பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சனையால் உலகமும் இரண்டாகிறது! தீர்வு: சண்டையா? சமாதானமா?

அறிக்கைகள்
s2 198 Views
  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
Published: 08 Oct 2023

Loading

தகர்ந்த இரும்பு கோபுரம் (Iron Dome)
அதிர்ந்த இஸ்ரேல்.!
எதிர் தாக்குதலை தாக்கு பிடிக்குமா ஹாமாஸ் – காசா?
பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சனையால் உலகமும் இரண்டாகிறது!
தீர்வு: சண்டையா? சமாதானமா?

உலகின் தலைசிறந்த மொசாத் MOSSAD உள்ளிட்ட பல உளவு நிறுவனங்களை உள்ளடக்கிய இஸ்ரேலின் கண்களில் மண்ணை தூவி விட்டு, நேற்றைய முன்தினம் ஒரே நேரத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை GAZA பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ”ஹாமாஸ்” பாலஸ்தீன தீவிரவாத குழுவினர் ஏவியுள்ளனர். இதில் 600-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்; 20க்கும் மேற்பட்ட நகரங்களில் எண்ணற்ற அடுக்குமாடி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இத்தனை நிகழ்வுகளும் வெறும் இருபது நிமிடத்தில் நடந்தேறியுள்ளன என்பது உலகின் ராணுவ வலிமை வாய்ந்த நாடுகளையும் ஆச்சரியமும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

பாலஸ்தீன நாடு என்று பெயரளவில் உள்ள காசா GAZA மற்றும் மேற்கு கரை WEST BANK ஆகிய பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள். ‘மேற்கு கரை’ என்பது இஸ்ரேலுக்கும் ஜோர்டான் நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். மத்திய தரைக் கடலின் கடலோரம் உள்ள gaza காசா பகுதி என்பது வெறும் 40 கிலோமீட்டர் நீளமும் 10 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடைப்பட்ட ஒரு மிகச் சிறிய பகுதியாகும். காசா பகுதி தற்போது ‘ஹாமாஸ்’ என்ற தீவிரவாத குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. west bank @ மேற்கு கரை Palestinian Authority (PA) என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1917 வரையிலும் இஸ்ரேலின் மொத்த நிலப்பரப்பிலும் பெரிய அளவில் அரேபியர்களும், சிறிய அளவில் யூதர்களும் வாழ்ந்து வந்தார்கள். 1948 வரையிலும் அந்தப் பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை கொடுக்கும் முன்பே பல நாடுகளும் பல்வேறு விதத்தில் துண்டாடப்பட்டன. மத ரீதியாக இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை உருவாக்கப்பட்டதை போல இஸ்ரேல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அரேபியர்களுக்காக ’பாலஸ்தீனம்’ என்றும்; மற்றொரு பகுதி யூதர்களுக்காக ’இஸ்ரேல்’ என்றும் பிரிக்கப்பட்டது. அந்த பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத அண்டை நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட நாடுகள் அப்பொழுதே போர் தொடுத்தன. அமெரிக்காவின் ராணுவ பலத்தோடு இஸ்ரேல் போரை வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து 1967 இல் மீண்டும் மிகப்பெரிய போர் மூண்டது. 13 தினங்கள் நீடித்த அந்த போரிலும் இஸ்ரேலே வெற்றி கொண்டது. 1967 வரையிலும் பாலஸ்தீனர்களுக்காக இஸ்ரேலுடன் போர் தொடுத்த பல நாடுகள் மெல்ல மெல்லப் போரிலிருந்து விலகி இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டார்கள். 1972 இல் எகிப்து இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரிலிருந்து விலகிக் கொண்டது. பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதிகளையும் விடுதலை செய்வது என்ற நோக்கத்தோடு பல பாலஸ்தீன அமைப்புகள் தோன்றின. அதில் யாசர் அராபத் தலைமையில் அமைக்கப்பட்ட Palestine Liberation Organization மிகப் பெரியது. இந்தியா பல ஆண்டுகள் ’PLO’-வை மட்டுமே ஆதரித்தது. முதல் முறையாக வாஜ்பாய் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தான் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகள் மட்டுமே தொடர்ந்து இஸ்ரேலை ஆதரித்தன.

