அண்மைக்காலமாக தங்கள் பதவிகளை திடீரென ராஜினாமா செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவும்; உரிய விளக்கம் கிடைக்கும் வரை அத்தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கவும் வலியுறுத்தி மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் சந்தித்து அளித்த மனுவின் சாராம்சம் :
5 Views

![]()
அண்மைக்காலமாக தங்கள் பதவிகளை திடீரென ராஜினாமா செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவும்; உரிய விளக்கம் கிடைக்கும் வரை அத்தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கவும் வலியுறுத்தி மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் சந்தித்து அளித்த மனுவின் சாராம்சம் :
……………………………………………………………………
நம் இந்தியத் திருநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாறும் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ‘மாண்டேகு’ திட்டத்தின்படி, 1921-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ’தமிழக சட்டமன்றம்’ மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அவ்வளவு பாரம்பரியமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, கடந்த 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நிறைவுற்றது. மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது.
தேர்தல் முடிவுகளின்படி, தவெக 107 இடங்களில், திமுக கூட்டணி 59 இடங்களிலும், அதிமுக கூட்டணி 47 இடங்களிலும் வெற்றிபெற்ற சூழலில், தனிப் பெரும்பான்மை பெற்றும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க தவெக அழைக்கப் பெறவில்லை. பிற அணிகளில் வெற்றிப் பெற்ற கட்சிகளின் ஆதரவுடன், மே 10-ஆம் தேதி முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அஇஅதிமுகவின் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான உறுப்பினர்களே அஇஅதிமுகவிலிருந்து பிரிந்து ஆதரவு அளித்ததால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என அஇஅதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், அச்சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிழப்பு நடவடிக்கையிலிருந்து தற்காத்துக் கொள்ள மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததால், அதனை ஏற்றுக்கொண்டு அஇஅதிமுகவும் அவர்களை மன்னித்துக் கடிதம் வழங்கியதால் அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனினும், அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்வதும், பின்னர் ஆளும் கட்சியில் இணைவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது.
இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. தினம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். 2026 பொதுத்தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறவில்லை. இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்காக மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்பட்டுள்ளது. இப்போது ராஜினாமா செய்துள்ள உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தினால், அரசுக்கு பெரும் பொருட்செலவுதான் ஏற்படும்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உறுப்பினர்கள், மக்கள் அளித்த தீர்ப்பிற்கு மாறாக, அவமதிக்கும் வகையில் எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்ற உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். இதுபோன்ற செயல்களை நாம் இப்போது அனுமதித்தால், ”எதிர்காலத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பதே அர்த்தமற்றதாகிவிடும்; ராஜினாமா செய்து ஆளுங்கட்சியிடம் ஆதாயப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்ற எண்ணம் உருவாகி விடும். இத்தகையச் செயல்களை மிகப்பெரிய “அரசியல் குதிரைப் பேரமாகவே” கருத வேண்டும்.
எனவே, தமிழகத்தின் ஆளுநர் என்ற மாபெரும் அந்தஸ்தின் அடிப்படையில், தாங்கள் தலையிட்டு, ராஜினாமா செய்த ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் நேரில் அழைத்து அதற்கான விளக்கத்தைக் கேட்க வேண்டும்.
மேலும், கடந்த 10.07.2026 – வெள்ளிக்கிழமை அன்று, சென்னை உயர் நீதிமன்றம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேறு வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி ’இடைத்தேர்தல்’ நடத்தத் தடை விதித்துள்ளது. அந்தத் தடையானது எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் இப்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் அசாதாரணமானது. வெற்றி பெற்ற இரண்டு மாதத்தில் உடனடியாக ஆளுங்கட்சிக்கு அணி மாறுவதைக் குதிரை பேரமாகக் கருதி, இப்படியான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சட்ட ரீதியான தீர்வை காணும் வகையிலும்,
• ராஜினாமா செய்த ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் நேரில் அழைத்து அதற்கான விளக்கத்தை தாங்கள் கேட்க வேண்டும் எனவும்;
• நியாயமற்ற அரசியல் குதிரை பேரக் காரணங்களுக்காக, ஆளும் கட்சியின் பதவிகளைப் பெறுவதற்காக இவர்கள் செய்யும் ராஜினாமாவை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும்;
• கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இதுபோன்ற மோசடிச் செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும்; அதுவரை அத்தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனவும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும்;
• தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றத் தன்மைக்கு ஒரு தீவிர நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் உரிய பரிந்துரை செய்ய வேண்டுமென மேதகு ஆளுநர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
………………………………..
