேவன் என்று சொன்னால் அங்கே வெண்ணி காலடி இருப்பார்; பகதூர் வெள்ளையத்தேவன் என்று சொன்னால் அங்கே சுந்தரலிங்க குடும்பன் இருப்பார்; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று சொன்னால் அங்கே சோலை குடும்பன் இருப்பார் நாம் என்று பிரிந்திருக்கிறோம். அண்ணன் – தம்பி சில வேறுபாடுகளை கடந்து இன்று புதிய தமிழகத்தை படைத்திருக்கிறார் மரியாதைக்குரிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். வட துருவமும் தென் துருவமும் ஒன்று சேராது என்பார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறது. இது ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு சாவு மணி என்பதை இந்த இடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் தேவர் சமுதாயமும் தேவேந்திர சமுதாயமும் பிரிந்ததல்ல, நம்மை பிரித்து வைத்தார்கள். 1952 ஆம் ஆண்டு மொட்டை குடும்பனை சட்டமன்ற உறுப்பினராக்கியது; 1952 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் இரட்டை பம்பர் தொகுதியிலே தொப்புளாப்பட்டி பெருமாள் குடும்பனை சட்டமன்ற உறுப்பினராக்கியது முத்துராமலிங்க தேவர். ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்ற தொகுதியிலேயே வேலு குடும்பனை நிறுத்தினார்; அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் A.R.S. ஆறுமுகம் வாதிரியார் அவர்களை நிறுத்தினார்கள். அங்கே வேலு குடும்பன் தோல்வியுற்ற பிறகு, மக்களுக்கு நன்றி சொல்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு தேவேந்திர குல மக்களெல்லாம் ஆரவாரத்தோடு A.R.S. ஆறுமுக வாதிரியாருக்கு அணிவிக்க வைத்திருந்த மாலைகளை அணிவித்துவிட்டு A.R.S.ஆறுமுகம் வருகின்ற போது “நன்றி சொல்ல பசும்பொன்தேவர் வந்தார், அவருக்கு நாங்கள் மாலை அணிவித்து விட்டோம்” என்று அம்மக்கள் சொன்ன பொழுது, “அவர் நம் உடன் பிறந்த சகோதரர், அவருக்கு மாலை அணிவித்தாலும், எனக்கு மாலை அணிவித்தாலும் ஒன்றுதான்” என்று A.R.S.ஆறுமுகம் சொன்னார்.
“நாம் ஒரு காலத்திலும் பிரிந்ததல்ல; பிரித்து வைக்கப்பட்டவர்கள்” அரசியல் சூழ்ச்சியால் நாம் பிரித்து வைக்கப்பட்டவர்கள். பல்வேறு வரலாறுகளுக்கு சொந்தமான தேவேந்திரர் இனத்தை பட்டியல் பிரிவிலே சேர்த்த சண்டாளர்கள் இவர்கள். நாத்து நடும் திருவிழாவை நீங்கள் மதுரையில் யாரும் மறந்திருக்க முடியாது. நாத்து நடு திருவிழா சிந்தாமணி பகுதியில் நடைபெறும். அந்த சிந்தாமணி பகுதிக்கு அன்னை மீனாட்சியும், சொக்கநாதரும் வந்து நாத்து நடும் விழாவிலே – தேவேந்திர குல மக்கள் நடத்தும் விழாவிலே வந்து, அவர்கள் அளந்து போடுகின்ற படி நெல்லை அன்னை மீனாட்சி அவர்கள் வாங்கி செல்வார். அப்படி சிறப்புமிக்க ஒரு சமூகம். அந்த சமூகத்தை வஞ்சிக்கப்பட்ட சமூகமாக, இத்தனை நாள் வஞ்சிக்கப்பட்டிருந்தார்கள்; அந்த கறை படிந்திருந்தது; அந்த கறை இன்று தான் அகன்று இருக்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கொங்கு மண்டலத்தில் இருக்கிறது. அண்ணன் தனியரசு அவர்கள் வந்திருக்கிறார். கொங்கு மண்டலத்திலே அந்த ஆலயம் இருக்கிறது. அங்கு தேவேந்திர குல மக்கள் அந்த தாய்மார்கள் உழவு நடுவதற்காக வருடம் ஒருமுறை கூடுவார்கள். அந்த ஆலயத்தில் உழவிட்டால் தான் ஆலயத்திலே இருக்கக்கூடிய நிலத்திலே இறங்கி பெண்கள் உழவு நடுவார்கள். அந்த உழவு நடும் அழகை பார்ப்பதற்காக சிவனும் பார்வதியும் நேராக வருவார்கள் என்று சொல்லி இன்று வரை ஐதீகம் இருக்கிறது.
1883லே திருச்செந்தூரிலே தேவேந்திரர் மடம் இருக்கிறது; இவர்கள் Classification என்று சொல்வார்கள்; ஜாதி வாரியாக பிரித்தார்கள். இந்த ஜாதி வாரியாக பிரிப்பதற்கு முன்பாகவே, 1883லேயே தேவேந்திரர்களுக்கு திருச்செந்தூரிலே மடம் இருக்கிறது என்று சொன்னால் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களாக வஞ்சிக்கப்பட்டவர்கள்; தாழ்த்தப்பட்டவர்களாக வஞ்சிக்கப்பட்ட ஒரு இனம்; மாபெரும் சமூகம் இந்த இனம்.
பழனி கோயிலிலே முதல் மரியாதை; மதுரை தெப்பக்குளத்திலே முதல் மரியாதை. எத்தனை வரலாறுகள் அத்தனை வரலாறுகளையும் மறைத்து ஏதோ நாங்கள்(திராவிடர்கள்) தான் இவர்களையெல்லாம் விடுதலை செய்ய வந்தது போல இந்த ஆளுகின்ற அரசாங்கம் இத்தனை ஆண்டுகாளாக நம்மை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறது. இனியும் அது நடக்காது. அதற்கு இந்த கூட்டமே ஒரு உதாரணம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, 8 நாடு 24 நாடு உபகிராமம் என்று சொல்லக்கூடிய எங்கள் கள்ளர் நாட்டிலே பகுருளி பக்கத்திலேயே பள்ள கருப்புசாமி கோவில் இருக்கிறது. அந்த பள்ள கருப்புசாமிக்காக 5 லட்சம் மக்கள் கூடுவார்கள் எங்கள் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்! ஆனால் அங்கே சாமியாடி யார் தெரியுமா? தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். தேவேந்திரகுல மக்களை நாங்கள் கருப்பு சாமியாக வணங்கி வருகிறோம். அங்கே இருக்கக்கூடிய தாய்மார்களை எல்லாம் வேலாயியாக நாங்கள் வணங்கி வருகிறோம். அப்படி பாரம்பரிய மிக்க சமூக சொந்தங்களை, ஏதும் அறியாதவர்களாக நினைத்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டவர்களாக நினைத்துக் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலை இன்றோடு முடிந்து விட்டது. ஆளுகின்ற அரசாங்கத்திற்கு இது சாவு மணி என்று இந்த இடத்திலே பதிவு செய்து, பல்வேறு சலுகைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்ககூடிய பல்வேறு இனங்கள் இன்றைக்கு உயர்சாதி என்று சொல்லக்கூடிய பிராமண இனத்திலிருந்து Economically Weaker Section(EWS) என்று சொல்லக்கூடிய 10% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி கொண்டிருக்கக்கூடிய இந்த வேளையில், “எங்களுக்கு சலுகை வேண்டாம்; தன்மானம் மட்டுமே போதும்!; சலுகை வேண்டாம் தன்மானம் மட்டுமே போதும்!!” என்ற ஒரு சாதி அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் இருக்கிறது என்று சொன்னால் அது தேவேந்திர குல மக்களை தவிர, உலகில் எவனும் இல்லை.
நான் பிறந்த சாதி DNT கேட்டுப் போராடுகிறோம்; ஆனால் உயர்ஜாதி என்று சொன்னவர்கள் 10% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறோம்; அனைத்து சாதிகளும் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறது. உலகத்திலேயே ”இட ஒதுக்கீடு வேண்டாம், தன்மானம் மட்டுமே எங்கள் உயிர் மூச்சு” என்று வாழக்கூடிய ஒரு இனம்; தன்மானத்திற்கு மட்டுமே நாங்கள் தலை வணங்குவோம் என்று சொல்லுகின்ற ஒரு இனம்; தன்மானத்திற்காகவே நாங்கள் வாழ்கின்றோம் என்று சொன்ன ஒரு இனம். இந்த இனத்தைத் தவிர, இந்தியாவில், இந்திய வரலாற்றில் இனி வரப்போவதுமில்லை, இனி கிடையவே கிடையாது. அப்படிப்பட்ட பல்வேறு வரலாறுகளுக்குச் சொந்தக்காரர்களான உங்களை இந்த இடத்திலே நின்று வாழ்த்துவதிலே நான் பெருமையடைகிறேன்.
நான் சென்னை செல்ல இருப்பதால், என் உரையை இத்துடன் முடித்துக் கொண்டு, என் பாசமிகு அண்ணன் தேவநாதன் யாதவ் அவர்கள் எனக்கு 2 நிமிடம் மட்டுமே பேசக் கட்டளையிட்டார். அவரை மீறி நான் பேசி இருக்கிறேன். ஆகவே இந்த இடத்திலே இருந்து இப்பொழுது விடைபெறுகிறேன். இதுபோல புதிய தமிழகம் கட்சி 25 அல்ல, 50 அல்ல, 75 அல்ல, 100 ஆண்டுகளை தாண்டி இந்த மண்ணிலே நிற்கும்.!
நான் அன்றாடம் வணங்கக்கூடிய தெய்வத்திருமகனார் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆசியும், கல்வித்தந்தை அமரர் மூக்கையா தேவர் ஆசியும், வாளுக்கு வேலி அம்பலத்தாரின் ஆசியும்; மதுரையை ஆளுகின்ற சொக்கநாதர், அன்னை மீனாட்சியின் ஆசியும் அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களுக்கு பூரணமாக கிடைக்க வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!!
பாரத் மாதா கி ஜே!! ஜெய் ஹிந்த்!!
பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திருமதி. மா. திலகபாமா அவர்களின் வாழ்த்துரை:
மா. திலகபாமா
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாட்டை ஏற்பாடு செய்து தமிழகம் மொத்தத்தையும் ஒருங்கிணைத்து அமர வைத்திருக்கின்ற திருமிகு.மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களே.! பூர்வீக குடி சொந்தங்களின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்ற திருமிகு. டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களே.! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக தலம் மட்டுமல்ல, ஆண்டாள் ஆட்சி செய்த இடம், ஒரு பெண் நினைத்தால் எழுச்சியை – விடியலைக் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்த இடம். அந்த இடத்திலிருந்து ஆசியுரை வழங்கியவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும்; இதற்கும் மேலாக ஆன்றோர்களே.! சான்றோர்களே.! எல்லாவற்றிற்கும் மேலாக நிலத்தையும், நீரையும் மண்ணிலுள்ள உயிர் சத்தையும் அடுத்த தலைமுறையினர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்ற தேவேந்திர குல வேளாளர் சமுதாய சொந்தங்களே.!
இந்த மாநாட்டில் ஒலிக்கின்ற விசில் சத்தம் – பேசுகிற சத்தத்தையும் தாண்டி உனக்கும் எனக்கும் இந்த மண்ணோடு பிரிக்க முடியாத தொடர்பு உண்டு. நான் உள்ளே வரும்போது ஒருத்தர் என்னை வரவேற்றார். எப்படி வரவேற்றார் தெரியுமா? ’வாங்க சம்மந்தி’ என்றார். ’தெற்கே தேவேந்திரரும் – வடக்கே வன்னியரும்’ சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸின் அடையாளமாக இங்கே நிற்கிறேன்.
நான் இங்கு கிருஷ்ணசாமி அய்யா அவர்களை, வாழ்த்திப் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. ஆனால், சில விஷயங்களைச் சொன்னால் பாட்டாளி மக்கள் கட்சி ஏன் உங்கள் கூடவே பயணித்திருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும். இந்த சமுதாயம் மறக்க முடியாதது கொடியங்குளம் கலவரம். காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து மருத்துவர் அவர்கள் ஓடோடி வந்தாரே! ஏன் ஓடி வந்தார்? இந்த மண்ணோடும் நீரோடும் தொடர்புடையவர்கள் நாம்தான். இன்னொரு பெரிய பெருமை, நமது சமுதாயத்திற்கு இருக்கிறது நான் எப்படி ஆண்டாளைச் சொன்னேனோ, அதேபோல நான் பட்டிவீரன்பட்டியில் பிறந்தவள்.
நிலக்கோட்டையில் 23 வயதில் சட்டமன்ற உறுப்பினராகி, 35 வருஷம் ஆறு முதலமைச்சர்கள் மற்றும் ஏகப்பட்ட சமுதாயப் பணிகளாற்றி, இன்றைக்கு இருக்கின்ற அத்தனை பெரிய கட்சிகளையும் ’அக்கா’ன்னு கூப்பிட வைத்த ஏ.எஸ் பொன்னம்மாள் யார்? மகராசி ’நம்ம குல மகராசி’ இன்றைக்கு நினைத்தாலும் என்னால் வர முடிய வில்லை. ஆனா, 35 வருஷம் சட்டமன்றத்தில் ஒரு பெண் இருந்திருக்கிறாள் என்றால், நான் எல்லாம் பார்த்துப் பார்த்து கும்பிட்ட மகராசி. பொன்னாடை போர்த்துவது பெரிதல்ல, என் மண்ணிலே இருக்கிற வேர் உயிர் சத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வதே முக்கியம்.
ஆறு ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதிய அக்கா புத்தகத்தைச் சமர்ப்பிக்கின்றேன். இப்படிப்பட்ட ஒரு அரசியலை தொடர்ச்சியாக கிருஷ்ணசாமி அய்யா நடத்திக் கொண்டிருக்கிறார் .அதனால் தான் மருத்துவர் அய்யா பின்னாடி வந்துகிட்டு இருக்கிறார்கள் மருத்துவர் அன்புமனி அவர்கள் என்னைக் கூப்பிட்டு மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள். நான் டெல்லிக்கு போவதனால் என்னால் செல்ல இயலவில்லை. ஆனால், ”வன்னியரும் தேவேந்திரரும் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்ற செய்தியைத் தெரிவிக்கும்படி என்னை அனுப்பி வைத்துள்ளார்.
