மதுரை தெய்வம் மறைவு – இரங்கல் செய்தி!
259 Views

![]()
புதிய தமிழகம் கட்சியின் மதுரை மண்டல சமூக வலைத்தளப் பிரிவுச் செயலாளராக செயல்பட்டு வந்த மதுரை தெய்வம் அவர்களுடைய மறைவுச் செய்தி நம்மையெல்லாம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
கடந்த 20 ஆண்டுகாலமாக மதுரை மண்டல புதிய தமிழகம் கட்சியின் ஓர் அடையாளமாக விளங்கியவர் அவர்; நமது இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, முக்கியமான காலகட்டங்களில் காணாமல் போன எத்தைனையோ பேருக்கிடையே, எல்லாக் காலகட்டங்களிலும் நாம் மதுரை வந்து தென்மாவட்டங்களுக்கு செல்கின்றபொழுதெல்லாம், அது விமானநிலையமாக இருந்தாலும், தரைவழியாகச் சென்றாலும் தெய்வத்தைக் காணாமல் செல்ல முடியாது. புதிய தமிழகம் கட்சியினுடைய கொள்கைகளை முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவர் பரவலாக எடுத்துச் சென்றதை புதிய தமிழகம் கட்சியினர் எவராலும் மறக்க முடியாது. அந்த மகத்தான தொண்டரை நாம் இப்பொழுது இழந்துவிட்டோம்.
அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டபொழுது, கோவைக்கு அழைத்து வந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொடுத்தோம். அதன்பின் பல ஆண்டுகள் நல்ல திடகாத்திரத்தோடு இருந்த அவர், கடந்த 6 மாதகாலமாக நுரையீரல் பாதிப்பு, இரத்தக் குழாய் அடைப்புப் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த நிலையில், எல்லாவற்றிலுமிருந்து குணமாகி மீண்டும் கடந்த காலங்களைப் போல, அதே இன்முகத்துடன் கட்சிப் பணியாற்ற வந்துவிடுவார் என்றே நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், நேற்று மாலை திடீரென்று சுகவீனமடைந்து இன்று மாலை 6 மணியளவில் மரணமெய்திவிட்டார் என்று வரும் செய்தியை நம்பிட நமது மனம் மறுக்கிறது. தன்னுடையக் குடும்பத்தோடு நமது புதிய தமிழகம் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மதுரை தெய்வம் அவர்களுடைய மரணம் நமக்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தாருக்கும், தமிழகம் தழுவியுள்ள புதிய தமிழகம் கட்சியினர் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடியதாகும்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் – உறவினர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (13.04.2022) மதுரை – பொன்மேனியில் நடைபெறும் அந்த அருந்தொண்டருடைய இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை தெய்வத்தின் தன்னலமில்லா கட்சிப்பணியை என்றென்றும் போற்றுவோம்!
மதுரை தெய்வத்தின் புகழ் என்றென்றும் ஓங்கட்டும், நிலைபெறட்டும்!!
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.04.2022.






