என் நாடு! என் ஓட்டு! விற்பனைக்கு அல்ல !

ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு இருந்த இந்தியா இருநூறு ஆண்டு காலம் அந்னியரின் ஆதிக்க பிடியிலிருந்து, தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு, விடுதலை காற்றை சுவாசிப்பதற்கு ,கோடான கோடி பேர் போராடியும், லட்சக்கணக்கானோர் தன் இன்னுயிரை தந்தும், சொல்லண்ணா துயரத்திற்கெல்லாம் ஆளாகி தாய் திருநாட்டின் விடுதலைக்காக கண் துஞ்சாது போராடியே விடுதலையை பெற்றோம். அப்படிப் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதை மறந்துவிட்டு எந்த நாட்டிற்காக எந்த மக்களுக்காக உயிர் நீத்தார்களோ அவர்களின் உயிர்த் தியாகத்தை எல்லாம் வீணடிக்கும் விதமாக இந்திய குடிமக்கள் பெரும்பாலானோர் தேர்தல் களத்தில் வாக்களிப்பதில் நேர்மையை தவறி விட்டார்கள் .
1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்கும் வாக்குரிமையை பேச்சுரிமை ,எழுத்துரிமை, கருத்துரிமை ,சுதந்திரம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பை அலங்கரிக்கின்ற அந்த உயிர் துடிப்பான வார்த்தைகளுக்கு வலு உண்டு. மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு எடுத்துக்காட்டாக அந்த உரிமைகள் மிளிர்கிறது.
இந்திய தேசத்தில் நாம் பிறந்து, வளர்ந்து, உயர்ந்து, நிற்கிறோம் என்றால் அது ஏதோ தானாக நடந்தது அல்ல பன்னெடுங்காலமாகவே இந்த நாட்டின் மீது அக்கறையும், வளர்ச்சி மீது அக்கறையும், தேசத்தின் மீது அக்கறையும், கொண்டிருந்த தேச பிதாக்களாலும், தேச அபிமானிகளாலும் உருவாக்கப்பட்ட ஒரு வலுவான தேசம்தான் இந்தியா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
‘நாடு நமக்கு என்ன செய்தது’ என்று எண்ணாமல் நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் ?என்று எண்ணத் தொடங்கினால் தான் நாம் சொல்லப் போகின்ற பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும்.
ஜனநாயகம் நமக்கு வழங்கி இருக்கின்ற வாக்குரிமை என்பது இந்திய தேசத்தின் எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்ற ராணுவ வீரர்கள் கையில் இருக்கின்ற ஆயுதம் போல அந்நிய படையெடுப்பை எதிர்த்தும், அந்நிய விரோத தீவிரவாத பயங்கரவாதிகளை எதிர்த்தும், அந்த ஆயுதத்தால் போராடி அவர்களை வீழ்த்த வேண்டும். அதுதான் அவர்களுக்கான நியதியும் அவர்களுக்கான கடமையும் ஆகும். அது போல தான் 150 கோடிக்கு மேலாக வாழ்கின்ற இந்தியர்கள் வாக்குரிமை எனும் ஆயுதத்தை வருவோர் போவரிடம் வெறும் சொற்ப பணத்தை வாங்கிக் கொண்டு விற்பது எந்த வகையில் நியாயமாகும்?
ராணுவ வீரன் அன்னிய தேசத்திடம் கைக்கூலியாக மாறி அவர்களுடைய அணு ஆயுதங்களை விற்று விட்டால் நாம் எப்படி சுதந்திரமாக வாழ முடியும் சிந்திக்க வேண்டாமா ?வாக்குரிமை எனும் ஆயுதத்தை தவறாக பயன்படுத்துகின்ற எவருமே இந்த தேசத்திற்கு துரோகம் விளைவிக்கின்றவராகத் தான் கருத முடியும்.
இந்த நாட்டை யார் ஆள வேண்டும் நல்லவரா? வல்லவரா? கெட்டவரா? தீயவரா ? என்று முடிவெடுக்கின்ற ஒரு கருவி தான் வாக்குரிமை ஆனால் நாம் நல்லவர்களை தேர்ந்து எடுக்கிறோமா ? இல்லை மாறாக ஓட்டுக்கு பணம், கோட்டர், பிரியாணி , பொய்யான, போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்கள். பரிசு பொருள்களாக ,குடம் , புடவை வேட்டி, சட்டை,வாட்ச் , குக்கர் ,கிரைண்டர் ,மிக்ஸி என்று ஏராளமான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டு வாக்களிப்பது என்ன முறையோ ?
