கோவை நிர்வாகி சூலூர் பே.மயில்சாமி மரணம் – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

Mayilsamy
Published On: 22 Jan 2022

கோயம்புத்தூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி
சூலூர் பே.மயில்சாமி மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு துவங்கப்பட்ட காலத்தில் தன்னை முதன் முதலாக இணைத்துக் கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சூலூர் பே.மயில்சாமி ஆவார். 1994 முதல் 1997 வரையிலும் தொண்டரணியை உருவாக்கி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் புதிய தமிழகம் கட்சியின் கூட்டங்களையும், பேரணிகளையும், மாநாடுகளையும் ஒழுங்குபடுத்துவதற்குப் பேருதவியாக இருந்தவர்; கட்சிப் பணியாற்றிய காலகட்டங்களில், அவர் தனது சொந்த வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது தோளில் சிவப்பு பச்சை வண்ணக் கொடியின் அடையாளம் இல்லாமல் என்றுமே இருந்ததில்லை.

இன்று பிற்பகல் அவர் மாரடைப்பால் திடீர் மரணமெய்திவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சூலூர் வாழ் மக்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– டாக்டர் கிருஷ்ணசாமி. எம்.டி
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.01.2022