புதிய தமிழகம் கட்சியின் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் 1999 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. எனினும் பல்லாயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் 1996 முதலே நமது கட்சிக்கு மிகப்பெரிய அளவிற்குப் பின்பலமாக விளங்கி வந்தனர். அக்கால கட்டங்களில் அரசியல் மற்றும் சாதி ரீதியான துவேசங்களும், மேலாதிக்கப் போக்குகளும் போக்குவரத்துத் துறையிலும் ஊடுருவி, பலதரப்பட்ட தொழிலாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளானபோது நிர்வாகத்திடமிருந்தும், குறுகிய எண்ணம் கொண்ட தொழிற்சங்கங்களிடமிருந்தும் தொழிலாளர்களைக் காப்பாற்ற புதிய தமிழகம் கட்சியின் தொழிற்சங்கம் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக விளங்கியது. அது மட்டுமின்றி, சம்பளம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்த பேச்சு வார்த்தைகளில் புதிய தமிழகம் கட்சி தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நின்று, உரிமைகளை மீட்டுக் கொடுத்துள்ளது. அதேபோல பென்சன், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் குறித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறைகளையும் புதிய தமிழகம் தொழிற்சங்கம் மட்டுமே வன்மையாகக் கண்டித்தது.

கடந்த 30 ஆண்டுகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இரண்டு கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் அந்தந்த கட்சி ஆட்சியின் போது ஆட்சிக்குச் சாதகமாகத் தொழிலாளர்களின் உரிமைகளைக் காவு கொடுத்து விடுகின்றனர். தொழிலாளர் தனிமனித சுதந்திரம், தொழிலாளர்களிடையே வர்க்க ஒற்றுமை, அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டிய பல தொழிற்சங்கங்கள் தங்களுடைய இலக்குகளிலிருந்து திசைமாறி சென்று விட்டனர். எனவே, இச்சூழலில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்க வேண்டிய கடமை நமது புதிய தமிழகம் போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு மட்டுமே உண்டு.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மற்றும் நிர்வாக அமைப்பில் பணியாற்றும் அடிமட்ட ஊழியர்கள் அனைவரையும் சாதி, மத, மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஓரணியில் திரட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நமது தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டபோது, தொழிற்சங்க சட்ட விதிகளின்படி தொழிற்சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவர் தொடர்ந்து தொழிற்சங்கத்தை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், அந்த பதிவு பெற்ற அடையாளத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, நமது தொழிற்சங்கத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வந்த காரணத்தினால் அவர் ஏற்கனவே புதிய தமிழகம் போக்குவரத்து தொழிற்சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார்; அது குறித்து ஐந்து வருடத்திற்கு முன்பாகவே தமிழக அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டு விட்டது. எனவே, அந்த நபருக்கும், நமது தொழிற்சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எனவே, நமது கட்சியின் மீது அளவு கடந்த பற்று கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் புதிய தமிழகம் போக்குவரத்து தொழிற்சங்கத்தில் புதிதாக இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் வலுவான முதன்மை போக்குவரத்து தொழிற்சங்கமாக புதிய தமிழகம் தொழிற்சங்கத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அர்ப்பணிப்புடன் பணியாற்ற ஒருங்கிணைப்புக் குழு ஒன்று புதிதாக உருவாக்கப்படுகிறது.

இக்குழு உறுப்பினர்கள் தமிழகமெங்கும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் தொடர்புகளை ஏற்படுத்தி, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை நிறைவு செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு பணிமனை, மண்டலம், கோட்டம், மாநில அளவில் ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு நடத்தி தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, இத்தலையாய பணியை நிறைவேற்றிட இக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும், அவர்களுக்கு அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் பூரண ஒத்துழைப்பு தந்திடவும் கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
02.07.2021

புதிய தமிழகம் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

Image

Image

Image