உதாரணத்திற்கு 505 பொய்யான, போலியான வாக்குறுதிகளை அளித்து தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்து விட்டார்களா ? சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்களே சொத்துவரி உயர்த்தாமலா இருக்கிறார்கள்?
மின் கட்டணம் உயர்த்த மாட்டோம் மாதம் ஒருமுறை மின் அளவீடு முறையை அமல்படுத்துவோம் என்றார்களே செய்தார்களா? பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னார்களே செய்தார்களா ? இப்படி 505 பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நயவஞ்சகர்களுக்கு தனது வாக்குகளை பரிசு பொருளுக்காகவும்,பணத்திற்காகவும் வாக்குகளை விற்றுவிட்டு ,
குடிநீர் வசதி , சாலை வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி இப்படி அடிப்படை வசதிகளுக்காக அரசிடம் கையேந்தி போராடுகின்ற துர்பாக்கிய நிலை தேவைதானா ?
நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை. டாஸ்மாக் கடைகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. டாஸ்மாக் விற்பனை மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் அம்பலப்படுத்துவது போல இந்த ஒரு லட்சம் கோடி ஊழல் செய்துதான் அந்த பணத்தைதான் உங்கள் ஓட்டுகளுக்கு கொடுக்கிறார்கள் என்றால் அது யாருடைய பணம் தமிழ்ச் சமூகத்தில் குடிக்கு அடிமையான ஏழை, எளிய , விளிம்பு நிலை மக்களின் தினசரி வருமானத்தை சுரண்டி கொழுத்து கொண்டு ஒரு குடும்பம் மட்டும் வளமாக வாழ்வதற்கு, தமிழகத்தில் பல குடும்பங்களை அழித்து வருகிறார்கள். கோபாலபுரம் குடும்பம் ஆளுவதற்கு நாம் வாக்கு செலுத்திக் கொண்டு வருகிறோம். என்றால் நாம் அறிவாளியா? அறிவீலியா ?
ஒரு சாதாரண வியாபாரி 500 ரூபா முதலீடு செய்து அதை எப்படி ஆயிரம் ரூபாயாக விற்க முடியும் என்று தான் சிந்திப்பான் ஒரு ஓட்டுக்கு 2000, 5000 என்று கொடுப்பவன் இந்த பணத்தை எப்படி நாம் நூறு மடங்காக எடுக்க வேண்டும் என்றுதான் சிந்திப்பான். அப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் ,முதல்வர் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, இந்த மக்களின் வளர்ச்சிக்காக, இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக என்ன செய்திடப் போகிறார்கள் என்று நீங்கள் வாக்களித்தீர்கள்? ஏன் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களித்தோம் என்று சிந்திக்க வேண்டாமா ? .
சிந்திக்காத எந்த இனமும் வரலாற்றில் வரலாறு படைத்த சரித்திரம் இல்லை.தனது வாக்குரிமையை விற்கின்ற எந்த நாடும் உயர்ந்ததாக தெரிய இல்லை .
வாக்காளர்களிடம் வாக்குகளை பெறுவதற்காக வலிந்து திணித்து நவீன ஊழல் படுத்தியதில் தமிழக அரசியல்வாதிகளே முதல் குற்றவாளிகள் ஆகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற அவர்களால் ஒரு இம்மி அளவு கூட இந்த தேசத்திற்கு நாட்டு மக்களுக்கு பயன் வரப்போவது இல்லை . அப்படிப்பட்ட போலியான பொய்யான உண்மைக்கு புறம்பான அயோக்கியர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை கொடுத்த குற்றவாளிகள் வாக்காளர்கள் என்றால் நீங்கள் எங்கே போய் முட்டிக் கொள்ள போகிறீர்கள் ?
இந்த நாட்டில் தேர்தல் நிற்பதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இருந்தால் தான் தேர்தலில் நிற்கவே முடியும் என்கின்ற நிலையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். அப்படி என்றால் பணக்காரன், கோடீஸ்வரன் இவர்கள்தான் மக்கள் பிரதிநிதியாக வர முடியும். அப்படி அவர்கள் வந்தால் ஏழை, எளிய மக்களுடைய உள் உள்ளூணர்வுகளை எப்படி புரிந்து கொள்ள முடியும்? ‘ பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதற்கு ஏற்ப ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வலிகளை கோடீஸ்வரர்கள் எப்படி புரிந்துகொள்ள முடியும் ?
