திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்!

நினைவுகள்
s2 47 Views
  • Dr Manmohan Singh
  • Dr Manmohan Singh
Published: 26 Dec 2024

Loading

பாரதத் தேசத்தின் பிரதமராக இரண்டு முறை பணியாற்றிய பெருமைக்குரிய திரு.மன்மோகன் சிங் அவர்கள் தனது 92 வது வயதில் மரணமெய்தி உள்ளார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் உலக வங்கிகளும், இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும், இந்தியாவின் நிதியமைச்சராகவும் பணியாற்றியவர். அவருடைய நேர்மைக்கும், அறிவுத்திறனுக்காகவும் மட்டுமே அவருக்கு அனைத்துப் பதவிகளும் கிடைத்தன.

இந்திய அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை நிலவி, 1996, 1998, 1999 என அடிக்கடி நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரக்கூடிய சூழல்கள் உருவாகின. அப்பொழுது நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அந்நேரத்தில் அவர் சென்னை வந்திருந்த போது, அவரை சந்தித்து சில மணி நேரம் உரையாடியது இன்னும் நினைவில் நிற்கிறது. ஈழப் பிரச்சனைக்காக தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற ஒரு அனைத்துக் கட்சி குழுவோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களது இல்லத்தில், அவரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு பெற்ற பொழுது, நம்மைத் தனியாக அடையாளம் கண்டு, நமது பெயரைக் கூறி அழைத்து சில நிமிடங்கள் தனித்துப் பேசிய நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நம் மீது தனிப்பட்ட அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். அவருடைய மரணம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இன்றி, இந்தியத் தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
26.12.2024