விற்றவர்களே அதை வாங்க வேண்டும் என சொல்வது கச்சத்தீவு ! கொண்டு வந்தவர்களே அதை நீக்க வேண்டும் என்பது நீட்!

அரசியல் என்பது நாட்டு மக்களின் வளம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, அமைதி குறித்து ஆரோக்கியமான திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு களம் அரசியல்.
சமீப காலமாக அரசியல் என்பது தேர்தல் காலங்களில் பொய் பேசுவது, வாக்காளர்களை பணம் பரிசுப் பொருட்களால் விலைக்கு வாங்குவது. மேலும் மதி மயக்குவது, ஆடல், பாடல் என சினிமா மோகங்களை திணித்தும், வாய்க்கு வந்ததை மேடைதோறும் பேசியும், தன்னால் செய்ய முடியாததை,தன்னால் செயல்படுத்தி காட்ட முடியாததை வாக்குறுதியாக அள்ளி விடுவதும், அதைக் கேட்பவர்கள் நம்பும் வகையில் பரப்புரை செய்வதும், அதனூடாக தேர்தல் வெற்றிக் கனியை பறித்து தனது குடும்ப உறுப்பினர் சகீதமாக செல்வ செழிப்போடு வாழ்வதற்கு அடிப்படையான ஒரு களமாகதான் இன்று தமிழக அரசியல் அமையப் பெற்றுள்ளது.
உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி , தமிழக அளவிலும் சரி அதற்கு உதாரணமாக கோபாலபுரத்து குடும்பம் கருணாநிதி வகையறாக்கள் தான் அண்ணாதுரை ஆட்சியை பிடிப்பதற்காக “ஒரு படி அரிசி நிச்சயம் இரண்டு படி லட்சியம் ” என நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரிசி கொடுப்போம். பருப்பு கொடுப்போம் . அதை கொடுப்போம். இதை கொடுப்போம். எங்களையே கொடுப்போம் சாதி ஒழிப்போம் .என்றெல்லாம் வாயில் வடை சுட்டு தேசிய கட்சியான காங்கிரசை வீழ்த்தி 1967-ஆம் ஆண்டு தமிழகத்தை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் சொன்ன மாதிரி உருப்படியா அரிசியை ஆறு மாத காலம் கூட கொடுக்க முடியாமல் வாக்களித்த மக்களை ஏமாற்றினார்கள்.
2006 -2011 கலைஞர் ஆட்சியில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஒரு சென்ட் கூட கொடுக்காமல் நிலம் இருந்தவர்களுக்கு அவர்கள் அனுபவித்து வந்த அரசு தரிசு மற்றும் புறம்போக்கு நிலத்தை VAO மூலம் பட்டா போட்டு கணக்கு காட்டி வாக்களித்த மக்களை ஏமாற்றினார்கள் . அன்று அவர்கள் விதைத்த பொய் விதை இன்று விருச்சகமாக வளர்ந்து நிற்கிறது.
1949 ஆம் ஆண்டு அவர்கள் கட்சி தொடங்கிய போது என்ன சொன்னார்கள் ? சாதியை ஒழிப்போம் .தீண்டாமை ஒழிப்போம். சமத்துவம் படைப்போம். சமூகநீதி நிலவ செய்வோம் அதுவே கொள்கை கோட்பாடு, லட்சியம் என முழங்கியவர்கள்.கடைசியில் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை .
தமிழக கிராமங்களில் தெருக்கள் இன்னும் தனித்தனியாகதான் இருக்கிறது. சுடுகாடுகள் தனித்தனியாக தான் இருக்கிறது. குடிநீர் கிணறு தனித்தனியாக தான் இருக்கிறது. கோவில்கள் தனித்தனியாக தான் இருக்கிறது .திருவிழாக்கள் தனித்தனியாக தான் நடக்கிறது. திருமண உறவா இருக்கட்டும் அல்லது மற்ற சுபநிகழ்ச்சியாக இருக்கட்டும் அவரவர் சாதிக்குள் தான் நடக்கிறது. கடந்த 74 ஆண்டு காலமாக என்ன மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி விட்டார்கள் ?