இன்னொரு முக்கியமான செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் இலக்கியவாதி ”பட்டியல் சமூகத்திலிருந்து எங்களை நீக்குங்கள்; எங்களை ஒன்றும் பட்டியல் சமூகத்தில் போட வேண்டாம்” என்று சொன்னதற்காக உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். ஏன் தெரியுமா? இங்க நிற்கிற சுப்பனும் குப்பனும்? நான் யார் என்று தெரியுமா? பணக்காரனால் பணம் கொடுத்து விடலாம்; பதவி எல்லாம் பிறகு கொடுத்திடலாம். ஆனால், நான் யார் தெரியுமா? என்ற நம்பிக்கையைக் கொடுத்ததற்காக உங்கள் காலில் விழலாம்.
ஆனால், அதையொட்டி நான் சின்ன பிள்ளை தான், ஒரு கருத்தைச் சொல்வேன்; கேட்பீர்களா ? இட ஒதுக்கீடு எல்லாம் சலுகை இல்லை; அது என்ன சலுகையா? அது யாருடைய வரி பணம்? நான் தீப்பெட்டி வாங்கினாலும் வரி, புல் வெட்டினாலும் வரி, என் தயவில் அரசாங்கம் நடக்கிறது; அதைத் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை; அதைப் பெற வேண்டியது நமது உரிமை.
”பட்டியல் இனத்திலிருந்து என்னை வெளியில் கொண்டு வாருங்கள்; என்னைத் தாழ்த்தப்பட்டவன்” என்று சொல்லாதீர்கள் என்பதற்காக நான் தலை வணங்குகிறேன். அதே சமயத்தில் ’இட ஒதுக்கீடு’ என்பது நீதிக் கட்சி காலத்தில் அத்தனை சமுதாயத்திற்கும் கல்வி – வேலைவாய்ப்பு கொடுத்து பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்று நீதிக்கட்சி பேசியது அந்த கருத்தைத்தான் இன்று மருத்துவர் பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு சலுகை எல்லாம் வேண்டாம். அரசாங்கம் என் பிள்ளையைப் படிப்பதற்குச் சலுகை வழங்குவது கடமை இல்லையா? அதனைப் பெறுவதற்கு எனக்கு உரிமை இல்லையா? அந்த உரிமையை நாங்கள் பெற்றே தீர வேண்டும். மருத்துவர் மீண்டும் மீண்டும் சொல்லுகிறார் கல்வியையும், வேலை வாய்ப்புகளையும் எல்லா சமுதாயத்துக்கும் கொடுக்க வேண்டும்.100 பேர் இருக்கிறோமென்றால் ஆளுக்கொரு பழம் கொடுக்க வேண்டும்.
ஒரு அம்மா இருப்பதாக வைத்துக்கொண்டோம் என்றால், ஒரு பிள்ளைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அரசாங்கம் கொடுப்பதை விட்டுக் கொடுக்காதீர்கள். எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள்.! ’பட்டியல் சமூகத்திலிருந்து என்னைத் தூக்குங்கள்’ என்று சொன்னதற்குத் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எனது நன்றியையும், வணக்கத்தையும்; அடுத்த தலைமுறைக்குத் தன்மானத்தை சொல்லிக் கொடுத்ததற்காகப் பாராட்டுகிறேன். ஆனால், ’இட ஒதுக்கீடு பங்கீடு வேண்டும்’ என்பதை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
இந்த மாநாட்டில் எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். அரசியலில் வெவ்வேறு கருத்து இருக்கலாம்; ஆனால் எல்லா தலைவரும் ஒருங்கிணைந்து இருக்கிறார்கள். இந்த ஒருங்கிணைப்பை நான் வரவேற்கின்றேன். என்னவாக இருந்தாலும் பாமக கட்சியிலிருந்து வந்திருப்பதால் நான் என்ன வன்னியரா? பட்டிவீரன்பட்டி என்பதால் நான் என்ன நாடாரா? நான் உங்கள் பிள்ளை உங்கள் குலத்தை சார்ந்தவள். ”நாட்டிற்கு நீரையும், நிலத்தையும் உலகிற்குக் கொடுத்த தேவேந்திரகுல வேளாளரின் அரசியல் பயணத்தைத் தொடருங்கள்” உங்கள் தலைவர் தலைமையில் திரளுங்கள் என்று வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்! நன்றி.!
புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களின் எழுச்சி உரை:
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழா மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.!
எங்கள் வெள்ளிவிழா மாநாட்டிற்கு வருகை தந்து, வாழ்த்துரை வழங்கிய அனைத்து முக்கிய கட்சி தலைவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு எனது உரையைத் துவங்குகிறேன்.
தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சி செய்த முதல்வர்கள் தங்கள் உரையை துவங்கும் போது, ரத்தத்தின் ரத்தங்களே! என் உடன் பிறப்புகளே! என்று துவங்குவார்கள். அவர்கள் அந்த வார்த்தைகளை பயன்படுத்தும் போது என்ன உணர்ந்து பயன்படுத்தினார்களோ என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்தமட்டிலும் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எனது சொந்தமாகவும், ரத்தமாகவும் இருந்தது புதிய தமிழகம் கட்சிதான் .
என் வீடு வேண்டுமென்றால் கோவையில் இருக்கலாம். நான் மனதளவில் வளர்ந்தது எல்லாம் தென் மாவட்டங்களில்தான். எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ வெற்றிகளையும் கண்டிருக்கிறோம். சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறோம்; எத்தனையோ இழப்புகளையும் சந்தித்து இருக்கிறோம். எல்லோரும் ஒரே குடும்பமாக 25 ஆண்டுகளாக பயணித்து வந்திருக்கிறோம். அதற்கான ஒரு வெற்றி விழாவாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடி கொண்டிருக்கின்றோம்.
நமது தலைவர் 25 ஆண்டுகளுக்கு முன்பாக கட்சியை தொடங்கும் போது, புதிய பிரச்சனைகளுக்காக கட்சியை தொடங்கவில்லை. சாதிய பிரச்சனைகள் பல நூறு ஆண்டுகளாக இருந்ததுதான்; வர்க்கப் போராட்டங்களும் பல நூறு ஆண்டுகளாக இருந்ததுதான். அதையெல்லாம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தார்கள்; இல்லாமல் எல்லாம் கிடையாது.
நூறாண்டு காலம் சாதிய பிரச்சினைகளை திராவிடம் பேசி கொண்டு தான் இருந்தார்கள்; வர்க்கப் பிரச்சினைகளை கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களால் அதற்கு தீர்வு காண முடிந்ததா? திராவிடம் சாதி ஒழிப்பை பற்றி பேசினார்களா? பேசினார்கள்; ஆனால், தொட்டும் தொடாமல் பேசினார்கள். சாதி ஒழிப்பும் பேச வேண்டும். ஆனால் சாதி ஒழிந்து விடக்கூடாது. அவர்கள் சாதி ஒழிப்பு பேசியதே ஓட்டு வாங்குவதற்குத்தான்; சாதி ஒழிப்பு அவர்கள் கருத்தியலாக இருந்தது. அதையெல்லாம் தெரிந்துதான் நாம் புதிய தமிழகம் உருவாக்கினோம்.
கம்யூனிஸ்ட் வாதிகளும் இவர்கள் தான் நூறு ஆண்டு காலம் கம்யூனிசம் பேசி வந்தார்கள். ஏதாவது தொழிலாளர் பிரச்சினைகளுக்கு போராடினார்களா? போராடுவது போல போராடினார்கள். நம்முடைய கோரிக்கைகளுக்காக நாம் போராடினால் இவ்வளவு கேட்காதீர்கள், அவ்வளவு கேட்காதீர்கள் என்று ஒரு அளவுகோல் வைத்தார்கள். அவ்வளவுதான் அவர்கள் கேட்கின்ற இடத்தில்தான் இருந்தார்கள். அதுதான் அவர்களின் நிலைமையாக கூட இருந்தது. அதை எல்லாம் கடந்து ஒரு கருத்தியலில் சிக்கிக் கொண்டிருந்தார்கள். நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு காண நம்ம பிரச்சினைகளை மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள்.
அன்றுதான் தலைவர் புதிய தமிழகத்தை தோற்றுவித்தார்; எங்கள் பிரச்சினைக்கு நாங்களே தீர்வு கண்டு கொள்கிறோம்; நாங்களே எங்கள் தலைமையை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்; எங்களுடைய பயணத்தை தொடங்குகிறோம் என்று உருவானது தான் புதிய தமிழகம் கட்சி.
நமக்கான உரிமைகளும், நம்முடைய அதிகாரங்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தலைமுறை தலைமுறையாக; வாரிசு வாரிசாக வருவார்களேயானால், நாமும் நம்முடைய அதிகாரத்தை மீட்டெடுக்க – திராவிட கருங்காலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு தலைமுறை தலைமுறையாக என்றென்றும் டாக்டர் அய்யா அவர்களின் வழியில் போராடுவோம்.!
நன்றி வணக்கம்.!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்களின் தலைமை உரை
டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு மாநாட்டில் திரளாகக் கலந்து கொண்டிருக்கக்கூடிய என்னுடைய அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே! சகோதரிகளே! பெரியோர்களே! இளைஞரணி நண்பர்களே!! அனைவருக்கும் என்னுடைய மாலை நேர வணக்கம்.!
நேற்று பெய்த மழையில் இந்த மாநாட்டு இடம் நனைந்து வெள்ளக்காடாகி, உள்ளே வாகனங்கள் வரமுடியாத அளவிற்கு சேதமாகி விட்டது. இன்றும் ஒருவேளை அது போல மழை வந்திருந்தால், இந்த மாநாடு இவ்வளவு சிறப்புற நடந்திருக்குமா? என்பது தெரியாது. இந்த மண் பெற்றெடுத்த பிள்ளைகள் நாம். எந்தத் தாயும் எந்தப் பிள்ளைக்கும் துரோகம் இழைக்கமாட்டார். அந்த வகையிலே தேவேந்திரகுல வேளாளர் மக்களை பெற்றெடுத்த இந்த பூமி – இயற்கை – மழை நமக்கு இன்று முற்றாக ஒரு சொட்டு மழை கூட இல்லாமல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்து விட்டோம். ஆனால், அதற்கான பணிகளைத் துவக்குவதற்காகத்தான் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம், அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்; அதற்குப் பிறகு தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம். அதற்காக மதுரை வருகை தந்த போது, நவம்பர் 2 ஆம் தேதி, நான் மதுரையில் கைது செய்யப்பட்டு, அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டு, நம்முடைய வேகம் சிறிது தடைபட்டது. இருந்தாலும் நவம்பர் 3ஆம் தேதி இங்கேயே இருந்து இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு நாம் பல முயற்சிகள் எடுத்தோம். நவம்பர் 3-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 24-ஆம் தேதி வரை தேடித் தேடி எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், அதற்கு எவ்வளவோ தடைகள் ஏற்பட்டு, இறுதியாக 25 ஆம் தேதி நமக்கு சிவகாசியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற நில உரிமையாளர் அவர்கள் பரந்த மனப் பான்மையுடன் மனமுவந்து இந்த நிலத்தை மாநாடு நடத்திட வழங்கினார். செல்வராஜ் அவர்களுக்கும் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும், நம்முடைய மாநாட்டு உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு மாநாட்டை இரண்டு கட்சிகளுக்கு தான் வழக்கமாக இவ்வளவு கூட்டத்துடன் நடத்திய அனுபவம் உண்டு. இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சியிலிருந்தவர்கள்; மிகவும் அனுபவம் பெற்றவர்கள். ஆனால், நமது இந்த மாநாட்டுப் பந்தல் வெறும் நான்கு தினங்களில் தான் அமைக்கப்பட்டது. அதற்கு உறுதுணையாக விளங்கிய நம்முடைய கோவை சுரேஷ் அவர்களையும், அவருடைய உழைப்பையும் நாம் இங்கே அங்கீகரிக்க வேண்டும்; மதிக்க வேண்டும்; அவருக்கும் இந்த மாநாட்டின் வாயிலாக முன்கூட்டியே பாராட்டுக்களைச் சொல்லிவிட விரும்புகிறேன்.
