மண்ணையும், மலையையும் ,மக்களையும் காத்திட்ட (படத்தில் வரும் மாமன்னன் அல்ல நிஜத்தில் வலம் வரும் ) மாஞ்சோலையின் மாமன்னன் டாக்டர் அய்யா அவர்கள்.

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

5
Published: 29 Aug 2023

மண்ணையும், மலையையும் ,மக்களையும் காத்திட்ட (படத்தில் வரும் மாமன்னன் அல்ல நிஜத்தில் வலம் வரும் ) மாஞ்சோலையின் மாமன்னன்
டாக்டர் அய்யா அவர்கள்.

தலைவரின் வருகைக்காக கண்ணில் படும் இடமெல்லாம் சிவப்பு பச்சை வர்ணக் கொடி பட்டோளி வீசி பறந்தது .ஒரு நாள் சம்பளத்தை கூட பொருட்படுத்தாமல் காலையிலிருந்து இரவு 8.30 மணி வரை வழி மேல் விழி வைத்து தங்கள் கையில் ஆரத்தி தட்டுகளோடும் , சந்தன மாலையோடும், மரியாதை செய்ய காத்து இருந்தனர் .

தலைவரை கண்டவுடன் தாயைக் கண்ட சேய் போல மகிழ்ச்சி வெள்ளத்தில் (27.8.2023 ) மாஞ்சோலை மக்கள் !

” அய்யா நல்லா இருக்கிறீங்களா ?”
( இது படம் அல்ல நிஜம் ) தனது இரு கைகளையும் மேலே உயர்த்தியபடி பரவசத்தோடு ஆண் ,பெண் இருபாலரும் கேட்டனர்.

” நல்லா இருக்கேன்” ரோஜா மலர் போன்ற மென்மையான புன்னகையோடு தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் பதில் அளித்தார். பிறகு அந்தக் கூட்டத்தினர்களை பார்த்து,

” நீங்க நல்லா இருக்கீங்களா ? ” என கேட்டார் .

” அய்யா அன்னைக்கு எங்க உழைப்பை எல்லாம் சுரண்டி சம்பளமாக வெறும் ரூபாய் 36,56 என கொடுத்தாங்க .

ஆனா மகராசன் நீங்க வந்த பிறகுதான் இன்னைக்கு சம்பளம் 430 ரூபாய் வாங்குறோம் .
உங்களால எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோசமா இருக்கு . அதே மாதிரி பாதுகாப்பாவும் இருக்கு.

ரொம்ப நாளா உங்கள பாக்காமலே ஒரு வருத்தமா இருந்தது. இன்னைக்கு உங்கள பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அய்யா .

” இப்ப ஏதாவது பிரச்சனை இருக்காமா ?” தாயுள்ளத்தோடு அவர்களை பார்த்து வாஞ்சையோடு கேட்டார் .

“அன்னைக்கு 12 மணி நேரம் நாங்க வேலை செஞ்சு கஷ்டப்பட்டோம். எங்க குழந்தைக்கு பால் கூட கொடுக்க விடாம கம்பெனிக்காரங்க அநியாயம் பண்ணுனாங்க.

வீட்டு பக்கத்துல ஒரு வாழை மரம் கூட வைக்க விடாம அடக்கு முறையை ஏவி வாழைமரத்தை வெட்டி வீசுனாங்க .

வீடு இல்லாம மழையிலும் ,வெயிலையும் , சூறாவளி காற்றிலேயும் துன்ப பட்டோம் .

12 மணி நேரம் வேலை செஞ்சுட்டு வந்து தூங்க கூட இடம் இல்லாம தவித்தோம்.

அதையெல்லாம் நீங்க வந்த பிறகு தான் எட்டு மணி நேரம் வேலை என சரி பண்ணி இன்னைக்கு
எங்க புள்ள பெண்டுகளோட நாங்க நிம்மதியாக தூங்குறோம்.

இந்த தலைமுறையிலும்,
எங்கள் பிள்ளை தலைமுறையிலும், பேரப்பிள்ளை தலைமுறையிலும் எங்களால் உங்களை மறக்க முடியாது அய்யா .

இப்ப என்ன ஒரு கஷ்டம்னா எங்களுக்கு இந்த வேலையை விட்டா வேற வேலை தெரியாது . இந்த வேலை முடிஞ்சுருச்சுன்னா கீழ போய் இருக்கிறது சொந்த வீடு இல்லை. செய்யறதுக்கு எங்களுக்கு வேற வேலை எதுவும் தெரியாது.

அதனால இங்கேயே தலைமுறை தலைமுறையா உழைச்சவங்களுக்கு அஞ்சு ஆறு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கி கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு புண்ணியமா இருக்கும் .

இப்ப நீங்க வந்தப்ப எவ்வளவு ரோடு மோசமா இருக்குன்னு பார்த்தீங்களா? குழந்தை பிரசவத்துக்கு நாங்க எப்படி இங்க இருந்து கீழ போறது அல்லது எப்படி மேல வருது இந்த கம்பெனிக்காரங்களுக்கு இன்னமும் புத்தி வரமாட்டேங்குது .
அரசாங்கமும் எங்களை இன்னமும் ஒரு தலைப்பட்சமாகதான் பாக்குறாங்க அதனால மீண்டும் உங்களால தான் இந்த ரோடுலாம் சரி பண்ணி கொடுக்க முடியும் .

இப்ப புதுசா ஒரு பஸ் விட்டு இருக்காங்க ஏறவே முடியல மூட்டைய ஏத்த முடியல ஆளுங்களே ஏற முடியல அப்புறம் எங்க மூட்டைய ஏத்துறது பஸ் மேலயாவது மூட்டைய ஏத்துற மாதிரி ஏணி இல்லை. வரதே ஒன்னு ரெண்டு பஸ் தான் அந்த பஸ்ஸும் இப்படி இருந்தா நாங்க எப்படி அய்யா வாழ்வது?