தேர்தல் காலங்களில் வலம் வந்து வாக்காளர்களின் காலிலும், கையிலும் விழுந்து, பிடித்து பொய்யாக போலியாக நடித்து நம்மையெல்லாம் நம்ப வைத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு ‘ஓசியில் தானே பஸ்ல போற?’ என்று இளக்காரமாக பேசுவதும், “பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள் இப்ப என்ன அவசரம் வாய மூடிக்கிட்டு போங்க” என்று அவமானம் படுத்துவதும், அவதூறு பேசுவதும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற அரசியல்வாதிகள் மத்தியில் பணத்தை வாங்கி ஓட்டு போட்ட மக்கள் கூனி குறுகி நடு ரோட்டில் நிற்கிறார்கள் என்றால் அது எதனால் யாரால் ? வாக்காளர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் திட்டங்களை தீட்டி அதை இலவசமாக அறிவித்து வாக்குகளை பெறுவதற்கும், இலவசங்களால் தங்களை பெரிய செல்வந்தர்களாகவும் காட்டிக்கொண்டு, வருடம் தோறும் உலக வங்கியிடம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதை மக்கள் தலையிலேயே கட்டி அதன் வாயிலாக சொத்து வரி, குடிநீர் வரி, இப்படி இன்ன பிற அடிப்படை வரிகளை எல்லாம் மக்கள் மீது திணித்து திராவிட ஸ்டாகிஸ்ட் குடும்பங்கள் செல்வ செழிப்பாக வாழ்வதற்கு பெற்ற கடனை நாம் கட்டி க் கொண்டிருக்கின்றோம். என்றால் நாம் அறிவாளியா? மூடர்களா? இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லிக் கொடுத்த பாடமா?
தமிழர்களாகிய நாம் , திரை மாயையிலும் , திராவிட மாயையிலும் உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாத ‘விட்டில் பூச்சிகளைப் போல’ நாம் தேர்தல் நேரங்களில் அவர்கள் விரிக்கின்ற வலையில் எளிதாக விழுந்து விடுகிறோம். பிறகு நாமே ‘கொய்யோ முறையோ ‘என்று கத்துகின்றோம். ‘வருமுன் காவாதர் வாழ்க்கை’ சிறப்பான வாழ்க்கையாக அமையாது.
ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு கூட அந்த குடும்பத் தலைவன் தீட்டுகின்ற செயல் திட்டங்கள்தான் அந்தக் குடும்பத்தை முன்னேற்றிச் செல்லும். மாறாக அந்த குடும்பத் தலைவன் பொய் சொல்லுபவனாகவும், புறணி பேசுபவனாகவும் அந்த குடும்ப உறுப்பினர்களை தனது தேவைக்காக பிறரிடம் காட்டிக் கொடுக்கின்ற ஒரு அற்பராக இருந்தால் அந்த குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும்.
இந்த நாட்டை உயர்த்துவேன் என்று இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்.மக்களை பாதுகாப்பேன் என்று சத்தியம் செய்து வாக்குகளை கேட்டு அந்த வாக்குகளுக்கு பணத்தை கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு ‘வந்து பார் வழுக்கை பாறை’ என்று மக்களை எள்ளி நகையாடுகின்ற ஒரு கூட்டம் எப்படி இந்த தேசத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் ?
தமிழ்ச் சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக திருக்குறள், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம் என்று அரிய பெரிய நூல்களை எழுதி சரித்திரம் படைத்த தமிழ் தேசத்தில் தான் வெறும் வாய் சொல்லுக்கும், வெறும் வாக்குறுதிகளுக்கும்,அப்பாவிகளாக ஓட்டுக்களை பணத்திற்காக வாரி செலுத்தி இன்று நிற்கதியாய் நிற்கிறார்கள் என்றால் எப்படி நாம் பூர்வீகமாக வாழையடி வாழையாக அறிவுச்சார் சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியும் ,?
