நீங்கள் வில்லனா ? ஹீரோவா ?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, இது போன்ற தார்மீக உரிமைகளை சில திரைப்பட இயக்குனர்கள் தவறாக பயன்படுத்தியதன் வாயிலாக அமைதியாக இருந்த தமிழகத்தில் பல்வேறு சாதி கலவரங்களுக்கு அடிப்படை காரண கர்த்தாவாக அவர்களுடைய தீய எண்ணமும், சிந்தனையும் ,காட்சி அமைப்புகளும் ,பாடல்களும் ,வசனங்களும், கதைகளும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தது .
எந்தத் திரைப்படமும் தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த சாதி தீண்டாமையை , சாதி பகமையை, சாதிப் பிணக்கை, சாதி துவிஷேகங்களை, சாதிய வடிவங்களை, சாதிய கூறுகளை, சாதிய அடையாளங்களை முற்றாக ஒழித்தது இல்லை . அது ஒழிந்த பாடும் இல்லை.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக திரைப்படங்களும், நாடகங்களும் உலா வந்த தமிழகத்தில் எந்த திரைப்படமும் ,எந்த நாடகமும் தமிழ்ச் சமுதாயத்தில் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமநிலையை நிலை நாட்டவில்லை. மாறாக சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் வீட்டுப் பெண், கொம்பன், சாமி, எஜமான் ஆகிய படங்களில் பட்டியல் பிரிவினர்களை கைகட்டியும், வாய் பொத்தியும், இடுப்பில் துண்டை கட்டியும்,கூனி குறுகி பவ்யமாக நின்று கும்பிடு போடுகின்ற காட்சிகளால் தமக்கு அடிமையாக இவர்களெல்லாம் இருக்க வேண்டும். என்ற ஆதிக்க சிந்தனையை அந்த கதாபாத்திரங்கள் பிரதிபலித்தன அதையே சமுதாயத்தில் கடைபிடித்தனர்.
இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். என்கின்ற மனோபாவத்தை உயர் சாதிகளாக சொல்லப்படுகின்ற கவுண்டர், முதலியார்,வெள்ளாளர், நாடார், தேவர் பிள்ளைமார், ரெட்டியார், கோனார் என பல்வேறு சாதியினர்களும் அந்தப் படங்களை பார்த்து திருப்தி அடைந்தார்கள். ஆனால் பட்டியல் பிரிவினர்கள் தாங்கள் அசிங்கப்படுவதையும், தாங்கள் கூனி குறுகி நிற்பதையும் ,காட்சி அமைத்திருக்கிறார்கள் என்று எவரும் அதற்கு எதிராக கருத்து சொன்னதும் இல்லை .பொங்கி எழுந்து போராடியதும் இல்லை. அப்படிப்பட்ட பட்டியல் பிரிவினர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மை, தாழ்வு உணர்ச்சியை, ஏற்படுத்தி குளிர் காய்ந்த சாதி ஆதிக்கம் பிடித்த மனித மிருகங்களால் எத்தனை எத்தனையோ திரைப்படங்கள் உலா வந்த போதும் அந்தத் திரைப்படங்களை தனது உழைப்பால் வந்த பணத்தை கொடுத்து நேரத்தை செலவழித்து அப்படி நடிக்கப்பட்ட நடிகர்களுக்காக விசில் அடித்தும் , கைத்தட்டியும் ஆரவாரம் செய்தும் அவர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்த அப்பாவி கூட்டங்கள் தான் பட்டியல் பிரிவினர்கள். அப்படி இவர்களால் வலம் வந்த தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ இவர்கள் மீது எவ்வித கரிசனமும் காட்டவில்லை. பெரும்பாலான ரசிகர் மன்றங்கள் பட்டியில் பிரிவினர் வசிக்கும் வீதியில் தான் பெயர் பலகையோடு உதயமாகிறது.
ஆனால் நன்றி கெட்ட திரைப்பட துறையைச் சார்ந்தவர்களும் ,நடிகர்களும், நடிகைகளும் எவருமே பட்டியல் பிரிவினர்களுடைய சுயமரியாதையை காட்சியமைத்த வரலாறு இல்லை. அவர்களை மனிதர்களாக சித்தரித்தது கூட இல்லை . அண்மை காலமாக அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாக
ஆதிக்க மனம் கொண்டவர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் தனக்கு கீழானவர்கள் இந்த உலகத்தில் காலங் காலமாக இருக்க வேண்டும் என எண்ணியே வாழ்ந்து வரும் மனநோய் பிடித்தவர்களை வில்லன்களாக சித்தரித்து அந்த வில்லன் பட்டியல் பிரிவினரை நாயினும் நரியினும் விட கேவலமாக நடத்தி அவர்களை அடித்து துன்புறுத்தி தீண்டாமை வன்கொடுமை செய்து வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு அதில் அற்ப சுகம் காணுகின்ற வில்லன்களை அடித்து தும்சம் செய்கின்ற ஹீரோக்கள் இந்த சாதி வெறி பிடித்தவர்களுக்கு வில்லன்களாகவும் ,மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வுகளை நிலை பெற செய்கின்ற வில்லன்களை தங்களுடைய ஹீரோவாகவும்
கொண்டாடுகின்ற மனநோயாளிகள் வாழ்கின்ற நாட்டில் நாம் வாழ்வது வெட்ககேடு. தமிழ்ச் சமூகத்திற்கு தலைகுனிவு.
சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளையும், பகைமையும் வளர்க்கின்ற ஒரு திரைக்காவியத்தை தான் இன்று சமூகநீதி படமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பணத்தை கொள்ளை அடித்து வசூலை அள்ளுகிறார்கள். அவர்கள் படைப்புகள் மூலம் ஏற்படுகின்ற சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு யார் சொல்வது? அதற்கான நிவாரணம் யார் தருவது ? வெறும் ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பதற்கு ஏற்ப சமூக நீதி என்பது வெறும் திரைப்படத்தில் தேடினால் சமூகநீதி கிடைக்காது.
திரைப்படத்திற்கு அப்பால் ஒவ்வொருவரின் மனத்திரையில் இருக்கின்ற அந்த சாதி என்னும் அழுக்கும், சாதி எனும் கொடிய விஷமும் முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும். மனித குலம் சமத்துவம் படைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு எந்த அரசியல்வாதியும் இதுவரை தமிழகத்தை ஆண்டது இல்லை.
திரைப்படம் என்பது மனித மனங்களில் சாதிய விஷயத்தை ஊற்றி ஊற வைத்து , சாதிய வேறுபாடுகளை வலிந்து திணித்து சாதி கலவரங்களை, வன்முறைகளை ஏற்படுத்திய ரணங்கள் இன்னும் ஆறவில்லை .அதன் தழும்புகளும் இன்னும் மாறவில்லை .
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 40,000 கிராமங்களில் நிலவிய இரட்டைக் குவளை முறையை ஒழிப்பதற்கு களத்தில் நின்று போராடிதான் புதிய தமிழகம் சமூக நீதியை வென்றெடுத்துள்ளது . மேலும் மண்ணுரிமை, மனித உரிமை ,வாழ்வுரிமை, என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் நிஜத்தில் போராடி தமிழகத்தில் சமூக தளத்தில் வென்று இன்று அமைதியான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து பல்லாயிரக்கணக்கானோர் தனது ரத்தத்தை சிந்தியும், கல்லடி பட்டு சொல்லடி பட்டும், பொருளாதாரத்தை இழந்து, நேரத்தை இழந்து, கால் நூற்றாண்டுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததின் வாயிலாகத்தான் இன்று சமூகத்திடையே சமரசம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நூற்றாண்டு காலமாக திரைப்படங்கள் வாயிலாக திரைக்கதைகள் வாயிலாக திரை வசனங்கள் வாயிலாக எந்த சமூக மாற்றமும் ஏற்பட்டதில்லை .
மாறாக சமூக பதட்டம் மட்டுமே நடைபெற்ற வரலாறு உண்டு.
ஒரு தியேட்டரில் “தேவர் மகன்”அல்லாத படத்திற்கு சென்றவர்களிடையே “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே ” என்கின்ற பாடலை வலிந்து போடச்சொல்ல திரைப்பட பார்வையாளர்கள் மறுக்க அதன் வாயிலாக கலவரம் ஏற்பட்டு அதை தடுத்தவர்களின் கையை வெட்டிய கொடிய சம்பவத்தால் தென் தமிழகத்தில் தொடர் கலவரம் ஏற்பட்டது . அந்தப் படத்தை எடுத்து பணம் சம்பாதித்த தயாரிப்பாளர் என்ன செய்தார்? நடிகர் என்ன செய்தார் ?
இந்த சமூக புரட்சியாளர்கள், கருத்துரிமை புரட்சியாளர்கள், ஜனநாயக வாதிகள், சமூக நீதிப் பேசுகின்ற கழிச்சடைகள் எவரும் அதற்கு எதிராக ஒரு கண்டன குரல் கூட எழுப்பவில்லை. அதன்பிறகு வந்த அத்தனை சாதிய படங்களும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களால் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்திருக்கின்றன குறிப்பாக கொம்பன் போன்ற சாதிய படங்களுக்கு 72 காட்சிகள் நீக்கப்பட்டு தான் அவை வெளியீடு செய்யப்பட்டது.