அதேபோல இப்பொழுது 35 நிமிடங்கள் ஓர் ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. நமக்கே ஒரு பிரமிப்பு. ஒரு 35 நிமிட ஆவணப்படம் எல்லோரையும் மெய்மறந்து அமர வைக்க முடியும் என்று சொன்னால் இனிமேல் திரைப்படம் எடுப்பது கூட நமக்கு எளிதானது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. திரைப்படம் எடுப்பது எல்லாம் பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் அவை ஒன்றுமே இல்லை என்று இவர்கள் எடுத்த ஆவணப் படத்தின் மூலம் தெளிவாகி விட்டது. எனவே, நம்முடைய சமூக வலைதள பிரிவைச் சேர்ந்த சங்கர் குரு, சிவா, வேலுசாமி, சரவணன் மற்றும் அவருக்கு உற்ற துணையாக விளங்கிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல இவ்வளவு பேரும் 9 மணி வரை உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பசியை அடக்குவதற்கு நல்ல உணவை நம்முடைய கிருபை ராஜ் அவர்களும், ராஜேந்திரன் அவர்களும், கண்ணன் அவர்களும் வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் அவர்கள், இராஜேந்திர பாலாஜி அவர்கள், கடம்பூர் ராஜூ அவர்கள், பாபுஜி அவர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் மாநாடு மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டது என்று மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள். அண்ணன் பழ. கருப்பையா அவர்கள், வேதாந்தம் ஜி அவர்கள் கடல் போல ஒரு கூட்டம் எனப் பிரமித்தார்கள். எனவே இந்த மாநாடு இவ்வளவு வெற்றிகரமாக அமைவதற்கு இங்கு பேசிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அவர்கள் புதிய தமிழகம் கட்சியின் மீதும், என் மீதும் வைத்திருக்கக்கூடிய அன்பிற்கும், பற்றுக்கும் நான் என்னுடைய முழுமையான நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வணக்கத்தையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த ஒரு மாத காலமாக நம்முடைய அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட அனைவரும் 25 ஆண்டுகால சாதனையை உலகிற்கு பறைசாற்றக் கூடிய வகையில், இத்தனை நாட்கள் இல்லாத அளவிற்கு, நம்முடைய கட்சியை மக்கள் மத்தியிலே சுவரெழுத்து பிரச்சாரங்களாக, சுவரொட்டிகளாக, துண்டுப் பிரசுரங்களாகக் கொண்டு சென்றதன் விளைவாக இன்று மக்கள் இவ்வளவு பெரிய பேரெழுச்சி பெற்று, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள். எனவே, குக்கிராமத்தில் இருக்கக்கூடிய நம்முடைய தாய்மார்கள், இளைஞரணி நண்பர்கள், பெரியோர்கள், கிளைச் செயலாளர்கள் என அனைவருக்குமே நான் இந்த நேரத்திலே இதயப்பூர்வமான நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கும் தலைவர்கள் வாழ்த்தியதை மிகவும் கவனமாகக் கேட்டிருப்பீர்கள். எவரும் மேடைக்கு வந்து ஒப்புக்காகவோ – முகஸ்துதிக்காகவோ வாழ்த்த வந்தவர்கள் அல்ல! நம்முடைய கட்சியை உன்னிப்பாகக் கவனித்த காரணத்தினாலும்; நம்மோடு பயணித்த காலத்திலே அவர்கள் நமது நல்ல பழக்க வழக்கங்களை நேரில் கண்ட காரணத்தினாலும்; நான் சட்டமன்றத்தில் குரல் கொடுத்த அந்த நல்ல அம்சங்களின் வெளிப்பாடுகளின் காரணத்தினாலும் தான் அவர்கள் ஆழ்மனதிலே இருந்து பாராட்டவும், இன்று இந்த மேடையிலே அவர்களை இவ்வளவு நேரம் அமரவும் வைத்திருக்கிறது. ஏதோ அழைத்தார்கள் எனவே, மேடையிலேயே 5 நிமிடம் பேசி விட்டோம் என்று புறப்பட்டுப் போயிருக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிப் போகவில்லை. அவர்கள் நம்மோடு இரண்டற கலந்து விட்டார்கள். இதுதான் இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பல சமுதாயங்களின் தலைவர்களும், ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் ஏதாவது ஒரு சமுதாயத்தினுடைய பின்னணியை வைத்தே அரசியல் இயக்கங்களை துவக்கியிருப்பார்கள். இரண்டு, மூன்று கட்சிகளைத் தவிர, அனைத்துக் கட்சிகளினுடைய வரலாறுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால், இன்று பல்வேறு சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும் நமது மேடையிலே வந்து வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அப்படியென்று சொன்னால், நாம் கடந்த 25 ஆண்டு காலமாகச் சரியான பாதையிலேயே பயணித்து இருக்கிறோம் என்று பொருள். இனிமேல் எப்படிப் பயணிக்க வேண்டும்; நம்முடைய பயணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நம்முடைய புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் நிர்வாகிகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே ஆவணப்படத்தில் காட்டினார்கள். எந்த இடத்திலேயும் ஒரு சம்பவம் கூட அரசியல் ரீதியான சம்பவங்கள் கிடையாது; ஏதாவது ஒரு பிரச்சனையில் நாம் சம்பந்தப்பட்ட அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய வகையிலே ஈடுபட்ட நிகழ்வுகள் தான் வந்திருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய பெரும்பாலான இளைஞர்கள் 25 வயதிற்கும் குறைவானவர்கள். அவர்களுக்கு 1995 க்கு முன்பு தமிழகம் எவ்வாறு இருந்தது? அவர்களது பெற்றோர்கள், மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள்?; எவ்வளவு இன்னல்கள் பட்டார்கள்? என்பது அவர்களுக்குத் தெரியாது. அதன் காரணமாகவே தான் இளைஞர்கள் பல பேர் நம்முடன் இன்னும் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதை நான் அறிகிறேன்.
1990 காலகட்டங்களில் நான் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி அல்லது விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப் பிரயாணம் செய்கின்ற பொழுது எனக்கும் பல கிராமங்கள் தெரியாது. யாராவது ஒரு பொறுப்பாளர் இருப்பார்; அந்த பொறுப்பாளர் தான் அழைத்துச் செல்வார். அவருக்கும் பெரிதாக எந்தெந்த கிராமங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியாது. மாலை 4 மணிக்கு புறப்படுவோம். ”அய்யா! 10 கிராமங்கள் தான் என்று அழைத்துச் செல்வார்கள். இரவு 8 மணிக்குப் பிறகு, இன்னும் 5 கிராமங்கள் தான் இருக்கிறது என்று சொல்வார்கள்; இரவு 12 மணிக்கு மேலும் 5 கிராமங்கள் என்று சொல்வார்கள்; இப்படியே அதிகாலை 3 – 4 – 5 மணி ஆகிவிடும். இன்னும் 5 கிராமங்கள் என்று சொல்வார்கள்; காலை 10 மணி 11 மணி 12 மணிக்குக் கூட ”அய்யா இன்னும் இரண்டு கிராமங்கள், பார்த்து விடலாமய்யா?” என்று கேட்பார்கள். நான் சாப்பிட்டிருக்க மாட்டேன்; இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க 5 – 10 நிமிடங்கள் கிடைத்திருக்காது. ஆனால் அடுத்த கிராமத்திலே ’ஒலிபெருக்கி’ ஒலித்துக் கொண்டிருக்கிறது; வேலைக்குக் கூட போகவில்லை என்று தெரிந்த உடனேயே, சரி பரவாயில்லை, நாம் சிரமப்பட்டாலும் கூட அவர்கள் 10 கிராமம் என்று சொல்லி 40 – 50 கிராமங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாலும் கூட, அத்தனை கிராமங்களுக்கும் சென்று இருக்கிறேன். அப்படித்தான் புதிய தமிழகம் கட்சி வளர்த்தெடுக்கப்பட்டது; நீங்களும் வார்க்கப்பட்டுள்ளீர்கள். நான் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டால் ஒரு தாய்மார் கூட வீட்டிலேயே இருக்க மாட்டார்கள்; அனைவரும் அந்த கூட்டத்திற்கு வந்து விடுவார்கள்; குழந்தைகள் ஓடி வந்து விடுவார்கள்; ஆண்கள் வந்துவிடுவார்கள். காரணம் அன்றைய சூழல் அப்படி இருந்தது!
இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு, இந்த மக்களைத் தேடி வந்து ஆதரவுக் கரம் நீட்டுவதற்கு, அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு அன்று யாரும் இல்லை? புதிய தமிழகம் கட்சி மட்டுமே அன்று மக்களை நாடிச் சென்றது. எல்லாமே வெற்றிடமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நான் சுற்றுப் பிரயாணம் செய்கிறேன் என்று சொன்னால், இராமநாதபுரத்தில் கமுதி, கடலாடியில் ஒலி பெருக்கி அமைத்து விடுவார்கள். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள், நான்கு நாள் கூட தொடர்ந்து ஒலி பெருக்கி அமைத்திருந்த நாட்களும் உண்டு. எந்த கிராமத்தையும் விட்டுவிடவில்லை. அனைத்து கிராமங்களுக்கும் சென்று தான், புதிய தமிழகம் கட்சியைத் தென்தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 25 வருடங்களில் எந்த ஒரு சூழலிலும் என்னுடைய தனிப்பட்ட நலனுக்காகவோ, குடும்ப நலனுக்காகவோ நான் எடுத்துக் கொண்ட எந்த கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையில் ஒரே ஒரு வார்த்தை மாறி இருந்தால் போதும், தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்கள் அனைவரும் கோடி கோடியாகக் கொண்டு வந்து கொட்டி இருப்பார்கள். ஆனால், வரலாற்றில் நாம் யாருக்கும் தெரியாது என்று அன்று அந்த தவறைச் செய்து விடலாம். ஆனால், வரலாற்றுக்குத் தெரியாமல் போய் விடாது. என்றாவது ஒருநாள் தெரிந்துவிடும். அதுதான் வரலாறு. அதன் காரணமாகத்தான் நான் எந்த ஒரு பிரச்சனையைத் தொடுவது என்று சொன்னாலும், அந்த பிரச்சனையில் தலையிடலாமா? வேண்டாமா? தலையிட்டால் அதனால் மக்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்படும்? இதற்கு நம்மால் தீர்வு காண முடியுமா? முடியாதா? என்பதை எல்லாம் ஆய்வு செய்துதான் அந்த பிரச்சனைகளில் , நான் தலையிட்டு கருத்தை தெரிவித்து இருக்கிறேன். இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் உண்டு.
1975 ஆம் ஆண்டு என்னை நெல்லை மருத்துவக் கல்லூரியிலிருந்து மாற்றம் செய்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீகாரில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டியதற்காக அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்கள். அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நான் மதுரை மருத்துவக் கல்லூரியில் வந்து சேர்ந்து விட்டேன். 1976 ஆண்டு ஜூலை மாதம் நான் மிசாவிலே கைது செய்யப்பட்டேன். உங்களில் பல பேருக்கு மிசா என்றால் என்னவென்றே தெரியாது. மிசா என்றால் Maintenance of Internal Security Act என்று தடா சட்டம் – பொடா சட்டத்தைப் போல, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி இந்தியாவில் ஒர் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது இந்தியாவிலிருந்த அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த சமயத்திலே வடக்கு மாநிலங்களில் கட்டாய கருத்தடைகள் செய்யப்பட்டது என்ற கருத்தைக் கேட்டறிந்து, மாணவ பருவத்திலே மாணவ, மாணவிகளை எல்லாம் திரட்டி மாணவர்களிடத்தில் ஒரு அமைப்பை வைத்திருந்த காரணத்தினால் கட்டாய கருத்தடை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நோட்டீஸ் விநியோகம் செய்ததை அடிப்படையாக வைத்து என்னை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.
நான் ஜூலை மாதம் உள்ளே சென்றேன். என்னைப் பார்ப்பதற்காக என்னுடைய தாயார், தந்தை, அண்ணன், தங்கையர் அனைவரும் வந்திருந்தார்கள். நான் அப்பொழுது அவர்களை இரண்டு மாதகாலம் பார்க்கவே இல்லை; பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன். அதற்குப் பிறகு, சிறைச்சாலையில் ஜெயிலர் என்னை அழைத்து, ”உன்னுடைய தாய் இரண்டு மாத காலமாகத் தினமும் வந்து சிறை வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்படி பார்க்க மறுக்கும் நிலை ஏன்?” என்று கேட்டார். அதற்கு நான் அவரிடத்தில் ”இந்த நாடு இப்பொழுது ஒரு மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது; இந்தியா சுதந்திரம் பெற்றது 1947; ஆனால் அந்த சுதந்திரத்தை இழந்து இந்த 70 கோடி மக்களும் ஒரு மிகப் பெரிய ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறார்கள்; எப்பொழுது இந்தியாவில் இருக்கக்கூடிய 70 கோடி மக்களுக்கும் சுதந்திரம் வருகிறதோ, அன்றுதான் எனக்கும் சுதந்திரம், எனக்கும் விடுதலை; எனவே இன்று ஒரு தாயைப் பார்க்கப் போனால், நான் தனிப்பட்ட ஒரு தாயின் மீது பற்று கொண்டவன் என்று ஆகிவிடும். எனவே அப்போது என் இந்திய மக்களுக்கு விடுதலை கிடைக்கிறதோ? அப்போது பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.
ஆனால், அவர் தொடர்ந்து ஒரு வார காலம் பேசி, என் மனதை மாற்றி, எனது தாயை அழைத்து வந்து பார்க்க வைத்தார். அப்போது என் தாயார் என்னை கட்டிப்பிடித்து அழுத பிறகு, 10 நிமிடங்கள் சில கருத்துகளைச் சொன்னார். அதிலும் இந்த லட்சியங்களைப் பற்றி பேசிய பொழுது ”முதலில் நீ எதிலும் உறுதியாக இருந்திடல் வேண்டும். அதற்குப் பிறகு தான், மற்றவர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்று சொன்னார். அந்த வகையிலே ”நான் சிறைக்கு வந்தது மக்களுக்காக தானா? நான் உறுதியாக இருக்கிறேனா? இது மட்டுமல்ல, இனிமேல் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த பிரச்சணைக்கு செல்வதற்கு முன்பாக நமக்கு நாம் உண்மையாக இருந்திட வேண்டும்” என்பதுதான் எனக்கு என் தாய் அன்று கொடுத்த அறிவுரை. அன்றிலிருந்து இன்று வரையிலும் அது கொடியங்குளம் நிகழ்ச்சி என்றாலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை என்றாலும், சட்டமன்ற பிரச்சினை என்றாலும் அனைத்திலும் உண்மையாகத்தான் இருந்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு, ஒன்றை மட்டும் சொல்கிறேன். இன்று முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இந்த மேடையிலே இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே சென்றேன்.
