புதிய தமிழகம் கட்சியினருக்கும் – குடும்பத்தினருக்கும், தோழமை இயக்கத்தினருக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், ஊடகவியாளர்களுக்கும் இந்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும், வாழ்வில் ஒளியூட்டக் கூடியதாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
2023 –ல் வலுவான அடித்தளத்தை அமைத்தோம்.!
2024-ல் நாடாளுமன்றத்தில் வெற்றிக் கொடியை நாட்டுவோம்
2023 ஆம் ஆண்டு நிறைவுற்று, 2024 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். புதிய தமிழகம் கட்சியினருக்கும் – குடும்பத்தினருக்கும், தோழமை இயக்கத்தினருக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், ஊடகவியாளர்களுக்கும் இந்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும், வாழ்வில் ஒளியூட்டக் கூடியதாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
2023 ஆம் ஆண்டில் புதிய தமிழகம் கட்சி பல புதிய புதிய வரலாறுகளைப் படைத்ததுள்ளது. வீட்டளவிலும், உழவர்கள் என வேளாண்மையோடு தொடர்புடையவர்களும் மட்டுமே கொண்டாடி வந்த தை திருநாளை ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி 4 தினங்களில் தென் தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அதை மக்கள் பொங்கலாக நடத்திக் காட்டினோம். ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உடுமலைப்பேட்டையில் நமது பிறந்தநாள் விழா, மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று தமிழகமெங்கும் பேரணிகள்; மே 10 ஆம் தேதி டாஸ்மாக் ஊழலை அம்பலப்படுத்தியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி; அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக தமிழக மக்களோடு பின்னிப் பிணைந்த பிரச்சனைகளை களைவதற்காக களம் இறங்கிப் போராடினோம். ஜூன் 15 ஆம் தேதி தென்காசி மாவட்டம் – புளியங்குடியில் ‘பூரண மதுவிலக்கு – டாஸ்மாக் ஒழிப்பு மக்கள் இயக்கம்’ தொடக்கப் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்தினோம். ஜூன் மாத இறுதியில் தென்காசி நாடாளுமன்றத்தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் அலுவலகங்களைத் திறந்து வைத்தோம். தென்மாவட்டங்களில் ஜூலை 6 முதல் ஜூலை 12 வரை உடலுக்கும் – வீட்டுக்கும் -நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் ‘மது’வின் தீமைகள் குறித்த மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டங்களைச் சிறப்பாக நடத்தினோம். ஜூலை 23 இல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தாமிரபரணி தியாகிகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் புடை சூழ சென்று அஞ்சலி செலுத்தினோம். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்களை நடத்தினோம். ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாஞ்சோலைக்குப் பயணம் மேற்கொண்டு தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தோம். அதேபோல செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு தினத்திற்கு காவல்துறையின் பல அடுக்கு தடைகளையும் இன்னல்களையும் தாண்டி தென் தமிழகம் என்றாலே புதிய தமிழகம் என்பதை நிலைநாட்டினோம். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான 02.10.2023 அன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் நமது வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராம பகுதிக்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூடிடத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அக்டோபர் 16 ஆம் தேதி அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்; அக்டோபர் 17 முதல் 20 வரை தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்கள்; அதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மற்ற மாவட்டங்களிலும் பயிற்சி முகாம்கள் என தென்காசி உட்பட்ட தென் தமிழகத்தில் முகாமிட்டு வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியைப் பெருமளவு நிறைவு செய்து இருக்கிறோம். கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தான் புதிய தமிழகம் கட்சியை நம்பி இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடியதாகும் என்ற அடிப்படையில் அதை ஒரு தீவிர இயக்கமாகவே மேற்கொண்டு பெரும்பாலான கிராமங்களில் கிளை அமைப்புகளை மேம்படுத்தி இருக்கிறோம்.
ஒரு பக்கம் சோர்வடைந்திருந்த மக்களும், புதிய தமிழகம் கட்சியினரும் புதிய உத்வேகம் அடையக் கூடிய வகையில் 2023 ஆம் ஆண்டில் எண்ணற்ற காரியங்களை நாம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நம் மீது ஊடக வெளிச்சம் படவில்லை. கள அளவில் யார் உண்மையானவர்கள், மக்களோடு மக்களாகப் பின்னிப்பிணைந்தவர்கள் என்பதைக் கண்ணுற்ற ஊடகங்கள் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நமக்கான முக்கியத்துவத்தைத் தந்திடவே செய்தார்கள். ஒரு பக்கம் கட்சி வளர்ச்சி, மக்களின் ஒருங்கிணைப்பு என முன்னேற்றம் காணினும், இன்னொரு பக்கம் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அற்பக் காரணங்களைக் கூறி ஆடு, மாடு மேய்க்கக்கூடிய இளைஞர்களும் பெரியோர்களும் பட்டப் பகலிலே கொலை செய்யும் அவலம் தொடர்ந்தது. தகுதியாலும் திறமையாலும் போட்டியிட்டு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத அற்பர் கூட்டம் பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தாக்கியும், கொலை செய்தும் தன்னந்தனியாகச் செல்வோரை அரிவாள் கலாச்சாரத்திற்கு பலியாக்கியும் அற்ப சந்தோஷம் கொண்டார்கள்.
