5 மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!

அறிக்கைகள்
s2 290 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 04 Dec 2023

Loading

மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சிக்கும் அந்த வெற்றிக்குப் பின்புலமாக நின்றிருக்கக்கூடிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுக்கும் எனது நெஞ்சங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலுங்கானாவில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கும் அதனுடைய வெற்றிக்குப் பின்புலமாக இருந்த அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திருமதி.சோனியாகாந்தி, இராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிசோரம் மாநிலத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது.

காட்சி ஊடகங்களின் கணிப்புகளுக்கு மாறாகத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. இராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிக் கோட்டுக்கு அருகாமையில் இருக்கிறது என்றும், மத்தியப் பிரதேசத்தில் இழுபறி என்றும், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தேர்தல் முடிவிற்கு முந்தைய மற்றும் பிந்தையக் கள ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால் முடிவுகள் வேறுமாதிரியாக அமைந்துவிட்டன. ஓட்டுப்போட்ட மக்கள் வாக்களித்த பிறகு உண்மைநிலையை வெளிப்படுத்தவில்லையா? அல்லது புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் தவறுகள் ஏற்பட்டுவிட்டனவா எனத் தெரியவில்லை. ஆனால், மக்கள் வாக்களிப்பை மிகவும் இரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள்; அதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்றே தெரிகிறது.

எனவே ஓராண்டுக்கு அல்லது 6 மாதங்களுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வருங்காலத்தில் எந்தளவிற்கு பலனளிக்கும் என்று கூற முடியாது. இராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது; ஆனால் மத்தியப் பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக மாற்றம் ஏற்படாமல் இருக்கிறதே, அது ஏன்?

கடந்த 20 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஏற்படாத விந்தை மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது என்ன நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் சரி, முதலமைச்சர் செளகானின் தலைமையின் கீழ் மக்கள் மதிமயங்கிக் இருக்கிறார்களா? சட்டீஸ்கரில் உறுதியாக காங்கிரஸ் தான் வெற்றிபெறும் என்று எல்லா ஊடகங்களும் அறுதியிட்டு, உறுதியாகச் சொன்னார்களே! அங்கே 54 இடங்களுளைப் பிடித்து பாஜக பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தெலுங்கானாவில் பத்தாண்டுகால சந்திரசேகரராவ் அவர்களின் பாரத் ராஸ்ட்டிர சமிதி கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தெலுங்கானா உருவாகுவதற்கு பெரும்முயற்சி எடுத்த காங்கிரஸ் கட்சிக்கு, ஆரம்பத்தில் தெலுங்கானா மக்கள் ஆதரவு தரவில்லை எனினும், பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு நன்றிக் கடனாக இந்த வெற்றியைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களிலுமே எந்த மாநிலத் தலைவரையும், முதல்வர் வேட்பாளரையும் முன்னிறுத்தாமல், மோடிஜி அவர்களை மட்டுமே முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றிருக்கிறது. ’இந்தியா’ கூட்டணி எவ்வளவு கடுமையான விமர்சனங்களை மோடிக்கு எதிராக வைத்தாலும், 3 முக்கியமான மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மத்திய மற்றும் வடக்கு மாநிலங்களில் மோடி அவர்களின் செல்வாக்கு குறையவில்லை, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் குறைய வாய்ப்பில்லை என்பதே இம்முடிவுகளின் வெளிப்பாடு ஆகும். எனவே அவர் தனது அறிக்கையில் கூறியபடி, 2024 நாடாளுமன்றத் தேர்தலின் மோடி அவர்கள் வெற்றி பெற்று 3-வது முறையாகப் பிரதமர் ஆவதற்குண்டான அச்சாரமே இந்த 3 மாநிலத் தேர்தல் வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாம். தேர்தல் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அதற்கான முழுக்காரணிகளைச் சொல்லிவிட முடியாது. 3 மாநிலங்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதங்கள் காங்கிரசை குறைத்து மதிப்பிடக்கூடிய வகையில் இல்லை; இராஜஸ்தானில் பாஜக-41.69%, காங்கிரஸ்-39.53%, வித்தியாசம் 2% மட்டுமே; சட்டீஸ்கரில் பாஜக-46.27%, காங்கிரஸ்-42.23%, வித்தியாசம் 4% மட்டுமே; மத்தியப் பிரதேசத்தில் பாஜக-48.55%, காங்கிரஸ்-40.40%, வித்தியாசம் 8% மட்டுமே. தெலுங்கனாவில் காங்கிரஸ்-39.40%, பாரத் ராஸ்ட்டிர சமிதி-37.35%.

எனவே காங்கிரசின் செயல்பாட்டைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், தேர்தல் உத்திகளால் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பை இழந்திருப்பது தெரிகிறது. குறிப்பாக, ’இந்தியா’ கூட்டணியில் அங்கம்பெற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டமன்றத் தேர்தலுக்கும் சேர்த்து செயல்பட்டிருந்தால் சட்டீஸ்கர் மற்றும் இராஜஸ்தானை இழந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இராகுல்காந்தி அவர்களுடைய சாதிவாரிக் கணக்கெடுப்புப் பிரச்சாரம் இந்த 5 மாநிலத் தேர்தல்களில் எந்தவிதமான தாக்கத்தையும் உருவாக்கவில்லை; அதன் மூலமாக இந்துக்களுடைய ஓட்டுகளைப் பிரித்து வாங்கிவிடலாம் என்ற அவர்களின் திட்டமும் எடுபடவில்லை.

3 மாநிலங்களில் பாஜகவின் அமோக வெற்றிக்கு அதன் முக்கியமான அம்சமாக, மோடி அவர்களுடைய குறையாத, சரியாத செல்வாக்கு இருப்பினும், பாஜகவின் சரியான திட்டமிடல், சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகளின் துணையோடு பல மாதங்கள் கள அளவில் அவர்கள் ஆற்றிய பணியும், ஓயாத உழைப்பும் என்பதை எவரும் மறுத்திட முடியாது. நாம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று, அதன்மூலம் இந்த மண்ணில் மதிப்புமிக்கவர்களாக இருந்து, மற்றவர்களுக்குத் தொண்டாற்றக் கூடியவர்களாகத் திகழ வேண்டுமெனில், அளவற்ற பொறுமையும் அர்ப்பணிப்பும், ஓய்வற்ற உழைப்பும் மிகமிக அவசியம் என்பதையே இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு பாடமாக விளக்குகின்றன.

வெற்றி பெற்றவர்கள், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக, விரைவாக, நிறைவாக நிறைவேற்றவும்; வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள் நம்பிக்கைத் தளராமல் மீண்டும் நமக்கான வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையுடனும் பணியாற்றவும் வாழ்த்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
04/12/2023