பரமக்குடியில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அதில் 7 பேர் மரணம் எய்திவிட்டார்கள். அதையெல்லாம் இங்கே தம்பி தனியரசு சுட்டிக் காட்டுவார் என்று இருந்தேன். அந்த கலவரத்திற்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அது யாராலோ, எதற்காகவோ உருவாக்கப்பட்டது. சட்டமன்றத்தில் அன்று நான் அமைதியாக இருந்திருந்தால், அடுத்த ஐந்து ஆண்டு காலமும் அதிமுகவோடும், அன்றைய முதல்வர் அவர்களுடனும் மிகவும் சுமூகமான உறவுடன் சென்றிருக்க முடியும். ஆளும் கட்சியுடன் நல்லுறவோடு இருந்தால் எவ்வளவு நற்காரியங்களை பெறமுடியும் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. எந்த அமைச்சரிடம் சென்றாலும் நம்மோடு இருக்கிறார் என்று அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். முதல் வருடத்திலேயே உறவு சரியாக இல்லை என்று சொன்னால், அமைச்சர்களை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. எனினும், என்னுடைய மனசாட்சி உறுத்தியது. அங்கே எனது இடது பக்கம் தனியரசு, சரத்குமார், கதிரவன், செ.கு. தமிழரசன் எல்லோரும் அமர்ந்து இருந்தார்கள். அந்தப் பிரச்சனையைச் சட்டமன்றத்தில் எழுப்பிய பொழுது, தனியரசு, ”இந்த பிரச்சனையை எப்படி அணுகப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அந்த பிரச்சனையில் இறந்தவர்கள் புதிய தமிழகம் கட்சியின் போராட்டத்தில் இறந்தவர்கள் அல்ல. ஆனால் இறந்தவர்கள் எனது தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நேரத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் இன்றில்லை என்றாலும், வரலாற்றில் என்றாவது ஒருநாள் நம்மையும் பார்த்து கேள்வி கேட்க நேரிடும் என்ற அடிப்படையில்தான் அன்று அதிமுகவை எதிர்த்து வெளிநடப்பு செய்தேன். எனவே நான் கடந்த 25 வருடங்களில் உங்களுக்கு 100% அல்ல, 1000% உண்மையாக இருந்திருக்கிறேன் என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, ஒர் அரசியல் கட்சியை நடத்துவதில் தலைவருக்கு மட்டுமல்ல, கட்சியினுடைய நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த உறுதியும், பொறுப்பும், கடமையும் கண்டிப்பாக வேண்டும். இனிமேல் ஒரு கொடியங்குளம் நடக்கப் போவதும் கிடையாது; ஒரு மாஞ்சோலை போராட்டம் நடக்கப் போவதும் கிடையாது; தமிழகத்தில் கிராமத்தில் இரட்டை டம்ளர் முறைகள் வரப்போவதும் கிடையாது; இரட்டை சுடுகாடுகள் வரப்போவதும் கிடையாது; கண்ட தேவி தேர் வடம் பிடித்து இழுக்க நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது. அதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் தமிழ்நாட்டிலே அன்று தலைதூக்கி இருந்தன. அன்று இருந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் 25 வருடங்களில் நாம் தீர்வு கண்டு இருக்கிறோம் என்பதை, நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி அந்த வரலாறுகள் எல்லாம் திரும்பி வராது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், நான் கிராமந்தோறும் செல்லுகின்ற போதெல்லாம் தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் ”அய்யா நம்மை இந்த எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்க மாட்டீர்களா? பகுதிக்கு ஓரிருவர் மருத்துவர், ஆட்சியர், காவல்துறை அதிகாரி என உயர்ந்தால் மட்டும் போதாது. அனைவரும் வாழ்க்கையில் உயர வேண்டும்; தேவேந்திர குல வேளாளர்கள் அனைவரையும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று ஏதும் படிக்காத மக்கள் வேண்டிக் கொண்டார்கள். ஏதாவது ஒரு சிறு தொழில் செய்து பிழைக்கக் கூட இந்த எஸ்.சி என்ற ’கறை’ தடையாக இருக்கின்ற காரணத்தினால் தான் நான் ”எஸ்.சி பட்டியலிலிருந்து இந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்கவேண்டும்” என்று குரல் கொடுத்தேன். அதன் விளைவாகவே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கிடைத்தது.
இன்று அதற்காகவும் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரோடு நாம் கூட்டணியிலேயே 2021-ல் இருக்க முடியவில்லை. கூட்டணி என்பது வேறு. வரலாற்றிலே அரசியல் ரீதியாக சில காரணங்களால் நாம் கூட்டணி சேரலாம்; சேராமலும் இருக்கலாம். ஆனால், ஒரு பெரிய தமிழ்ப் புலவர் அல்லது தமிழ் அறிஞர் என்று சொல்லக்கூடியவர்கள் புரிந்துகொள்ளாததை ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொண்டு, வெறும் வார்த்தையாக இல்லாமல், எழுத்தாக்கி, மத்திய அரசோடு துணை நின்று பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தார், கடையர் போன்ற ஏழு பேர்களில் அழைக்கப்படக் கூடியவர்களுக்கு ’தேவேந்திரகுல வேளாளர்’ என்ற ஒற்றைப் பெயர் மாற்றம் உருவாகியது. ஆனால், நாம் வைத்த கோரிக்கை அதுமட்டுமல்ல. எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திரகுல வேளாளர்களை வெளியேற்ற வேண்டும் என்பதும் தான். அதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அரசியலுக்காகப் பேசுகிறார் என்று நினைத்தார்களே தவிர, இது தேவேந்திர குல வேளாளர் மக்களுடைய ஆழ் மனதில் இருக்கக்கூடிய கோரிக்கை என்பதை பலர் புரிந்து கொள்ளவே இல்லை; அதற்கும் முட்டுக்கட்டை போட்டார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படித்தவர்கள், உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என படித்து பயன் பெற்றவர்களும் முட்டுக் கொடுத்தார்கள்.
நாம் ஒன்றும் இப்பொழுது இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளின் பதவிகளை பறிக்கப் போவதில்லை. தேவேந்திரகுல வேளாளர்கள் எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அவர்களுடைய பதவி பறி போகாது. இருந்தாலும்கூட, அவர்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் போய்விடும் என்று சுயநலமாகப் பார்த்தார்களே, தவிர சமூகப் பற்றோடு அவர்கள் அணுகவில்லை.
2021 சட்டமன்ற தேர்தலில் நாம் முழுமையாக ஆதரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அதுதான். ஒரே ஒரு வாக்குறுதியைத் தான் கேட்டேன். அது பாஜக இடத்திலும் சரி, அதிமுக இடத்திலும் சரி ”இப்பொழுது பெயரை மாற்றிக் கொடுத்திருக்கிறோம்; வரக்கூடிய காலகட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்குவோம்” என்று சொல்லியிருந்தால், ”எங்களுக்கு சட்டமன்றத்திலே போட்டியிட வாய்ப்பே வேண்டாம்” என்று கண்ணை மூடிக் கொண்டு அக்கூட்டணிக்கு ஆதரவளித்து இருப்பேன். அன்று அந்த நிலை உருவாகி இருந்தால், இன்று இங்கு அமர்ந்து இருக்கக்கூடியவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக மட்டுமல்ல, அமைச்சர்களாகவும் இருந்திருப்பீர்கள். திராவிட மாடல் ஆட்சி மாற்றம் நடந்திருக்காது. மிக நல்ல காரியத்தைச் செய்து கொடுத்தும் கூட, அதன் பலனை அறுவடை செய்யவில்லை. ஓராண்டு, ஈராண்டு அல்ல, நான் 25 ஆண்டுகாலம் பேசியிருக்கிறேன். 1991-லிருந்து வெளிப்படையாகப் போராடுகிறேன். பொதுவாழ்வுக்கு வந்த காலத்திலிருந்தே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேறினால் தான், முழு விடுதலை பெற்ற சமுதாயமாக இருக்க முடியும். அது மட்டும் நடந்திருந்தால், தென் தமிழகத்தில் மட்டுமல்ல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்களின் ஒரு வாக்குக் கூட எதிரணிக்குச் சென்றிருக்காது. இருந்தாலும் இன்னும் காலம் இருக்கிறது. நம்முடைய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக, உறுதியாக இருந்தால் தான் ஒரு இலட்சியத்தை அடைய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள் என்பது வேறு. கூட்டங்களுக்குக் கூட பணம் கொடுக்கிறார்கள் என்பது வேறு. ஆனால், புதிய தமிழகம் கட்சி அவற்றை ஆதரிக்கக் கூடிய கட்சி அல்ல, இன்று இருக்கக்கூடிய வாழ்நிலையில் இருந்து ஒரு படிக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, உங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் தலையாய இலட்சியமாகும். தமிழ்ச் சமுதாயத்தில் இன்று ஒரே ஒரு பிரிவினர் மட்டும் தான் புதிய பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள். அக்காலங்களில் இருந்த பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். 1971இல் கோவையிலே நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இருந்தது. நூற்பாலையில் வேலை செய்யக்கூடிய அந்தத் தொழிலாளர்களுக்குத் தான் அதிகமான மரியாதை இருந்தது; போட்டிப் போட்டுக்கொண்டு பெண் கொடுப்பார்கள். தீபாவளி என்றால் அவர்களிடத்தில் தான் 5000, 10000 என பணம் புழங்கும். அப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்த நூற்பாலைகள், காணாமல் போய்விட்டன. இப்பொழுது ஐ.டி என்ற ஒரு வர்க்கம் தான் புதிதாக வளர்ந்து வருகிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பெரிய வசதியிருந்தவர்கள் எல்லாம் அடிபட்டு விட்டார்கள். இது தேவேந்திரகுல வேளாளர்கள் அல்லது நெசவாளர்களாக இருந்தாலும், விஸ்வர் கர்மா சமூகமாக இருந்தாலும், அவர் நாடாராக இருந்தாலும், யாதவராக இருந்தாலும், தேவராக இருந்தாலும், வேறு எந்த சமுதாயமாக இருந்தாலும் அவைகளெல்லாம் கீழே விழுந்து கிடக்கிறன்றன. 10 முதல் 30 சதவீதம் மக்கள் மட்டுமே வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தான் கார் வைத்திருக்கிறார்கள். நம்முடைய புதிய தமிழகம் கட்சி 25 ஆண்டு காலம் நீங்கள் பட்ட துன்பங்களுக்காக, உங்களுக்காக போராடியிருக்கிறார்கள்.
ஆனால், இன்றோடு 25 ஆண்டுகாலம் நிறைவுற்று விட்டது. அடுத்து 26வது ஆண்டிலே அடியெடுத்து வைக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் சமுதாய பிரச்சனையை பேசுவதற்கோ, அந்த ஊரில் ஒரு சம்பவம் நடந்து விட்டது. இந்த ஊரில் ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று பேசிக்கொண்டு இருப்பதற்கோ நேரமும் இல்லை; உகந்த காலமும் இல்லை. இப்பொழுது நமக்கு மிகப்பெரிய தலையாய பிரச்சனை – இலட்சியம் – கோரிக்கை சித்தாந்த ரீதியாக வந்து இருக்கிறது. இனி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமே ஒரு விடிவு காலத்தை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பு, புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருடைய தலையிலும் சுமத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பொறுப்பை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதைத்தான் பலர் பேசினார்கள். அதைத்தான் அண்ணன் பழ.கருப்பையா அவர்களும் கூடச் சொன்னார்கள். ஒரு சமூகத்தினுடைய தொண்டனுக்கு சில நேரங்களில் சில பிரச்சனைகள் வரலாம். எந்த அரசியல் கட்சிக்கு பிரச்சனை வராமல் இருக்கிறது. காந்தி இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்டார், அவருக்கு பிரச்சினை வரவில்லையா?; அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டினுடைய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்டார், அவருக்கு தொல்லைகள் வரவில்லையா?; துன்பங்கள் வரவில்லையா? புரட்சியின் மூலமாக இந்த நாட்டை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான், ஜெர்மனி சென்று இந்திய தேசியப் படையைக் கட்டிய சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்குப் பிரச்சனைகள் வரவில்லையா? இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக சொத்து சுகத்தை இழந்து செக்கு இழுக்க வேண்டிய சூழலுக்கு வ.உ.சி அவர்கள் வரவில்லையா? பாரதியார் கவிதை பாடியதற்காக ஊரை விட்டு நாடு நாடாக ஓட வேண்டிய அவசியம் வரவில்லையா? எனவே யாருக்குத்தான் பிரச்சனை வரவில்லை. எல்லோருக்கும் பிரச்சனை வந்துள்ளது. ஆனால், அன்று இருந்த பிரச்சனைகள் இன்று அல்ல. இனிமேல் காலகட்டம் மாறிவிட்டது. வேறு வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். வாட்ஸ்–அப், பேஸ்புக் மூலமாக எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள முடியாது. எனவே, புதிய தமிழகத்தினுடைய தொண்டர்கள், நம்முடைய நிர்வாகிகள் நமக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, நாம் தலைமை ஏற்று இந்த தமிழ் சமுதாயத்திற்குப் பொறுப்புணர்வுடன் உழைக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இந்த மாநாட்டை இன்னும் கூட சிறப்பாகப் பண்ணியிருக்க முடியும். நான் இந்த மாநாடு அறிவித்தபோது, யாரிடத்திலும் எக்காரணம் கொண்டும் நிதி வசூல் செய்யக்கூடாது; நம்முடைய கட்சிக்காரர்களே இந்த மாநாட்டை நிதி திரட்டி நடத்த வேண்டும் என்றுதான் 450 பேர் கொண்ட குழுவை உருவாக்கினோம், அதேபோல மாநாட்டு வரவேற்புக் குழு அறிவித்தோம். மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்களுக்கு, உறுப்பினராக இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு தொகையை குறிப்பிட்டோம். ஆனால், நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்றும் இல்லாத அளவில் சுவர் எழுத்து விளம்பரங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். கிராமம் தோறும் வாகனங்களைப் பிடித்து வர வேண்டிய சுமை இருக்கிறது என்பது தெரியும். இருந்தாலும் கூட, நம்முடைய கஷ்டத்தை நாமே தீர்ப்பதில் இருக்கக்கூடிய பெருமையும், இன்பமும் வேறு எதுவும் இருக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நீங்கள் பலரிடத்தில் சென்றீர்கள். நாம் ஒரு சில லட்சங்களை திரட்டுவதற்கு எவ்வளவு கடினப்பட்டோம் என்பதை தாங்கள் நன்றாக அறிவீர்கள். நாம் ஒரு இலட்சம் எதிர்பார்த்து பத்தாயிரம் கொடுத்து இருந்தாலும் சரி; பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்த்து ஆயிரம் கொடுத்து இருந்தாலும் சரி. அவர்கள் அனைவருக்குமே மாநாடு முடிந்தவுடன் தொண்டர்கள் சென்று நன்றி தெரிவிக்க வேண்டும். நான் ஏன் இதை இந்த சமயத்தில் சொல்கிறேன் என்றால் புதிய தமிழகம் கட்சிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும், கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். புதிய தமிழகம் கட்சியைப் பார்த்தால் புலியைப் பார்த்ததுபோல, சிங்கத்தைப் பார்த்தது போல கரடியைப் பார்த்தது போல, ஒரு பார்வை இடைப்பட்ட காலத்தில் நிலவி வந்திருக்கிறது. அவையெல்லாம் இன்றோடு துடைத்து எறியப்பட்டு விட்டது. இன்று பல்வேறு சமூக அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் நம் மேடையேறி இருக்கிறார்கள். எனவே, அந்தப் பொறுப்பை உணர்ந்து நம்முடைய நிர்வாகிகள் அனைவருமே எப்படி அரசியலில் பயணிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் பயணம் என்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி – அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்றே இருக்கும். நமக்கு இப்பொழுது 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று நம்முடைய சிவப்பு – பச்சை வர்ணக் கொடி டெல்லிக் கோட்டையிலும், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் பறந்திட வேண்டும்; நாமும் ஆட்சி – அதிகாரத்திலே பங்கு பெற வேண்டும்.
