விரும்பத்தக்கது எது? விரும்பத்தகாதது எது? ‘சாமிகள்’ தான் முடிவு செய்ய வேண்டும்! பூசாரிகள் அல்ல!!

அறிக்கைகள்
s2 97 Views
  • Dr Krishnasamy

    Dr Krishnasamy

  • Dr Krishnasamy
Published: 02 Aug 2024

Loading

விரும்பத்தக்கது எது? விரும்பத்தகாதது எது?
‘சாமிகள்’ தான் முடிவு செய்ய வேண்டும்! பூசாரிகள் அல்ல!!
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கருத்தின் மீதான எனது விரிவான விளக்கத்திற்கு முன்னோடியாக,
அன்றே (27.08.2020) நான் கொடுத்த விளக்கம்.!
விரிவான விளக்கம் நாளை வெளிவரும்.!
…………………………………………………..
ஊடகச் செய்திகளை வைத்து ஊளையிடும் திராவிட மனுவாதிகளே.!!
வழங்கப்படாத தீர்ப்புக்கு, வாழ்த்துக்களும் வரவேற்புகளுமா?

பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைக் கூறுகளாக்கி வழங்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தனிநபர்கள் தொடர்ந்த வழக்குகளில் 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இன்று முடிவான தீர்ப்பு எதுவும் சொல்லாமல் அவ்வழக்கைப் பெரிய அமர்வுக்கு மாற்றிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து தீர்ப்பளித்துள்ளது. பட்டியல் பிரிவினரை ABCD என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற குழு ஆந்திரா அரசின் அந்த நடவடிக்கையைத் தவறு என சுட்டிக்காட்டி ரத்து செய்தது. அதை எதிர்த்த மனு மற்றும் இந்தியாவெங்கும் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட உள் இடஒதுக்கீடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு எதுவும் அளிக்காமல், போகிற போக்கில் மாநில அரசுகள் உள் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டு இந்த அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து, ஐந்து நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்தே தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். எனவே அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்திருப்பது வெறும் கருத்து மட்டுமே தவிர, தீர்ப்பு அல்ல, (Only Observation, Not Judgement). உள் இடஒதுக்கீடு குறித்த இறுதியான தீர்ப்பு பெரிய அமர்வின் விசாரணைக்குப் பின்னரே முடிவாகும். நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாகக் காது கொடுத்து வாங்காமலும், தீர்ப்பு நகல்களைப் படித்துப் பார்க்காமலும் சில ஊடகங்கள் பரபரப்பிற்காகச் செய்திகளை வெளியிட்டு ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கின்றன.

அவர்களுக்குத்தான் அது பிழைப்பு என்றால், 70 ஆண்டுக் காலத்திற்கு மேலாகக் கட்சி நடத்துவோரும் அரைகுறையான செய்திகளை அடிப்படையாக வைத்து கருத்து வெளியிடலாமா? இந்த வழக்கை 7 பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு இனிமேல் தான் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால் நாம் போட்ட வழக்கு தோற்றுவிட்டதாகவும், அவர்களுடைய சமூகநீதி வெற்றி பெற்றதாகவும் ஊடக உளறல்களை வைத்துக்கொண்டு திராவிட மனுவாதிகள் ஊளையிடுகிறார்கள். இதற்குத் துணையாக IT WING வேறு, வெட்கக்கேடு. 18 சதவிகிதம் பேரில், மூன்று சதவிகிதம் பேருக்கு மட்டுமே சமூக நீதி வழங்கப்படுகிறது என்றாலே, மீதம் 15 சதவிகிதம் பேருக்கு சமூக அநீதி வழங்கப்பட்டு இருக்கிறது என்றுதானே பொருள். திராவிட மனுவாதிகள் தான் இதில் அவசரப்படுகிறார்கள் என்று சொன்னால், பொதுவுடமைவாதிகளாவது பொறுமை காத்து இருக்கக் கூடாதா? சரி, விரிவாக விசயத்திற்கு வருவோம்.