அன்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் எல்லாம் கருத்துரிமை,ஜனநாயக உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என உரிமை பேசியவர்கள் ,சட்டம் பேசியவர்கள் இன்று மாமன்னன் வில்லனை கொண்டாடுகின்ற போது அதனால் ஏற்படுகின்ற சண்டை சச்சரவுகளுக்கு அவர்கள் எவ்வித பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார்கள் இதுதான் அவர்களின் பச்சோந்தித்தனம் ஆகும் ..
இப்படி ஒவ்வொரு படத்திற்கும் புதிய தமிழகம் தணிக்கை செய்ய வேண்டும் என்று எண்ணி தான் சிலர் வம்படியாக சில காட்சிகளை திணிக்கிறார்கள். அப்படி திணிக்கின்ற காட்சிகளால் சமூகத்தில் பதட்டம் நிலவுமே ஒழிய பகை தீராது . சமத்துவ பண்பு ஓங்காது .. மனித நேயம் நிலைக்காது .ஆகவே தமிழ் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கொஞ்சமாக மனசாட்சியோடு தம் படைப்பால் இந்த சமூகத்தில் நன்மை ஏற்படவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஒருபோதும் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு படைப்பாளிகள் செயல்பட வேண்டும்.
இன்று மாமன்னன் மாமக்களை சிதைக்கின்ற வகையில் அந்த வில்லனை கொண்டாடுகின்ற சாதினர்கள் எப்படிப்பட்ட மனம் படைத்தவர்கள் என்பது உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறோம். பட்டியல் பிரிவினர்களிடையே அடித்து, உதைத்தும்,நடித்தும் வாழ்ந்த அந்த வாழ்வியல் படங்களை கண்டு களித்த போது உங்களுக்கு இனிக்க செய்கிறது குட்ட குட்ட குனியாமல் நிமிர்ந்து நின்று அடித்தால் அது உங்களுக்கு கசக்கிறது.
உங்கள் எண்ணங்கள் மாற வேண்டும். சிந்தனை மாற வேண்டும். இந்த உலகில் மனித பிறவி என்பது ஒரு மகத்தான பிறவி. அந்தப் பிறவியில் சாதி,மதம், வேறுபாடு இல்லாமல் எவன் ஒருவன் வாழ்கின்றானோ அவனுடைய வாழ்க்கையே மகத்தான வாழ்க்கை மற்றவருடைய வாழ்க்கை எல்லாம் அது வாழ்க்கை போல இருக்கும் ஆனால் அது வாழ்க்கை அல்ல அது வறட்டு கவுரவமும், வறட்டு சித்தாந்தமும், வறட்டுக் கொள்கையும், நிறைந்த ஒரு வறண்ட பூமி போன்றது தான் .அந்த பூமியில் எவ்வித புழு பூச்சிகளும்,செடிகளும் , கொடிகளும் கூட முளைக்காத ஒரு வறண்ட பாலைவனமாகத்தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர ஒரு பூஞ்சோலையாக மாறாது ஆகவே மனிதர்களிடையே அன்பு, அறம், ஈகை, வீரம்,இருக்க வேண்டுமே தவிர சாதி மதம் வேறுபாடு என்கின்ற எண்ணம் துளி அளவும் இருக்கக் கூடாது அப்படி இல்லாதவர்கள் தான் உண்மையான மனிதர்கள்.
இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் ? ஹீரோவா அல்லது வில்லனா ? ஒவ்வொருவருடைய மனநிலை தான் வில்லனாகவும், ஹீரோவாகவும் உருவாக்கும் . ஆகவே இன்றைய தேவை வில்லன்கள் அல்ல ஹீரோக்கள் ஹீரோக்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை வில்லன்கள் நாட்டிற்கு தேவை இல்லாதவர்கள் அதை காட்சிப்படுத்துகின்ற இயக்குனர்கள் தங்களுடைய வலிகளை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக பயன்படுத்திக்கலாம்.ஆனால் அதே வலியை வலிந்து வந்து ஏழை எளிய விளிம்பு நிலை பட்டியல் பிரிவு மக்களிடம் திணிக்க விரும்பினால் வரலாறு திருப்பி அடிக்கும்.அப்படி அடிக்க ஆரம்பித்தால் வில்லன்கள் கடைசியில் தும்சம் செய்ததுதான் வரலாறு .
புரட்சி என்று எழுதும் போது புரட்சி வராது . அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழும்போது தான் புரட்சி வரும்.
சமூக நீதி என்று பேசினால் சமூகநீதி வராது. சமத்துவமற்ற சமுதாயத்தில் சாதிய முரண்பாடுகளையும், சாதிய பிணக்குகளையும், உடைத்தெறிந்து விட்டு சமத்துவம் படைத்து, சமூக நீதி நிலைநாட்டபட வேண்டும். இது போன்ற சமூக அக்கறையும், பொதுநலமும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் எதிர்பார்ப்பது கேள்விக்குறி தான்.
வாழையூர் குணா