தாங்கள் வாழ்ந்த பூமியில் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டதைச் சகித்துக் கொள்ள முடியாத பாலஸ்தீனியர்கள் ஜனநாயக ரீதியாகவும் மற்றும் தீவிரவாத குழுக்களாகவும் பிரிந்து போராடத் துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் இஸ்ரேலியர்கள் முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். ‘பாலஸ்தீனம்’ என்ற ஒரு நாடு ஐ.நாவில் பெயரளவில் இருந்தாலும் அதற்குண்டான எல்லைகள் வகுத்துக் கொடுக்கப்படவில்லை. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் எத்தனையோ தேசங்களின் எல்லைகள் மறைந்து புதிய எல்லைகள் உருவாகிவிட்டன. ஆனால், பாலஸ்தீன பிரச்சனைக்கு மட்டும் தீர்வு வரவே இல்லை.
பாலஸ்தீனர்களுக்கு ஐநா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து அடையாளம் காட்டிய பூகோள பகுதியையும் மெல்ல மெல்ல இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. இன்றைய இஸ்ரேலின் ஒட்டுமொத்த பரப்பில் பாதி என்று இருந்த நிலை எல்லாம் முற்றாக மாறி பாலஸ்தீனியர்கள் ’காசா’ மற்றும் ’மேற்கு கரை’ என்ற சிறிய பகுதிகளுக்குள் ஒடுங்கிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பகுதிகளையும் இஸ்ரேல் முழுமையாக பாலஸ்தீனியர்களுக்கு விட்டுவிடவில்லை. கடந்த சில வருடங்களில் அங்கும் இஸ்ரேலியர்களை குடியமர்த்தி வருகிறார்கள். மெல்ல மெல்ல பாலஸ்தீனியம் என்ற தேச அடையாளமே இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலையே உருவாகி வந்தது. இதற்கிடையில் ’காசா’ பகுதியைக் கட்டுப்படுத்தி இருந்த ஹாமாஸ் குழுவினருக்கும் மேற்கு கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாலஸ்தீன அதிகார அமைப்பிற்கும் இடையே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு மோதல்கள் உருவாகின. காசா பகுதியை பாலஸ்தீன அதிகார அமைப்பு (PA) கைப்பற்றிக் கொள்வதா? அல்லது மேற்கு கரையை ஹாமாஸ் குழுவினர் கைப்பற்றிக் கொள்வதா? என்ற மோதல்களும் அதிக அளவிலிருந்து வந்துள்ளன.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முடிந்த அளவிற்கு இஸ்ரேலியர்கள் காசா மற்றும் மேற்கு கரைகளில் வேகமாக புதிய குடியேற்றங்கள் நடைபெற்றன. அதுமட்டுமின்றி கிழக்கு இஸ்ரேலில் உள்ள ’அல் அக்சா’ வழிபாட்டு தலம் அல்லது மசூதி பாலஸ்தீனியர்களுக்கா? அல்லது இஸ்ரேலுக்கா? என்ற மோதலும் தொடர்ந்து இருந்து வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு மிக்க அந்த பகுதியை யூதர்களும் விட்டுத்தர தயாராக இல்லை; பாலஸ்தீனர்களும் விட்டுத்தர தயாராக இல்லை. ஒரு இனம்! இரண்டு மதங்களாயிற்று.! இரண்டு மதம் இரண்டு தேசமாயிற்று.!

இதற்கிடையில் இஸ்ரேல், அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு சமரச உடன்படிக்கைக்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. அரேபிய நாடுகள் ஒவ்வொன்றாக இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை கொள்கின்ற பொழுது பாலஸ்தீன கோரிக்கை வலுவிழந்து விடும்; அதுமட்டுமின்றி தங்களுடைய நாடுகளுக்கு ஆபத்து எளிதாக வந்துவிடும் என்ற நம்பிக்கையிலிருந்த ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதை சிறிதும் விரும்பவில்லை. எனவே, இந்த உடன்படிக்கையை விரும்பாத பல நாடுகளும், அங்குள்ள அமைப்புகளும் ஹாமாஸ் குழுவிற்கு பல வழிகளிலும் ஆதரவு அளித்தனர். இந்த நாடுகளிலிருந்து வந்த பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளால் தான் வல்லமை மிக்க இஸ்ரேலின் ராணுவ உளவுப் பிரிவு செயல்பாட்டையும் தோற்கடித்து மிகப்பெரிய அதிரடி தாக்குதலை இப்பொழுது தொடுக்க முடிந்துள்ளது.