Aborigenes என்று அழைக்கப்படக்கூடிய பூர்வக்குடி மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அம்மக்கள் வறியவர்களாக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, அம்மக்களுக்கு எதிராக சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்கு முறைகளும் ஏவப்பட்டன. சுதந்திர இந்தியாவில் அம்மக்களுக்குச் சிறப்பு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் உட்படப் பலரும் போராடியதன் விளைவாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களிலும் பட்டியல் பிரிவினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் கொடுக்கப்பட்டது. இது அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய இழப்பீடு மட்டுமே. இந்த உரிமைக்கும், ஆங்கிலேயருக்கு வால் பிடித்தும், கால் பிடித்தும் தங்களை வளப்படுத்திக் கொண்ட நீதிக்கட்சியினருக்கும், திராவிட மனுவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அரசியல் சாசனத்தின் அங்கமான அந்த இடஒதுக்கீட்டைக் கூட, 1967 பிறகு ஆட்சியில் அமர்ந்த திராவிட மனுவாதிகள் முறையாக வழங்கவில்லை. நிரப்பப்படாத இட ஒதுக்கீடு பணியிடங்கள் குறித்து 1996-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நாம் தொடர்ந்து போராடி வெள்ளை அறிக்கையாகப் பெற்றோம். நம்முடைய வெள்ளை அறிக்கை போராட்டத்திற்குப் பிறகு, பட்டியல் பிரிவில் இடம்பெற்றிருந்த தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகியோருக்கு தமிழகத்தின் அரசுத்துறைகளான A. B, C என அழைக்கப்படும் உயர்பதவிகளில் 18 சதவிகிதம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்குப் பதிலாக வெறும் ஒரிறு சதவிகித இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதை அம்பலப்படுத்தினோம். அப்பொழுது இருந்த 13 அரசு பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த துணைவேந்தர்கள் ஒருவர் கூட கிடையாது. 15-க்கு மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயக்குநர்கள், மேலாளர்கள் ஒருவரும் இல்லை. தலைமைச் செயலகத்தில் ஆயிரக்கணக்கான பணிகள் இருந்தாலும் வெறும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே துணைச் செயலாளராக இருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் காவல் நிலையங்களை வழிநடத்தும் காவல் ஆய்வாளர் ஒருவர் கூட இல்லை. தமிழகம் முழுவதும் 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 770 பிடிஒ-க்களில் பட்டியல் பிரிவைச் சார்ந்தவர்கள் 7 பேர் மட்டுமே இருந்தார்கள். தமிழகத்திலிருந்த 65 மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் 5000-க்கு மேற்பட்ட பேராசிரியர், உதவி பேராசிரியர், விரிவுரையாளர்கள் இருந்த இடத்தில் 18+1=19 என்ற அடிப்படையில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிய வேண்டும்; ஆனால் 125 பேர் மட்டுமே விரிவுரையாளராக இருந்தனர். பேராசிரியரோ, உதவி பேராசிரியரோ ஒருவர் கூட இல்லை.

இமயமலைக்கும் கன்னியாகுமரிக்கும் வாய் கிழிய சமூகநீதி பேசும் முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய இலட்சணங்களைச் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பிட்டு பிட்டு வைத்தேன். அன்றைய கல்வி அமைச்சர் அன்பழகன் வீட்டு முன்பு ஒருமாத காலம் போராடியதில் 100 பேராசிரியர்களைப் பெற்றோம். அதன்பின் தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணி இடங்களை நிரப்பினோம். அன்று நிரப்பப்பட்ட ஒவ்வொரு இடமும் புதிய தமிழகம் கட்சியினரும், தேவேந்திரகுல மக்களும் சிந்திய வியர்வையாலும், இரத்தத்தாலும் கிடைத்ததே.!

