நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் இரத்து செய்யுமா? அரசியல் இலாபத்திற்காக இஸ்லாமியர்களை பீதிக்கு ஆளாக்கக் கூடாது!

அறிக்கைகள்
s2 358 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 09 Sep 2021

Loading

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் இரத்து செய்யுமா?
அரசியல் இலாபத்திற்காக இஸ்லாமியர்களை பீதிக்கு ஆளாக்கக் கூடாது!

இந்திய அரசியல் சாசனத்தின் 11-வது சரத்தின்படி, இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடிய சட்டத்தை இயற்றும் முழு அதிகாரமும் இந்திய நாடாளுமன்றத்திற்கே உண்டு. இதில் மாநில அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. எனினும், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டமன்றத் தீர்மானம் CAA மீது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

CAA சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதை அமலாக்குவதற்குக் கூட கால அவகாசம் இல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா பெருந்தொற்று குறுக்கே வந்துவிட்டது. 2021 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து அரசியல் பிரச்சாரம் செய்வதற்கும், இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் முழுமையாக ஈர்த்துக் கொள்வதற்கும் இது ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் CAA-வை எதிர்த்து சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, எப்படி இரத்து செய்ய முடியுமென்று ஓர் இஸ்லாமிய அமைப்புக் கூட திமுகவிடம் கேள்வி எழுப்பவில்லை.
இந்த சட்டம் கொண்டு வந்ததினுடைய நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத பல இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் ரீதியாக வாக்குகளை அறுவடை செய்யத் திட்டமிட்டவர்களுக்கு எளிதாக இரையாயின.

இந்தியாவினுடைய எல்லைக்குள் பூர்வீகமாக வாழக்கூடிய எந்தவொரு குடிமகனுடைய குடியுரிமையையும் பறிக்கக் கூடிய சட்டம் அல்ல அது; வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அங்கு வாழவே முடியாது என்ற நிலையில், பாஸ்போர்ட்டுகள், முறையான பயண ஆவணங்கள் இல்லாமலோ, அகதிகளாகவோ, சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டும், பல்வேறு விதமான வழிகளில் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், புத்திஸ்ட்டுகள், ஜெயினர்கள் ஆகியோருக்கு ’Naturalization’ என்ற பிரிவின் கீழ் நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே இது குடியுரிமை வழங்கும் சட்டமே தவிர, குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல.

எனினும் இந்த நோக்கத்தைப் புரியாமலே சிலர் மனம் போன போக்கிலே பேசுகிறார்கள். திமுகவிற்கு அச்சட்டத்தினுடைய உள்ளார்ந்த அம்சம் நன்கு தெரியும். எனினும் இஸ்லாமியர்களின் வாக்குவங்கி சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக, திமுக எடுத்திருக்கும் CAA எதிர்ப்பு நிலைப்பாட்டால் ஏற்படும் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை திமுக சிறிது காலத்திற்குப் பின்பே உணரும். குடியுரிமை வழங்குவதில் மனிதநேயம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படக் கூடாது. அளவுகடந்த மனிதநேயம் மற்றும் ஜனநாயகப் பண்புகளால் ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற குடியேற்றப் பிரச்சினைகளால் எவ்வளவு சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கின்றன என்பதை அந்நாடுகளுக்கு நேரடியாகச் சென்று, அறிந்து வர வேண்டும்.
பர்மா ரோகிங்யோ முஸ்லிம்கள், பாகிஸ்தான் சியா மற்றும் அகமதியா பிரிவினர், ஆப்கானிஸ்தான் ஹஜாரஸ், உஜ்பெக்ஸ், தஜிகிஸ் போன்ற இஸ்லாமியப் பிரிவினர் அந்த நாடுகளில் இஸ்லாமியர்களாலேயே மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அண்மையில், ஆயுத பலத்தோடு ஆட்சி, அதிகாரத்தை பிடித்த பாஸ்தூன் (Pashtun) என்றப் பிரிவின் மேலாதிக்கமிக்க தலிபான்கள் அங்குள்ள ஹசாரா, சியா சிறுபான்மைப் பிரிவினர் எண்ணற்றோரை சுட்டுக் கொன்றதை நாம் அறிவோம். ஆனால், மனிதாபிமானத்தையும் தாண்டி, இந்த தேசத்தினுடைய இறையாண்மையையும், 140 கோடி மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது.