புதுக்கோட்டை வேங்கை வயலில் ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது; 2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதத்திற்கு உள்ளாக 100க்கும் மேற்பட்ட வன் சம்பவங்களும், அடக்குமுறைகளும், கொலைகளும், இந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதியான நேற்று கூட தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த இளைஞரைக் கொலைகார கும்பல் பலி வாங்கியுள்ளது. இத்தனைச் சம்பவங்கள் நடந்தும் கூட, அரியணை அரசியல்வாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை. அடங்கி ஒடுங்கி கிடந்த கூலிப்படையினர் மீண்டும் மேலோங்கி தென் தமிழகத்தின் அமைதி முற்றாகச் சீர்குலைக்கும் சூழல் உருவாக்கப்பட்டது. எண்ணிக்கைக்காகவும், ’தேவேந்திர குல வேளாளர்’ என்று அடையாளத்தை தாங்கிக் கொள்ள முடியாத பிற்போக்குவாதிகளும் திட்டமிட்டு நடத்திய வன்முறைகளைக் கண்டிக்கக்கூடிய வகையில் கொட்டும் மழையிலும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நெல்லை சந்திப்பின் முன்பாக பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் எண்ணி ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் திட்டமிட்டபடி டிசம்பர் 15 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 27 ஆம் ஆண்டு துவக்க முப்பெரும் விழா மாநாட்டை இராமநாதபுரம் மாவட்டத்தில் ’மதுவிலக்கே முதல் இலக்கு’ என்ற முழக்கத்தோடு மிக எழுச்சியாக நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என்ற அறிவிப்பு இருந்தும் கூட இந்த மண்ணின் புத்திரர்களுக்கு எவ்விதத் தீங்கும் வந்து விடக்கூடாது என இயற்கை அன்னை முழுமையாக ஒத்துழைத்து 14ஆம் தேதியும், 16 ஆம் தேதியும் மழை; ஆனால், 15 ஆம் தேதி மட்டும் மழை இல்லாமல் அந்த மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. மாநாடு முடிந்த கையோடு அடுத்த நாளே தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கொலையுண்ட ராஜேஷ் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினோம்; 17 ஆம் தேதி மழையில் சிக்கியும், மீண்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏறக்குறைய ஒரு வாரக் காலத்திற்கு மேலாக தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்தது மட்டுமின்றி, பெரும் பாதிப்புக்கு ஆளான பகுதிகளை எல்லாம் பார்வையிட்டு அதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். மழையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நம்முடைய புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடைய பங்களிப்போடு துவக்கத்தில் ஒரு வாரக் காலம் உணவளித்தோம்; அதற்கு பிறகு அவர்களுக்கு தேவையான பெட் சீட்டுகள், அரிசி, பருப்புகள், காய்கறிகள் உட்பட அனைத்து உதவிப்பொருட்களையும் வழங்கினோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ரூ 2 லட்சம் மதிப்பிலான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினோம். அதற்கு முன் சில நாட்களுக்கு முன்பு சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் களத்தில் இறங்கி பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இதே போன்று பணியாற்றினோம்.
