சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு எவ்வித சுணக்கமின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும்!

அறிக்கைகள்
s2 98 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 05 Dec 2023

Loading

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு எவ்வித சுணக்கமின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும்!

புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்
ஆங்காங்கு முகாம்கள் அமைத்து மக்களுக்கு உதவிட வேண்டும்!!

வடகிழக்குப் பருவமழையுடன் வங்கக்கடலில் உருவான புயல் மழையால் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மற்றும் ஆய்வுகளைக் கூட விட்டுவிட்டு, புயல் சின்ன எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. சென்னை மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதைப் பாராட்டத்தான் வேண்டும். மீறி அவர்கள் நடமாட முயற்சி செய்திருந்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

நேற்று முன்தினம் மாலையிலிருந்து இன்று வரையிலும் அனைத்துப் பெரும் சாலைகளும் உட்தெருக்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னை மாநகர் முழுவதும் முற்றாக மின் சப்ளை இல்லை; அதனால் வீட்டில் மின்விசிறிகளைக் கூட இயக்க முடியாமலும் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய முடியாமலும் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். சென்னை ஏற்கெனவே கடல்மட்டத்தைவிட தாழ்வான பகுதி. முன்பிருந்த குளம், குட்டை, கண்மாய்கள் எல்லாம் வீடுகள் கட்டி மூடப்பட்டுவிட்டன. எனவே மழைநீர் எங்கே செல்வது என்று தெரியாமல் அது வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறது.

சென்னை வெள்ளம் கடலுக்குள் சென்று வடிவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதுவும் புயலின் தாக்கத்தால் அலைகளின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கூவம், அடையாறு அல்லது வேறு எந்த ஆறுகளிலிருந்தும் மழைநீர் கடலுக்குள் எளிதாகச் செல்ல முடியாது. சில மேடான பகுதிகள் தவிர, கடந்த 30, 40 ஆண்டுகளில் உருவான புதிய குடியிருப்புகள் அனைத்துமே வெள்ளத்தால் முதல்தளம் வரையிலும் மூழ்கி, சிக்கித் தவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது சாலைகளெல்லாம் கால்வாய்கள், ஆறுகள் போல் மாறிவிட்டன. வரிசைவரிசையாக வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள், வெறும் காகிதக் கட்டுகளைப் போல அடித்து செல்லப்படக்கூடிய காட்சிகள் மிகவும் கொடூரமானதாக உள்ளன. கடந்த ஒரு வாரகாலமாகவே பெய்த கனமழையால் வீடுகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்ற ஏழை, எளிய மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியே.

ஆட்சியாளர்களை விமர்சனம் செய்வதற்குண்டான நேரமாக இதைக் கருதக்கூடாது. சென்னையில் மழைநீரை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட நிற்காமல் வெளியேற்றுவதற்காகவே ஒதுக்கப்பட்ட ரூ.4500 கோடி என்ன ஆனது என்று கேள்வி கேட்பதற்கெல்லாம் சிறிது காலம் பொறுத்திருப்போம்; தற்காலிகமாக விட்டுவைப்போம். புயல் கடந்த பிறகு, மழை நின்ற பிறகு, வெள்ளம் வடிந்த பிறகு ஆட்சியாளர்கள் வேட்டியை மடித்துக் கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க வருவார்கள்.

சென்னை மக்கள் 2015-ல் வெள்ளம் வந்த போதே அதை நன்குத் தாக்குப்பிடித்திருக்கிறார்கள். எனவே இதையும் நிச்சயமாக சமாளிப்பார்கள். ஆனால் பெருநகர்ப் பகுதியான சென்னையில் வாழக்கூடிய 80 இலட்சம் பேரும் அரசு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி வாழ்க்கையை நகர்த்த முடியும்?

1. எனவே முதலில் அனைத்து வீடுகளுக்கும் மின்சப்ளை கொடுப்பதற்குண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

2. கடும்புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தால் மரங்கள் விழுந்தால், அது போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே அவை அகற்றப்பட வேண்டும்.

3. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தினந்தோறும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பமே நடத்திட முடியும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, முற்றாக நீர் வடிந்து அவர்கள் தங்களுடைய வேலைகளுக்குச் செல்கிற வரையிலும் அவர்களுக்கு உணவளிப்பதும், துணிமணிகளை இழந்த மக்களுக்கு பெட்சீட் மற்றும் ஆடைகள் வழங்குவதும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து பெற்று வழங்குவதும், மழையால் முதியோர், குழந்தைகளை நோய்கள் தொற்றிக் கொள்ளாத வகையில், மருத்துவ முகாம்களை நடத்தி அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை செய்திட வேண்டும்.

5. வீடுகள், சந்துகள், சிறுசிறு வீதிகளில் தேங்கியிருக்கும் நீரை அதனுடைய நீர் வழிப்பாதையில் சென்று சேர்க்கும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான மின்மோட்டார்களை அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கவேண்டும்.

6. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து தங்கவே முடியாமல் தவிப்பவர்களுக்கு, அனைத்து திருமண மண்டபங்களையும் தற்காலிக வசிப்பிடங்களாக மாற்றி, அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 6 அம்சங்களை மாநில அரசு தான் செய்யவேண்டும். தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களால் சிறுசிறு உதவிகள் தான் செய்ய முடியுமே தவிர இதுபோன்ற பெரும்பணிகளையெல்லாம் அவர்களால் நிறைவேற்ற இயலாது. எனவே கிடைத்ததையெல்லாம் சுருட்டுவது என்ற கெட்ட நோக்கத்தோடு வெள்ள நிவாரணப்பணிகளையும் அணுகாமல், மனிதநேயத்தோடு சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய வரலாறு காணாத கனமழை, கடும்புயல், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்திட மாநில அரசை வலியுறுத்துகிறேன். புதிய தமிழகம் கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளிலும், புதிய புதிய நகரங்கள் உருவான இடங்களிலும் அனைத்து மக்களுக்கும் உணவு, தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களையும், நிவாரண உதவிகளையும் ஆங்காங்கே செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
05/12/2023.