1971-ல் மேற்கு பாகிஸ்தானை எதிர்த்து, வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திய பொழுது நடத்தப்பட்டக் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர். அந்த ஒரு கோடி பேருக்கு தினமும் உண்ண உணவும், தங்க இடமும், உடுத்த உடையும் என்று இந்தியா பெரும் சுமைகளை சுமக்க வேண்டிய சூழல் இருந்தது.

மனிதநேயத்தினுடைய அடிப்படையில் தான் அத்தனை பேருக்கும் இந்தியா உணவும், இடமும் கொடுத்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அகதிகளுடைய பிரச்சினைகளை இந்தியா சமாளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டதாலும், வலிந்து நம்மீது பாகிஸ்தான் போர் தொடுத்ததாலும் நாம் போர்களம் புக வேண்டிய நிலை உண்டாயிற்று. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் பாகிஸ்தானை வென்று வங்காளதேசம் உருவாகுவதற்கு உற்றத் துணையாக விளங்கினார். அதன்பின் பலரும் தங்களுடைய சொந்த நாடு திரும்பினார்கள்.

எனினும் மேற்குவங்கத்தில் மட்டும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக இன்றும் குடியிருக்கிறார்கள் என்றே புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, அவர்களுடைய வாக்குகளே அம்மாநில அரசியல் ரீதியான வெற்றி, தோல்விகளுக்கு முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றன. இதன் காரணமாக, சொந்த மண்ணிலேயே மேற்குவங்க மாநிலத்தில் இந்து மக்கள், குறிப்பாக விளிம்பு நிலையிலுள்ள மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகும் நிலைகளைக் கேள்விப்படுகிறோம்.

ரோஹிங்யோ மற்றும் வங்காளதேசம் பகுதியிலிருந்து இப்பொழுதும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இந்திய தேசத்திற்குள் ஊடுறுவி, இந்தியா முழுமைக்கும் பரவி, இந்தியாவின் அந்தந்த மாநில மக்களுடைய வேலைவாய்ப்பு உரிமைகளைத் தட்டிப் பறிக்கப்பதன் மூலம், பல மாநில மக்களின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் வங்காளிகளுடைய சட்டவிரோதக் குடியேற்றத்தால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோவதையும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அளவு மாற்றங்கள் குணமாற்றங்களை நிகழ்த்தும் என்பது அறிவியல் விதி. அனைத்து இந்திய மக்களும், பெரும்பாலான மதப் பிரிவினரும் எதிர்த்தபோதும், 1947-ல் இந்திய நாடு மத ரீதியாகப் பிளவுண்டது. அதனுடைய பாதிப்புகளிலிருந்து பாரதத் திருநாடு இன்னும் மீளவில்லை.
இதையெல்லாம் கணக்கிலே கொண்டு தான், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்திஸ்ட்டுகள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

1955-ஆம் ஆண்டு சட்டத்தின்படி ஒன்று குடியுரிமை உண்டு; இல்லையென்றால் நிராகாரிப்பு. ஆனால், அன்று இருந்த சூழ்நிலைகள் என்பது வேறு; இன்று வேறு. எந்த தேசத்தைக் காட்டிலும் எப்பொழுதும் போர்மேகம் சூழ்ந்திருக்கக் கூடிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. அண்டை நாட்டில் பாதிக்கப்படக்கூடிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது வேறு, குடியுரிமை கொடுப்பது என்பது வேறு. உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு அதிகமாக பிற நாட்டவர்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுறுவுகிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவிற்கு ஒரு பாதிப்பு வந்துவிட்டால், இந்திய மக்களின் நிலை என்னாகும்? எனவே இந்திய தேசத்திலிருக்கிற ஒவ்வொரு குடிமகனும் சாதி, மத, இன, மொழி எனும் அனைத்து விதமான வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு, இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்தில், இந்திய தேசத்தைக் கட்டிக்காக்க வேண்டும்.