ரொம்ப மோசமா இருக்குற இந்த ரோட்ல திடீர்னு தலைவலி, காய்ச்சல் வந்தா கூட நாங்க கீழ போய் மருத்துவம் பாத்துக்க முடியல இங்க இருக்கிற மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதில்லை. மருத்துவ வசதி, செஞ்சி குடுங்க ஐயா .

படிச்ச பிள்ளைகளுக்கு கவர்மெண்ட் வேலை வேணும் . கீழதான் பிள்ளைங்க படிக்கப் போறாங்க இப்ப பள்ளி கல்லூரி இன்டர்நெட் கிளாஸ் அப்படின்னு தொழில்நுட்பம் வளர்ந்து போன காலகட்டத்துல எங்க புள்ளைங்களும் அது மாதிரி படிக்கிறதுக்கு ஆசைப்படறோம் ஆனா அதுக்கு தேவையான டவர் வசதி இல்லாம கஷ்டப்படுகிறோம் டெலிபோன் வசதி செஞ்சி தாங்கய்யா .

இங்க ரோடு வசதி இல்ல. பஸ் வசதி இல்ல. குடிநீர் வசதி இல்ல .சுகாதார வசதி இல்ல. டெலிபோன் வசதி இல்ல ஆனா மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து எங்க கிட்ட தொழில் வரி மட்டும் பிடுங்கி கொண்டே இருக்கிறார்கள் .

ஏற்கனவே 500 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா மட்டும் வழங்கி இருக்காங்க நிலத்தை காட்டல
அந்த நிலத்தை எங்களுக்கு ஒப்படைக்கணும்.

ஒன்னு ரெண்டு பேருக்கு வீடு வசதி இல்லாம இருக்குறாங்க அவங்களுக்கும் வீடு வாங்கி தரணும் . அய்யா இதையெல்லாம் செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அய்யா .

இந்த உரையாடல் புதிய தமிழகம் கட்சியில் பயணித்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பாளர்களுக்கு கூட மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்கியது . ஒரு தந்தையிடம் மகன் கேட்பது போலவும்,ஒரு தாயிடம் மகள் கேட்பது போலும் அந்த சந்திப்பு உரையாடல் அமைந்திருந்தது.

உலக வரலாற்றிலும் சரி இந்திய வரலாற்றிலும் சரி தமிழக வரலாற்றிலும் சரி கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரு பகுதி தோட்ட தொழிலாளர்கள் ஒரே தலைவரை நம்பி இருக்கக்கூடிய ஒரு தலைவராக டாக்டர் அய்யா மிளிருகிறார் என்றால் அதற்கான அடிப்படை சிறப்பம்சங்கள் என்னவென்றால் .

1998 ஆம் ஆண்டு மாஞ்சோலை தோட்டத்திற்கு முதன் முறையாக டாக்டர் அய்யா அவர்கள் சென்றபோது அங்கேயே தங்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

” அய்யா எங்க வீட்ல தங்குங்கள்” என்று தொழிலாளர்கள் கரிசனத்தோடு சொல்கிறார்கள்.

முதலாளியோ “எங்கள் கெஸ்ட் ஹவுஸ் வந்து தங்குங்கள்” என கெஞ்சுகிறார்கள் .
ஆனால் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தொழிலாளர்கள் வீட்டில் கோணி சாக்கில் படுத்து உறங்க தொடங்கினார் . அந்த உறக்கம் அங்கு உறக்கத்தை தொலைத்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விட தொடங்கினார்கள் .ஆம் …

அதன் பிறகுதான் தொழிலாளர்கள் இவர்தான் நமக்கான தலைவர்;
இவர் தான் நமக்கான அடையாளம் :இவரால் தான் நமக்கு விடுதலை கிடைக்கும் ;என ஆணித்தரமாக உளப்பூர்வமாக நம்பி பயணிக்கத் தொடங்கினார்கள்.

மாஞ்சோலைத் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை, மண்ணுரிமைக்கான அனைத்து போராட்டங்களிலும் நீக்கமற நிறைந்து இருந்தார்கள். அது ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சரி , உண்ணாவிரத போராட்டமாக இருந்தாலும் சரி, டெல்லி பேரணியாக இருந்தாலும் சரி” பந்து” வேலை நிறுத்தம் ,தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டம் , மாஞ்சோலை முதல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற நடை பயணமாக இருந்தாலும் சரி, வால்பாறையில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற நடை பயணமாக இருந்தாலும் சரி, தொடர் போராட்டமாக இருந்தாலும் சரி, அத்தனை போராட்ட வடிவங்களுக்கும் உயிர் கொடுத்தவர்கள் . அதனாலயே வரலாற்றில் இன்று உயர்ந்து நிற்கிறார்கள்.

தலைவரின் அப்பழுக்கற்ற நேர்மையும் ,பிரதிபலன் பாராத உழைப்பும், தன்னலம் கருதாத அர்ப்பணிப்புமே டாக்டர் அய்யா அவர்களை இந்த மாஞ்சோலை எஸ்டேட் பகுதியினர் தங்களின் குலதெய்வமாக வணங்கி வரவேற்கிறார்கள். என்பதை இந்த களப்பயணத்தில் நாங்கள் இதயபூர்வமாக தெரிந்து கொண்ட பாடமாகும்.

லட்சியம் மிக்க தலைவரின் பயணத்தில் நானும் ..
வாழையூர் குணா