1996-ல் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம், பட்டியல் பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டிய 3,50,000 பணியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாக இருப்பதைக் கண்டறிந்தோம். ஆனால், அந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைக்காமல் வெறும் 11,000 இடங்களை மட்டுமே காட்டி வெள்ளையடிக்கப்பட்ட அறிக்கையாகச் சட்டமன்றத்திலேயே சமர்ப்பித்தார்கள். அதையும் ஆட்சி போகும் தருவாயில் தான் சமர்ப்பித்தார்கள். நானும், புதிய தமிழகம் கட்சியும் அன்று போராடியது தமிழ்நாட்டில் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்க கூடிய மூன்று பிரிவினருக்குமான சம நீதியை வென்றெடுப்பதற்காகத் தான். ஆனால் நாங்கள் மூன்றரை லட்சம் பணியிடங்களை நிரப்பப் போராடியதை, 2006 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அப்படியே மறைத்துவிட்டு, அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினார். இதற்கு அந்த சமூகத்தினர் போராட்டமோ, மாநாடோ நடத்தவில்லை. கோரிக்கையும் வைக்கவில்லை. அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்றரை இலட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்பி விட்டு, அதன் பிறகு இதைப் பற்றி ஆலோசிக்கலாம் என்றுதான் சொன்னேன். ஆனால் பட்டியல் பிரிவினருக்கான மூன்றரை இலட்சம் பின்னடைவுப் பணியிடங்களை அப்படியே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அவர்கள் வரலாற்றில் செய்த குற்றத்தை மறைப்பதற்காக 3 சதவிகித உள் இடஒதுக்கீடு அறிவித்த குற்றவாளிகள் அவர்கள். அதன் மூலம் ஏதோ அருந்ததியர்களுக்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும் தேவேந்திரகுல வேளாளர்களும், ஆதிதிராவிடர்களும் தட்டிப் பறிப்பது போல் பிரம்மையைக் கட்டியமைத்தார்கள். தேவேந்திரகுல வேளாளர்களும், ஆதிதிராவிடர்களும் முன்னேறி விட்டார்கள், அருந்ததியர்கள் முன்னேறவில்லை எனப் பாகுபாட்டையும், பகையையும் அம்மக்களிடையே உருவாக்கியது இவர்களே. அந்த உள் இடஒதுக்கீட்டை இவர்கள் கொடுக்கத் தொடங்கியவுடன், காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த 100 பாய்ண்ட் ரோஸ்டரை கடைப்பிடிக்கவில்லை, அதாவது, இப்போது ஐந்து பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது என்று சொன்னால், முதலில் பொதுப்பிரிவினருக்கும், இரண்டாவது பட்டியல் பிரிவினருக்கும், மூன்றாவது எம்.பி.சி பிரிவினருக்கும், நான்காவது பி.சி பிரிவினருக்கும், மீண்டும் பொதுப்பிரிவினருக்கு இப்படித்தான் தேர்வு நடைபெறும். எனவே, பொதுப்பிரிவினருக்கு அடுத்த இடம் பட்டியல் பிரிவினர் தான் வர வேண்டும். அதில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகிய மூன்று பேரும் போட்டியிடலாம். இந்த பட்டியல் பிரிவில் இடம் பெற்ற 77 சாதிகளுக்கான அந்த வாய்ப்பை, அருந்ததியர் எனும் ஒரு சாதிக்கான இடமாக மாற்றி, வரலாற்றில் செய்யக்கூடாத பிழையை செய்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அதன் காரணமாகக் கடந்த 11 ஆண்டுகளாகத் தேவேந்திரகுல வேளாளர், பறையர் என்றழைக்கப்படக்கூடிய ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மேஜிஸ்ட்ரேட் முதல் சாதாரண சத்துணவு அமைப்பாளர் வரை எந்த வேலை வாய்ப்பிற்கும் போக முடியவில்லை. 2009-2010-ல் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் அருந்ததியர்களை மட்டுமே கொண்டு அவசர அவசரமாக நிரப்பப்பட்டன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் அம்பேத்கர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய அனைத்திலுமே ஆயிரத்திற்கு மேற்பட்ட துணைப் பேராசிரியர் பணியிடங்களை அருந்ததியர்களுக்கு மட்டுமான இடங்களாக விளம்பரப்படுத்தினார்கள். நான் சட்டமன்றத்தில் 2011-2016 வரை எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அதிமுக அரசும் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. இதன் காரணமாக 18 சதவீத இடஒதுக்கீடு என்பது திராவிட கட்சிகளின் ஏமாற்றுச் சொல்லாக மாறிவிட்டது. 