செப்டம்பர் – 11, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவுவேந்தல் நிகழ்ச்சி – கட்டுப்பாடுகளைத் தளர்த்திடுக!! உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கடிதம்!!

அறிக்கைகள்
s2 361 Views
  • Immanuel Sekaran

    தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

  • Immanuel Sekaran
Published: 08 Sep 2021

Loading

செப்டம்பர் – 11, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவுவேந்தல் நிகழ்ச்சி – கட்டுப்பாடுகளைத் தளர்த்திடுக!!

உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கடிதம்!!

பெறுநர்,
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்,
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகம்,
மயிலாப்பூர், சென்னை – 600004.

பொருள்: தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கட்டுப்பாடுகளை தளர்த்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துவது தொடர்பாக.

பேரன்புடையீர், வணக்கம்!
சமத்துவத்தை நிலைநாட்டப் போராடி உயிர்நீத்த, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு நாளை, கடந்த 35 ஆண்டுகளாக இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடத்தில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகிறோம். புதிய தமிழகம் கட்சியால் துவங்கப்பட்டு, புதிய தமிழகம் கட்சியினர் மட்டுமே பெருந்திரளாய் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், இப்பொழுது பல்வேறு சமூக அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் திரளாகக் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று உச்சக்கட்டமாக இருந்த காரணத்தினால், கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்ற நானும் கலந்து கொள்ள இயலவில்லை. அதேபோல, புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், அந்தந்த மாவட்டங்களில், கிராமங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். இந்தாண்டு கரோனா பெருந்தொற்று வெகுவாகக் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன; தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், வணிக வளாகங்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன; பொதுமக்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டனர்; பொது இடங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணியும் பழக்கத்தைத் தாங்களாகவே கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளவும் மக்கள் பெரிதும் பழக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு காவல்துறையும், வருவாய்துறையும் முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்து, அளப்பரிய தியாகம் செய்த அந்தத் தியாகிக்கு உரிய மரியாதை செய்யும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 11-க்கு முன்பாக புதிய தமிழகம் நிர்வாகிகளை முறையாக அழைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் அந்நிகழ்ச்சியை அமைதியாக நடத்துவதற்குண்டான கலந்தாலோசனைகள் நடைபெறும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி அதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, அதிகாரிகளை மட்டுமே வைத்து ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் எண்ணற்றக் கட்டுப்பாடுகளை விதித்து, செயல்முறை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் துவங்கப்பட்டு, புதிய தமிழகம் கட்சியால் நடத்தப்பட்டு வரக்கூடிய அந்நிகழ்ச்சி குறித்து, புதிய தமிழகம் கட்சியை அழைக்காமல், ஏதோ ஓர் அமைப்பை மட்டும் அழைத்து, அவர்களிடத்தில் கையொப்பம் பெற்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. அதேபோல, நேற்றைய முன்தினம் (6.9.2021) சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடத்திலிருந்து ஓர் அறிக்கை வந்திருக்கிறது. பிற மாவட்ட அதிகாரிகளிடத்திலிருந்தும் எப்பொழுது அறிக்கைகள் வரும் என்று தெரியவில்லை. இன்னும் மூன்று தினங்களே எஞ்சியிருக்கின்றன.

இதுவரையிலும் இல்லாத ஒரு நடைமுறையாக, நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அனைவருமே சொந்த வாகனங்களிலே மட்டுமே வர வேண்டும்; அதில் 5 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்; அதுவும் 7-ஆம் தேதிக்குள்ளாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடத்தில் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் அந்த செயல்முறை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இது நடைமுறையில் எந்தளவிற்கு சிரமமானதும், சிக்கலானதும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஓர் ஆண்டு ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்ததை மட்டுமே நினைவில் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதிப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் இம்மண்ணில் அளப்பரிய தியாகம் செய்தவர். பிற நாட்டவரை எதிர்த்துப் போராடுவது மட்டுமே சுதந்திரப் போராட்டம் என்று கருதக் கூடாது. இந்தியாவில் இன்று வரையிலும் நிலவி வரக்கூடிய சாதி ரீதியான பாகுபாடுகள், ஒடுக்கல்கள், ஒதுக்கல்களை எதிர்த்துப் போராடுவதும் சுதந்திரப் போராட்டமே. தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களைப் பொறுத்தமட்டிலும், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடாக இருக்கக்கூடிய சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், மண்ணுரிமையையும், மனித உரிமையையும் மீட்டெடுக்கப் போராடியதற்காகக் கொலையுண்ட அளப்பரிய தியாகி. அவர் வெறுமனே சாதி ஒழிப்பு வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டவர் அல்ல; பார்வையால், வார்த்தையால், செய்கையால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்த மண்ணினுடைய இலட்சோபலட்சம் பூர்வீகக்குடி மக்களுடைய சுயமரியாதையை முன்னிறுத்தியதற்காக, வெட்டி சாய்க்கப்பட்டவர் அவர். சுதந்திர இந்தியாவில் உண்மையான சமத்துவத்திற்காகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், சமநீதியை காக்கவும், தன்னையே அர்ப்பணித்த முதல் மாவீரர் அவர். எனவே அவர் மரணமெய்திய அவருடைய நினைவு நாளை, ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!” என்ற கணியன் பூங்குன்றனார் அவர்களுடைய உயரியக் கருத்தை சபதமாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அனைவருமே அந்த அளப்பரிய தியாகினுடைய நினைவு நாளை மிகச் சிறப்பாக அனுசரிக்க வேண்டும்.

