’மாஞ்சோலை தேயிலைத் தோட்ட போராளி’ அன்பு நேசம் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி புகழஞ்சலி!

நினைவுகள்
s2 423 Views
  • அன்பு நேசம்

    அன்பு நேசம்

  • அன்பு நேசம்
Published: 16 Jul 2021

Loading

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கான போராட்டத்தை 1998 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த நாள் முதல் கடைசி மூச்சு வரையிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளியும், நெல்லை மாவட்டம் உக்கிரன் கோட்டையை சேர்ந்தவருமான அன்பு சகோதரி திருமதி அன்பு நேசம் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

1998ஆம் ஆண்டு நான் முதல் முறையாக தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டபோது தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் உள்ள மாஞ்சோலை, சுண்ணாம்பு, ஊத்து, நான்குமுக்கு, குதிரைவெட்டி என்ற ஐந்து டிவிசன்களை உள்ளடக்கிய பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றிருந்தோம். அன்றைய தினம் அங்கு பணிபுரிந்த எண்ணற்ற தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களின் BBTC நிர்வாகத்தால் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைத்தார்கள். அங்கு நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக ஏறக்குறைய 2500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களில் மகளிர் குழு அமைப்பாளராகச் செயல்பட்டு வந்த அன்பு நேசம் அவர்கள் புதிய தமிழகம் கட்சியினரை ஒவ்வொரு டிவிசனுக்கும் அழைத்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி, தேர்தல் முடிந்த பிறகு அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய மாஞ்சோலை சென்றிருந்தேன்.

திருமதி அன்புநேசம் அவர்களின் முன்முயற்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய பணியை நிறுத்திவிட்டு மாஞ்சோலையில் கூடியிருந்தார்கள். அன்று காலை 8-மணி முதல் மாலை 6-மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோன்ற ஒரு போராட்டம் நடக்கின்ற போது நிர்வாகம் தானாக முன்வந்து தொழிலாளர்களுடன் பேசுவதுதான் வழக்கம். ஆனால் BBTC நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் நேரடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பது என முடிவெடுத்து, அன்று மாலை 8 மணியளவில் எனது தலைமையில் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 80 கிலோமீட்டருக்கும் மேல் இரவோடு இரவாக திருநெல்வேலி நோக்கி நடை பயணமாக சென்று அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகு நடைபெற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டம்; டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட சென்ற போதும்; எட்டு மணி நேர வேலை வேலை, சம்பள உயர்வு கேட்டுப் போராடியவர்களை விடுதலை செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியின் போது தாமிரபரணியில் 17 பேர் மரணமெய்திய சம்பவத்தின் போதும்; அதைத்தொடர்ந்து வால்பாறை-கோயமுத்தூர் 104 கி.மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்ட போதும் என எல்லா போராட்டங்களிலும் எல்லா காலகட்டங்களிலும் எவ்வித பிரதிபலனும் பாராமல் ஒரு ’பாட்டாளி-தொழிலாளி’ என்றால் எவ்வளவு பரந்துபட்ட, தன்னலமற்ற உள்ளத்துடன், சமரசமற்ற போராளியாக இருக்க வேண்டுமோ அதற்கு இலக்கணமாக விளங்கியவர் திருமதி அன்பு நேசம் அவர்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, அவர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். இன்றைய தினம் அவர் மரணம் எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இழப்பு புதிய தமிழகம் கட்சிக்குப் பேரிழப்பாகும்.

வெறும் 60 ரூபாய் சம்பளம் பெற்ற தமிழகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று 400 ரூபாய் பெறும் சூழல் உருவாகியுள்ளது என்றால் அது கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அன்பு நேசம் போன்றவர்களின் அப்பழுக்கற்ற போராட்டம் மூலம் நிகழ்ந்தவையே ஆகும். அவர் போராளிகளின் அடையாளம் என்று சொன்னால் மிகையாகாது. அவர்களின் அர்ப்பணிப்பை புதிய தமிழகம் கட்சியும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் என்றென்றும் நினைவு கூறுவோம். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:
நாளை (17.07.2021) உக்கிரன் கோட்டையில் நடைபெறும் அவரது இறுதிச் சடங்கில் புதிய தமிழகம் கட்சியின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.07.2021