இவர்கள் எந்த வாய வைத்துக்கொண்டு சமூக நீதியை பற்றி பேசுகிறார்கள். சாதி ஒழிப்பை பற்றி பேசுகிறார்கள். இதையெல்லாம் கேட்டால் போற போக்கில் அவர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரையை குத்தி விடுவார்கள்.
இந்து கோயில்களையும், இந்து திருவிழாக்களையும், கேலி கிண்டல் செய்து இஸ்லாமிய,கிறிஸ்தவர்களிடம் நற்பெயர் பெற்று அவர்களிடம் இலவசமாக வாக்குகளை கபளிகரம் செய்து அவர்களும் புத்தி கூர்மை இல்லாமல் எதோ திமுக தான் நமக்கு ரட்சகன் என்று நினைத்துக் கொண்டு கண்ணை மூடி வாக்கு செலுத்துவதில் குருடர்களாக விளங்கி வருவது வெட்கக்கேடு.
உதாரணத்திற்கு நீட் பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு தகுதி இல்லை. நாட்டைப் பற்றி பேசுவதற்கும் உதயநிதிக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அவருக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை . கல்வி பற்றியோ கற்பவர் பற்றியோ கற்றுக் கொடுப்பவர் பற்றியோ ஏதும் தெரியாத ஒரு நபர் 2019 தேர்தலில் திமுகவிற்கு வாக்களியுங்கள் நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்கிறோம் என்று சொன்னார்கள். அதனூடாக 38 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிவாகை சூடிக் கொண்டார்கள்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து கையெழுத்து என வீதி வீதியாக மேடைதோறும் ஊர் தோறும் முழங்கினார்கள் . அதையெல்லாம் தமிழர்கள் இன்னும் நம்பிக் கொண்டு இருப்பது தான் வெட்கக்கேடு வேதனை அளிக்கிறது.
தமிழாய்ந்த தமிழர்கள் என்றெல்லாம் போற்றுகின்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், திருக்குறள், என வடித்த அறிஞர் பெருமக்கள் வழி வந்த தமிழர்கள் எல்லாம் இன்று மதி மயங்கி எதை சொன்னாலும் நம்புகிற தற்குறிகளாக மதுவிற்கும் , கஞ்சா போதைக்கும் தமிழகத்தை சீரழித்து மதி கெட்டவர்களாக ஆண்களை மாற்றியும் ,
பெண்களை இலவச டிவி கொடுத்து அதன் மூலம் சீரியல் பார்க்க வைத்து அவர்களையும் தற்குறிகளாக்கி வீட்டில் அடிமைகளாக்கி விட்டார்கள் , இளைஞர்கள் எல்லாம் டாஸ்மாக் பாரில் மதிமயங்கி கிடக்கிறார்கள். பெண்கள் எல்லாம் டிவி சீரியலில் முழங்கி கிடக்கிறார்கள். அதனாலயே கருணாநிதி வரையறாக்கள் ஸ்டாலின் குடும்பத்தினர்கள் உதயநிதி போன்றவர்கள் எல்லாம் சொல்கின்ற பொய்களை தமிழர்கள் எவரும் எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு மனநிலையில் வாழ்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.
நீட் தேர்வை ஏதோ எடப்பாடி அவர்கள் கொண்டு வந்தது போல ஒரு கற்பிதம் பண்ணுவதும், நீட் தேர்வை பாரத பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்தது போல ஒரு கற்பிதம் செய்து அதன் ஊடாக ஒரு அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற ஈனப்பிறவிகளாகத்தான் நாம் பார்க்க நேருகிறது.
காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது தான் நீட்டை கொண்டு வந்தார்கள். அப்பொழுது நீட்டை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் ஆகவே நாங்கள் நீட்டுக்கு எதிராக வெளிநடப்பு செய்கிறோம்.என்று திமுக தன்மானத்தோடு வெளியேறி இருந்தால் ,காங்கிரஸ் நீட்டை ஆதரித்து இருக்காது.என்று ஒரு பேச்சுக்கு வச்சுக் கொண்டாலும் கூட அன்று தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் அமைச்சர் பொறுப்பு வாங்குவதற்காக கருணாநிதி காங்கிரஸ் இடம் காவடி தூக்கிச் சென்றார்.
அப்போது அவர்களுக்கு நீட்டை தெரியவில்லை. வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டார்கள் . நாட்டையும் தெரியவில்லை. இப்பொழுது இளம் மாணவர்கள் மனதை கெடுத்து எப்படியாவது மீண்டும் எதிர் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாணவர்கள் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் உதயநிதி 21.8.2023 உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் .
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் கொத்து கொத்தாக தமிழர்கள் செத்து மடிந்த போது மனைவி ஒரு பக்கமும் துணை ஒரு பக்கமும் காலம் சென்ற கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தி அங்கே அனைவரையும் கொல்வதை தடுத்து நிறுத்தாமல் தமிழர்களை அழித்த காலம் சென்ற துரோகி .
நீட் தேர்வு ஒன்றும் தீட்டு தேர்வு அல்ல தகுதியை வளர்த்துக் கொள்வதற்கான தேர்வு. அதில் என்ன குறையை கண்டுபிடித்தார்கள் ஏன் இந்த அரசியல் விளையாட்டு ?
கல்வித்துறையில் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மருத்துவ கல்வி என்பது மனித உயிரோடு சம்பந்தப்பட்ட படிப்பு அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்கு உண்டான தேர்வை குறை சொன்னால் என்ன அர்த்தம் ?நல்ல தரமான மருத்துவர் வேண்டும் என்பது தவறா? மருத்துவ கல்வியை தரம் உயர்த்துவது குற்றமா? எந்த குற்றத்திற்காக நீட் தேர்வு ரத்து செய்ய கூக்குரல் இடுகிறார்கள் .?
திமுக அரசியல் செய்வதற்கு இந்தி எதிர்ப்பு, நவோதய பள்ளி எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இப்படி கல்வியில் மட்டுமே தொடர்ந்து அரசியல் செய்து வரும் திமுகவை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் மாவட்டம் தோறும் நவோதயா பள்ளி இல்லாததனால் மீத்திறன் மிக்க கிராமப்புற மாணவர்களுக்கு அனைத்து கட்டமைப்பு வசதிகள் நிறைந்த தரமான கல்வி கிடைக்காமல் போய்விட்டது .மற்ற மாநிலங்களில் முன்மொழி திட்டத்தின் கீழ் முழுமையான கட்டமைப்பு வசதி கொண்ட நவோதயா பள்ளி மாவட்டம் தோறும் இருப்பதனால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் நன்கு பயனடைகிறார்கள். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாடக மாய்யையால் நவோதயா பள்ளி அனுமதிக்காமல் சதி செய்து எதிர்கால தலைமுறையின் கல்வி கனவை திமுகவினர்கள் நசுக்கி விட்டார்கள்.
இது போன்ற படுபாதக செயலை திமுக தொடர்ந்து செய்து வந்தால் வரும் காலங்களில் மாணவர்கள் கிளர்ந்து எழுந்து அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் என்பது மட்டும் திண்ணமாகும் .
இந்த உண்ணாவிரத நாடகம் இனி தவிடுபொடி ஆகும். இதை நம்புவதற்கு தமிழர்கள் இனி தயாராக இல்லை. நீட் குறித்து ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பாஜகவினர் கூட பின்வாங்கிய போது அவர்கள் கூட மௌனம் சாதித்தபோது தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போது பாஜகவே பயந்து ஒதுங்கிக் கொண்டபோது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் மட்டும்தான் நீட் குறித்த அவசியத்தையும், தேவையையும் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலே நீட் அமலாக்கப்படுகிறது. இதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது .தமிழகத்திற்கு இதிலிருந்து விலக்கு என்பது கிடையாது. ஆகவே தமிழ் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து சிபிசி திட்டத்திற்கு பாடத்திட்டங்களை கொண்டு வந்து பள்ளி மாணவர்கள் எளிதாக படித்து நீட் தேர்வை வெற்றி பெறுவதற்கு அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர் டாக்டர் அய்யா அவர்கள் என்றால் அது மிகையாகாது.