எத்தனை ஆண்டுக் காலத்திற்கு வெறும் சட்டமன்ற உறுப்பினர்களையே இலக்குகாக கொண்டு செயல்படுவது? எப்பொழுதுமே ஒரு கலவையில் தான் ஒரு நல்லது உருவாக்க முடியும். பாலை தனியாக குடிப்பதற்கு பதிலாக சர்க்கரை சேர்த்து குடித்தால் சுவை வேறு. பாலை தனியாக சாப்பிடுவதற்கும் பால்கோவா செய்து சாப்பிடுவதற்கும் உள்ள சுவையின் தன்மை வேறு வேறு. வெறும் கோதுமையை சாப்பிடுவதற்கு பதிலாக அல்வா செய்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அது போல தான் இனிமேல் தமிழகத்திலே ஜாதி மோதல், அந்த ஜாதியோடு சண்டை, இந்த சாதியோடு சண்டை என்பதை எல்லாம் நீக்கி விட்டு, நம்முடைய நோக்கம் எல்லாம் தமிழ்நாட்டில் உருப்பெற்றுள்ள திராவிட மாடல் சித்தாந்தத்தை, அதாவது தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளும் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அக்குடும்பம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 505 வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அதில் ஏதாவது ஒரு வாக்குறுதி நிறைவேற்றப் பட்டிருக்கிறதா? என்றால் இல்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்களே ரத்தாகி விட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி தான் நீட் தேர்வை ஆதரிக்கிறார் என்று சொன்னார்கள். நீங்கள் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறீர்களே! அனைவரும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாததை; 120க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியிலே இருந்து கொண்டு இரு முறை நீட் தேர்வை ரத்து செய்யத் தீர்மானம் நிறைவேற்றியும் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், ஒரு கிருஷ்ணசாமியால் நீட் தேர்வை நிலைநிறுத்த முடியும் என்பது பெருமை தானே! நிச்சயமாக இவர்களால் ஒரு காலத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு வந்தவுடன் என்ன குறைந்து விட்டது. ஒரே ஒரு குறை இருந்தது? நீட் தேர்வு வருவதற்கு முன்பு, கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள் அதிக பேர் மருத்துவம், பொறியியல். வேளாண்மை கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத சூழல் இருந்தது. அந்தக் குறைபாட்டை 7. 5 சதவீத தனி இட ஒதுக்கீடு கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிவர்த்தி செய்து விட்டார். அதற்குப் பிறகு நீட் தேர்வால் எவ்வித பிரச்சனையும் இல்லை. மீண்டும் அதையே ஏன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எடுக்கக்கூடிய மின்சார கட்டண அளவீடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மாதத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். அந்தக் கோரிக்கை என்ன ஆயிற்று? அதற்கு மாறாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்காக்கினார்கள். கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக கோவை, சூலூர், சோமனூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் என்னிடத்தில் வந்திருந்தார்கள். இன்று உயர்த்தப்பட்டு இருக்கக்கூடிய மின்சார கட்டணம் குறைக்கப்பட வில்லை என்றால் ஏறக்குறைய 5 – 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சொன்னார்கள். சோமனூர், பல்லடம், ஈரோடு பகுதிகளில் இருக்கக் கூடிய விசைத்தறி ஆலைகள் மூடப்படும் நிலை இருக்கிறது என்றும் சொன்னார்கள். இந்த விசைத்தறி தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் இன்றைய ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ ஆட்சியாளர்களுக்குச் செல்லவில்லையா?
ஒரு பக்கம் சகோதரியும், இன்னொரு பக்கம் மகனும் ஊர் ஊராக சென்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று சொன்னார்களே, மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டனாவா? இதுவரையிலும் சாலையிலே பால் வண்டி போனால் அவசரம் என்று போகும்; மருத்துவ ஆம்புலன்ஸ் அவசரம் என்று போகும். ஆனால், இன்று அவற்றிற்கெல்லாம் அவசரமில்லை. டாஸ்மாக் வாகனங்களுக்கு தான் ”அவசரம்” என்று போஸ்டர் ஒட்டிச் செல்கிறது. இதுதான் இன்றைய ஆட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றம். ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை வந்து சேரவில்லை; முதியோர்களுக்கான பென்சன் தொகை 1000 லிருந்து 1500 ஆக உயரும் என்று சொன்னார்கள். அதுவும் போய்ச் சேரவில்லை; போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய சம்பள உயர்வு, பழைய பென்சன் முறை வரும் என்று கூறினார்கள், அதுவும் வரவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறை அமலாக்கப்படும் என்று சொன்னார்கள், கேட்டால் நிதி இல்லை என்று ஒரே கூப்பாடு. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதைப் பற்றி வாய் திறக்க இன்று ஆளில்லை. கடந்த இரண்டு வருடங்களாக தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். சாலைகள் போடாமல் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது; கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட திட்டங்களை இப்போது அமலுக்கு வரும்போது திறந்து வைத்து பெருமை கொள்கிறார்கள்; புதிய திட்டங்கள் அப்பா பெயரில் வருகிறது; பேனா வருகிறது; நூலகம் வருகிறது. கடலுக்குள்ளே எப்படி எழுத முடியும் என்பது தெரியவில்லை. 136 அடிக்குப் பேனா, ஒரு புயல் வந்தால் அந்தப் பேனா நிற்குமா? நிற்காதா? என்று கூட தெரியவில்லை. ஆனால் அதற்கு நூறு கோடி ரூபாய்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட, தமிழக மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள்; பெண்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். நகைக்கடன் அனைத்தும் இரத்து செய்யப்படும்; கல்விக் கடன் இரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள்; செய்யவில்லை. இப்படி வஞ்சிக்கப்பட்ட எல்லா மக்களையும் புதிய தமிழகம் கட்சியினர் வீடுவீடாக சென்று 2021 திராவிட மாடல் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டு வருவதை எடுத்துரைக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றிடவும்; 2026-ல் ஆட்சி மாற்றம் கொண்டு வரவும் அவர்கள் சொல்லக்கூடிய ”திராவிட மாடல் என்பது என்ன?” என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
இந்த ’மைக்’ ஒரு முன்மாதிரி என்று சொன்னால் எல்லா இடத்திலும் இதே போல ஒலி எழுப்ப வேண்டும். இங்கே பேசினாலும் சரி, ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரத்துக்குள் பேசினாலும் சரி, விருதுநகரில் பேசினாலும், மதுரையில் பேசினாலும் அல்லது வேறு நாட்டிற்கு கொண்டுச் சென்றாலும் இந்த மாதிரி பேச வேண்டும், அதுதான் மாடல். அப்படி என்ன மாடல் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்?
இட ஒதுக்கீடு இன்று வந்தது அல்ல. மஹாராஷ்ட்ரத்திலே இட ஒதுக்கீட்டுக்காக ஜோதிபா பூலே 1920க்கு முன்பாகவே போராடியிருக்கிறார்; இட ஒதுக்கீடும் பெற்று இருக்கிறார். ஆங்கிலேயர்கள் அவர்களாகவே முன்வந்து சீக்கியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு, கிறித்தவர்களுக்கு, பார்சிகளுக்குக் கொடுத்து இருக்கிறார்கள். அதை 50 வருடங்களுக்கு பின்பு வந்தவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்? திராவிட மாடல் ஆட்சி என்பது நம்மை ஏமாற்றும் பொய்யும், பித்தலாட்டமுமாக உள்ளது. கேட்டால் பெரியாருடைய பெயரைப் பயன்படுத்துகிறார்கள். எந்த ஒரு தத்துவமும் எல்லா காலத்திலும் உதவாது. பெரியாருடைய தத்துவம், அண்ணாவின் கருத்துக்கள் அன்றைய சூழலில் வேண்டும் என்றால் உதவி இருக்கலாமே தவிர, இன்று தமிழகத்தில் 7 – 8 கோடி மக்களுக்கு வறுமையைப் போக்க, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலையைக் கொடுக்க, தொழிலாளர்களுக்கு தொழில்களை உருவாக்கி கொள்ள அதெல்லாம் உதவாது. இன்று அவசர அவசரமாக குடும்ப வாரிசுக்கு முடிசூட்டப் படுகிறது. இது எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவா நடைபெறுகிறது? நம்முடைய தொண்டர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 25 வருடங்களாக உங்களுக்கு நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக போராடியிருக்கிறோம். இனி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்காகப் போராட ஆயத்தமாகிக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இரண்டு பெரியக் கட்சிகளைத் தாண்டி இன்று 25வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம் என்றால் அது நம்முடைய கட்சிதான். காரணம் நாம் என்ன கொள்கை எடுத்துக்கொண்டோமோ, அந்த கொள்கையை உண்மையாகவும், உறுதியாகவும் நின்றுள்ளோம். இந்த கட்சி 50 ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும்; 75 ஆண்டு காலம்,100 வது ஆண்டு விழாவை நிறைவு செய்ய வேண்டும். அதனை நானே இருந்து தான் 50, 75 ஆம் ஆண்டு விழா நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 25 வருடத்திற்கு முன்பு, மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை என்ற இலட்சியங்களை உள்ளடக்கி, இந்த மண்ணிலே பிறக்கக்கூடிய ஒவ்வொருவரும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். அதனை நல்ல முறையில் வாழ்வதற்கான வசதிகளை அரசுகள் செய்திடல் வேண்டும். பிறப்பிலே ஏழையாகப் பிறந்தாலும் கூட வளர்ப்பிலே வசதி படைத்தவராக மாற்றப்பட வேண்டும்; பிறப்பிலேயே கல்வி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் அவருக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்; பிறப்பிலே அவன் விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்து இருந்தாலும் அவன் மத்திய நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
எனவே, equality and equity சமூக நீதி, சம நீதி, சமய நீதி, சமத்துவம் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்ற உயரிய இலட்சியம் தான் பொதுவுடைமை, பொது உரிமை இலட்சியம். அந்த இலட்சியத்தை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணத்தோடு புதிய தமிழகம் கட்சியினர் செயலாற்ற வேண்டும். நம்முடைய நலனை மட்டும் பார்த்தால் போதாது. நீங்கள் தற்போது ஆவணப்படம் பார்த்ததில் காட்சிப்படுத்தப்பட்டவை எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். இன்று நடப்பவைகள் அல்ல, இன்று நடப்பவைகள் என்ன? அரசியல் சுரண்டல்கள், தமிழ்நாட்டில் ஒரே ஒரு குடும்பம் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, தமிழ் சமுதாயத்திற்காகப் பாடுபட்டதாக கூறி கடைசியில் ஒரு கட்சி – குடும்பம் மட்டுமே இப்பொழுது ஒட்டுமொத்த ஆட்சி – அதிகாரத்தையும் தன்னை வளர்த்துக்கொள்ள பயன்படுத்துகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஜி-ஸ்கொயர் தவிர எவரும் பத்திரம் போட முடியவில்லை. சினிமா படம் எடுத்தால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைத் தவிர எவரும் தாண்டிச் செல்ல முடியவில்லை. ஆட்சியிலே எல்லாம் சமையலறையிலிருந்து மருமகன், மகன், மனைவி என இவர்களுடைய உத்தரவிலே நடைபெறுகிறது. காவல்துறை அதிகாரி நியமனம், மாவட்ட ஆட்சியர் நியமனம் என அனைத்தும் சமையலறைக்குள்ளேயே முடிவு செய்யப்படுகிறது. இதற்காகவா காந்தி போராடினார்? நேரு போராடினார்? சுபாஷ் சந்திரபோஸ் போராடினார்? இதற்காகவா எல்லோரும் போராடினார்கள்? அண்ணல் அம்பேத்கர் அவர்களால் ”ஒரே குடும்பம் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும்” என்பதற்காகவா அரசியல் சாசனம் கொண்டுவரப்பட்டது?
ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சியில் இருக்க; ஒரு குடும்பத்தால் மட்டுமே முன்மொழியப்படக்கூடிய அவர்களின் ’திராவிட மாடல்’ என்ற சித்தாந்தம் பித்தலாட்டமும் பொய்யும் புரட்டும் கொண்டது. அதிலிருந்து தமிழக மக்களை விடுவிக்க புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய இன்றைய பணி என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். திராவிட பித்தலாட்டம் – திராவிட மாடலை ஊர் ஊராகச் சென்று, தெரு தெருவாகச் சென்று அம்பலப்படுத்துங்கள். என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள்? அவரது குடும்பத்தில் வேறு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறிய பேட்டி இருக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். அவர்கள் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லையா? என்று பாருங்கள். அனைவருக்கும் சமூக வலைதளங்களில் பகிருங்கள்.! கிராம மக்களுக்கு போட்டு காட்டுங்கள்.!!
எனவே, நம்முடைய பணி 25 ஆண்டுகால ஒட்டுமொத்தமாகச் சாதனைகளை நிகழ்த்திய நாம் அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே புதிய தமிழகம் கட்சியும் நம்முடைய மக்களும் இரண்டற கலக்க வேண்டும். அனைவரும் நம்மை வாழ்த்தி இருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்னவென்று சொன்னால், ஒரு காலத்தில் 1985 வரையிலும் ஒரு கிராமத்தில் ஒரு பகுதியில் ஜாதி மற்றும் மத மாற்றம் நடைபெறும் என்றால் அவர்களுக்கு ஒரே தீர்வு; தங்கள் மதம் மாறுகிறோம் என்று தான் அறிக்கை வரும்.
