ரத்தன் டாடா அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்.!


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அவர்களின் மரணம் வருத்தத்தை அளிக்கக்கூடியது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தியாவில் தொழிலைத் தொடங்கி, சுதந்திரம் பெற்ற பிறகு கட்டுமான பணிகளுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற முறுக்கு கம்பிகளை தயாரிக்கும் ஆலைகளை உருவாக்கி, இந்தியத் தேசத்தின் தேவையை தன்னிறைவு செய்த டாடா குழுமத்தின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர். ஜே.ஆர்.டி டாடா அவர்களுக்குப் பிறகு, பொறுப்பேற்றுக் கொண்ட ரத்தன் டாடா உலகெங்கும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள அக்கம்பெனியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி, 2017 ஆம் ஆண்டு அதிலிருந்து ஓய்வு பெற்றார்.
டாடா குழுமங்கள் ஸ்டீல் உட்பட எண்ணற்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் நடத்திய அனைத்து தொழில்களிலும் லாபம் மற்றும் முதலீட்டுவது ஒரு அம்சமாக இருந்தாலும், அவர்கள் நடத்திய எல்லா நிறுவனங்களிலும் குறைந்தபட்ச நேர்மையும், நாணயமும் இருந்தை கண் கூட பார்க்க முடிந்தது.
உதாரணத்திற்கு, தேயிலைத் தோட்டங்கள் என்றாலே தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி கசக்கிப் பிழியும் இடமாகவே இருந்திருக்கின்றன. ஆனால், டாடா நிறுவனங்களில் பெரும்பாலும் மனித உரிமை மீறல்களைக் காண முடியாது. ரத்தன் டாடா அவர்கள் பல லட்சம் கோடி நிறுவனத்திற்கு அதிபதியாக இருந்த நேரத்திலும் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்ந்திருக்கிறார்.
அவர் இந்த தேசத்திற்கு தன்னுடைய நிறுவனங்கள் மூலமாக பெருமை சேர்த்திருக்கிறார். அவருடைய மரணம் இந்தியத் தேசத்திற்கும், இந்தியத் தொழிற்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். அவருடைய மறைவிற்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
• டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.10.2024