ஆனால் கடந்த வருடங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்ற மாநிலத்தில் தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது. இதில் 720 க்கு 720 எடுத்து தமிழக மாணவன் பிரபஞ்சன் அவர்கள் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இந்த நீட் தேர்வை யார் எதிர்க்கிறார் என்று பார்த்தால் தனியார் மருத்துவ கல்லூரி வைத்திருக்கின்றவர்கள் எல்லாம் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். அல்லது நீட் தேர்வை எதிர்க்க வைக்கிறார்கள். மருத்துவ கல்லூரி நடத்துகின்ற தனியார் முதலைகள் தமது விருப்பம் போல பணத்தைப் பெற்றுக் கொண்டு சீட்டுக் கொடுக்க முடியவில்லை. அதற்கு இடையூறாக நீட் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வில் பாஸ் ஆனவர்களுக்கு தான் அனுமதி என்கின்ற பொழுது அதனால் அவர்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது.
நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பல லட்சம் பெற்றுக் கொண்டு மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி மனித உயிர்களை காப்பாற்றுவார்கள் ?என்பது தான் கேள்வி குறி.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிப்படிப்பு முடித்தாலும் TET எப்படி அவசியமாகிறதோ அதேபோன்று M.Ed முடித்தாலும் TRB தேர்வு மேலும் அரசு பணிகளில் சேர்வதற்கு டிஎன்பிசி நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே அரசு பணியாளர் நியமனம் செய்யப்படுகிறது.
தகுதியான மருத்துவரை தேர்வு செய்ய நீட் தேர்வு வேண்டாம் என்றால் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தகுதி தேர்வு வேண்டியது இல்லை. தமிழக அரசு டிஆர்பி மற்றும் டெட் தேர்வுகளையும் ரத்து செய்திட்டு B.Ed., மற்றும் M.Ed., படித்து முடித்தவர்கள் ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும் .ஆசிரியர் பணிக்கு இந்த படிப்புகளை படித்துவிட்டு ஆசிரியர் வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.
தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டியது தானே பத்தாம் வகுப்பில் மார்க் எடுக்கவில்லை என வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் மார்க் எடுக்கவில்லை என்ற தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்காக பள்ளிக்கூடங்களை இழுத்து மூடவா முடியும்? ” தற்கொலைகளும் கூடாது கொலைகளும் கூடாது” தற்கொலை செய்து கொள்கிற மாணவர்களுக்கு சரியான அறிவுறுத்தலும், வழிகாட்டலும் செய்ய வேண்டுமே தவிர தற்கொலைகளை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பது முட்டாள்தனமானது.
உலகில் எந்த நாட்டிலும் தற்கொலைகளை வைத்து அரசியல் செய்ததாக சரித்திரம் இல்லை. தமிழகத்தில் எவன் சாவான் அவனை வைத்து அரசியல் செய்யலாம் என்று இங்கே பிணம் தின்னி கழுகுகளை போல அரசியல்வாதிகள் திட்டமிட்டு அதுவும் குறிப்பாக திமுகவினர்கள் இதை ஒரு அடிப்படைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள் .அவர்களுடைய அடிவருடிகளும்,கொத்தடிமைகளும், அடிமை கட்சிகளும் கூட அவர்கள் செராக்ஸ் காப்பி போல தான் செயல்படுகிறார்கள் .