1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் நிகழ்ச்சிக்கு நான் வந்து கால் வைத்த பிறகு, தமிழ்நாட்டில் இன்று வரை தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் ஒரு கிராமத்தில் கூட ஒட்டு மொத்தமாக மதமாற்றம் நடைபெறவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். விருப்பப்பட்டால் நீ இயேசுவைக் கும்பிடு, அல்லாவைக் கும்பிடு, அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த ஜாதியில் பிறந்து விட்டு, எனக்கு ஆபத்து வருகிறது; எனக்கு கை கொடுக்க எவரும் இல்லை என்ற அந்தக் குறை இல்லாத அளவிற்கு அந்த இடத்தை புதிய தமிழகம் கட்சி நிரப்பி இருக்கிறது. இங்குப் பல பேருக்குத் தெரியாது. 1982ல் இங்கு இருக்கக்கூடிய தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மீனாட்சி புரத்தில் கோவிந்தன் என்ற ஒரு ஓட்டுநர் ஒரு பெண்ணைக் கூட்டிச் சென்று விட்டார். அவரால் அந்தக் கிராமத்தில் இருக்க முடியவில்லை. அவர் கேரளா சென்று வேறு மதம் மாறி வந்தார். மதம் மாறி வந்த பின்னும் தொடர்ந்து பிரச்சனை. அவருக்காக 50 குடும்பங்கள் மதம் மாறினார்கள். அந்த 50 குடும்பங்களுக்காக மீனாட்சி புரத்திற்கு 1980-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வந்தார்; அத்வானி வந்திருக்கிறார்; சங்கராச்சாரியார் வந்திருக்கிறார். மீனாட்சி புரம் வராதவர்கள் விஷ்வ ஹிந்து பரிசத் – இந்து தலைவர்களோ, எந்த கட்சியினருமே இல்லை. 1995 ஆம் ஆண்டிற்கு பிறகு, தமிழகம் முழுவதும் அறவே மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். ஆனால் அதை எவருமே ஆவணப்படுத்தவும் இல்லை; இந்து அமைப்புகள் கூட அதை விளம்பரப்படுத்த வில்லை.
நாங்கள் 25 வருட சாதனைகளை படம் எடுக்க வேண்டிய நிலை ஏனென்றால், பல தொழிற்சங்கங்கள் போராட்டம் வைப்பார்கள். 100 கேட்பார்கள் 5 ரூபாய் உயர்த்தி கொடுத்து விட்டால் ’வெற்றி வெற்றி’ என்று போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்வார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 1998-க்கு முன், அதிகபட்ச சம்பளம் 65 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 1998-99 ஆம் ஆண்டில் புதிய தமிழகம் கட்சி போராட்டத்தின் வாயிலாக 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 115 ரூபாய் சம்பளம் உயர்வு பெற்றனர். ஆனால் எந்த இடத்திலும் நாங்கள் போஸ்டர் அடித்து ஒட்டவில்லை; எங்கள் சாதனை என்று சொல்லவில்லை. எனக்கு எப்பொழுதும் உண்மையின் மீது மட்டுமே நம்பிக்கை உண்டு. நியாயத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உண்டு. அதைத் தான் நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். யார் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். வரலாற்றில் உண்மை மட்டுமே வெற்றியை அடையும் என்ற நம்பிக்கை கொண்டவன். நான் அந்த அடிப்படையில்தான் நான் எங்கும் எதற்கும் விளம்பரம் செய்ததே இல்லை.
1997-ல் சட்டமன்றத்திலே வெள்ளை அறிக்கை கேட்டுப் போராடினேன். 1998-ல் அண்ணன் விஸ்வநாதன் இடைத்தேர்தலில் வென்று வந்தார். அன்று இருந்த அவருக்கு நான் வெளி நடப்பு செய்ததெல்லாம் தெரிந்திருக்கும். தொடர்ந்து 30 நாட்கள் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கல்வியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வீட்டின் முன்பு போராடி, உடனடியாக100 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின், 400 பேருக்குப் பணி ஆணை, 2011 சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நீதிமன்றம் சென்று சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக ஒட்டுமொத்தமாக 1400 பேர் கல்லூரி பேராசிரியர்களாக சென்றார்கள். எத்தனை போஸ்டர் அடித்து ஒட்டுவது?எவ்வளவு விளம்பரம் செய்வது?
அதேபோல இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அப்போது அப்படிப்பு படித்தவர்கள் போதுமானதாக இல்லையே” கிருஷ்ணசாமி என்ன செய்யலாம்” என்று அன்றைய முதல்வர் கேட்டார். ”பி.எஸ்.சி, எம்.எஸ்.சி படித்துள்ளவர்களை அப்பணிக்கு நிரப்புங்கள்” என்று சொன்னேன். அதில் பல்லாயிரம் இடங்கள் கிடைத்தது; செவிலியர் இடங்கள் கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் chief secretary ஆனார்; டிஜிபி ஆனார்; பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மன் ஆனார். இவ்வளவும் செய்து கொடுத்தோம். ஆனால், எந்த இடத்திலும் நாம் போஸ்டர் அடித்தது இல்லை; விளம்பரம் செய்ததில்லை. அந்த விளம்பரங்கள் எல்லாம் செய்யாவிட்டாலும் கூட, இன்று நம்முடைய கட்சி இவ்வளவு தூரத்திற்கு வலுவோடு நிலைத்து உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் நாம் உண்மையாக இருக்கிறோம் என்று எல்லா மக்களும் நம்புகிறார்கள், மக்களும் முழுமையாக விசுவாசமாக இருக்கிறார்கள்.
நான் தமிழக இளைஞர்களிடத்தில் முக்கியமாகக் கேட்டுக்கொள்வது நீங்கள் தேவையில்லாமல் பல பேர் பாடும் சுய புராணத்தை நம்பி, வாட்ஸ் அப் போராட்டங்களை நம்பி, அவர்கள் போடக்கூடிய முகநூல் அறிக்கைகளை நம்பி நீங்கள் மோசம் போய் விடாதீர்கள். அதனால் ஒன்றையும் சாதிக்க இயலாது. அவர்களுடைய வரலாற்றில் ஏதாவது ஒன்றைச் சாதித்த வரலாறு கூறுங்கள்; பார்ப்போம். வேண்டும் என்றால் தினமும் ஐந்து – பத்து நிமிடம் புகைப்படம் எடுத்துப் போட்டு, சிரிக்கச் சிரிக்கப் பேசி ஏதாவது செய்து இருப்பார்கள். அவருடைய சாதனை என்ன? அதனால் நீ பெற்ற பலன் என்ன? சமூகம் பெற்ற பலன் என்ன? உன் கிராமம் பெற்ற பலன் என்ன? உன் குடும்பம் பெற்றது என்ன? உன் சகோதரன் பெற்ற பலன் என்ன? அது போல எல்லாம் தடம் மாறிப் போனால், திசைமாறிப் போன பறவைகள் கூடு வந்து சேராது. ஆடு மந்தையை விட்டு தனியாக சென்றால் குள்ள நரிகளிடம் தான் சிக்கும். நீங்கள் தனித்துச் செல்லும் போது, எளிதாக எதிரிகளுக்கு இரையாவீர்கள். புதிய தமிழகம் கட்சி என்று சொல்லுகின்ற போதுதான் மரியாதையை, பாதுகாப்பை, உயர்வை, மதிப்பை உண்டாக்கும். ஒரு காலத்தில் நாம் கண் கூடாக பார்த்து இருக்கிறோம். நம்மை ஒதுக்கினார்கள்; பேச மறுத்தார்கள்; நம் அருகில் நிற்க கூச்சப்பட்டார்கள்; இன்று அவையெல்லாம் மாறி; இன்று மிகப்பெரிய அடையாளத்தோடு பரிணமித்துக் கொண்டிருக்கிறது.
’இந்து’ என்று நான் சொன்னவுடன் ”என்ன டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ் ஆக மாறிவிட்டார்? சங்கியாக மாறிவிட்டார்? முழு இந்துவாக மாறி விட்டார்? என்றெல்லாம் பேசினார்கள். நான் என்றுமே அப்படித்தான் இருந்திருக்கிறேன்; நான் எப்பொழுது புதிதாக இந்துவாக மாறினேன். என்னுடைய அப்பா இந்து; என்னுடைய அம்மா இந்து; முன்னோர்கள் இந்து; தமிழ்ச் சமூகங்களுக்குள் எப்பொழுது சாதி இருந்தது. சிலப்பதிகாரத்தில் சாதி இல்லை. அன்று என்ன கூறியிருக்கிறார்கள்? எல்லா சமுதாயங்களையும் கைவினைஞர்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவு தான். உழவர் என்று வருகிறது. கைவினைஞர்கள் என்று வருகிறதே தவிர, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, காலனி என்று எங்குமே கிடையாது. இடைப்பட்ட காலத்தில் நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி என்பது ஊடுருவி விட்டது. இந்த சாதி என்ற ஒரு நோயை நாம் கடந்து செல்ல வேண்டும். நடந்து செல்லும் போது காலில் முள் குத்தி விட்டால் காலை வெட்டி விட முடியுமா? அப்படி ஒரு பாதிப்பு இருந்தாலும் கூட, சீழ் பிடிக்காமல் தடுக்க மருந்து எடுக்க வேண்டும் அல்லவா? மதமாற்றம் என்பது எங்கிருந்தோ யாராலோ எதற்காகவோ கொண்டுவரப்பட்டது. 1000 ஆண்டிற்குப் பிறகு, மத்திய ஆசியாவிலிருந்து இஸ்லாமியர்கள் படை எடுக்கவில்லை என்றால் இங்கு இருக்கக்கூடியவர்கள் மதம் மாறி இருப்பார்களா? ஆங்கிலேயர்கள் இங்கே வந்து குடியேறவில்லை என்றால் டச்சுக்காரர், வரவில்லை என்றால், போர்ச்சுக்கீசியர்கள் வரவில்லை என்றால் கிறித்தவர்களாக மாறி இருப்பார்களா? ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கிருந்து வந்த காரணத்தினால்; திணித்த காரணத்தினால்; அச்சுறுத்திய காரணத்தினால் பல காரணங்களால் பலர் போயிருக்கிறார்கள். நான் அதில் தெளிவாக இருந்தேன். நான் பிறந்த கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் குடும்பம் வெறும் 25 குடும்பங்கள் தான். பெரிதாக இல்லை. கொங்கு வேளாளர்கள் 100 குடும்பம், அருந்ததியர் 50 குடும்பம், விஸ்வகர்மா இரண்டு குடும்பம், இரண்டு சவர தொழிலாளர் குடும்பம், 3 சலவைத் தொழிலாளர் குடும்பம். அருந்ததியர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்கள். அங்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தது. ஆனால், ஒரு தேவேந்திர குல வேளாளர் கூட ஒரு காலத்திலும் தங்களுடைய மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை; அவர்கள் தங்களுடைய பூர்வீக உணர்வுகளோடு தான் இருந்தார்கள்; பிரச்சினை சந்தித்தார்கள். 25 குடும்பங்கள் இருந்து, 100 குடும்பங்களைச் சந்தித்தார்கள். சுற்று வட்டாரங்களில் சந்தித்தார்கள். எங்களுடைய கிராமத்தைச் சுற்றி மூன்றே தேவேந்திரகுல வேளாளர்கள் கிராமங்கள் தான். ஒன்று மச்சகவுண்டன்புதூர், இன்னொன்று வசவநாயக்கன் பட்டி, இன்னொரு கிராமம் பொம்மிநாயக்கன்பட்டி. மூன்று கிராமங்களில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்வது என்றால் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்து இருப்பார்கள்! ஒருவர் கூட மதம் மாறவில்லையே! ஆனால் உண்மையிலேயே அந்த அளவிற்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தன்னுடைய பாரம்பரிய பண்பாட்டோடு இருந்து கொண்ட காரணத்தினால், அந்த ரத்தம் தான் என்னிடத்திலும் ஓடுகிறதே தவிர, ஆர்.எஸ்.எஸ் வந்ததால் நான் இந்து அல்ல.
நான் நானாக இருக்கிறேன்; நான் என்னுடைய தந்தை உணர்வு; என்னுடைய முன்னோர்களின் உணர்வுகள், பாரம்பரியத்தோடு இருக்கிறேன். வேறொன்றும் இல்லை. இதில் எனக்கு என்ன வெட்கம் இருக்கிறது? கூச்சம் என்ன இருக்கிறது? இந்து என்று சொல்வதில் எனக்கு என்ன பெருமை குறைந்து விடப்போகிறது? இன்று ஒருவர் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்கிறார்கள், சிலர் தாழ்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அது எப்போதும் இருக்குமா? அதை மாற்றத்தானே பட்டியலிலிருந்து வெளியேறப் போராடுகிறோம். உயர்த்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்களும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற நிலை ஏன் வந்தது? அவைகளை எல்லாம் காலப்போக்கில் அப்படித்தான் நிகழும். அதற்காக நம்முடைய முன்னோர்களுடைய அடையாளம், பாரத பூமி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ந்து வரும் அடையாளத்தை எல்லாம் நாம் மாற்றப்போவது கிடையாது. மற்றவர்கள் சொல்லலாம்; எந்த முத்திரை வேண்டுமானலும் குத்தலாம். ஒரு சங்கடங்கள், சிரமங்கள் வருகிறது என்றாலும் கூட நம்முடைய அடையாளங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது.
