புலவர் புலமைப்பித்தன் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல் செய்தி!

தலைசிறந்த தமிழ் ஆர்வலரும், கவிஞருமான புலமைப்பித்தன் அவர்களுடைய மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் ஈழத்தமிழ் மக்கள் மீதான, இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கூடிய வகையிலும், முள்ளிவாய்க்கால் சம்பவம் மற்றும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களுடைய துயரங்களையெல்லாம் உலகறியச் செய்யவும், உலகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொணரவும், நமது முயற்சியில் முன்னெடுக்கப்பட்டு, மாநில அரசின் பல்வேறு அடக்குமுறை, ஒடுக்குமுறைகளைத் தாண்டி, 2010-ஆம் ஆண்டு, பிப்ரவரி 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற ’உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்’ பங்குபெற்று, அந்த மாநாடு வெற்றி பெறுவதற்கு உற்றத்துணையாக விளங்கியவர்.
ஈழத்தமிழ் மக்களுடையப் பிரச்சினைகளை மையமாக வைத்து சிலர் அரசியல் விளம்பரமும், வியாபாரமும் செய்கின்றபொழுது, அமைதியான முறையில், உணர்வுப்பூர்வமாக ஈழ தமிழர்களுக்கு உறுதுணையாக விளங்கிய மிக உயர்ந்த மனிதர் அவர். அவருடைய இறப்பு ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.09.2021