அப்படிப்பட்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் பள்ளிக்கூடங்களில் அரசியலும் சாதியும் மேலோங்கி கசப்பான ஒரு விளைவை ஏற்படுத்திக் வருகிறது. அதேபோன்றுதான் நீட் தேர்விலும் ஒரு கசப்பான அனுபவத்தை அரசியல்வாதிகளால் மீண்டும் மீண்டும் தமிழக மாணவர்களை குழப்பி வருகிறார்கள் . அரசியல்வாதிகள் எவரும் நீட்டைப் பற்றி பேசாமல் இருந்தாலே நீட் தேர்வில் உறுதியோடு படித்து வெற்றி பெறுவார்கள்.
இந்த வாரம் நீட் ரத்து வரும் அடுத்த வாரம் நீட் ரத்து வரும் என்று படிப்பவர்களும், படிக்காமல் குழம்பி வருகிறார்கள். படிக்கின்ற வயதில் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தால் எந்த படிப்பும் வெற்றிப் படிப்பு தான். இந்த நாட்டை வழிகாட்டிய தமிழர்கள் வானூருதிக்கு வழிகாட்டியவர்கள்,மண்ணையும்,மக்களையும், பாதுகாக்க வழி காட்டியவர்கள், கடல் வணிகத்திற்கு வழிகாட்டியவர்கள், பாரம்பரிய பண்பாட்டிற்கு வழிகாட்டியவர்கள், அப்படிப்பட்ட பெருமைமிகு வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்றால் அறிவியல்,உயிரியலும், வேதியியலும், சமூகவியல் பாடங்களை படிப்பது இவர்களுக்கு கடினமாக இருக்காது. ஆனால் இவர்கள் எல்லாம் நீட் தேர்வு வெற்றி பெற்று மருத்துவ கல்வியைப் படித்து முடித்து விட்டால் பணக்காரர்கள் மருத்துவருக்கு மரியாதை கிடைக்காது .என்கின்ற வர்க்க பேதம் இதுக்குள்ளே அடங்கி இருப்பதை எத்தனை பேர் உணர்வார்கள்? இதற்கு முன்பாக மருத்துவ படிப்பு என்பது பணக்காரர்கள் படிக்கிற படிப்பாக இருந்தது.( கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து )
தமிழகத்தில் ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் மருத்துவ கனவு என்பது மெய்ப்பித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் கீழ் கண்ட பல்வேறு மாவட்டங்களில் அனைவரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை என்றாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஏற்ப நீட் தேர்வில் ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகள் படித்து முன்னேறி மருத்துவ கனவை நிறைவேற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான வாய்ப்பை இப்பொழுது நீட் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் , கந்தலி ஒன்றியம், நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் வி. ஹரிதா ( இவர் லாரி டிரைவர் மகளாவார்) பிளஸ் டூ தேர்வு 530 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பெற்று அதே போன்று நீட் தேர்வில் 460 மதிப்பெண் பெற்று 7.5 உள்ள ஒதுக்கீட்டில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கப் போகிறார் .
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரியாம்பாளையம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஜெகநாதன் கௌரி தம்பதியின் மகள் சவுரி பர்னிகா இம் மாணவி பத்தாம் வகுப்பில் 462 மதிப்பெண் பன்னிரண்டாம் வகுப்பில் 539 மதிப்பெண் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதி 388 மதிப்பெண் பெற்றுள்ளார் .இவருக்கு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம் மலையப்ப நகரை சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த சுப்பிரமணியன் மகள் கோகிலா பிளஸ் டூ தேர்வு 600க்கு 459 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் பழங்குடி இட ஒதுக்கீட்டில் தேர்வாகி மருத்துவம் பயில போகிறார்.
கோவை மாவட்டம்,வெள்ளியங்காடு, அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் ரம்யா. ரம்யாவின் தந்தை கூலி வேலை செய்து வருபவர் மிகவும் பின்தங்கிய பகுதியில் வசிப்பவர். அந்த பகுதியில் மின்சார வசதி கூட இல்லை. இவர் நீட் தேர்வில் தேர்வாகி மருத்துவம் பயில போகிறார்.