3% இட ஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு தனியாகக் கொடுக்கப்பட்டதை அன்றும், என்றும் ஆட்சேபம் செய்யவில்லை. ஆனால், ஒரு பதவி என்று வருகின்ற போது அது அருந்ததியர்கள் மட்டுமே பெறக் கூடிய பிரேத்யேக உரிமை, பொதுப் பிரிவிலும் போட்டியிடக்கூடிய வாய்ப்பு, 3% போக மீதமுள்ள, 15% பட்டியல் பிரிவிலும் போட்டியிட்டு எவ்வளவு பணியிடங்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற இந்த ஏற்பாடுகளைத் தான் இன்றுவரை நான் எதிர்த்து வருகிறேன். ஆனால் ,நான் ஒட்டுமொத்த 3% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது போன்ற தவறான பிம்பத்தை ஊடகங்களும், திமுகவினரும், திராவிட மனுவாதிகளும், பொதுவுடைமைவாதிகளும் செய்து வந்தனர்; இன்றும் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உண்மையைக் காட்டிலும், பொய்யை நன்கு விதைப்பார்கள்; விதைக்கிறார்கள். எல்லா காலத்திற்கும் இவர்களுடைய பித்தலாட்டம் எடுபடாது. நான் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கூட ஒட்டுமொத்த SC பிரிவினருக்கான உரிமையை அருந்ததியருக்கு மட்டும் தாரை வார்த்ததைத்தான் எதிர்த்து இருக்கிறேன். 77 சாதிகளின் வாய்ப்பை ஒரு சாதிக்கு மட்டுமே கொடுத்ததை தான் எதிர்த்து இருக்கிறேன். அதை எதிர்ப்போம். தமிழ்நாட்டில் எந்த ஊடகமும் இதைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் என்னுடைய போராட்டம் என்பது இந்த மண்ணில் பிறந்த அனைத்து மக்களுக்கும் சமமான நீதிக்கானது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே வெற்றி பெற்றுவிட்டதாக அரைவேக்காடுகள் கொண்டாடுகிறார்கள். போகிற போக்கில் நீதிபதி கூறுவது எல்லாம் சட்டம் ஆகாது; தீர்ப்பும் அல்ல. இது அவர்களுடைய கருத்து என்று மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். இனிமேல் 7 அல்லது 9 அல்லது 13 நீதிபதிகளைக் கொண்ட பெரிய குழு அமைக்கப்படும் பட்சத்தில் நான் எதற்காக வழக்குத் தொடுத்தேன் என்பதை நீதிமன்றத்தில் எடுத்து வைத்து நீதியையும், உண்மையையும் நிலை நாட்டுவேன். இப்போது நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எங்களுக்கு ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டு இருக்கின்றன. தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவில் சேர்த்தது தவறு என ஆங்கிலேய அரசு மீது குற்றம் சுமத்தி, எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்கிவிடுங்கள் என நாங்கள் புதிய பாதையில் பயணிக்கிறோம். ஒருவேளை நீங்கள் இதைத் தீர்ப்பாக எடுத்துக்கொண்டால் தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற எந்த தடையும் இல்லை. அண்ணன் எடப்பாடி அரசு இனிமேல் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பித்து, புதிதாக மிகமிகப் பின்தங்கியோர் என பட்டியலை உருவாக்கி, எங்களுக்கான பங்கைக் கொடுத்து விடுங்கள். இனி இதை எதிர்க்க எவரும் முன்வர மாட்டார்கள். எஸ்.சி.யாக இருந்தால் தான் இட ஒதுக்கீடு பெற முடியும் என்ற கருத்தைத் திட்டமிட்டு திராவிட மனுவாதிகள் பரப்பி வந்தார்கள். இனி அவர்கள் பரப்புரைக்கு வேலை இல்லை. இப்பொழுது இடஒதுக்கீட்டைப் பெறுவதற்குப் பட்டியல் பிரிவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

ஆகையால் தமிழக முதல்வர் அவர்களே, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை, பட்டியல் வெளியேற்ற பணிகளைத் துரிதப்படுத்துங்கள்.

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்!
புதிய பட்டியலை உருவாக்குங்கள்!!
உண்மையான சமூகநீதி மலரட்டும்!!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2020