இன்று நமது பாரத தேசம் தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தேச மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

வலைப்பதிவுகள்

Author: மல்லல் மகேஷ் .மு

Mallal Magesh 2
Published: 15 Aug 2023

இன்று நமது பாரத தேசம் தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தேச மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

தேச சுதந்திரம் என்பது நமது தேசத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் அரசியல் சட்டத்தால் வகுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்வதிலேயே அடங்கியிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தரப்பினருக்கும் அரசியல் சாசனத்தின் உரிமைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றே வருகிறது. வேண்டுமானால் வசதி படைத்தவர்களுக்கு கொஞ்சம் விரைவில் கிடைக்கலாம்.

சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை, எண்ணற்ற தலைவர்களின் இன்னல்கள், துன்பங்கள் , இழப்புகள் இவற்றின் மீதுதான் நமது சுதந்திர இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழக போராளிகளின் பங்கும் அளப்பரியது.இவர்களுள் முக்கிய பங்கு முண்டாசுக் கவிஞன் என்று அழைக்கப்பட்ட பாரதிக்கும் உண்டு.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்ததாலோ என்னவோ பாரதியார் அவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களின் வாழ்வியலையும் நன்கு அறிந்தே வைத்திருந்திருக்கிறார். நமது பாரத தேசத்தின் உண்மையான சுதந்திரம் என்பது தேவேந்திரகுல வேளாளர்களாகிய பள்ளர்களின் சுதந்திரத்திலேயே அடங்கியிருக்கிறது என்று கருதியே ” ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ” என்ற வரிகளை பாடியுள்ளார்.

77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் தேவேந்திரகுல வேளாளர்களாகிய நாம் உண்மையிலேயே முழு சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா? பாரதியின் கனவை மெய்ப்பித்துவிட்டோமா என்று சற்று யோசிக்க வேண்டுமல்லவா?

உலகிற்கே உணவளித்த சமூகம், காடுகளை திருத்தி வேளாண்மை செய்த சமூகம், குடும்ப வாழ்க்கை முறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய சமூகம் என்று பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய நம் சமூகத்திடம் தானே அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான நிலங்கள் இருந்திருக்க வேண்டும்?

பண்டைய காலத்து அந்நிய படையெடுப்புகள் அனைத்தும் நமது பாரத தேசத்தில் பல்வேறு பெயர்களில் பரந்து விரிந்து வாழும் நம் தேவேந்திரகுல வேளாளர்களின் பெரும்பான்மை நிலங்களை குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. ஏர் புரியும் நம்மவர்கள் போர் புரியும் திறமையையும் தன்னகத்தே கொண்டிருந்ததால் சேர, சோழ, பாண்டியர்களாக அந்நிய படையெடுப்புகளை தீரத்துடன் எதிர்த்தோம்.ஒரு கட்டத்தில் நவீன ஆயுதப்போராலும், சூழ்ச்சியாலும் , வஞ்சகத்தாலும் வீழ்த்தப்பட்டு நாம் நமது மண்ணிலேயே அடிமைகள் ஆக்கப்பட்டோம்.நிலங்களை இழந்ததால் நம்மை நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்த்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் அதன்பிறகு தொடர்ந்த திராவிடர்களும் நம்மை பட்டியல் பிரிவிலேயே அடைத்து நம்மை அடிமைகளாகவே தொடரச்செய்து விட்டார்கள்.இன்று வரையில் முண்டாசுக்கவிஞன் பாரதி கண்ட‌ கனவு நினைவாகி விட்டதா என்றால் அதில் ஆயிரம் கேள்விகள் தொக்கியே நிற்கின்றன.

அரசாண்ட சமூகம் எப்படி அடிமையானது என்று யோசித்துப் பார்த்தால் நமக்குள்ளேயே நிகழும் ஒற்றுமையின்மை, துரோக குணம் இவைகள்தான் முக்கிய காரணிகளாக விளங்குகிறது. ஓரளவிற்கு நாம் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்து விட்டாலும் இன்னும் முழுமையடையவில்லை என்பதே எதார்த்தம்.

பல்வேறு தேசிய கட்சிகளில் இருந்து மாநில கட்சிகள் வரை நமது பெருமைகளை பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் இப்போதாவது நமது சக்தி என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள முற்பட வேண்டாமா? யாருக்கு வேண்டுமானாலும் கொடி பிடிப்பேன் என்றால் சமூகம் எப்படி ஒன்றுபடும்,ஏற்றம் பெறும்?

நமது சமூகத்தை அரசியல் அரங்கில் அடையாளப் படுத்திய புதிய தமிழகம் கட்சி , நாம் பட்டியலில் இருப்பதுதான் நமது வளர்ச்சிக்கு தடையாக உள்ளது எனவே தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பட்டியல் வெளியேற்றம் வேண்டும் என பேசினால் ,அவர் இட ஒதுக்கீட்டில் டாக்டர் ஆகிவிட்டு நம்மை மட்டும் முன்னேற விடாமல் தடுக்கிறார் என்று ஒரு கும்பல் நமது சமூகத்திலேயே கிளம்புகிறது. இட ஒதுக்கீடு அதற் முழு பலனையும் அளிந்திருந்தால் இன்று நமது சமூகத்தினர் அனைவரும் டாக்டர் தானே ஆகியிருக்க வேண்டும்? ஏன் ஆகவில்லை? ஒன்றிரண்டு கிளார்க் வேலைக்காகவும், பியூன் வேலைக்காகவும் பட்டியலில் அடைந்து கிடந்து, சுய தொழில் செய்யும் வாய்ப்பை இழந்து வருகிறோம் என்பதை நம்ம சிலர் ஏற்க மறுக்கிறோம்.