இந்த ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்திருக்கிறோமா? என்று நமக்கே மலைப்பாக இருக்கிறது. புதிய தமிழகம் கட்சி அனைத்து நிர்வாகிகளும் அனைத்து மட்டங்களிலும் தங்களது சக்தியை 50 சதவீதத்தை கூட அல்ல, 25 சதவீதத்தைக் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் செலவழித்தாலே இன்னும் மகத்தான காரியங்களை நம்மால் நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதே அதன் வெளிப்பாடு ஆகும். பெரிய பொருளாதாரப் பின்னணிகள் எதுவும் இன்றி, 2023 ஆம் ஆண்டில் புதிய தமிழகம் கட்சி பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைச் செய்திருக்கிறது. அதற்கு ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி நன்றிக்கடன் பட்டுள்ளது. தேர்தல் வெற்றிகள் மூலமாக மட்டுமே தான் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும் என்பதைப் பொய்யாக்கி நெஞ்சிலே உறுதியும், கொள்கையிலே தெளிவும், அடைய வேண்டிய இலக்கும் நேர்கோட்டில் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை 2023 இல் நிரூபித்து காட்டி இருக்கிறோம். பித்தலாட்ட அரசியல் செய்வோர், சமூகப் போராளிகள் என பிதட்டுவோர், நயவஞ்சகம் கொண்ட அனைவரின் உண்மை சுரூபங்களையும் தேவேந்திரகுல வேளாளர்கள் புரிந்து கொள்ள இந்த ஆண்டு உதவி புரிந்திருக்கிறது. புதிய தமிழகம் கட்சியே எங்களது நம்பிக்கை, எங்களது எதிர்காலம் என்று தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தென் தமிழக மக்களும் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த வகையில் 2023 நமக்கு வெற்றிகரமான ஆண்டே!
இப்பொழுது 2024 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் – மே மாதத்தில் நடைபெறும். சட்டமன்றத்தில் தனித்தும், கூட்டணி சேர்ந்தும் நம்முடைய பங்களிப்பைச் செய்திருக்கிறோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பலமுறை முயன்றும் வெற்றிக்கனி நமக்கு அருகாமையில் வந்து சென்று இருக்கிறது. அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும் நம்மால் பணியாற்ற முடியும் என்றாலும் கூட, அரசியல் அதிகாரம் இல்லை என்றால் மத்திய, மாநில அரசுகளுடைய திட்டங்களை மக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பது மிகக் கடினமாகிவிடும் அல்லது இயலாமலேயே போய்விடும். ஒவ்வொரு அரசியல் கட்சியின் லட்சியமும் அரசியல் அதிகாரத்தை அடைவதாக இருக்க வேண்டும். இது அரசியல் அதிகாரத்தின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர்களுக்கு மட்டுமல்ல, ’வடக்கே வாழ்கிறது, தெற்கே தேய்கிறது’ என்று முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்தவர்களுடைய ஆட்சியிலும், தென் தமிழகம் தேய்ந்து தான் வருகிறது.
தென் தமிழகம் தலைநிமிர வேண்டும் என்றால் அது புதிய தமிழகத்தின் வெற்றியால் மட்டுமே சாத்தியம். எல்லா மக்களும் ரூபாய் 500க்கும், 1000க்கும் விலை போய் ஓட்டுப் போடுவதன் விளைவுகளை அனுபவித்து விட்டார்கள். தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் திடீர் போராளிகளையும், பசப்பு வார்த்தை அரசியல்வாதிகளையும் நம்பி ஏமார்ந்து போனதை நன்கு உணர்ந்து விட்டார்கள். வலுவான, உறுதியான ஒற்றை தலைமையின் கீழ் ஒன்றுபடுவதிலும், நம்பிக்கையோடு பணியாற்றுவதிலும் தான் வெற்றியே அடங்கி இருக்கிறது. 27 ஆண்டுகள் அரசியல் கட்சியாக பயணித்து விட்டோம். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கணிசமான வெற்றியைப் பெற்றே தீர வேண்டும். யாரோடு இணைவது என்பது பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. புதிய தமிழகத்திற்கான வாக்கு வங்கியை நூற்றுக்கு நூறு நம்மால் ஒருங்கிணைக்க நம்மால் சாத்தியப்பட்டு விட்டாலே 2024-ல் நமது வெற்றி நிச்சயம் ஆகிவிடும். 2023 ஆம் ஆண்டில் பட்ட கஷ்டங்கள், பட்ட பாடுகளை எல்லாம் சமன்படுத்த வேண்டும் எனில் 2024 ஆம் ஆண்டு மட்டுமல்ல, அடுத்து வரக்கூடிய ஆண்டுகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமெனில், 2024 பாராளுமன்றத் தேர்தலிலே நாமும் வெற்றி பெற வேண்டும்; நம்மோடு இணையக்கூடியவர்களும் வெற்றி பெற வேண்டும்.
எனவே, 2024 ஆண்டை நாடாளுமன்றத்தில் நமது வெற்றிக் கொடியை நாட்டுவதற்கான ஆண்டாக நம்முடைய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நிறுத்தி, விடிந்தால் இதை எப்படிக் கொண்டாடலாம் என்று எண்ணுவதை விட வானத்தைக் கீரி வைகறை உதிப்பதைப் போல 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் தமிழகத்தின் வெற்றிக்கனியைப் பறிக்க இன்றே சபதம் ஏற்போம்.! ஆயத்தமாவோம்.! வெற்றி நமதே.!!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.01.2024