1957-ஆம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில், பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியதை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் நான் அதை எடுத்து சொல்ல விரும்புகிறேன். ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது”, என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த அளப்பரிய தியாகம் செய்த தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாடுங்கள் என்று இந்த அரசிடம் கோரிக்கை வைக்க வரவில்லை; அவருக்கு மணிமண்டபத்தைக் கட்டித் தாருங்கள் என்றும் கேட்க வரவில்லை. ஆனால் அவரை மிக உயர்வாக மதிக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் மக்களும் அவரின் தியாகத்தை நன்கு தெரிந்துகொண்ட பல அரசியல் கட்சிகளினுடைய தலைவர்களும் அவருடைய நினைவிடத்திற்கு வருகின்றபொழுது, கரோனாவைக் காரணம் காட்டி இப்பொழுது விதித்திருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் நல்ல நோக்கம் கொண்டதாகத் தெரியவில்லை; அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

கடந்த 3 மாதங்களில் என்னென்ன விழாக்களெல்லாம் நடைபெற்றிருக்கின்றன, அதில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள், அந்த விழாக்களுக்கு எப்படியெல்லாம் தளர்வுகள் வழங்கப்பட்டன என்பதையெல்லாம் புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் உன்னிப்பாகக் கவனித்துத் தான் வருகிறார்கள்.

எனவே ஒரு கண்ணிற்கு வெண்ணெய், ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பு என்று சொல்வதைப் போல, தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் என்று வந்துவிட்டாலே தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதும், தேவையற்ற பீதிகளை உருவாக்குவதும், தமிழ் சமூகங்களுக்கிடையே நிரந்தரமாக சாதியச் சுவர்களை எழுப்புவதுமே அண்மைக்கால வாடிக்கையாகிவிட்டது. நான் இந்த அறிக்கையோடு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விதித்திருக்கக்கூடிய கட்டுப்பாடுகளையும் இணைக்கிறேன். 75 ஆண்டுகளாக சமூகநீதி பேசக்கூடிய இந்தத் தமிழ் மண்ணில் தான் இத்தனை எல்லைக்கோடுகளை விதிக்கிறார்கள். இம்மண்ணின் மக்களில் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மக்களின் பகுதி வழியே வரக்கூடாது என்ற கொடுமை நடக்கிறது.

தேவேந்திரகுல வேளாளர்கள் 100 வருடங்களுக்கு மேலாக, எண்ணற்ற சாதியக் கொடுமைகளையும், படுகொலைகளையும், வறுமைகளையும், எத்தனையோ ஓரவஞ்சனைகளையும் சந்தித்தே, தங்களது சொந்தக்காலிலே, சொந்த அடையாளத்திலே நிற்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான சலுகைகளையோ, அனுகூலங்களையோ எதிர்பார்க்கவில்லை. டாஸ்மாக் கடைகளால் வராத நோயோ, பாதிப்போ கரோனாவால் வந்துவிடப்போவதில்லை என்று அம்மக்கள் கருதுகிறார்கள்.

எனவே, செப்டம்பர் 11-ஆம் தேதி, வழக்கம் போல தமிழ்நாடெங்குமிருந்து புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும், அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுத்தலை வழங்க வேண்டுமென்றுக் கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.09.2021