இதிலும் இன்னொரு நவீன கும்பல் ,தேர்தல் நேரம் வந்துவிட்டாலே எதிரிகளிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தேவேந்திரகுல சமூகமே இல்லை என்று பொய் பரப்புரை செய்ய கிளம்பி விடுகிறார்கள். இதற்கும் கூட நம் மக்களில் கொஞ்சம் பேர் யோசிக்காமல் தலையாட்டுகிறார்கள். தமிழக அரசியலில் டாக்டர் அவர்களைப் போன்று கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தீரத்துடன் எதிர்த்த ஆள் வேறு யாராவது உண்டா? ஒரு வேளை இந்த நவீன மூடர்கள் சொல்வது போன்று டாக்டர் அவர்கள் ஜாதியை மறைத்திருந்தால் அன்று ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த இருவரும் நம் டாக்டரை அரசியல் அரங்கில் விட்டு வைத்திருப்பார்களா என்பதை கூட யோசித்து பார்ப்பதில்லை நாம். யார் என்ன சொன்னாலும் அதை ஆராயமல் தலையாட்டுவதையே இன்று வரை வழக்கமாகவே சிலர் கொண்டுள்ளோம். இதுவும் நம் சமூகம் அரசியல் அரங்கில் பின்னடைவை சந்திக்க காரணமாக அமைகிறது.

பட்டியல் வெளியேற்றம் என்ற ஒற்றை கோரிக்கைக்கு உத்திரவாதம் அளிக்க கூட்டணி கட்சிகள் தயங்கியதாலேயே 2021 தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து தேர்தலில் நின்றது. தமிழகத்தில் பெரும்பான்மையான சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய தமிழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியிருந்தால் இன்று பட்டியல் வெளியேற்றத்துடனேயே 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருப்போம். இந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டு ,கட்சி பாகுபாடின்றி வந்தவர்கள் போனவர்களுக்கெல்லாம் கொடி பிடித்த நம்மவர்கள் தான் இன்று பேசுகிறார்கள் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பட்டியல் வெளியேற்றம் பற்றி வாயே திறப்பதில்லை என்று பேசுகிறார்கள்.இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்மவர்கள் ஒற்றுமையுடன் புதிய தமிழகம் என்னும் ஒரு குடையின் கீழ் சந்தித்தால் நமது பட்டியல் வெளியேற்றத்தை எவராலும் தடுக்கமுடியாது.

எத்தனையோ அடக்குமுறைகளை தகர்த்து ,அடிமை விலங்கை உடைத்து குறுகிய மனப்பாங்கிலிருந்து நம் மக்களை வெளியே கொண்டுவந்தால் இப்போது நவீன அடிமையாக நாம் திராவிடத்திடம் வீழ்ந்து கிடக்கலாமா? தென் மாவட்டத்தில் நமது தயவு இல்லாமல் எவரும் வெற்றி பெறவே முடியாது என்ற நிலை மாறி இப்போது நாம் பெரும்பான்மையாக இருக்கும் அத்தனை தொகுதிகளிலும் திமுக ஜெயித்தது எப்படி என்பதே கேள்வியாக உள்ளது? ஒன்று பட்டியல் வெளியேற்ற கோரிக்கையுடன் தனித்து களத்தில் நின்ற புதிய தமிழகம் கட்சி வென்றிருக்க வேண்டும், இல்லை பெயர் மாற்ற அரசாணைக்கு ஒரு அங்கமாக இருந்த கட்சிகளாவது வென்றிருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் நமது கோட்டையில் திமுக ஜெயிக்க காரணம் நாம் உணர்வை இழந்து, திராவிட கூட்டத்தின் பசப்பு வார்த்தைக்கும், தேர்தல் நேர ₹200க்கும் ₹300க்கும் மயங்கி விட்டதே ஆகும்.முன்னொரு காலத்தில் சூதாட்டத்திலும், கள்ளுக்கும் தமது உடைமைகளையும், நிலங்களையும் நாம் இழந்ததாக வரலாறு உண்டு. அதுபோல இன்று நம் சமூகத்தை நாம் திராவிட கும்பலின் காசு , பணம் , சூழ்ச்சி ஆகியவற்றிடம் அடகு வைத்துவிட்டு நிற்கிறோம்.ஆண்ட பரம்பரை என்பது காசு வாங்கிக்கொண்டு எவரை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர வைப்போம் என்பதுதானா?

இப்போதாவது சிந்தியுங்கள் , பாரதி இன்றும் உயிரோடு இருந்திருந்தால் நமக்காக” ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என நம்மைப்பற்றி பாடிக்கொண்டேதான் இருந்திருப்பார். ஏனெனில் நாம் நம் விடுதலைக்கான சிறிய செயலைக் கூட இன்னும் தொடங்கவில்லை என்பதே எதார்த்தம்!!

77-வது சுதந்திர தினத்திலாவது உறுதி மொழி எடுத்து முண்டாசுக்கவிஞன் பாரதியின் கனவை நினைவாக்குவோம்!!

ஒன்றுபடுவோம், அரசாள்வோம், புதிய தமிழகம் படைப்போம்!!!

மல்லல் மகேஷ் .மு
தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி