மாமன்னன்- தேவர் மகன் இரண்டும் சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துடைய படங்கள்!

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

Guna 4
Published: 15 Aug 2023

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக கருத வேண்டியதை தாண்டி தமிழகத்தில் திரையை உண்மை என நம்பும் தற்குறி கூட்டம் அதிகரித்ததனாலையே திரைத் துறையில் இருந்தே தமிழகத்திற்கான முதல்வர்கள் வந்துள்ளார்கள் . அப்படி என்றால் திரைப்படம் மக்களிடையே எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டின் கலை, கலாச்சார, பண்பாடு, சமூக, அரசியல் ,பொருளாதாரம் ஆகியவற்றில் பின்னிப் பிணைந்து உள்ளது. அப்படிப்பட்ட துறையில் பங்காற்றுவர்களுக்கு சமூக அக்கறை துளியேனும் இருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இருந்ததாகவும் தெரியவில்லை.

பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களில் ஒரு சாதியை தூக்கலாகவும் ,இன்னொரு சாதியை தாழ்த்தியுமே காட்சி அமைக்கப்பட்டு அந்த மனநிலையிலேயே தமிழக மக்கள் வாழுகின்ற ஒரு சூழலுக்கு தள்ளிய ஒரு தலைப்பட்சமான சமுதாய அமைப்பிற்கு அடிகோலியது திரைப்படம் என்றால் அது மிகையாகாது.

சராசரியாக ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரம் அதில் 2. 20 நிமிடம் வரை வன்முறை, சமூக விரோத காட்சிகள் ,ஆபாசம், தனிமனித வக்கிரம் போன்ற காட்சிகள் திரையில் அதிக நேரம் ஆக்கிரமித்துவிட்டு கடைசியாக ஐந்து நிமிடத்தில் கருத்து சொல்லி நிறைவு செய்வதே திரைப்படங்களின் பாணி ஆகும் . கடைசியாக சொன்ன கருத்தை ஏற்காமல் முழுக்க முழுக்க தவறான காட்சி அமைப்புகளை சரி என நம்புகின்ற சமூக விரோத கும்பல்கள் திரைப்படங்களைப் பார்த்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு , காதல் என பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கு திரைப்படங்களே தூபம் போட்டு வளர்த்து உள்ளது என்பதுதான் உண்மை.

உதாரணத்திற்கு ரெட் ஜெயின் மூவிஸ் உதயநிதி நடித்த மாமன்னன் படவில்லனை சாதி வெறியர்கள் கொண்டாடினார்கள். அந்த சாதி வெறியர்கள் வெளியிட்ட மீம்ஸ் பள்ளி மாணவர்கள் இடையே சாதி வெறி மேலோங்க செய்தது. அதன் விளைவாகத்தான் பள்ளி மாணவர்களே வெடிகுண்டுகளை தயாரித்து வெடித்து ஒத்திகை பார்த்தனர். அந்த மாணவர்கள் மீது திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி அருகில், வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது அந்த வழக்கில் இருந்து அதில் சம்பந்தப்பட்ட பையனுடைய சித்தப்பா திமுக ஒன்றிய செயலாளர் அவருடைய செல்வாக்கால் அந்த வழக்கிலிருந்து நீதிபதி வரை சென்று விடுதலை செய்ய வைத்தார்கள். அந்த கும்பல்தான் நாங்குநேரி சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்கள். இது எதனால் என்றால் மாமன்னன் படம் நேர் மாறான தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தி உள்ளது .

தேவர் மகன் படம் வந்தபோது தென் தமிழகத்தில் ஏற்பட்ட மோதல்கள் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

மதுரை மாவட்டம், ஏழுமலை அருகில் எம்.கல்லுப்பட்டி பழனியப்பா தியேட்டரில் படம் பார்க்க சென்ற போது சமூக விரோத கும்பல் “போற்றி பாடடி பெண்ணே” எனும் பாடலை வலு கட்டாயமாக போட சொல்லி வேண்டுமென வம்பு இழுத்தனர் .

நாங்கள் பார்க்க வந்த படத்திற்கும், அந்தப் பாட்டுக்கும் எந்த சம்பந்தமில்லை .அந்தப் பாட்டை போடக்கூடாது என்று சொன்னதற்காகவே கணவன் மனைவியின் கையை வெட்டி தனது சாதி வெறியை அம்பலப்படுத்தினார்கள் . அந்த செய்தி காட்டுத் தீயாக பரவி அனைத்து கிராமங்களிலும் கலவரம் மூண்டது . அதேபோன்று வெவ்வேறு தெருக்களில் வெவ்வேறு விழாக்களில் குறிப்பாக திருமணம் மற்றும் கோவில் திருவிழா சுப நிகழ்ச்சிகளில் ரேடியோ பாடினால் அங்கே ஒரு கும்பல் சென்று தேவர் மகன் படத்தில் இடம்பெறும் “போற்றி பாடடி பெண்ணே!” என்ற பாட்டை போடு என்று வற்புறுத்தினார்கள். அதன் எதிரொலியாக தென் தமிழகம் எங்கும் கலவர காடாகியது.அப்போது தேவர் மகன் எடுத்த கமலஹாசன் அதில் நடித்த நடிகர்கள் எவரும் அந்த கலவரத்திற்கு காரணமாக பொறுப்பேற்காமல் நழுவி கொண்டார்கள்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் மட்டும் தான் அந்த பிரச்சினையை எதிர்கொண்டு போராடி சமூக சிக்கலை தீர்த்து வைத்தார். அதற்காக கமலஹாசனையும் அந்தப் படத்தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக எதிர்த்தார்.

ஒரு சாதியைத் தாழ்த்தியோ அல்லது உயர்த்தியோ எந்த படங்களையும் வெளியிட இனி புதிய தமிழகம் அனுமதிக்க மாட்டோம். என எச்சரிக்கை செய்தார் .

திரைப்படங்களால் ஏற்படுகின்ற கலவரங்களுக்கு எந்த நடிகரும் முன் வந்து அந்தப் பிரச்சனைக்கு தீர்வை தருவது இல்லை. மாறாக அது ஒரு பொழுதுபோக்கு என்ற எண்ணியே ஒதுங்கி கொள்கிறார்கள். ஆனால் திரை மாயையில் தமிழகம் மூழ்கி கிடக்கிறது. திரைப்படத்தில் வரும் காட்சிகள் உண்மை என்று நம்புகின்ற மூடர்கள் இருக்கும் வரை தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல வாய்ப்பு இல்லை.

தேவர் மகன் படம் வெளிவந்து 30 வருடம் கடந்து ஓடிவிட்டது.அந்தப் படம் தந்த வலிகளும் ரணங்களும் ஆறிவரும் நேரத்தில்.

மாமன்னன் பாடல் வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படத்தின் பாதிப்பு குறித்து கமலஹாசனை வைத்துக் கொண்டே அந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வலியை தந்தது மனப்பிறல் ஏற்பட்டது என் தந்தை கேரக்டராக தேவர் மகன் கதாபாத்திரத்தை சித்தரித்துள்ளேன் என மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் வலிந்து தனது கருத்தை முன்வைத்து சமூகத்தில் மறைந்து வந்த ஒரு கசப்பான சம்பவத்தை கீறி விட தூபம் போட்டார்.

அவருடைய கருத்துக்குப் பிறகு மாமன்னனுக்கு எதிராக தென் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கள் கொதித்து எழுந்தார்கள் .

திரைப்படம் வெளியான தியேட்டர்களில் முற்றுகையிட்டு பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது . பிறகுதான் அந்தப் படத்தோட காட்சி அமைப்புகளும் ,களமும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தது தென் மாவட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதை தெரிந்துகொண்டு அமைதியானார்கள் . அப்படி என்றால் மாரி செல்வராஜ் எதற்காக தேவர் மகனை பற்றி குறிப்பிட வேண்டும்? அதன் வாயிலாக மாமன்னனுக்கு ஒரு விளம்பரத்தை தேடி அதாவது பட்டியல் பிரிவினர்களும் என்ன நமக்கு ஆதரவாக சொல்லி இருக்கிறார் என பார்க்கத் தூண்டு வகையிலும், அதேபோன்று சாதி மேலாதிக்க சிந்தனை உள்ளவர்களும் நம்மளைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என பார்க்கத் தூண்டு வகையிலும் , ஒரு வியாபார யுத்திக்காக மட்டுமே மாரி செல்வராஜ் பேச்சு அமையப்பெற்றதாக சமூக ஆர்வலர்கள் கருதினார்கள் .

ரெட் ஜெயின் மூவிஸ் பணம் சம்பாதிப்பதற்காக காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை முன்வைத்து அதன் மூலமாக தமிழ் சமூகங்களிடையே பின்னோக்கி நகர்த்திய பெருமை தான் அந்தப் படத்திற்கு கிடைத்த இழி பரிசாகும்.

வெறும் சமூக நீதி என திரையிலும் ,எழுத்திலும் , ஏட்டிலும் ,உதட்டிலும் சொல்வதல்ல சமூக நீதி அதை களத்தில் சந்தித்து சமூகங்களுக்கிடையே நடந்த பிணக்குகளையும், பகைகளையும் சரி செய்து, சரி சமமாக சமூகங்களிடையே நட்புணர்வை பேணி வளர்ப்பது தான் சமூக நீதி.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு வில்லனை எப்போதாவது கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்களா ? அப்படி கொண்டாடத் தூண்டியது யார் ?அப்படி கொண்டாடுபர்கள் யார் என்றால் அவர்கள் பெரும்பாலும் திமுகவைச் சார்ந்தவர்கள் என்பது தான் வெட்கக்கேடு.

அப்படி வில்லனை கொண்டாடி மகிழ்ந்து சாதி ரீதியான மோதலுக்கு தூபம் போடுகின்ற வகையில் otp யில் அந்தப் படம் வந்த பிறகு வில்லனை பல்வேறு சாதியினர்கள் கொண்டாடி பீம்ஸ் போட்டு சாதி வக்கிரத்தை வன்மத்தை வெளியில் கக்குவதற்கு சமூக விரோத கும்பல்கள் youtubeிலும் பேஸ்புக்கிலும் சமூக வலைதளங்களில் பரப்பிய போது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் அப்படிப்பட்ட தீய விஷக் கருத்துக்களை எவர் பரப்பினார்களோ அவர்கள் மீது புகார் கொடுத்து வழக்குப் பதிய வலியுறுத்திய பிறகுதான் அந்த பேராபத்தான போக்கு கைவிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே சமூக அக்கறை இருந்திருந்தால் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் நாங்கள் சமூக நல்லிணக்கத்திற்காக எடுத்த படத்தை நீங்கள் வேறு மாதிரி திரித்து வெளியிடுவதால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுங்கட்சியின் அமைச்சராக இருப்பவர் பொது நலன் கருதி எச்சரிக்கை செய்யவில்லை. அவர்களுக்கு தேவை படத்தோட வசூல் கஜானா நிரம்பி விட்டது.

இனி தமிழ் சாதிக்குள் யார் அடித்துக் கொண்டால் என்ன செத்தால் என்ன என்பதுதான் அவர்களுடைய சமூக நீதி.

அந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு சமூக அக்கறை இருந்திருந்தால் வில்லனை கொண்டாடி சமூகத்தில் பிளவை உண்டு பண்ண கூடாது என்று சொல்லி இருக்க வேண்டும் . மீறி மீம்ஸ் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்களா ?