தேச ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில், தங்களுடைய மத, இன உணர்வுகளை தனித்தோ, கூட்டாகவோ எவரும் வெளிப்படுத்தக் கூடாது. 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வென்று, ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்திய மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கக் கூடியக் குடியுரிமையை, அவர்கள் எந்த சாதி, மத, இன, மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும், இரத்து செய்யவோ, பறிக்கவோ முடியவே முடியாது. அதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மா. அந்த வலிமைமிக்க அரசியல் சாசனத்தின் மீதும், இந்திய தேசத்தின் மீதும் இந்தியாவில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் அப்பழுக்கற்றப் பற்று வைக்க வேண்டும்.

அரசியலுக்காக சில அரசியல் கட்சிகள் எழுப்பும் கோசங்களுக்குப் பின்னால் இஸ்லாமியர்கள் செல்வதும் தவறு, தேவையில்லாமல் அவர்கள் மனம் கலங்குவதும் தவறு. அரசியல் இலாபத்திற்காக சில அரசியல் கட்சிகளும், வணிக நோக்கங்களுக்காக சில ஊடகங்களும், ஊடக வெளிச்சத்திற்காக சில சமூகவியலாளர்களும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பூச்சாண்டி காட்டலாம். இஸ்லாமியர்களிலும் ஆயிரமாயிரம் கற்றிந்தவர்கள் இருக்கிறார்கள்.

மேற்கு எல்லையில் பாகிஸ்தானிலிருந்து பயிற்சியளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுவறுவலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கக் கூடிய காஷ்மீரில் பகுதியில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், லடாக் பகுதியிலிருந்து வடகிழக்கு அருணாச்சலப் பிரதேசம் வரையிலும் ஏறக்குறைய 3000 கி.மீ தூரத்திற்கு சீன எல்லையில் நிலவும் பதட்டம், பர்மா மற்றும் வங்காளதேசப் பகுதியிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஊடுறுவல், தென் சீனக் கடலில் நிலவும் பதட்டம், இலங்கையிலிருக்கக்கூடிய கம்பத்தோட்டா துறைமுகத்தில் சீனா நிலைகொண்டுள்ளதாலும் எந்த நேரத்திலும் போர்மேகம் சூழும் என்றிருக்கக் கூடிய ஓர் அபாயகரமான சூழலில், கொண்டுவரப்பட்டச் சட்டமாகவே இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் உள்ள தேசத்தின் பாதுகாப்பை புரிந்து கொண்ட பல அரசியல் கட்சிகள் இப்பொழுது மெல்ல மெல்ல அச்சட்டத்தை விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொண்டு வரக்கூடிய நிலையில், ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்திலே இந்தச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மீண்டும் இஸ்லாமியர்களை உசுப்பேற்றக் கூடியதாகவே கருதவேண்டியிருக்கிறது.

ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியும், அதனுடைய தலைமையும் ஒரு நாட்டினுடைய நலனைத் தான் பிரதானமாக முன்னிலைப்படுத்த வேண்டும்.
பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே நான் ஒரு திராவிடியன் ஸ்டாக் என்று ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கியது முதல், இந்தியப் பேரரசை ஒன்றிய அரசு என்று வலிந்து அழைப்பது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வரை, அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுவதற்கும், அரசியல் கட்சியினுடைய தேர்தல் கோசங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதில் ஸ்டாலின் தடுமாறுகிறார் என்றே தென்படுகிறது. இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்ட அரசியல் கட்சி என்ற நிலையிலிருந்து திமுகவும் தடம் புரள்கிறதோ என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் வாழக்கூடிய இந்திய மண்ணைப் பூர்வீகமாக் கொண்டு வாழக்கூடிய எந்த இஸ்லாமியராவது குடியுரிமை இழப்பார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா? சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறபோது அதில் உண்மை இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும். ஆனால், உண்மைக்குப் புறம்பாக, இஸ்லமியரிடையே மீண்டும் பீதியைக் கிளப்புவது எந்தவித்தத்தில் நியாயம் என்பதை எண்ணிப் பாருங்கள். பாஜக மீதோ, மோடி மீதோ விருப்பம் கொண்டோ அல்லது பற்று கொண்டோ அல்லது உங்கள் மீது வெறுப்பு கொண்டோ இந்தக் கருத்தை பதிவு செய்யவில்லை. இந்திய தேசத்தை அந்நிய சக்திகள் சுற்றி வளைக்கக் கூடிய அசாதாரணமான சூழ்நிலையைக் கணக்கிலே கொண்டு தான், நாம் CAA-வை அணுக வேண்டும் என்பது தான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள். தமிழகத்திலே என்றுமில்லாத அளவிற்குப் புகழ்பாடிகள் சட்டமன்ற வளாகத்தைச் சுற்றியே காத்துக்கிடக்கிறார்கள். அறிக்கைகளை நீங்கள் பேசி முடிப்பதற்கு முன்பதாகவே சால்வைகளோடும் பூங்கொத்துகளோடும் வந்து புகழ்கிறார்கள். அவர்களுடைய புகழுரைகளுக்கு நீங்கள் மயங்கக் கூடாது.

’நாடு உனக்கு என்ன செய்து என்று கேட்காதே, நாட்டிற்காக நீ என்ன செய்தாய்?’ என்று ஜான் கென்னடி கூறிய பொன்மொழிகளை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. நாமெல்லாம் அரசியலில், பொது வாழ்வில் இந்த உயரத்தை எட்டுவோம் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்கமட்டோம். இன்று தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலே நாம் அனைவரும் உள்ளோம். நம்மைக் காட்டிலும், நம்முடையக் குடும்பத்தைக் காட்டிலும், கட்சியைக் காட்டிலும் நமக்கு தேசம் தான் பெரிது. தேசத்திற்கு நாம் நன்மை செய்யாவிட்டாலும் கூட, இந்த தேசத்திற்கு தீங்கிழைத்துவிடக் கூடாது.

நீங்கள் நிறைவேற்றியிருக்கக் கூடிய சட்டமன்றத் தீர்மானம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதுவும் செய்யாது. 1921-ல் இந்திய மக்கள் பெரிய அளவிற்கு விழிப்பு பெறாத காலகட்டம். எங்களுக்கு சுதந்திரமே வேண்டாம், நீங்களே இந்த நாட்டை ஆளுங்கள் என்று ஆங்கிலேயர்களைத் தூக்கிப்பிடுத்து, எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால் போதுமென்று இருந்த நீதிக்கட்சிக் காலம் வேறு; தேசத்திற்கு சிறிய இன்னல் வரினும் கோடானகோடி பேர் இந்த தேசத்தைக் காப்பதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு களம் காண தயாராக உள்ள காலமிது. உங்களுடைய தீர்மானம் இந்திய தேசத்தினுடைய எதிரிகளுக்கு இன்பம் ஊட்டக் கூடிய வகையில் அமைந்துவிடக் கூடாது.
எனவே உங்களை நீங்கள் யாரோடு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் இரத்து செய்யாது என்று தெரிந்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? அரசியல் இலாபத்திற்காக இஸ்லாமியர்களை பீதிக்கு ஆளாக்காதீர்கள்!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.09.2021