இராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு – ’தனித்து’ப் பார்க்கக்கூடாது! விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டிய நேரத்தில் விழிக்க வேண்டும்!! சாட்டையை சுழற்ற வேண்டிய நேரத்தில் சுழற்ற வேண்டும்!!!
இராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு – ’தனித்து’ப் பார்க்கக்கூடாது!
விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டிய நேரத்தில் விழிக்க வேண்டும்!!
சாட்டையை சுழற்ற வேண்டிய நேரத்தில் சுழற்ற வேண்டும்!!!
தமிழக ஆளுநர் மாளிகை இராஜ்பவன் பிரதான வாயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. கடந்த சில வாரங்களாக, தமிழக ஆளுநர் மீதான திமுகவின் முன்னணித் தலைவர்களுடைய தரம்தாழ்ந்த விமர்சனங்களைக் காட்டிலும் இது ஒன்றும் அவ்வளவு மோசமானதாகத் தெரியவில்லை. ஆளுநர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்பது வேறு விசயம். ஆனால், இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற ஸ்தானத்திலுள்ள ஜனாதிபதி முர்மு அவர்கள் இன்று சென்னை வரும் வேளையில், அதுவும் அவர் தங்கும் இடமான இராஜ்பவன் மீது இவ்வன்முறை சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்றால், இதை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும் இதோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. 3 தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அண்டை தேசமானாலும் இந்த நேரம் வரையிலும் பகையோடு இருக்கக்கூடிய பாகிஸ்தானுக்கு ஆதரவாக எங்கெங்கோ இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பிய நிகழ்வுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இச்சம்பவத்தைத் தனியாகப் பார்த்தலாகாது.
இராஜ்பவன் போன்ற இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றபொழுது அக்குற்றங்களை சுமப்பதற்கென்றே வழக்கமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்துவிடுவார்கள். ஆனால், அது பல ஆண்டுகாலம் பழகிப் போனதாலும், அந்தக் கட்டுக்கதைகள் ரொம்ப புளிக்கும் என்பதாலும் இப்பொழுது ஒரு ரெளடி கிடைத்திருக்கிறான். அவன் ஏற்கெனவே ஒரு தேசியக் கட்சியின் அலுவலகம் மீது குண்டு வீசியவன் என்றப் பெருமையோடு உலா வரக்கூடியவன். அவன் வீசிய குண்டைப் பற்றியெல்லாம் கூட நாம் அதிகமாக கவலை கொள்ள வேண்டியதில்லை. அவனைக் கையும் களவுமாக நம்முடையக் காவல்துறையினர் பிடித்துவிட்டார்கள்; இதில் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும்; அது வேறு.
ஆனால், அவன் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசியதற்கு ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறானே, அதுதான் மிகவும் ஆபத்தான ஒன்று; அதுதான் உண்மையில் பெரிய குண்டு. ’மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவு மற்றும் தகுதித் தேர்வை இரத்து செய்ய மறுக்கும் ஆளுநர், அதற்கு உத்தரவிட மறுக்கும் ஜனாதிபதி ஆகியோரை அச்சுறுத்தவே இந்த குண்டு வீசப்பட்டிருப்பதாக அவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்’.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக வாக்காளர் பெருமக்களிடத்தில் வாக்குறுதிகளை அளித்து, வாக்குகளை அள்ளி, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, நான்கரை ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் நீட் தேர்வு இரத்தாகவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஆட்சிக்கு வந்தவுடன் “முதல் கையெழுத்து போட்டு நீட் இரத்து செய்யப்படும்” என்று வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அவர்களால் அந்த மாய முதல் கையெழுத்தைப் போட முடியவில்லை.
2019-ல் ஏமாந்த மக்கள், 2021-ல் மோசடிக்கு ஆளான தமிழ் மக்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோசம் போகமாட்டார்கள்; ஏமாறமாட்டார்கள் என்று அசரீரி ஆழ்மனதில் சொல்வதுபோல, 40-க்கு பூஜ்ஜியம்; அதாவது முட்டை தான் கிடைக்கும் என்பதன் குறியீடாக, தானாகவே வலிய வந்து முட்டையைத் தூக்கிக் கொண்டு முதல்வரின் புதல்வர் இன்று ஊர்ஊராகக் கையெழுத்து வாங்குகிறார். தமிழக மக்களிடத்தில் அரைநூற்றாண்டு காலம் பொய் பேசியே பழக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு பொய் பேசுவதற்கு நா கூசப் போவதில்லை; பொய் பேசுவதும், சேற்றை வாரி வீசுவதும் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல; அவர்கள் பேசுவதையெல்லாம் நம்பி ஏமாறுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்று இந்த ஸ்டாக்கிஸ்ட்டுகள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூகம் வேறாக இருக்கிறது என்பது 2024-ல் ”பெரிய முட்டை” வாங்கிய பிறகே தெரியும்.