நமது தொடர் போராட்டங்களால் நம்மீது அரிஜன முத்திரை போயிற்று; ஆதி திராவிடர், தலித் என்ற முத்திரை போயிற்று; தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளம் வந்திருக்கிறது. இந்துக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றை அடையாளத்தின் கீழ் வரக்கூடிய காலகட்டம் வந்தே தீரும். அதுதான் நம்முடைய இலட்சியம். தமிழர்களை ஒன்றுபடுத்துவது, தமிழர்களை அடையாளப்படுத்துவது, இந்துக்களை அடையாளப்படுத்துவது. நம்பிக்கை என்பது வேறு. ஒரு இந்து இயேசுவை வணங்கக் கூடாது என்று பொருளல்ல. கிறிஸ்தவர் அல்லாவை வணங்க கூடாது என்று பொருளல்ல. ஏன் ஒரு பாடகர் யேசுதாஸ் ஒருவர் கிறிஸ்டியன் அவர் எப்படி ஐயப்பன் கோயில் சென்றார். எனவே நாம் நாமாக இருந்திட வேண்டும். நாம் நாமாக இருந்தால் கண்டிப்பாக எல்லா பெருமைகளும் வந்து சேரும். எல்லோருடனும் நேசமாகப் பழகவேண்டும்; எல்லோரிடத்திலும் அன்பு, அரவணைப்புடன் செல்ல வேண்டும்;உண்மையாக இருக்கவேண்டும். வறுமை நீங்கி எல்லா மக்களும் வளம் பெற வேண்டும் என்று சொன்னால் எதிர்காலத்தில் புதிய தமிழகமும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும். அது தனித்தோ, இணைந்தோ, பல கட்சிக் கூட்டணியுடன் அமைவதோ காலத்தின் கட்டாயம். ஆனால் ஆட்சி – அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு நம்முடைய புதிய தமிழகம் கட்சியினர் செயல்பட வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குதான் அரசியலுக்கு வருகிறோம். அதற்கு நம்முடைய நேச சக்திகள் யார்? நட்பு சக்திகள் யார்? என்பதை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து வாழக்கூடிய காலகட்டங்களிலே அது எந்த காலகட்டமாக இருந்தாலும் சரி, தேர்தலில் நாம் மகத்தான வெற்றியைப் பெறவேண்டும் என்று சொன்னால், கடந்த காலங்களைப் போல தேர்தலுக்கு முன்பாக 10 நாள் 15 நாட்கள் பணிகள் என்றில்லாமல் இனிமேல் ஒவ்வொரு நாளும் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் திராவிட மாடலை ஒவ்வொரு இடத்திலேயும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ”திராவிடத்திற்கு மாற்று புதிய தமிழகம்; திராவிட மாடலுக்கு மாற்றாக புதிய தமிழகம் தான்” என்ற கருத்தை அதை ஆழ் மனதில் ஏந்தி நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; எல்லோரும் பங்களிக்க வேண்டும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்க வேண்டும்.
நம்முடைய 25 ஆண்டு கால சாதனைகளை இளைஞர்கள் இன்று மாநாட்டில் நேரடியாக பார்க்காவிட்டாலும் வீட்டிலிருந்து பார்த்து நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதைப் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நீங்கள் அந்த கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான். ”மதுவைப் பூரணமாக விட்டொழிக்க வேண்டும் – புகையை விட்டொழிக்க வேண்டும், எந்த விதமான கெட்டப் பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது; காசு பணத்திற்கு அடிமையாகக் கூடாது. கொள்கைக்காக தன்னுடைய உடல், பொருள், ஆவி தேவைப்பட்டால் எந்த தியாகத்திற்கும் செல்ல புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நேரத்தில் நான் வைக்கக்கூடிய வேண்டுகோள்.
நாம் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்து அடுத்த கட்ட அரசியல் – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாய்ச்சலுக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எனவே, நம்முடைய புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை உருவாக்கினோம். இந்த சமூக மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அரசியல் – அதிகாரம் வேண்டும். அரசியல் – அதிகாரம் வேண்டும் என்று சொன்னால் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்; அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்கு உண்டான பணிகளை செய்ய வேண்டும். ”யாரையும் பகையாக பார்க்காதே – யாரோடும் பகை கொள்ளாதே; எல்லோரும் தமிழர்கள், எல்லோரும் இந்துக்கள்” என்ற உணர்வுகளோடு வறுமையை முற்றாக ஒழித்து; ஏழ்மையை முற்றாக ஒழித்து; ஏற்றத்தாழ்வுகளை முற்றாக ஒழித்து; தமிழ் சமுதாயத்தில் உள்ள இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்க வேண்டும்.
ஏழை – பணக்காரர், கல்வி கற்றவர் – கற்காதவர் என்ற வேறுபாடுகளை அடுத்த 10 ஆண்டுகளுக்குள்ளாக குறைத்து, ஒரு மிகப்பெரிய பொதுவுடைமை – பொது உரிமை சமுதாயம் இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு புதிய தமிழகம் கட்சி தான் வித்திட்டது, அர்ப்பணித்து கொண்டது என்ற ஒரு இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உங்களையெல்லாம் அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு, இந்த நிகழ்ச்சியிலே இவ்வளவு நேரம் அனைவரும் அமர்ந்து நம்முடைய உரையை முழுமையாகவும் கவனத்துடனும் கேட்டிருப்பீர்கள். இது மட்டுமல்ல இனி மேல் இவைகளை எல்லாம் சொல்லுக்கு அல்ல, செயலுக்கான திட்டங்கள் என்ற அடிப்படையிலே செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டு, ஒட்டுமொத்தத்தில் இந்த மாபெரும் மாநாடு வெற்றி பெறப் பாடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு வகைகளில் துணைபுரிந்து இருக்கக்கூடிய அனைவருக்கும். மேடையிலே இந்த மாநாடு நிறைவு பெறும் வரை அமர்ந்திருக்கக் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.!
வணக்கம்.!
அரசியல் கட்சிகளின் வாழ்த்து மடல்!
தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் வாழ்த்துமடல்:
அண்ணாமலை வாழ்த்து மடல்
அண்ணாமலை வாழ்த்து மடல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு. இரா. சரத் குமார் அவர்களின் வாழ்த்துமடல்:
சரத்குமார் வாழ்த்து மடல்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் திரு ஏ.எம். விக்கிரமராஜா அவர்களின் வாழ்த்துக் கடிதம்:
விக்கிரமராஜா வாழ்த்து மடல்
இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களின் வாழ்த்து மடல்(முகநூல் பதிவு):
ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் ‘புதிய தமிழகம் கட்சி’ இன்று 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா காண்கிறது. மாற்றங்களுக்காக போராடிவரும் நிர்வாகிகளையும், தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்!
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால வரலாற்றுச் சாதனைகள்:
1. 1995-ஆம் ஆண்டு கொடியங்குளம் கொடுமைக்கு எதிராக சென்னை மற்றும் டெல்லியில் பேரணி நடத்தியும், உயர்நீதிமன்றம் சென்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வென்றெடுத்தது.
2. 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தேர்தலில் 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளை எதிர்த்து, தனித்து நின்று வெற்றி வாகை சூடி, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குரிய இலக்கணத்தை தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் வகுத்துத் தந்தார்.
3. 1997-ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் சுந்தரலிங்கனார் பெயரில் போக்குவரத்துக் கழகம் பெற்றுத் தந்ததோடு, அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கச் செய்து, அவரது பெயரில் தனி கிராமத்தை உருவாக்கிக் கொடுத்தது.
4. 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் போராடிப் பெற்ற வெள்ளையறிக்கையின் வாயிலாக, பட்டியல்/பழங்குடியினருக்கான 1200 பேராசிரியர், 18000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இலட்சக்கணக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்பச் செய்து, அனைத்துப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்தது.
5. அரசு உயர் பதவிகள் மறுக்கப்பட்டு வந்த சமூகத்திற்கு, தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், TNPSC, TNUSRB, TRB, TNEB தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளைப் பெற்றுத் தந்து, அதை அதிகாரம் மறுக்கப்பட்ட பல்வேறு சமூகத்தினருக்கும் பரவலாக்கியது.
6. தமிழகம் முழுவதும் 22000 கிராமங்களில் நிலவி வந்த இரட்டைக்குவளை முறையை எதிர்த்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி ஒழித்துக் கட்டி சமூகநீதியை நிலைநிறுத்தியது.
7. மாஞ்சோலை, வால்பாறை, ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளமான ரூ.65-லிருந்து ரூ.450 வரை உயர்த்தி அவர்களுடைய மனித உரிமையை மீட்டெடுத்தது.
8. சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் அனைத்து சமூகத்தினருக்குமான வழிபாட்டு உரிமையை நீதிமன்றத்தின் வாயிலாகப் போராடி பெற்றுத் தந்தது.
9. மூன்று தமிழர்களின் கழுத்தை இறுக்கியத் தூக்குக் கயிற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றி, ஏழு தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டது.
10. நாடார் சமூகத்தினரின் முக்கிய நிதி ஆதாரமாகத் திகழக்கூடிய மெர்க்கண்டைல் வங்கிக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது, அதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி மீட்டுக் கொடுத்தது.
11. நீலநாக்கு நோயால் இலட்சக்கணக்கான ஆடுகள் பாதிக்கப்பட்டு, யாதவ சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானபோது, அதுகுறித்து ஆய்வு செய்து, சட்டமன்றத்தில் குரல் எழுப்பி இழப்பீடு பெற்றுத் தந்தது.
12. தமிழகமெங்கும் நெசவுத் தொழில் நலிவடைந்து, நெசவாளர்கள் முற்றாக பாதிக்கப்பட்டுத் தவித்த சூழலில் இராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சித்தொட்டிகளைத் திறந்து வைத்துக் காப்பாற்றியது.
13. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு உள்ளானபோது, தமிழகத்திலும் டெல்லியிலும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்து சர்வதேச கவனத்தை ஈர்த்தது, இலண்டன், கனடா, ஜெனிவா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், ஐ.நா. அரங்கிலும் குரல் எழுப்பியது, ஈழத்தமிழர், மலையகத் தமிழர் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் மலேசியாவில் சர்வதேச மாநாடுகளை நடத்தியது.
14. தென்தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, சாலை வசதிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பெற்றுத் தந்தது.
15. தேவேந்திரகுல வேளாளர்களின் நூறாண்டுகாலக் கோரிக்கை குறித்து, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், மாநாடுகள், தேர்தல் புறக்கணிப்பு, முத்தாய்ப்பாக 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி ‘தேவேந்திரகுல வேளாளர்’ அரசாணைப் பெற்றுத் தந்தது.
இவையெல்லாம் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால சாதனைகளில் சிலத் துளிகளே. அனைத்துச் சாதனைகளையும் ஓர் அறிக்கையிலோ, ஒரு நாளிலோ சொல்லி மாளாது.
மாநாட்டுத் தீர்மானங்கள்:
1. கோவில்பட்டி மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் நீண்டகாலக் கோரிக்கையான கோவில்பட்டியை மையமாக வைத்து தனி மாவட்டமும், ராஜபாளையத்தை மையமாக வைத்து தனி மாவட்டமும் உருவாக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
2.தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நலத் திட்டங்களையும் முறையாக அமல்படுத்தவும், அதனைக் கண்காணிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையங்களை அமைத்திட புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
3.தச்சுத்தொழில், தங்க நகை வேலை, பாத்திர வேலை, சிப்பி வேலை, இரும்பு, சிறு, குறு பட்டரைகள் எனத் தமிழகமெங்கும் வாழும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்களுடைய சுயதொழிலை விருத்தி செய்யும் பொருட்டு, இலவச மின்சாரமும், 15 இலட்சத்திற்குக் குறைவில்லாமல், குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கிட மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
4. மதுரை – குற்றாலம், திருநெல்வேலி – தென்காசி ஆகிய சாலைகளின் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திட புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
5. நாளுக்கு நாள் நலிந்து வரும் நெசவாளர்களின் வாழ்வாதரத்தை மேன்மைப்படுத்த, அதிநவீன விசைத்தறிகளை விட்டுதோறும் அமைத்திடவும், அதற்குண்டான நவீன இயந்திரங்களை 50% மானியத்தில் வழங்கிடவும், பருத்தி, ஸ்பின்னிங் நூற்பாலைகளுக்கு அருகாமையிலேயே நெசவாளர்களுக்கு கிரஸ்டெர்களை அமைத்திடவும், நெசவாளர்கள் நெய்யும் துணிகளை அரசே நேரடிக் கொள்முதல் செய்திடவும் வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
6. தேர்தலின்போது சொத்து வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு வரியை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி, பால் பொருட்கள் விலை, மின்கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்தி மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி, திமுக அரசு தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. மேலும் மேற்கண்ட வரி உயர்வையும், பால் பொருட்களின் விலை உயர்வையும், சிறு, குறு தொழில்முனைவோர், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளை மிகவும் பாதிக்கும் மின்கட்டண உயர்வையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, மாதம் ஒருமுறை மின் அளவீட்டு முறையை அமல்படுத்திடவும், தடையில்லா, தரமான மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
7. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலில் கலக்கும் நதிகளைக் கிழக்கு நோக்கி திருப்பி, கனவுத் திட்டங்களான செண்பகவல்லி அணை மற்றும் அழகர் அணைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
8.மத்திய அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைக் களைந்திட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
9. மத்திய அரசால் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிறுவி, செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
10. மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY), இந்திய மேலாண்மை நிறுவனம் (NATIONAL INSTITUTE OF MANAGEMENT), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY) ஆகிய கல்வி நிறுவனங்களை தென்தமிழகத்தில் நிறுவிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
11. சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலையே நம்பி இருக்கின்றனர். இத்தொழில்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக நீக்கிடவும், பட்டாசு/தீப்பெட்டித் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், மாற்றுத் தொழில்களை ஏற்படுத்தித் தந்திடவும், மத்திய, மாநில அரசுகளைப் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் தொழிலாளர்கள் பெயரில் காப்பீடு செய்திடவும், விபத்துகளில் பலியாவோருக்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்கிடவும் வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
12. பெண்களின் மேம்பாடு இல்லாமல் எந்த ஒரு பகுதியும் உண்மையான முன்னேற்றத்தை காண்பது முடியாது. எனவே பெண்களின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்புகளையும் சுயதொழில்களையும் உருவாக்கிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
13. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையும் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு கொடுக்க, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், சுயதொழில் பயிற்சியும் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. மேலும் அரசு வேலைகளை மட்டுமே நம்பியிராமல் ஆண், பெண் இருபாலரும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பறந்து சென்று தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, வேலைக்கு செல்கிறோம் என்ற நிலையை மாற்றி, வேலை கொடுக்கிறோம் என்ற நிலைக்குத் தங்களை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.
