கொடியங்குளம் திருமதி.யாகம்மாள் அவர்கள் மறைவு! புதிய தமிழகம் கட்சி இரங்கல்!
கொடியங்குளம் திருமதி.யாகம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமெய்திவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் கொடியங்குளம் கிராமம் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து, அதன் பாதிப்புகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர நாம் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் பங்குப் பெற்றவர் திருமதி.யாகம்மாள் அவர்கள்.
கொடியங்குளம் வன்முறையைக் கண்டித்து 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்பு சீரணி அரங்கம் அருகே இறந்தவர்களின் உடலை மருத்துவமனை எடுத்துச் செல்கின்ற வரையிலும், உடனிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட பெண்மணிகளை அரவணைத்து நின்றவர். தொடர்ந்து நடைபெற்ற ஆறு நாள் போராட்டம் மற்றும் மாதம் ஒருமுறை நடைபெற்ற போராட்டம் மற்றும் டெல்லி வரை நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான பெண்களைப் பங்கு பெற வைத்தவர். அதே போன்று 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பெண்களைத் திரட்டி சென்று வாக்குகள் சேகரித்து வெற்றி வாய்ப்பு தேடித் தந்தவர். அவர் கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆன பின்பும், அப்பகுதி மக்களுக்குத் தொண்டாற்றி கடந்த 30 வருடங்களாக புதிய தமிழகம் கட்சியோடு இம்மியளவும் பிசகாமல் பயணித்து வந்தவர். கொடியங்குளம் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அன்றைய கொடூரங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியவர். உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மரணம் எய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
போராட்டத்திலே பிறந்து போராட்டத்திலே வளர்ந்த இயக்கத்திற்கு, புதிய தமிழகம் கட்சிக்கு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த யாகம்மாள் அவர்களுக்கு புதிய தமிழக கட்சி தனது புகழஞ்சலியைச் செலுத்துகிறது. திருமதி.யாகம்மாள் அவர்கள் நமது பெண்மணிகள் எவ்வாறு சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும்; அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர். அவர் மறைந்தாலும் அவருடைய உழைப்பும், தியாகமும் என்றென்றும் புதிய தமிழகம் கட்சியாலும், அப்பகுதி மக்களாலும் போற்றப்படும்.!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும், கொடியங்குளம் கிராம மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.02.2024