கூடுதல் கோரிக்கைகள்:
1.அனைத்து வித ஆன்லைன் சூதாட்டங்கள், மற்றும் சட்டவிரோத இணையதளங்களை முற்றிலுமாகத் தடை செய்யக் கோருதல்:
தமிழகத்தில் நேரடி லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தாலும், அதற்கு மாற்றாக, கைபேசி மற்றும் இணையதளம் வழியாக பரவி வரும் ‘ஆன்லைன் கேமிங்’ எனப்படும் இணையதளச் சூதாட்டங்களுக்கும், ஒரு நம்பர், இரண்டு நம்பர், மூன்று நம்பர் லாட்டரி என்ற பெயர்களில் நடைபெறும் சூதாட்ட செயல்களுக்கும் இரையாகி நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் கைபேசி மற்றும் இணையதளங்கள் வாயிலாகப் பொதுமக்களை ஏமாற்றும், அனைத்து வித ஆன்லைன் சூதாட்டங்கள், டிஜிட்டல் நம்பர் லாட்டரி செயலிகள் மற்றும் சட்டவிரோத இணையதளங்களை உடனடியாக கண்டறிந்து முற்றிலுமாக தடை செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மேதகு ஆளுநர் அவர்கள் பரிந்துரை செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
2. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கக் கோருதல்:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஏறக்குறைய ஆறு தலைமுறைகளாகப் பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்பாகவே, முடியாட்சிக் காலத்திலேயே காடுகளை உருவாக்கவும் பாதுகாக்கவும் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் ஆவர். நாளடைவில் ஆங்கிலேயர்கள் அங்கு தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியபோது, அங்கேயே வாழ்ந்து வந்த இந்த மக்கள் தேயிலைத் தோட்டப் பணியாளர்களாக அமர்த்தப்பட்டார்கள்.
அம்பாசமுத்திரம் பகுதியில் மாஞ்சோலை வனம் உருவாகியதற்கும், அந்த வனங்களை உருவாக்கியதோடு அவற்றைப்போற்றிப் பாதுகாத்ததற்கும், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாத்ததற்கும் இந்த மக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த மக்களுக்கு மாஞ்சோலை பகுதியைத் தவிர வேறு வாழ்விடம் எதுவும் கிடையாது; வனப்பகுதி சார்ந்த தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது.
எனவே, அவர்களுக்கு 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி, “Other Traditional Forest Dwellers என்ற சரத்தின் படி, அதே பகுதியில் வேளாண்மை செய்யவும், மீன்பிடிக்கவும், ஆடு மாடுகள் வளர்க்கவும், காடுகளுக்கு ஊறு விளைவிக்காத பிற தொழில்களைச் செய்திடவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தாமல், அங்குத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் மனித உரிமை மீறல் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மட்டுமல்லாது, தமிழ்நாடு எங்கும் உள்ள அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நானும் எங்கள் இயக்கமும் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், வனத்துறை அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின்படி, அது பாதுகாக்கப்பட்ட காடுகள் என்றும், புலிகள் காப்பகம் என்றும் தவறாக வழிகாட்டப்பட்டு, மக்களை ஒட்டுமொத்தமாகக் கூண்டோடு வெளியேற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
நான் இதுகுறித்து கடந்த 20.08.2024 அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்ததன் விளைவாக தேசிய மனித உரிமை ஆணையக் குழு 2024 செப்டம்பர் 18,19 ஆகிய தேதிகளில் நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆய்வு மேற்கொண்டு, அம்மக்களுக்குப் போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்ட பிறகும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அம்மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக வாழ்வாதாரம் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும், வரும் ஜூலை 19-ஆம் தேதி முதல் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இப்பொழுது அவர்களை அங்குக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி, மேதகு ஆளுநர் அவர்கள் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களை எக்காரணம் கொண்டும் அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் தடுப்பதுதான். ஏனெனில், அவர்களுக்கு வேறு எவ்வித வாழ்வாதாரமும் கிடையாது, வேறு வேலையும் தெரியாது. அவ்வாறு வெளியேற்றப்பட்டால் அவர்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி, பசியோடும் பட்டினியோடும் மடியும் நிலை ஏற்படும்.
