அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர். சாந்தா மரணம்!
புதிய தமிழகம் கட்சியின் இரங்கல் செய்தி!!
பாரதரத்னா விருதுக்குத் தகுதி வாய்ந்தவர்!
405 Views
![]()
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.சாந்தா அவர்கள் மரணமெய்திவிட்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் 60 ஆண்டுகளாகத் தனது அப்பழுக்கற்ற மருத்துவ சேவையை தான் தலைமை வகித்த மருத்துவமனைக்கு அளித்து, இலட்சக்கணக்கான மக்களுக்கு தீராத வியாதி என்றழைக்கப்படும் புற்று நோய்க்கு சிகிச்சை அளித்து, ஈடு இணையற்ற மருத்துவ சேவை புரிந்துள்ளார். மருத்துவ உலகில் பலரும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தாலும், இவருடைய சேவைக்கு இவர் மட்டுமே நிகர் ஆவார்.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலும், சாதாரணக் காலக்கட்டங்களிலும் தமிழகம் தழுவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தபொழுதெல்லாம் அவர் மிகுந்த அக்கறையோடு அந்நோயாளிகளிடத்தில் இரக்கம் பாராட்டி குறைந்த செலவில் சிகிச்சைகள் பெற மிகப்பெரிய அளவிற்கு உதவிகரமாக இருந்துள்ளார்.
திருமணம் கூட செய்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அர்ப்பணித்த அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் பாரதரத்னா விருதுக்கே தகுதி வாய்ந்தவர் ஆவார். அவருடைய இழப்பு என்பது உண்மையிலேயே இலட்சோபலட்சம் ஏழை, எளிய மக்களுக்கும், தமிழகத்திற்கும், இந்திய தேசத்திற்கும், ஒட்டுமொத்த மருத்துவ உலகத்திற்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும்.
அவர் மருத்துவ உலகத்தின் ஒரு கலங்கரை விளக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்தாருக்கும், தமிழக மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
19/01/2021.