அதே பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெஸ்டிஸ் பிரியங்கா மாணவிக்கு பெரம்பலூர் தனலட்சுமி மருத்துவக் கல்லூரியில் 7.5 உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில அனுமதி கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், பி. எ. தண்டா கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான சௌமியாவிற்கு 7.5% உள் ஒதுக்கீடு படி கோவை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்துள்ளது.( இவர் லம்பாடி இனத்தைச் சார்ந்தவர் )
தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் ,கிருஷ்ணாபுரம், விவசாய குடும்பத்தைச் சேர்ந்த காரல் மார்க்சு என்பவரின் மகள் தன பிரியா நீட் தேர்வில் வெற்றி பெற்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயில போகிறார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், ஊத்துமலை ஊரில் பிறந்த கட்டிட தொழிலாளியின் ஐயன் ராஜ் என்பவரின் மகள் கலைச்செல்வி நீட் தேர்வில் வெற்றி பெற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயில போகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஒரு ரப்பர் தோட்ட தொழிலாளியின் மகள் மருத்துவ படிப்பில் சேர உள்ளார் அதற்கு காரணம் நீட் தேர்வு. இது போன்ற மாணவர்களை அழைத்து மற்ற மாணவர்களை ஊக்குவிக்காமல் தன்னை போல் மற்றவர்களும் அறிவிலிகள் என்ற சிந்தனையில் உள்ள சின்னத்தத்தி உதயநிதி போன்றவர்களை என்னவென்று சொல்ல ?
ஏழைகளின் வாழ்வில் நீட் தேர்வு எவ்வளவு முக்கியமானது என்பது சில தத்திகளுக்கு தெரியவில்லை .பணக்காரர்கள் மட்டும் தான் டாக்டராக முடியும் என்ற நிலையை மாற்றி ஏழைகளையும் டாக்டராக்க வாய்ப்பு தந்துள்ளது நீட் தேர்வு.
சாதாரண கூலி தொழிலாளியோட மகள்,கட்டட தொழிலாளியோட மகள், விவசாயியோட மகள், தச்சு தொழில் செய்வோரின் மகள், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்கிறார்கள் என்றால் அதை சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கூட்டம். நீட் ரத்து செய்ய வேண்டும். என்று நீண்ட காலமாக கத்திக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்கிறார்கள். நீட் தேர்வை எழுதி வெற்றி கொள்ள முடியாத உதயநிதி போன்ற அரைவேக்காடுகள் படிக்கின்ற பிள்ளைகளின் தரத்தை குறைத்து மதிப்பிட்டு மாற்றுத்திறனாளி மாணவனுக்கு எப்படி கூடுதல் நேரத்தை தேர்வு காலங்களில் ஒதுக்குகிறோமோ அது போல தமிழர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும். என சொல்லுகிறாரா அல்லது திராவிட ஆட்சி காலத்தில் கல்வி தகுதி இல்லாமலும், நீட் கல்வி அம்சங்கள் இல்லாத பாடத்திட்டங்களை கொண்டிருப்பதனால் இதை எதிர்க்கிறோம் என்று இவர்களால் வெட்ட வெளிச்சமாக சொல்ல முடியுமா?
அப்படியெல்லாம் சொல்ல முடியாது. சொல்ல வாய்ப்பில்லை. இவர்கள் என்ன செய்ய வேண்டும் நீட் தேர்விற்கு எந்த மாதிரியான பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுக்கலாம் என்று இவர்கள் குழு அமைத்து அந்த குழு பரிந்துரையின் படி அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வை எழுதி வெற்றி கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாமல் நீட் தேர்வை வைத்து இந்த மாணவர்களையும், மக்களையும் குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவது மோசமான ஒரு பின்விளவை ஏற்படுத்தும் .