அறிவுசார் சமூகம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? யார் இந்த நாட்டின் வளர்ச்சி பாதைக்கு வித்திட்டு செல்வார்கள்? யாரால் இந்த மக்கள் பாதுகாப்பாகவும் முன்னேற்றத்தோடும் இருப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்து நாம் வாக்கு செலுத்தி இருந்தால் மக்கள் மீதும் நாட்டின் வளர்ச்சி மீதும் நாட்டின் இறையாண்மை மீதும் அக்கறை கொண்டுள்ள தலைவர்கள் மட்டுமே செங்கோட்டையில், ஜார்ஜ் கோட்டையில் நிரந்தரமாக வலம் வந்திருக்க முடியும்.
இன்று கொலைகாரன், கொள்ளைக்காரன், திருடன், போர்ஜரி என்று இந்த நாட்டிற்கு ஒவ்வாமல் சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் எல்லாம் சட்ட சபையிலும், நாடாளும் மன்றத்திலும் குழுமி இருக்கிறார்கள் என்றால் எங்கே தவறு இருக்கிறது,?
மக்களிடம் தவறு இருக்கிறது. வாக்காளர்களிடம் தவறு இருக்கிறது.வாக்காளர்கள் ஊழல் மையமாகி விட்டார்கள். உங்கள் ஊழலால் ஊழல் பணத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது எப்படி சரி ஆகும் ?
சுயமாக சிந்திக்காத எந்த இனமும் சுயமரியாதையை பெற முடியாது. தமிழ் இனம் சுயமரியாதை மிக்க ஒரு பாரம்பரியமான பேரினம். அந்தப் பேரினம் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தனது சுயமரியாதை இழந்து,தன்னுடைய ஆடைகளை இழந்து, தன்னுடைய தன்மானத்தை இழந்து, நடுரோட்டில் அம்மணமாக நிற்கிறது என்றால் இதுவா உலகிற்கு முன்மாதிரியாக இருப்பதாக எடுத்துச் சொல்கின்ற பாடம் இல்லை.
தன்மானம் என்று சொல்லிக் கொள்வதால் தன்மானம் வந்து விடாது. உன் வாழ்வில் தன்மானம் இருக்க வேண்டும். நீ செய்யும் தொழிலில் தன்மானம் இருக்க வேண்டும். நீ பிறருக்கு தன்மானத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.அவர் உங்களுக்கு தன்மானத்தை பெற்று தருபவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு கடையிலிருந்து ஒரு பொருளை வாங்கி விட்டால் அந்தப் பொருள் நமக்கு சொந்தமாகிறது. கடைக்காரருக்கு அந்த பொருள் சொந்தம் இல்லாமல் போய்விடும் . அதுபோலதான் உன் வாக்கை விலைக்கு வாங்கி விட்டால் அது வாங்கினவருக்கு சொந்தம் ஆகிவிடுகிறது. உனக்கு சொந்தம் இல்லாமல் போய் விடுகிறது. அப்போது உன்னுடைய சொந்த நாடு பறிபோய்விடும் .சொந்த நாடு அந்நிய தேசத்திற்கு அடிமைப்பட்டு போய்விடும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தான் காலம் காலமாக எங்கள் குடும்பம் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் என்று மூடத்தனமாக முட்டாள்தனமாக வாக்களிப்பதும் எங்கள் தெருவில் ஆயிரம் ஓட்டி இருக்கிறது. இரண்டு லட்சம் கொடுங்கள். மூன்று லட்சம் கொடுங்கள் என்று பேரம் பேசுவதும், எங்கள் தெருக்களில் கோயில் கட்டுகிறோம் பணம் கொடுங்கள் உங்களுக்கு ஓட்டுக்களை அப்படியே தாரை வார்த்து விடுகிறோம் என்று சாமியின் பெயரால், பூமியின் பெயரால் எங்கள் தெருக்களுக்கு ஏதாவது கொடுங்கள் நாங்கள் எல்லாம் ஓட்டை வாங்கி கொடுக்கிறோம் என்று ஏஜெண்டர்களும் வாக்குகளை கபளிகரம் செய்கின்ற அந்த மேதாவி தனமும் ,அந்த சிறுமைத்தனமும் இத்தனை அயோக்கியத்தனங்களால் உங்கள் வாக்குகளை விற்றுவிட்டு பிறகு அந்த வாக்குக்கு நான் சொந்தக்காரன். நான் ஓட்டு போட்டு தான் நீ ஜெயித்தாய் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு அரசியல்வாதியிடம் கேள்வி கேட்பாய் அல்லது கேட்கத்தான் உனக்கு உரிமை இருக்கா?
