புதிய தமிழகம் கட்சி மாநில நிதிக்குழு நியமனம்
குடும்பமாக இருந்தாலும்; சிறிய பெரிய வணிக, தொழில், கல்வி நிறுவனமாக இருந்தாலும் அவை மேன்மேலும் வளர நிதி ஆதாரம் இன்றியமையாதது. அதேபோன்று தான் அரசியல் கட்சிகளுக்கும் நிதி ஆதாரம் மிக முக்கியமானதாக உள்ளது. கொள்கை – கோட்பாடுகளைத் தாண்டி வேறு வேறு விதங்களில் தேர்தல் களத்தைச் சந்திக்க வேண்டிய புதிய சூழல் உருவாகியுள்ளது.
என்னதான் ஒரு கட்சிக் கொள்கை-கோட்பாடுகளில் வலுவாகவும்; செயல்பாடுகளில் நேர்மையாக இருந்தாலும் அக்கட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கே நிதிதான் பிரதான ஆதாரமாக உள்ளது. கட்சியின் பின்புலம் இல்லாமல் தங்கள் சொந்த நிதி பலத்தில் வேட்பாளர்கள் களம் காண்பது எவ்வளவு கடினம் என்பதை நடந்து முடிந்த தேர்தலில் நாம் கண்கூட கண்டோம்.
உண்மை, நேர்மை, சர்வபரி தியாகம் என அனைத்தும் ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் முன்னால் மதிப்பிழந்து நின்றதை நாம் அனைவரும் கண்ணாறக் கண்டோம். அதையெல்லாம் எண்ணி நம்முடைய கட்சி வேட்பாளர்கள் எவ்வளவு துயரத்திற்கு ஆளானார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவோம். இனி வரும் காலங்களில் இது போன்ற சூழல் ஏற்படக்கூடாது. எனவே எதிர் வரும் தேர்தல்களில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் நாம் இப்போதிலிருந்தே நமது நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
எனவே நிதி ஆதாரத்தைத் திரட்டும் பொருட்டுக் குக்கிராம கிளை முதல் தலைமை நிலையம் வரையிலும் புதிய தமிழகம் கட்சிக்கு நிதிக்குழு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அதன் தொடக்கமாக மாநில அளவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளாகவும், நிதிகளைக் கையாள்வதில் கறையற்றவர்களாகவும், திறமை வந்தவர்களாகவும் உள்ள மூன்று பேர் கொண்ட மாநில நிதிக்குழு நியமிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவில் நிதிக் குழுக்களுக்கும் நியமிக்கப்பட உள்ளன. எனவே, அக்குழுக்களுக்குத் தகுதி வாய்ந்தவர்களை தலைமைக்குப் பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில நிதிக் குழுவிற்கு புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் பேராதரவு தர வேண்டுகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.07.2021