இயற்கைப் பேரிடர் நடவடிக்கைகளில் அரசியல் செய்யக்கூடாது ! மத்திய அரசிடம் உதவி கேட்கக் கெளரவம் பார்க்க வேண்டாம் !!

மக்களைக் காப்பாற்ற வெள்ள மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்!
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த அபரிமிதமான மழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைவரது கணிப்புகளையும் மீறிப் பன்மடங்கு எனத் தெரிய வருகிறது. மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் முக்கியச் சாலைகளை தவிர, மக்கள் குடியிருப்பு உள்ள பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சிறிதளவும் குறையவில்லை. வடசென்னைப் பகுதிகளான சூளை, கொரட்டூர், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னையின் தென்பகுதியில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு, பெருங்குடி போன்ற பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளிலும் மக்கள் வீட்டைவிட்டே வெளியேற முடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
நேற்று முதல் 1100 ஃபீடர்களிலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது என்று அறிவித்திருந்தாலும், கள அளவில் நேர்மாறான செய்திகளே வருகின்றன. நேற்றைய தினம் மதியத்திற்குப் பிறகு, ஆங்காங்கே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகிறார்களே தவிர, பெரிய அளவிற்கு மீட்புப் பணிகள் நடைபெறவில்லை என மக்கள் கூக்குரலிடுவது மிகுந்த வேதனையளிக்கிறது. ட்ரோன்கள் மூலமாக எடுக்கப்பட்டு வெளியாகும் கழுகுப்பார்வைக் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. எங்கு பார்த்தாலும் சென்னை வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தளப் பகுதிகளை மட்டுமே குடியிருப்புகளாகக் கொண்டிருக்கக்கூடிய மக்களின் பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது; அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு, குறைந்தபட்சம் படகு வசதி கூட செய்து தரப்படாததால் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். வேளச்சேரி பகுதியில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கு இதுவரை எந்தவிதமான மீட்புப் படைகளும் செல்லவில்லை.
மின்வசதி இல்லாத நிலையில், மெழுகுவர்த்திகள் கூட கிடைக்காத அவலநிலை. கடும் மழையிலும் குளிரிலும் காப்பாற்றிக் கொள்ளப் போர்வைகள் கூட கிடைக்கவில்லை. சென்னை முழுவதும் குடிநீர் மற்றும் பால் தட்டுப்பாடு. மழை வெள்ளத்திலிருந்து தப்பித்து, தற்காலிகமாக வீட்டைக் காலி செய்து விட்டு வெளியூர் செல்லலாம் என்று முயற்சி செய்தால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. வெள்ளத்தில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை மீட்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளை இரவு பகல் பாராது செய்திட வேண்டும்.
சேதங்களின் அடிப்படையில் பார்க்கின்றபொழுது, ஆயிரக்கணக்கான மீட்புக் குழுக்கள் தேவைப்படும். எனவே, மக்களின் கோபம் அதிகரிப்பதற்கு முன்பு, மத்திய அரசு மற்றும் அண்டை மாநிலங்களின் மீட்புக் குழுக்களையும் விரைந்து சென்னைக்கு அழைத்து வருவதற்குண்டான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இது அரசியலோ கெளரவமோ பார்க்க வேண்டிய நேரமல்ல.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, உண்மை நிலைகளை எடுத்துச் கூறி, முதலில் மக்களை ஆபத்தான நிலையிலிருந்து மீட்பதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, மக்கள் உயிர் வாழ்வதற்கே தத்தளிக்கின்றபோது, அவசரகால முதற்கட்ட மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசு செய்யாமல், மத்திய அரசிடமிருந்து 5000 கோடி ரூபாய் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? வெள்ளத்தில் சிக்கி பால், பன், ரொட்டி, டீ, காபி கூட கிடைக்காமல் 4 நாட்கள் அல்லல்படக்கூடிய மக்களுக்கு 5,000 கோடியல்ல 50,000 கோடியே மத்திய அரசிடம் நிதி பெற்றாலும், பணத்தைக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்க முடியுமா? மாநில அரசினுடைய அணுகுமுறை முற்றிலும் தவறாக இருக்கிறது.
முதலில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவிக்கின்ற மக்களை மீட்டு, அவர்களை தங்க வைப்பதற்குப் பாதுகாப்பான, சுகாதாரமான இடங்களை ஏற்பாடு செய்து தரவும், வெள்ளம் முழுமையாக வடிந்து அவர்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தரவும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2015-ஐக் காட்டிலும் இப்பொழுது அதிகமான மழை, இயற்கை வெள்ளம் – செயற்கை வெள்ளம் என்ற ஒப்பீட்டு அரசியல் கருத்துக்கள் எல்லாம் ஆபத்துக்கு உதவாது. கடந்தகால அரசுகளை விமர்சிப்பதற்கோ, மத்திய அரசிடம் வீண் பகையோ, குதர்க்கமோ செய்வதற்குண்டான நேரமும் இதுவல்ல. கடந்த 48 மணிநேரத்தில் 20% மீட்புப் பணிகள் கூட நடைபெறவில்லை எனத் தெரிய வருகிறது. எங்கு நோக்கினும் மக்களின் அலறல் சத்தமே கேட்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்கள் அனைவருமே இந்தியக் குடிமக்கள் தான்; அவர்களைப் பாதுகாக்கவேண்டியப் பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. எனவே சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி, மாநில அரசு அனைத்து வெள்ள மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
07.12.2023.