தொடரும் பட்டாசு விபத்துக்கள் – அலட்சியப்படுத்தும் அரசுகள்.! என்றுதான் ஏழை மக்களின் அல்லல் தீர்ப்பீர்கள்?
தொடரும் பட்டாசு விபத்துக்கள் – அலட்சியப்படுத்தும் அரசுகள்.!
என்றுதான் ஏழை மக்களின் அல்லல் தீர்ப்பீர்கள்?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதிகளில் நடந்த இரு வேறு பட்டாசு விபத்துகளில் 14-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர் பலத்த காயமுற்று இருக்கிறார்கள். அதில் புதிய தமிழகம் கட்சி வத்திராயிருப்பு கிழக்கு ஒன்றியச் செயலாளர் லட்சுமியாபுரம் கே.எஸ்.பொன்னுச்சாமியின் தாயார் திருமதி. குருவம்மாள்; வத்திராயிருப்பு நிர்வாகிகளான ஜெயமுருகன் மனைவி பாக்கியலட்சுமி, முருகானந்தம் மனைவி இந்திரா; அழகாபுரி மகாதேவி, பஞ்சவர்ணம், தங்கமலை பாலமுருகன், தமிழ்செல்வி, அனிதா; அம்மாப்பட்டி முனீஸ்வரி, லட்சுமி; லட்சிமியாபுரம் பாக்கியம்; மூவரைவென்றான் செல்லம்மாள், முத்துலெட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் பல பகுதிகளில் நடைபெற்ற பட்டாசு விபத்துகளில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளிலும் மற்றும் விற்பனை கடைகளிலும் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்கு மிகுந்த கவனத்தோடு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்.
மேலும், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளும் மத்திய அரசின் வெடிமருந்து கழகத்திற்கு உட்பட்டு செயல்படுவதால் மத்திய அரசும் இது போன்ற விபத்துகளை தடுப்பதற்கான முறையான விதிமுறைகளை முறைப்படுத்த வேண்டும்.
இறந்தவர்கள் அனைவருமே ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களாகவும்; பெரும்பாலும் பெண்களாகவும்; அதில் பலர் இளம் குழந்தைகளுக்கு தாய்மார்களாகவும் உள்ளனர். இதுவரை பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு கொடுக்கக்கூடிய நஷ்ட ஈடு வெறும் கண் துடைப்பாக இருக்கிறதே தவிர, எவ்விதத்திலும் அவர்களது குடும்பங்களுக்கு உபயோகமாக இருப்பதில்லை.
எனவே, வாழ்க்கையில் விளிம்பு நிலையில் உள்ள இன்று நடந்த பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் தலா ரூபாய் 25 லட்சம் வழங்கிடவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும்; காயமுற்றோருக்கு நவீன உயர் சிகிச்சை அளிக்கவும், காயத்தின் தன்மைக்கேற்ப தலா ரூ 1 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கிடவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
17.10.2023