இஸ்ரேலின் எல்லையில் உள்ள தடுப்பு முள்வேலிகளைத் தாண்ட முற்பட்டாலும் அல்லது அதன் கீழ் பதுங்கு குழிகளே தோண்டினால் கூட அதிலிருந்து ஏற்படும் அதிர்வுகளைக் கணக்கிட்டு இஸ்ரேலின் எதிர்வினை ஆற்றக்கூடிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மீறியும், உலகமே அதிரக்கூடிய வகையில் ஹாமாஸ் மிகப்பெரிய அதிரடி தாக்குதலைத் தொடுத்துள்ளது. கடந்த 70 வருடத்தில் பல போர்களை கண்ட இஸ்ரேல் இந்த அதிரடி தாக்குதலால் நிலைகுலைந்து போனது என்று சொன்னால் மிகை ஆகாது. அது மட்டுமல்ல அண்மை காலத்தில் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அரணாக சித்தரிக்கப்பட்ட பல நாடுகளை வியந்து போற்றிய நாட்டின் எல்லையைச் சுற்றிலும் எவ்வித ஏவுகணைகளும் நுழையாதபடி அமைக்கப்பட்டு இருந்த iron dome எனப்படும் இரும்பு கோட்டையும் தகர்க்கப்பட்டு 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் 20 நகரங்களைத் தாக்கியுள்ளன. இஸ்ரேல் தற்பொழுது தனது எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த போரில் ஹாமாஸ்/காசா எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது வேறு பிரச்சனை. அதில் ஹாமாஸ் அமைப்பினர் பலரும் கொல்லப்படலாம் அல்லது காசா ஓரிரு நாளில் முற்றாக அழிக்கப்படலாம் அல்லது ரஷ்யா – உக்ரைன் போரை போல நீண்ட கால போரும் நடைபெறலாம். ஹாமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த உலக நாடுகளும் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் இஸ்ரேலுக்கு பல நாடுகளும் வரிந்துகட்டி ஆதரிக்கும்; இஸ்ரேலுடன் இந்தியா நல்லுறவில் இருப்பதால் இந்தியாவும் ஆதரவு கரம் நீட்டும்.!
பிரச்சனை என்னவென்றால் இத்தனை உலக நாடுகள் இருந்தும் ஏன் பாலஸ்தீனிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணத் தயங்குகிறார்கள்? அதை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? 1948 இல் அரேபியர்களுக்கு என பிரித்துக் கொடுத்த நிலப்பரப்பையாவது ’பாலஸ்தீனம்’ என்று அங்கீகரிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட தயக்கம் ஏன்? எனத் தெரியவில்லை. ஒருவேளை பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டு விட்டால், அது உலக பயங்கரவாதத்தின் தள பகுதியாக அமைந்து விடலாம் என்ற அச்சமாக இருக்கலாம்.

தனது ராணுவ வலிமையைக் கொண்டு பாலஸ்தீனியம் என்ற அடையாளத்தை அழிக்க முயற்சிப்பது இஸ்ரேலின் எண்ணமாக – நடவடிக்கையாக இருந்தாலும் அது ஏற்புடையதல்ல. அதேபோன்று பாலஸ்தீனம் என்ற லட்சியத்தை – தங்களுக்கான வாழ்விடத்தை அடைவதற்கு பாலஸ்தீனியர்களின் பயங்கரவாத செயல்களும் நிரந்தர பயன் தராது; உலகளாவிய ஜனநாயக பூர்வமான நடவடிக்கைகளே அவர்களுக்கு வெற்றியை தரும்.

இன்றைய சூழலில் ஐ.நா என்ற ஒன்று சொல்லளவிற்கு மட்டுமே இருக்கிறதே தவிர, தங்களது செயல் திறனை அது என்றோ இழந்து விட்டது. அதை ரஷ்யா – உக்ரைன் போரிலேயே நாம் பார்த்து விட்டோம். இந்த பூமியில் எல்லோருக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு. ஒருவரை ஒருவர் அடக்கியோ, ஒடுக்கியோ; ஒருவர் நிலத்தை இன்னொருவர் அபகரித்தோ வாழ நினைப்பது நியாயமாகாது.

பாலஸ்தீன மக்களுக்கு தனி நாட்டை பெறும் ஹாமாஸின் லட்சியம் நியாயமானது. ஆனால், நடவடிக்கை ஏற்புடையதல்ல. உலகெங்கும் சிதறிக் கிடந்த நாடற்ற யூதர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட தேசத்தில் பாதுகாப்புடன் வாழ்ந்து கொள்வதற்கு உரிமை உண்டு. ஆனால், இன்னொருவருக்கு கொடுக்கப்பட்ட இடத்தை அபகரிப்பது எவ்விடத்திலும் நியாயம் இல்லை.

இஸ்ரேல் போரிலே பிறந்து போரிலேயும் வாழ முடியாது! அதேபோல, பாலஸ்தீனர்களும் யுத்தத்திலே பிறந்து யுத்தத்திலே வாழ முடியாது.! இருவரும் யுத்தத்தை விட்டு விட்டு சமாதானத்திற்கு வருவது ஒன்றே தீர்வாகும்.
ஒரு இனம் – இரண்டு மதங்களாயிற்று.!
இரண்டு மதங்கள் – இரண்டு தேசமாயிற்று.!
இரண்டு மதம்/தேசங்களால் இப்பொழுது உலகமே இரண்டு பட்டு நிற்கிறது!
பாலஸ்தீனிய ஆதரவு ஒரு நிலை!
இஸ்ரேலிய ஆதரவு இன்னொரு நிலை.!
இந்த இரண்டு நிலைப்பாடும் இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் எவ்வித பயனையும் தராது.!
யுத்தம் அல்ல! சமாதானமே தீர்வாகும்.!

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, EX.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.10.2023.