பெட்டிக்கடையில் 50 பைசாவிற்கு ஒரு மிட்டாயை வாங்கி விட்டால் கூட அந்த மிட்டாயை அவன் சுவைக்கலாம். அல்லது பிறருக்கு கொடுக்கலாம்.அல்லது அதை தூக்கி எறியலாம். அல்லது பத்திரமாக வைத்திருக்கலாம். அது அவன் உரிமை அது போல தான் 1000,2000,கொடுத்து உன் வாக்குகளை பெற்றவன், சட்டமன்ற உறுப்பினராகவும் ,நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ,அவன் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதன் பிறகு அது அவனோட உரிமையாகும்.அவன் குடும்பம் வளமாகும். அவன் சுற்றத்தார்கள் வளமாவார்கள். அவன் விரும்பிய சின்ன வீடு, பெரிய வீடு வளமாகும். ஆனால் ஓட்டை விற்ற உன் வீடு அலங்கோலமாகும். இதை என்றாவது சிந்தித்தது உண்டா?
தமிழகத்தில் நீதிமன்றங்கள் தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வழக்குகளை முன்வந்து எடுக்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகத்தை பணநாயகம் சீரழிப்பதால் அந்த அநீதிக்கு எதிராக எந்த நீதிமன்றமும் வழக்குகளை தொடுக்க முன்வராத போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் ஒரு தொலைநோக்கு பார்வையோடு அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் சுமார் 200 கோடிக்கு மேலாக செலவு செய்து வாக்காளர்கள் இடையே வாக்குகளை விற்பனைக்கு வாங்கி கபலிகரம் செய்து வெற்றியை ஈட்ட இருக்கின்றார்கள். ஆகவே தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சென்றபோது நீதிபதிகள் நிதிபதியாக மாறி அந்த வழக்கை தள்ளுபடி செய்த வரலாற்றுப் பிழையும் நடந்தேறியது.
எங்கே நீதி கிடைக்கும் என்று சென்றால் அங்கே நீதிபதிகள் நிதிபதியாக மாறுகின்ற ஒரு தேசத்தில் எப்படி நீதி வாழும் ? நீதியும் வாழாது. நியதியும் வாழாது.
மக்களும் வாழ மாட்டார்கள்.
இந்த தேசம் ஒரு மிகப்பெரிய அழிவு பாதைக்கு போகிறது என்றால் அந்த அழிவு பாதைக்கு நாம் இடுகின்ற ஒவ்வொரு வாக்கும்தான் காரணமாகும்.நாம் கையில் ‘மை’ வைப்பது வாக்கு செலுத்தி விட்டோம் என்ற அடையாளமே தவிர அந்த வாக்கு அந்த நாட்டை அழித்துவிட்ட அடையாளமாக மாறி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையை வாக்காளர்கள் இனிவரும் காலங்களில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்கின்ற கோஷமும் ,முழக்கமும் அரசியல் லஞ்ச பெருச்சாளிகளின் முகத்திரையை கிழித்து அவர்கள் முகத்தில் காரி உமிழ வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு தேர்தல் புரட்சி இந்த தேசத்தில் நடைபெற வேண்டும். அப்போதுதான்
‘என் தேசம்! என் வாக்கும்! என் வீடும்! வளம்பெறும் !’
என்று ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்திக்க வேண்டும். செயல்பட வேண்டும். புரட்சி எழட்டும். தேர்தல் பாதை செழிக்க துவங்கட்டும். இந்த நாடு உயரட்டும்.வளமாகட்டும்.வாருங்கள்.
‘பணம் பெறாமல் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை மீட்டுருவாக்குவோம் ! இந்திய தேசத்தை பாதுகாப்போம்! வளப்படுத்துவோம்! பலப்படுத்துவோம் !இதுதான் நாம் இந்த பிறவியில் இந்த தேசத்திற்கு செய்ய வேண்டிய கைமாறு என்பதை ஒவ்வொரு வாக்காளனும் சிந்தித்து செயல்பட தொடங்கினால் இந்த தேசம் உலகம் எங்கும் முன்மாதிரி தேசமாக வல்லரசு நாடாக உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி! வணக்கம்!
வாழையூர் குணா






