தொடரும் வெடி விபத்துக்கள்! துளியும் கண்டுகொள்ளாத திமுக அரசு!

அறிக்கைகள்
s2 54 Views
  • Continued Explosions
  • Continued Explosions
Published: 01 May 2024

Loading

2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பகல் பாராது கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளும் மக்களும் எவ்வளவுதான் போராட்டம் நடத்தினாலும், திமுக அரசு அதைக் கண்டு கொள்வதாக இல்லை.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகருக்குச் சொந்தமான முன்னீர் பள்ளம் கல்குவாரியில் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மிக உயரமான இடத்திலிருந்து 300 அடி ஆழ குவாரிக்குள் விழுந்து பலர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை தென்பாளையத்தில் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரக்கூடிய சட்டவிரோதமான கல்குவாரியை மூட வலியுறுத்தி பலமுறை போராடியும் அதையும் கண்டு கொள்வதாக இல்லை.

இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் பாறைகளை வெடிக்கச் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்து கடையநல்லூரைச் சேர்ந்த பெரிய துரை, சிவகாசியைச் சேர்ந்த குருசாமி, திருமங்கலத்தைச் சேர்ந்த கந்தசாமி ஆகியோர் அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள்? காயமுற்று உள்ளார்கள்? என்பது குறித்த முழு தகவல்கள் வெளிவரவில்லை.

மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் நேரடியாகவோ அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மூலமாகவோ இதுபோன்ற குவாரிகளை இயக்குவதால் அவர்கள் எவ்வித சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதில்லை. இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது மட்டும் பொதுமக்களின் கோபத்தை குறைப்பதற்காக சில நாட்கள் குவாரிகளை மூடிவிட்டு, பின் வழக்கம் போல இயக்குவது வாடிக்கையாகிவிட்டது.

தென்தமிழகத்தின் நிலவும் கடுமையான வேலைவாய்ப்பின்மையின் காரணமாக ஏதோ ஒரு தொழில் கிடைத்தால் போதும் என்ற சூழலில் உயிரைப் பணயம் வைத்து ஏழை, எளிய மக்கள் இதுபோன்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுகிறார்கள். தென் தமிழக மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியாளர்கள் ஏழை மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து இது போன்ற கல்குவாரிகளை இயக்குவதால் தான் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருகின்ற அனைத்து கல்குவாரிகளும் விரைந்து மூடப்படவில்லை எனில் தமிழகமெங்கும் இதற்கு எதிராக மக்கள் கொந்தளிப்பும், மக்கள் திரண்டெழுந்து புரட்சியில் ஈடுபடக்கூடிய காலகட்டமும் விரைவில் உருவாகும்.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்ட மக்களை கல்குவாரி மற்றும் மணல் கொள்ளையால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து முற்றாக விடுதலை செய்யக் கூடிய வகையில் அனைத்து கல்குவாரிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். மணல் கொள்ளை மற்றும் கல்குவாரிகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக விரைவில் பெரும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கிறேன்.

இன்றைய விபத்தில் உயிரிழந்த பெரியதுரை, குருசாமி, கந்தசாமி உள்ளிட்டோரின் குடும்பங்களுக்குக் குறைந்தது ரூ 25 லட்சம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
தலைவர்& நிறுவனர்,
புதிய தமிழகம் கட்சி.
01.05.2024