அப்பழுக்கற்ற வர்க்க போராளி – நேர்மையின் அடையாளம்.! மாஞ்சோலை திரு.தேவராஜ் அவர்களுக்கு புகழஞ்சலி!

நினைவுகள்
s2 455 Views
  • Devaraj

    மாஞ்சோலை திரு.தேவராஜ் அவர்களுக்கு புகழஞ்சலி

  • Devaraj
Published: 07 Jun 2023

Loading

திரு. மாஞ்சோலை தேவராஜ் அவர்கள் மரணம் – 1998 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற நாள் முதல் அதேயாண்டு ஆகஸ்ட் மாதம் மாஞ்சோலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது தொடங்கி அவருடைய கடைசி நிமிடம் வரையிலும் இம்மியளவும் பிசகாமல் புதிய தமிழகம் கட்சியோடும், தோட்டத் தொழிலாளர்களுடைய நலனுக்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றியவர் மாஞ்சோலை தேவராஜ் என்ற தேவராஜ் அவர்கள்.!

மாஞ்சோலையில் ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ச்சியாக நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலும், மாஞ்சோலை – நெல்லை வரையிலும் நள்ளிரவில் தொடங்கி நடைபெற்ற 110 கி.மீ நடைப் பயணத்திலும், 1999-ல் வால்பாறை – கோயம்புத்தூர் வரையிலும் நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கான 120 கி.மீ நடைப் பயணத்திலும் கலந்து கொண்ட மகத்தான வீரர். 1999 ஜூலை 23-ஆம் தேதி தாமிரபரணி பேரணியில் பங்கு பெற்று காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு ஆளானவர். அனைத்து போராட்டங்களிலும் எனது அருகாமையிலிருந்தவர்.

அவரைப் போன்ற வர்க்க உணர்வு கொண்ட ஒரு தொழிலாளியையோ, கட்சியின் மீதும், தலைமையின் மீதும் பற்று கொண்ட ஒரு விசுவாசம் மிக்க தொண்டனையோ காண்பது அரிதினும் அரிதான நிகழ்வாகும்.!

1998 ஆண்டு தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய விடுதலைக்காகவும், அவர்களுடைய சம்பள உயர்வுகளுக்காகவும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், டெல்லி வரையிலும் சென்று போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். புதிய தமிழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் அவர் பங்கு பெற்றிருக்கிறார். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத உயரிய குணம் படைத்தவர். புதிய தமிழகம் கட்சியில் அவருக்கு தொழிற்சங்க பிரிவில் மிகப்பெரிய பதவி அளிக்கப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி சந்தித்த எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளிலும் இடைவிடாது பயணித்து வந்த மாஞ்சோலை தேவராஜ் அவர்கள் இன்று மரணித்து விட்டார் என்ற செய்தியை நம்மால் நம்பவும் முடியவில்லை; ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அவருடைய மரணம் சொல்லொணாத் துயரத்தையும், ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும், தமிழகமெங்கும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருடைய இழப்பு எதை வைத்தும் ஈடு கட்ட முடியாதது; எனினும் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.

அந்த உண்மையான, நேர்மையான, நியாயமான தொழிலாளர் வர்க்க போராளிக்கு புதிய தமிழகம் கட்சியும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் தமிழகமெங்கும் அனைத்து பகுதிகளிலும் நாளை (08.06.2023) புதிய தமிழகம் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், அவரது சொந்த ஊரான மானூரில் நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் புதிய தமிழகம் கட்சியினர் திரளாகக் கலந்து கொள்ளவும் வேண்டுகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, ExMLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
07.06.2023