எங்கள் சாதி பெருமைக்காக எங்க குடும்ப கவுரவத்திற்காக எப்போதும் உங்களை நிக்க வைத்துக்கொண்டே இருப்போம் தலைமுறை தலைமுறையா நிக்க வைத்து தான் பார்ப்போம் என்று வசனம் சொல்கிறார்களே அதில் சாதிய வன்மம் தெரியவில்லையா ?
அதனால்தான் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் இது போன்ற அபத்தமான வசனங்களால் இது போன்ற படங்களை தடை செய்ய வேண்டும் என்று சொன்னார் .மாமன்னன் போன்ற படங்கள் மீண்டும் சாதி கலவரங்களை திட்டமிட்டு ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்களோ என்று எச்சரிக்கை செய்து உள்ளார்.

தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் போராட்டத்தின் அனுபவத்திலிருந்து ஒரு கருத்தைச் சொன்னால் அதுவும் வலிந்து வந்து பத்திரிக்கையாளர்கள் கேட்கின்ற போது அந்த படம் இப்போது சமூகத்திலேயே பிரிவினை ஏற்படுத்தி விட்டது என்று ஒரு கருத்தைச் சொன்னதற்காக தலைவர் டாக்டர் ஐயா அவர்களை திமுகவின் அடிவருடிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

திரைப்படங்களால் எத்தனை சமூகப் பிரச்சினைகளை களங்கண்டு அதனுடான கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு சமரசமாகி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற இந்த சூழலில் 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த ஒரு சாதி ரீதியான மோதலுக்கு காரணமாக இருந்த படத்தை நினைவுபடுத்தி அதன் மூலமாக மீண்டும் சாதி வெறியர்களின் மூக்கை சொரிந்து வம்பு இழுத்து விடுகின்ற பொறுப்பு ரெட் ஜெயின் மூவிஸ் உண்டு உதயநிதிக்கு உண்டு அதை இயக்கிய இயக்குனருக்கு உண்டு. நாங்குநேரி சின்னதுரையின் சம்பவத்திற்கு இதுதான் காரணம் என்று அவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் 150 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் .

ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு கதை அம்சங்கள் கூடிய படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது உண்டு ஆனாலும் திரைப்படங்கள் வாயிலாக சொல்லப்படுகின்ற எந்தக் கருத்தும் நிலைத்து நின்ற சரித்திரமில்லை. சமூக நாடகங்களிலும் , திரைப்படங்களிலும், தெருக்கூத்துக்களிலும் ‘ சாதியில்லையடி பாப்பா ‘ என பாரதியின் பாடல்கள் வரிகளை சொல்லி நடித்ததுண்டு பேசியதுண்டு ஆனால் சாதிய வடிவங்கள் ஒழிந்த பாடுஇல்லை. மாறாக நவீனத்துவமாக வளர்ந்து கொண்டு தான் வருகிறது.

இதற்கு தீர்வு அவரவர் மனங்களில் இருந்து சாதி ஒழிய வேண்டும்.அதற்கான எந்த முன் முயற்சியையும் எடுக்காத திராவிட மாடல் ஆட்சியும் , சுயநல அரசியல்வாதிகளும் , சாதியை, சாதி வக்கிரத்தை தூபம் போட்டு வளர்ப்பதனால் தான் சாதியும், சாதி தீண்டாமையும், மனிதனின் நிழல் போல துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் அவை தமிழ் தமிழ் சமூகத்திலேயே ஒற்றுமையை மேலோங்க செய்ய வாய்ப்பில்லை.

இனி நாம் தமிழர்களாகவும், இந்தியர்கள் ஆகவும் , மொத்தத்தில்
நல்ல மனிதனாகவும் வாழ வேண்டும். சாதி தீண்டாமையால் புரையோடிய பழைய தமிழகத்தை ஒழித்து , சாதி, மத, மொழி, இனம் பேதமில்லாத
புதிய தமிழகம் படைப்போம்!
வாழையூர் குணா.