தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65-வது நினைவேந்தல்! தியாகத் திருநாளாக அனுசரிப்போம்!!

இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க
தலையையும் கொடுப்போம்! விலைபோக மாட்டோம்!!
என சபதமேற்பீர்!
புதிய தமிழகம் நிர்வாகிகளுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறைகூவல்!

அறிக்கைகள்
s2 611 Views
  • Dr K Krishnasamy

    இம்மானுவேல் தேவேந்திரர் நினைவு நாள்

  • Dr K Krishnasamy
Published: 10 Sep 2021

Loading

செப்டம்பர் – 11, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு தினத்தில், புதிய தமிழகம் கட்சியினர் ஒவ்வோர் ஆண்டும் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக நாம் நடத்தி வருகின்ற இந்நிகழ்ச்சி, கரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு தடைபட்டது. எனினும், தமிழ்நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் பொது இடங்களில் அவருடைய திருவுருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினோம். கரோனா வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும், பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாலும் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டுள்ளதால், இந்தாண்டு தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என எண்ணினோம்.

ஆனால், பல தலைவர்களுடைய பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதித்த இன்றைய அரசு, தியாகி இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மட்டும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வதை, இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளும் சகித்துக் கொள்வதில்லை. அதன் காரணமாகவே ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி பிற மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களைத் தடுப்பதற்காகவே கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும் என்ற விதியை தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே அமலாக்குவதையும், தமிழகத்தில் நடைபெறக்கூடிய பிற நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்காக சொல்லிவிட்டு, அரசே அவற்றைத் தளர்த்தி விடுவதையும் வாடிக்கையாகவும் கொண்டிருக்கிறார்கள். வாயளவிலே சமூக நீதியும், செயலளவிலே சமூக அநீதியும் மட்டுமே இங்கு அரங்கேறுகிறது. இதுகுறித்தெல்லாம் சட்டமன்றத்திலே பேசவேண்டிய இந்த சமுதாயத்தின் பெயரைச் சொல்லி பதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் பேசுவதே இல்லை. தேவேந்திரகுல வேளாளர்கள் ஒன்றுபட்டுவிடக் கூடாது, அவர்கள் அரசியல் உணர்வு பெற்று, புதிய தமிழகம் பின்னால் அணிதிரண்டு வளர்ந்துவிடக் கூடாது, என்றென்றும் பட்டியலினப் பட்டத்தோடு தங்களின் வாக்குவங்கியாக மட்டுமே நிரந்தரமாக இருந்திட வேண்டும் என்பதை நிலைநிறுத்த, கரோனாவைக் காரணம் காட்டி இந்தாண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த அரசின் வக்கிறப் புத்தி எந்தளவிற்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. 1968-ல் கீழவெண்மணியில் தொடங்கி இன்று வரையிலும் தேவேந்திரகுல வேளாளர்களை ஒரு படி கூட அரசியல் விழிப்புணர்வு பெற விடாமல், வெறும் பசப்பு வார்த்தைகளால் திராவிடப் பட்டிக்குள் அடைத்து வைக்கும் கபட நாடகம் தொடர்கிறது. இவர்களுடைய வஞ்சகத்தின் சூழ்ச்சியை நான் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் கூட, இந்த சமுதாயத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், இளைஞர்களும், மாணவர்களும், அறிவுஜீவிகளும் புரிந்து கொள்வதாக இல்லை. அரை நூற்றாண்டு காலம் போராடி மீட்டெடுத்த தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தையும், பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையும் பொங்கி வருகின்றபொழுது, அதனை நிறைவேற்றுவதற்கு முனைப்புக் காட்டுவதற்குப் பதிலாக, மீண்டும் எஸ்.சி. என்றப் பட்டியலுக்குள் அடைத்து, அம்முத்திரையை நிரந்தரமாக்க முயற்சி செய்கிறார்கள். சமூக விடுதலைக்காகவும், தங்களுடைய அடையாளங்களை மீட்டெடுக்கவும், வலுவான தலைமையின் கீழும் அமைப்பின் கீழும் போராடினாலே வெற்றி பெறமுடியும். தங்களுடைய விடுதலைக்காக 500 முதல் 1000 ஆண்டுகள் போராடக்கூடிய எத்தனையோ இனங்கள் உலகத்தில் உண்டு. இன விடுதலை என்பது ஓர் இனம் தனக்கான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும். வீண் ஜம்பங்கள், வெற்றுப் பெருமைகள், தற்புகழ்ச்சிகள், தன் அகங்காரங்களால் எந்தவொரு சமுதாயமும் தலைநிமிர முடியாது.

இலட்சியத்துக்கான உறுதி உள்ளத்திலே இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை முன்னெடுக்கக் கூடிய தலைமையின் கீழும் அமைப்பின் கீழும் தங்களை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும். 4 பேரை வெட்டுவதால் ஒரு சமுதாயம் விடுதலை அடையாது. வெட்டுவதும், வெட்டுப்படுவதும் தொடர்கதையாகுமே தவிர அதற்குத் தீர்வு வராது. அரசியல் அதிகாரமோ, அந்தஸ்தோ, கெளரவமோ மற்றவர்கள் நம்மீது பூசக்கூடிய வர்ணமல்ல. அப்படியொரு வர்ணத்தைப் பூசிக்கொண்டாலும் அது காற்றிலும், வெயிலிலும், மழையிலும் சில நாட்களில் அது மறைந்தும் கரைந்தும் போய்விடும். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். அதையடைய இம்மண்ணை ஆள வேண்டுமென்றால் அதற்கானத் தொலைநோக்குப் பார்வையும், இலட்சியமும், அதற்கான கட்டுப்பாடும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் மிகமிக அவசியம்.

ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் வாக்குகளை விற்பதற்கு ஒரு பெரும் கூட்டமும், ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு கையேந்துவதற்குத் தயாராக இருக்கக் கூடிய இன்னொருக் கூட்டமுமாக இருந்தால், இந்த சமுதாயம் எப்பொழுது விழிப்பு பெறும்? எழுச்சி பெறும்? எந்தப் புரட்சிக்காரனும் தற்பெருமை பேசிக்கொண்டு அலையமாட்டான். எந்த சமுதாய சீர்திருத்தவாதியும் போலி கெளரவத்திற்கு இரையாகமாட்டான். ஆண்ட வம்சம் என்று சொல்லிகொண்டே இருந்தால் அதற்குண்டான மதிப்பும் மரியாதையும் வீடு தேடி வருமா? தொலைக்கப்பட்டப் பொருளை தேடி எடுக்காமல், அது கைக்கு வந்து சேராமல், எப்படி வளமாக இருக்க முடியும்?

உங்களிடத்திலேயிருந்த ஆடு போயிற்று, மாடு போயிற்று, நிலம் போயிற்று, வாழ்க்கை போயிற்று, மதிப்பு போயிற்று, மரியாதை போயிற்று, அரசும் பட்டமும் போயிற்று. இப்பொழுது நீ என்னவாக இருக்கிறாய் என்பதை ஒரு கணம் எண்ணிப்பார். ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்வதற்கு பொருள் ரீதியாக ஏதாவது ஒரு சிறிய அடையாளமாவது நம்மிடத்திலே மிஞ்சியிருக்கிறதா? எல்லா அந்தஸ்தும், மரியாதையும் பறிபோன பிறகு, தன்னந்தனியே ஒரு வீட்டில் மூலைக்குள் முடங்கி, தற்பெருமை பேசுவதால் எதுவும் வராது. வேண்டுமென்றால் வாட்சப், முகநூல் போராளிகளாக ஆகலாம். அவைகளெல்லாம் காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரைகள்; ஆகாயத்தில், கனவில் கட்டப்பட்டக் கோட்டைகள்; நிஜ சர்க்கரை வேண்டுமென்றால் நிலத்தை உழுது கரும்பைப் பயிரிட்டு, வளர்த்து ஆலையில் பிழிந்து சர்க்கரையை உருவாக்க வேண்டும்.

நமது குறைகளைக் களைந்து மற்றவர் மீது வெறுப்பும், காழ்ப்பும், பொறாமையும் கொள்ளும் மனப்பான்மையை அகற்றி சுயமரியாதை தீபத்தை, சுதந்திர தீபத்தை, தன்னம்பிக்கை தீபத்தை, நான் இந்த மண்ணை ஆண்டவன், மீண்டும் இந்த மண்ணை ஆளவேண்டும் என்ற அளவில்லா ஆர்வ தீபத்தை நெஞ்சுக்குள்ளே ஏற்று! அடக்கமாக, ஒழுக்கமாக, கண்ணுக்குள் புலப்படாத அணுவுக்குள் பொதிந்துகிடக்கும் சக்தியைப் போல, ஒவ்வோர் அணுவிலேயும் நான் இந்த மண்ணை ஆளவேண்டும் என்ற உணர்வை ஊட்டு!! ’2021-ல் தான் ஏமாந்து நம்முடைய உரிமையை விற்றுவிட்டோம்; அடுத்த ஐந்தாண்டில் இழந்ததை மீட்டெடுப்போம்; நாங்கள் ஆட்சிக்கட்டிலிலே அமர்வோம். எங்களை வழிநடத்த தலைமை உண்டு, புதிய தமிழகம் கட்சி உண்டு’ என்ற ஒற்றைச் சிந்தனையோடு செயல்படு!

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய 65-ஆம் ஆண்டு நினைவு நாளை வெறும் ஆட்டம் பாட்டமான நிகழ்வாகக் கருதாமல், ஒரு இலட்சியத்திற்கான அர்ப்பணிப்பு என்பதை மனதிலே கொண்டு, 2026-ல் புதிய தமிழகத்தின் ஆட்சி அமைக்க எந்தத் தியாகத்திற்கும் தயார் என சபதம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த சபதமேற்கக் கூடிய நிகழ்வாகவே, ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தமிழகம் கட்சியின் கொடியின் அருகில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய திருவுருவப்படத்தை மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்துங்கள். அவர் செய்த தியாகங்கள் வீண்போக விடமாட்டோம். இந்த மண்ணை ஆள்வது ஒன்றே எங்கள் குறிக்கோள். ”எங்கள் தலை வேண்டுமானால் போகலாமே தவிர, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் விலைபோகமாட்டோம்” என்று சபதமேற்றுக் கொள்ளுங்கள். இதுவே தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதி மொழியாக தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாளைத் தியாகத் திருநாளாக அனுசரிப்போம்!!
இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க
தலையையும் கொடுப்போம்! விலைபோக மாட்டோம் என சபதமேற்பீர்!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.09.2021