எதிர்காலத்தில் உதயநிதியை மாணவர்களே கல்லால் அடித்து விரட்டி அடிக்க கூடிய ஒரு சூழல் கூட ஏற்படும்.. குட்ட குட்ட குனிபவன் மனிதன் அல்ல ஆயிரமாயிரம் பொய்களைச் சொல்லி அதை நம்புகிறவனும் மனிதனல்ல உங்கள் பொய்ய்க்கும், பொய் புரட்டுக்கும் ,ஏமாற்றுவதற்கும் கால அவகாசம் முடிந்து விட்டது. தமிழர்களுக்கான அவகாசம் நெருங்கி விட்டது இனி உங்கள் வகையறாக்களை துரத்தி அடிக்கின்ற காலம் வெகு தொலைவில் இல்லை.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் அப்போது நீங்கள் நீட்டுக்காக தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் வரிசையில் நீங்கள் தற்கொலை செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட ஒரு பேராபத்தில் தான் தமிழக ஆளுநரை எல்லாம் நீங்கள் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் அவரைக் கேட்டால் நீட் ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்? இப்பொழுது வேற ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும். காங்கிரஸ் கட்சி அது போன்ற ஒரு அறிக்கை வெளியிட்டதா? இல்லை காங்கிரஸ் ஆட்சியில் உங்கள் கூட்டணியோடு தானே நீட்டை கொண்டு வந்தது அது எப்படி மீண்டும் ரத்து செய்ய முடியும் என்று தமிழர்களுக்கு தெரியாமல் எல்லாம் இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் ஸ்டாலின்.
நீட் தேர்வு ரத்து செய்ய ஸ்டாலினால் மட்டுமல்ல எந்த மாநில முதலமைச்சராலும் முடியாது .நீட் தேர்வு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம் தான். நீதியரசர் சந்துரு அவர்கள் நீட் தேர்வின் உண்மை தன்மையை வெளிப்படுத்தினார்.
பிற மாநிலங்கள் நீட்டை எதிர்க்காதபோது தமிழக அரசு விலக்கு கேட்பது ஏன்? இது தமிழகத்திற்கு அவமானம் இல்லையா? தமிழக மாணவர்களின் திறமை கல்வி தரத்தை குறைத்து மதிப்பிடுகிறதா ?இறந்தவரின் குடும்பத்துக்கு கட்சியினர் பணம் கொடுக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை அரசு பின்பற்றவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
அரசியல், கல்வித் தந்தையர்களின் லாபங்களுக்காக சமூக ஆர்வலர்கள்,அரசியல்வாதிகள்,நடிகர்கள் ,போலி போராளிகளில் நீட் குறித்த பொய்ப் பிரச்சாரங்களை மாணவர்களும்,பெற்றோர்களும் நம்பி இனி ஏமாற வேண்டாம்.
காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரத்தோட மனைவிதான் நீட் தேர்வு அவசியமென்று வாதாடி போராடி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று அதை மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றிய பெருமைக்குரியவர். இதெல்லாம் தெரியாமல் காங்கிரஸ் வந்தால் நீட் ரத்து செய்வோம் என்று கர்ச்சிப்பது அவருடைய அறியாமையை காட்டுகிறது. அவருடைய சிறுபிள்ளைத்தனத்தை காட்டுகிறது. அவருடைய முயற்சியின்மையை காட்டுகிறது. ஆக விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு தனமாக பேசுவதை நிறுத்திக் கொண்டால் நல்லது இல்லையென்றால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் . அதற்கான வழியை அதற்கான பாதையை விளையாட்டுத்துறை அமைச்சர் வகித்து தருகிறார். இதை தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் அதுவும் நடக்கும் .அது தமிழகத்திற்கு நல்ல செய்தியாகவே இருக்கும். நேற்று நாடகத்தை முடித்துக் கொள்ளுங்கள்.
நாட்டின் வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்கள் இருக்கு அதை குறித்து பேசுங்கள் நடிக்காதீர்கள். ஏமாற்றாதீர்கள். வஞ்சிக்காதீர்கள் தமிழர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை நினைத்துக் கொண்டு இருக்கின்ற குறை காலங்கள் எதாவது நிறைவான திட்டங்களை தீட்டி மக்களின் கோபத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அல்லது ஆட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள். இது இரண்டும் தான் உங்களுக்கு வழி என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வாழையூர் குணா






