செங்கமலப்பட்டியை தொடர்ந்து நாரணாபுரத்திலும் இன்று பட்டாசு ஆலை விபத்து! தொடரும் உயிரிழப்புக்கள், முடிவுக்கு கொண்டு வர முனைப்பு காட்ட வேண்டும்.!!

பட்டாசு ஆலை நகரமான சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான சிறு மற்றும் பெரிய நிறுவனங்களில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்படுவதும், அதனால் நிகழும் உயிரிழப்புக்களும் மிகுந்த கவலை அளிக்கின்றன.
நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் கூட வருமானம் ஈட்ட முடியாத நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்கள் வேறு வழியின்றி பட்டாசு ஆலை வேலைக்கு செல்கின்றனர். விபத்துக்களை தடுக்க எத்தனையோ விதிமுறைகள் இருந்தும், அதைக் கண்காணிக்க வேண்டியவர்களின் கரங்கள் கறைபடுவதால் ஏழை, எளிய மக்கள் ரத்தக் கறைக்கு ஆளாகிறார்கள்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிவகாசி செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்; இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நாரணாபுரம் புதூரில் மற்றொரு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.
ஒவ்வொரு முறையும் விபத்தின் போது சம்பந்தப்பட்ட துறையினர் பதட்டம் காட்டுவதையும், சில ஆயிரங்களை நட்ட ஈடாக குடும்பங்களுக்கு கொடுப்பதையும் மட்டுமே தீர்வாக கருதினால் அது மிகவும் தவறான நடைமுறையாகும். விலைமதிப்பற்ற உயிரை வேலைக்கு செல்லும் இடத்தில் துறப்பது அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எவ்வளவு பெரிய இழப்பு, சோகம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?? இது போன்ற விபத்துக்களை அடிப்படையாக வைத்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ஓர் தொழில் நாளடைவில் நசுங்கி போகக் கூடிய நிலைக்கு செல்வதற்கு தொழில்துறையினரும் அதிகார வர்க்கமும் துணை போகிவிடக்கூடாது.
“தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும்; தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற கண்ணோட்டத்தோடு இந்த பிரச்சனையை அணுகினால் மட்டுமே தீர்வு வரும். என்ன தான் இயந்திரமயமானாலும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே தவிர, ஆட்களே இல்லாமல் எந்த தொழிலையும் செய்ய இயலாது.
விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு உண்டான கண்காணிப்பு அமைப்புகளில் நிலவும் ஊழலே இந்த விபத்துகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் காரணமாகும். பாதுகாப்பற்ற முறையில் நடத்தப்படும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காத வரையிலும் அல்லது அந்த உயிர் இழப்புகளுக்கு காரணமான நிகழ்வுகளுக்கு முதல் குற்றவாளிகளாக அதிகாரிகளை சேர்க்காத வரையிலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது எளிதானது அல்ல.
மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடிய வெடி பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆனாலும், மாநில அரசு அல்லது மாவட்ட நிர்வாகங்கள் வழங்கக்கூடிய அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் ஆனாலும் வரக்கூடிய காலகட்டங்களில் விதிமுறைகளை நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே கடைபிடிக்கவும், விதிமுறைகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது உரிமங்களை ரத்து செய்யவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும்; விதிமீறல்களை கண்காணிக்க தவறிய அதிகாரிகளே அந்த விபத்துக்கு பொறுப்பேற்கக் கூடியவர்கள் என அறிவிக்கும் முடிவையும் மத்திய,மாநில அரசுகள் எடுத்திட வேண்டும்.
ஒவ்வொரு முறையும் விபத்து நடக்கின்ற பொழுதெல்லாம் அதுவே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோமே தவிர, ஆனால் சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெடி விபத்துகளும்; ஏழை மக்களின் உயிரிழப்புக்களும் தொடர் கதையாகிறது. அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய மத்திய, மாநில அரசின் அனைத்து நிர்வாகங்களும் இனிமேலாவது மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும். அதிகாரிகள் மனிதநேயத்தோடும் கடமை உணர்வோடும் கறைபடியா நெஞ்சத்தோடும் பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
செங்கமலப்பட்டியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூபாய் 25 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூபாய் 10 லட்சமும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
தலைவர்& நிறுவனர்,
புதிய தமிழகம் கட்சி.
11.05.2024