14. மண்பாண்டம் செய்வோர், கூடை முடைவோர், நகைத் தொழிலில் ஈடுபடுவோர், விசைத்தறி தொழிலில் ஈடுபடுவோர், ஏழை, எளிய விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் தொழில் புரியும் அனைவருக்கும் பென்ஷன் வழங்கிடவும், மண்பாண்டம் செய்வோருக்கு நவீன உலைகள் அமைத்து கொடுப்பதற்கும் சலவைத் தொழிலாளர்களுக்கு நவீன முறையில் துணிகள் உலர்த்தும் துறைகள் அமைத்துக் கொடுப்பதற்கும், சவரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், மரவேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர், கூடை முடைவோர் என அனைத்து தரப்பினருக்கும் சமூகப் பாதுகாப்புக்கும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
15. பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளில் விளையும் அனைத்துவித பூக்கள், எலுமிச்சை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிர்பதனக் கிடங்குகளையும், அவற்றிற்கு நல்ல விலை கிடைக்க கூடிய வகையில் அரசு கொள்முதல் நிலையங்களையும் அமைத்திட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
16. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் புற்றீசல் போல் பரவியிருக்கக்கூடிய ‘Cash for Vote’ என்ற நிலையை மாற்றி, “No Cash for Vote” என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கத்தை நடத்திட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்கிறது.
17. தமிழ்நாடு அரசில் நேரடியாக தேர்வு செய்யும் பணியாளர்களான கிராம நிர்வாக உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், சத்துணவு உதவியாளர், நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் உதவியாளர், அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோவில் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்ட பல பணி நியமனங்களுக்கும், பணி மாறுதல்களுக்கும் பணத்தை மட்டுமே பிரதானமாகப் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்வதை முற்றாகத் தவிர்த்து, முழு வெளிப்படைத் தன்மையோடு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
18. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு, கச்சத்தீவை மீட்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
19. கனிமவளங்களைப் பாதுகாப்போம் என்று வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் கனிமவளங்களையெல்லாம் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சிக்கு வந்தவர்கள் போல, ஆளுங்கட்சியினரே அதிகாரிகளின் துணையோடு மலைகளை உடைத்து, ஆறுகளில் மணலை அள்ளி, சட்டவிரோதமாக இயற்கை வளங்களை சூறையாடி, வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்று, கொள்ளையடிக்கிறார்கள். இயற்கை வளங்கள் அனைத்தும் இந்திய – தமிழ் மக்களின் சொத்துகளாகும். எனவே மணல், சரளை மண், கல், தாதுமண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளிட்ட கனிமவளங்களை கொள்ளையடிக்கும் சமூகவிரோதிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தின் கனிமவளங்களைப் பாதுகாத்திடும் நோக்கில் புதிய தமிழகம் தலைமையில் போராட்டங்களை முன்னெடுக்க இம்மாநாடு முடிவு செய்கிறது.
20. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோவில்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பலராலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, கண்டறிந்து, அந்நிலங்களையெல்லாம் மீட்குமாறு மாநில அரசை புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
21. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை அதிகப்படுத்தியும், பெண்களுக்கென்று தனி பார்களைத் திறந்தும், 24 மணி நேரமும் திமுகவினர் மூலம் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து சமூக சீரழிவை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்திட புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் மது, புகை, கஞ்சா, அபின் மற்றும் போதை மாத்திரைகள் போன்ற அனைத்து போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் பூரண மது விலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுத்திட புதிய தமிழகம் கட்சி முடிவெடுக்கிறது.
22. மாஞ்சோலை, வால்பாறை, ஹைவேவிஸ் உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் பல்லாண்டுகாலமாக பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கே தேயிலைத் தோட்ட நிலங்களைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
23. மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்டவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும் தமிழகத்தில் இது குறித்த ஆட்சேபனைகள் எழுந்து வருவது அரசியல் ரீதியான காரணங்களாகும். 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெறும் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திலும் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனவும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக எழும் சிக்கல்களைத் தீர்க்க, அனைத்து பட்டியல்களையும் நீக்கிவிட்டு, ஒரே அட்டவணைப்படுத்தி 100% இட ஒதுக்கீட்டை அந்தந்த சமுதாயத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை முடிவாகும்.
24. பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு என்பது அரசியல் கோரிக்கை அல்ல!! மாறாக இம்மண்ணின் மூத்த வேளாண்குடி மக்களின் ”உரிமைக் குரல்” ஆகும். புதிய தமிழகம் கட்சியின் பலகட்டப் போராட்டங்களின் விளைவாக, தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதை முழுமையான வெற்றியாகக் கருத முடியாது. பட்டியல் வெளியேற்றத்துடனான தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றமே நம்முடைய முழுமையான வெற்றியாகும். இவ்விரண்டு கோரிக்கைகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை. தொல்காப்பியத்திலே மருத நில மக்களாக பெருமைப்படுத்தப்பட்ட வேளாண்மையை உயிர்த்தொழிலாக செய்துவரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர், தலித், தாழ்த்தப்பட்டவன், அரிசன், தீண்டத்தகாதவன் என அடையாளப்படுத்துவதால் எம்மின மக்கள் உளவியல் ரீதியாக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இது இம் மக்களின் வரலாற்றுக்கு எதிராக இவர்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக இச்சமூகம் கருதுகிறது. எனவே தான் 1924 ஆம் ஆண்டு BC பட்டியலில் இருந்த தேவேந்திர திருக்குலப் பள்ளர்களை SC பட்டியலில் சேர்க்க அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தபோது தேவேந்திர குல வேளாள சமூகத்தை சார்ந்த சீனிவாசகம் பிள்ளை அப்போதைய அரசுக்கு தேவேந்திர குல வேளாள சமூகத்தை பட்டியலில் சேர்ப்பது, இச்சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாகும் என எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதினார். பண்டைய காலம் முதல் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் கொண்ட, உழவுத்தொழிலை குலத்தொழிலாக செய்துவரும் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினத்திலிருந்து விடுவித்து, தமிழ்நாட்டில் தனிப் பட்டியிலிலும் மத்திய அரசாங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் சேர்த்து மக்கள்தொகைக்கேற்ப 10% இடஒதுக்கீடு வழங்கிட மத்திய மாநில அரசுகளை இந்த மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
25. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய சித்தாந்தங்களுக்கு மாற்றாக வந்த, திராவிட சித்தாந்தம் காலாவதியாகி போய்விட்டது. அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் திராவிட சித்தாந்தம் வெறும் வெற்று கோஷம் ஆகிவிட்டது. ’REMEDY IS WORSE THAN THE DISEASE’ என்பதற்கு இணங்க தமிழ்நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் அவையே காரணமுமாகிவிட்டன. தமிழக மக்களை மொழியாலும், இனத்தாலும் ஒன்றுபடுத்துவதற்கு மாறாக, என்றோ, எவரெவராலோ, கொண்டுவரப்பட்ட ’இட ஒதுக்கீடு’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு, தமிழ் சமுதாயத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை நிரந்தரமாக்க நயவஞ்சக செயலிலும் ஈடுபடுகிறார்கள். ஒரு பக்கம் தமிழர்களை மொழியாலோ, மதத்தாலோ ஒன்றுபடவிடாமல் தடுத்திடும் அதே வேளையில், ’திராவிடம்’ என்ற முலாம் பூசி ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினத்தின் அடையாளத்தை அழிக்க, ஒரு குடும்பம் முயற்சி செய்கிறது. வாழ்க்கையில் உச்சத்திலிருந்த தமிழ் சமுதாயம் பொங்கலுக்கும், தீபாவளிக்கும், ஒரு துண்டு கரும்புக்கும், ஒரு கண்டு வேட்டிக்கும், இரண்டு முழம் சேலைக்கும், ஒரு படி உப்புக்கும் கையேந்தும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 100 நாள் வேலை கிடைத்தால் மட்டுமே வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலையிலேயே பெரும்பான்மையான தமிழ் மக்கள் உள்ளனர். தேர்தல் நேரங்களில் தாங்கள் கொள்ளை அடித்து வைத்திருந்த கோடான கோடி பணத்தை, ரூபாய் 200, 500 என்று வழங்கி பெரிய கனவான்களாக காட்டிக் கொள்வது மட்டுமின்றி, தங்களின் ஊழலுக்கு இரையாகும் குடும்ப ஊடகங்களின் துணையோடும்; மதுவாலும்; பொய்யான வாக்குறுதிகளாலும் தமிழக மக்களை மதிமயக்கி, வாக்குகளை அள்ளி பெற்று, ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த நூற்பாலைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனால், நாள்தோறும் சாராய ஆலை மட்டும் செழித்து வளர்கிறது. மதுவை ஒழிக்க சசிபெருமாள் போன்றவர்கள் செய்த தியாகங்களை எல்லாம் ஓட்டாக்கி, ஆட்சிக்கு வந்தபின், மதுவிலக்கைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டார்கள். இப்பொழுது பால் வண்டியைக் காட்டிலும், 108 ஆம்புலன்ஸ் வண்டியைக் காட்டிலும், தீயணைப்பு வண்டியைக் காட்டிலும் டாஸ்மாக் வண்டிகளுக்கு முன்னுரிமை எனும் அளவிற்கு திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் ஆட்சியில் மது அரக்கன் கோலோச்சுகிறான். ஆற்று மணல், சரளை மண், கல் மற்றும் கனிம வள கொள்ளைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராடிய போராட்டங்களை எல்லாம் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கனிமவள கொள்ளையைத் தங்களது குடும்ப சொத்தாக்கிவிட்டார்கள். ரியல் எஸ்டேட்களிலும் ’ஜி-ஸ்கொயர் நிறுவனம்’ தவிர வேறு எவரும் கால்பதிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். அதேபோன்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கிடுக்குபிடியில் திரைத்துறையும் சிக்கி இருக்கிறது. இலட்சோபலட்சம் பேர் உயிர்த்தியாகம் செய்து, அந்தமான் செல்லுலர் சிறையில் செக்கிழுத்து, அல்லல்பட்டு போராடிப் பெற்ற சுதந்திரமும், ஜனநாயகமும் ஒரு குடும்ப ஆட்சிக்குள் சுருங்கிப் போய்விட்டது. இனி ’திராவிட ஆட்சி’ என்று சொன்னால் ஒரு குடும்பம் மட்டுமே, ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என்ற ’திராவிட மனு’ உருவாக்கப்படுகிறது. திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் ஆட்சி என்பது, என்றோ ஒழித்துக் கட்டப்பட்ட மன்னராட்சிகளின் அடையாளம். ரஷ்யாவில் சோசியலிசப் புரட்சிக்கு முன்பு, ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்ட ஜா மன்னரின் எச்சமாகவே திராவிட ஆட்சியைக் கருத வேண்டும். திராவிட சித்தாந்தமே தமிழ் மக்களின் எதிரி; திராவிடத்தால் தான் வீழ்ந்தோம்; திராவிடத்தை வீழ்த்தி தமிழக மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, ஜனநாயகத்தின் மாண்புகளை – பார் போற்றும் தமிழர் அடையாளத்தை மீட்டெடுக்க, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட, உண்மையான சமூக நிதி, சமநீதி, சமயநீதியை அமலாக்க செல்லரித்துப்போன திராவிட சித்தாந்தத்தின் பொய்களைத் தோலுரித்து, தமிழக மக்களுக்கு வழி காட்டவும், அவர்களை வழிநடத்தவும், அடிப்படை மாற்றத்தை உருவாக்கவும், அனுபவத்தாலும், அறிவியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் உறுதியான கொள்கை – இலட்சியம் கொண்ட புதிய தமிழகம் கட்சியால் மட்டுமே முடியும்.
நன்றியுரை:
புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால வரலாற்றை பறை சாற்றும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கும்; எழுச்சியுரை ஆற்றிய புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களுக்கும்; ஆசியுரை வழங்கிய பெரியோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் ஜீயர் திரு.சடகோப ராமானுஜர் அவர்களுக்கும், அகில இந்திய விஷ்வ இந்து பரிஷத் தலைவர் திரு.S வேதாந்தம் ஜி அவர்களுக்கும், தமிழ்நாடு – பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் நாக சக்தியம்மன் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் திரு. ஜெகத்குரு குரு பாபுஜி சுவாமி அவர்களுக்கும்; வாழ்த்துரை வழங்கிய முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் திரு ஆர்.விஸ்வநாதன் அவர்களும், முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு. கடம்பூர் செ.ராஜூ அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு. கே.டி.ஆர் ராஜேந்திர பாலாஜி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழ கருப்பையா அவர்களுக்கும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு.தி. தேவநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு.உ.தனியரசு அவர்களுக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு. N.R.தனபாலன் அவர்களுக்கும், பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு.ரவி பச்சமுத்து அவர்களுக்கும், இந்திய குடியரசு கட்சி(அத்வாலே) தமிழ்நாடு மாநில தலைவர் திரு M.A.சூசை அவர்களுக்கும், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திரு.கே.சி.திருமாறன் ஜி அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திருமதி மா. திலகபாமா அவர்களுக்கும், தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க தலைவர் திரு. A.கணேசன் அவர்களுக்கும், தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்க தலைவர் திரு எம். தங்கராஜ் அவர்களுக்கும், தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் எம். சிவலிங்கம் அவர்களுக்கும்; இம்மாநாட்டை சிறப்புற செய்து காட்டிய விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும்; பெருந்திரளாக கூடியிருக்கிற புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கும்; தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், மாநாட்டு கமிட்டி சார்பாகவும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடத்தால் வீழ்ந்தோம்! புதிய தமிழகத்தால் எழுவோம்!!
திராவிடத்தை வீழ்த்தி, புதிய தமிழகம் படைப்போம்!!
டாக்டர் அய்யா அவர்களின் தலைமை ஏற்போம்!
தலைவர் அவர்களின் கொள்கை வழி நடப்போம்!!