எனவே, 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி அந்த மக்கள் மாஞ்சோலையிலேயே தங்களது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த மேதகு ஆளுநர் அவர்கள் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
3.சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன், தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக் கோருதல்:
தமிழகம் முழுவதும் பரவலாகவும், குறிப்பாக தென் தமிழகத்தில் பெரும்பான்மையாகவும் வாழும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள், வேளாண்மையைத் தங்களின் முதன்மை தொழிலாகவும், இந்து தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்ந்து போற்றிப் பாதுகாப்பவர்களும் ஆவர். தமிழ் மண்ணில் நில உடைமையாளர்களாக வாழ்ந்த இம்மக்களின் நிலங்கள், பல்வேறு பேரரசுகளில் படையெடுப்புகளால் பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே நிலமற்ற வறியவர்களாகப் பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களுடைய வறுமைநிலை ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு பிரிட்டிஷ் அரசால் DC (Depressed Classes) பிரிவில் சேர்க்கப்படும் போதே, 1920-களில் அன்றைய தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகளின் சார்பாக இப்பிரிவில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஓரிரு சதவிகிதம் பேர் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் கூட, இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அனுகூலமாக இல்லை. அதனால் தங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து (SC – Scheduled Castes) நீக்க வேண்டும் என்று கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பட்டியலினப் பிரிவிலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பொதுப் பெயரில் அழைத்திடவும், பட்டியல் பிரிவிலிருந்து விலக்கிடவும் வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பாகக் கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாநாடுகள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் எனத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதன் விளைவாக, கடந்த 2021-ஆம் ஆண்டில், இச்சமூகத்தின் உட்பிரிவுகளாக இருந்த பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தார், கடையர், வாதிரியார் உள்ளிட்ட ஏழு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று 2021 மே மாதம் 15 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, ஜுன் 1, 2025 அன்று தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. இருப்பினும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்குவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை.
தற்போது, விரைவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே, இந்தக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, தேவேந்திரகுல வேளாளர் மக்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC – Other Backward Classes) பட்டியலில் சேர்த்த பிறகே, தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆகவே, வரவிருக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாகவே, தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றுவதற்கான பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4. மேகதாது பிரச்சினைக்கு சம்பந்தமாக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வருக்கு அறிவுறுத்தக் கோருதல்:
உணவுக் களஞ்சியமாக கருதப்படும் ”டெல்டா” மாவட்டங்களில் நிரந்தரமாக விளங்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டை சீர்குலைக்கும் வகையில் கர்நாடக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ”மேகதாது” அணைக்கட்டைத் தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவும், அதில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் தீர்மானத்துடன் பெரும் குழுவாக டெல்லி சென்று பாரதப் பிரதமர் அவர்களைச் சந்தித்து மேகதாது அணைக்கட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணவும் வேண்டுமென தமிழக அரசை மேதகு ஆளுநர் அவர்கள் அறிவுறுத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
5.சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரக் கோருதல்:
தற்காலத்தில் சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாட்டினால் இளைஞர்களும் குழந்தைகளும் மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். எதிர்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே உலகின் பல நாடுகள் இந்த சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்குத் தடைகளையும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. எனவே, நமது நாட்டிலும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்கும் வகையில் உடனடியாக ஒரு வலுவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். சமூகத்தின் இந்த முக்கியத் தேவையை உணர்ந்து, மத்திய அரசு இதற்குரிய சட்டத்தை உடனே இயற்ற ஏதுவாக மேதகு ஆளுநர் அவர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
6.அக்டோபர் 2- பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சென்னையில் நடைபெறவுள்ள மாரத்தானை துவக்கி வைக்க வேண்டுதல்:
தமிழகத்தில் தற்போது புரையோடிப் போயுள்ள மது, போதை மற்றும் புகைப்பழக்கங்களை முற்றாக ஒழித்திடவும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் அரசியல் சார்பற்ற ’பிறந்தமண் அறக்கட்டளை’ சார்பாக இந்த “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படுகிறது. போதைப்பொருள் பழக்கம் மற்றும் இதர சமூகத் தீமைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, இந்த “விழிப்புணர்வு மாரத்தான்” வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி அன்று) சென்னை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் விழிப்புணர்வு சார்ந்த இந்த விழிப்புணர்வு மாரத்தானை மேதகு ஆளுநர் அவர்கள் நேரில் வந்து கொடியசைத்துத் துவங்கி வைத்துச் சிறப்பிக்க வேண்டும் என்று எங்களது அறக்கட்டளையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் தேர்தல் வியூக வகுப்பாளர்களாக பணியாற்றிய திரு. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவருக்கும் தற்போது தலைமைச் செயலகத்தில் அரசின் மிக ரகசியமான கோப்புகள் மற்றும் விவரங்களை அணுக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது முற்றிலும் முறையற்ற செயலாகும். இத்தகைய நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
எனவே, தலைமைச் செயலகத்தில் இவர்களது இந்த அதிகாரப்பூர்வமற்ற செயல்பாடுகளை தடுத்து நிறுத்த முதலமைச்சருக்கு அறிவுறுத்துமாறு மேதகு ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
***********************************
பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ : https://www.facebook.com/share/v/1ETvKA52UH/

The gist of the memorandum submitted by Dr. K. Krishnasamy, leader of the Puthiya Tamilagam party, to the Honorable Governor of Tamil Nadu, Thiru. Rajendra Vishwanath Arlekar, urging him to: (1) personally summon and seek explanations from Members of the Legislative Assembly (MLAs) who have recently resigned abruptly from their posts; and (2) recommend to the Election Commission of India that by-elections for those constituencies should not be conducted under any circumstances until a satisfactory explanation is received.







