உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா மரணம்! புதிய தமிழகம் அஞ்சலி!!

நினைவுகள்
s2 338 Views
நவீன் சேகரப்பா
Published: 01 Mar 2022

Loading

உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா மரணம்!
புதிய தமிழகம் அஞ்சலி!!

கடந்த 6 தினங்களாக, உக்ரைனில் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் கார்கிவ், கிரீமியா போன்ற முக்கியமான நகரங்களில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த பல மாணவர்கள், மருத்துவம் உள்ளிட்ட பல முக்கியமான பட்டப்படிப்புகளைப் பயின்று வருகின்றனர். அதில், கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பவரும் ஒருவர்.

கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலும் பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்புகளிலிருந்து வெளியே வராமல், ‘பங்கர்கள்’ என்று அழைக்கப்படக்கூடிய பாதாள பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான நேற்றைய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்று கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட முக்கியமான நகரங்களை 20 முதல் 60 கிலோமீட்டர் தூரம் வரையிலும் ரஷ்யப் படைகள் ஆயுத கவச வாகனங்களுடன் சுற்றி வளைத்துள்ளன.
பெரும்பாலும் மக்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வருவதில்லை. பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டாலும், அவை 10 முதல் 15 நிமிடங்களுக்குள்ளாகவே மூடப்படுகின்றன. இந்நிலையில், ஒரு பல்பொருள் அங்காடி முன் வரிசையில் நின்று கொண்டிருந்த நவீன் சேகரப்பா, அங்கு நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆளாகி, இன்று காலை 10 மணியளவில் மரணமெய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

உக்ரைனுக்குப் படிக்கச் சென்ற மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துவரக்கூடிய இவ்வேளையில், மாணவர் நவீன் சேகரப்பாவின் மரணம் மிகுந்த வேதனைக்குரியது, வருத்தத்திற்குரியது. பெருங்கனவுகளோடு வெளிநாடு சென்று பட்டப்படிப்பு முடித்து, தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய அந்த இளைஞர், சற்றும் எதிர்பாராத நிலையில் உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைனில் இருக்கக்கூடிய மாணவர்கள், போர் உச்சகட்டத்தில் இருக்கும் இச்சூழலில், பதட்டப்படாமல், தன்னிச்சையாக எந்த முடிவுகளும் எடுக்காமல், இந்திய அரசு மற்றும் உக்ரைன் – இந்தியத் தூதரகத்தின் வழிகாட்டுதலில் மட்டுமே எந்த இடத்திற்கும் இடம் பெயர வேண்டும்; அது ஒன்று தான் பாதுகாப்பானதும், அங்கிருந்து வெளியேறுவதற்குண்டான வழி என்பதையும் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01/03/2022.