இந்திய நாட்டில் வரையறுக்கப்பட்ட அரசியல் சாசனம் கொடுத்திருக்கக்கூடிய எழுத்து, பேச்சு, கருத்துரிமையை இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுகொள்ளாதவர்களே அதிகமாகப் பயன்படுத்தி, பெரும் பயனடைகிறார்கள் என்பதுதான் வினோதம். 2021, மே மாதம் 7-ஆம் தேதி பதவி ஏற்றபொழுதே இவர்கள் பிரிவினையை மீண்டும் புதுப்பித்துவிட்டார்கள். தற்போது தமிழ் மண்ணில் தொடர்ந்து தேச விரோதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் வன்முறைக் களம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடையாளமாகவே ‘நீட் தேர்வு’ விலக்கிற்கு ’கருக்கா’ வினோத்கள் களம் காண்கிறார்கள். ”பரந்துபட்ட இந்திய-பாரத தேசத்தை ஒரு தேசமாகக் கூட அங்கீகரிக்காமல், அதைப் பல நாடுகளின் கூட்டமைப்பு என்பதைப் போல, ஒன்றிய அரசு என்று அவர்கள் குறிப்பிடுவதே அரசியல் சாசனத்திற்கு விரோதமானது; ஆரம்பத்திலேயே மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்திய உள்துறையும், உளவுத்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா? அல்லது உரிய காரணத்திற்காகக் காத்திருக்கிறார்களா?” எனத் தெரியவில்லை. நீட் தேர்வு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்திய மருத்துவக் கழகமும் அந்தத் தேர்வின் அவசியம் குறித்து பலமுறை விளக்கிவிட்டன.
எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் விதிகளின்படி பொறுப்பேற்றுக் கொண்டு ஆட்சியிலுள்ள ஒரு கட்சியே, தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக, தவறானப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, பொய் சொல்லி ஓட்டு வாங்குவதோ, சட்டவிதிமுறைகளுக்கு மாறாக வாக்குறுதிகள் கொடுப்பதோ சட்டவிரோதமாகும். ஆனால் இந்திய தேர்தல் ஆணையமும் கண்ணை மூடிக் கொண்டே இருக்கிறது.
தாங்கள் எடுத்துக் கொண்ட அரசியல் வியூகத்திற்கு ஆதரவாக யார் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அது பெட்ரோல் குண்டே வீசினாலும், அல்லது அதைக்காட்டிலும் கடுமையான நடவடிக்கைக்குச் சென்றாலும், அதைக் கண்டுகொள்ளவேமாட்டோம் என்ற சமிக்ஞைகளே, இன்று ரெளடிகள் கூட நீட் தேர்வுக்காக பெட்ரோல் குண்டு வீசும் சூழலை உருவாக்கியிருக்கின்றன. ஒருவேளை நீட் இரத்து செய்யப்பட்டுவிட்டால், ஸ்டாக்கிஸ்ட்டுக் கண்மணிகளும் அவர்களின் அடிவருடிகளும் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் தேடித்தேடிப் பிடித்து ரெளடிகள் கருக்கா வினோத்களுக்கும் அருவா அல்போன்சுகளுக்கும் மருத்துவ இடங்கள் வாரிவாரி வழங்கப்படலாம். அல்லும் பகலும் ஆண்டுக்கணக்கில் விடியவிடியப் படித்துக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் நிலை பாவம்! மருத்துவ உலகமும் பரிதாபம்!. நோக்கம் தெளிவாகத் தெரிகிறது; 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கருப்பு பலூன்; அன்றைய இலக்கு மோடி – இன்றைய இலக்குகள் அதிகாரம் நேரடியாக இல்லாத ஆளுநரும் ஜனாதிபதியும். ஆனால் நோக்கமெல்லாம் ஒன்றுதான். 2024 – நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நீட்டை வைத்தே மீண்டும் ஒரு களம் அமைக்க வேண்டும். அதை நிறைவேற்ற தமிழகத்தில் இருக்கக்கூடிய எண்ணற்ற மாவட்ட, வட்டச் சிறைகளில் எத்தனையோ கருக்கா வினோத்துகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் ஒப்புக்குக் கையெழுத்து இயக்கம். அது நிழல்; இன்னொரு பக்கம் பெட்ரோல் குண்டு; இது நிஜம். பெட்ரோல் குண்டு வெறும் டம்மி பீஸ் தான்; சத்தம் மட்டுமே வரும். ஆனால் நிஜக் குண்டுகள் எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வீசப்படலாம். எனினும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று யாரும் சொல்லக்கூடாது. ஆளுநருக்கு எதிராக மீண்டும் நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கம், டி.ஆர்.பாலுவின் ஆபாச-அச்சுறுத்தல் அறிக்கை, கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் மற்றும் தேசியக்கொடி ஏற்ற மறுப்பு, ஆளுநர் மாளிகை பிரதான வாயில் மீது பெட்ரோல் குண்டுவீச்சு என இவை எல்லாவற்றுக்கும் ஆரம்பமும் முடிவும் ஒரே புள்ளி தான். ஆம், 2024 – நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வியூகம் தான் அது. ஆளுநரே ஆனாலும் ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்குள் அடங்கிப் போனால் இங்கு வாழலாம்; மறுத்தால் ஆயிரமாயிரம் கருக்கா வினோத்துகளுக்கு சிறைக்கதவுகள் திறந்து விடப்படும்.
சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்களே சீர்குலைக்கிறார்கள்!
தமிழகம் ஒரு தரப்பினருக்கான வாழ்விடமாக மாற்றப்படுகிறது!!
ஆளுநரின் ஆன்மீகப்பணி – அது தனிப்பட்டப் பணி!
ஆனால், ஆளும் பணி நிரம்பவே உள்ளது!!
அரசியல் சாசனம் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டால் – அடுத்த கட்டத்திற்கு அளுநர் செல்ல வேண்டும்!
இந்திய உள்துறை கிணற்றில் போட்ட கல்போல் கிடந்தால் – இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்!!
விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டிய நேரத்தில் விழிக்க வேண்டும்!
சாட்டையை சுழற்ற வேண்டிய நேரத்தில் சுழற்ற வேண்டும்!!
டாக்டர் க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
26.10.2023