தமிழகத்தில் பட்டியல் பிரிவினருக்கான மூன்றை லட்சம் பின்னடைவு பணியிடங்களை தட்டிப் பறிக்கவும்; அரசியல் அதிகாரத்தை நோக்கி 25% வாக்குகள் ஒருமுகப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் எடுக்கப்பட்ட அரசியல் அஸ்திரமே ’உள் இட ஒதுக்கீடு’

தமிழகத்தில் பட்டியல் பிரிவினருக்கான மூன்றை லட்சம் பின்னடைவு பணியிடங்களை தட்டிப் பறிக்கவும்; அரசியல் அதிகாரத்தை நோக்கி 25% வாக்குகள் ஒருமுகப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் எடுக்கப்பட்ட அரசியல் அஸ்திரமே ’உள் இட ஒதுக்கீடு’
யாரையோ திருப்திப்படுத்த வீரமணி வேண்டத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.! அடுத்த தலைமுறை தலைவருக்கும் பூசாரியாகிட இப்பொழுதே அடித்தளம் இடுகிறார்.! வீரமணிக்கு இது வேண்டாத வேலை!!
நெஞ்சில் நேர்மை இருந்தால், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் பேசிய முழுப் பேச்சுகளையும் வெளியிட வேண்டும்.!
உள் இட ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதால், கடந்த 15 வருடத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் ஆதி திராவிட பறையர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொது மேடையில் விவாதிக்க நான் தயார்! வீரமணி தயாரா?
”பஞ்சாப் மாநிலத்தில் பால்மிகி மற்றும் மாசாபீ சீக்கியர்; ஆந்திராவில் மாலா, மாதிகா; தமிழகத்தில் அருந்ததியர் ஆகிய பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடுகளுக்கு எதிரான வழக்குகளில் 20 வருடங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கிடைத்த தீர்ப்பை ’ஆகஸ்ட் புரட்சி’ எனக் கொண்டாடும் வீரமணி உள்ளிட்ட சமூக நீதி பாதுகாவலர்கள், அந்த தீர்ப்பில் உள்ள ’கிரீமியர் லேயர்’ குறித்தான தீர்ப்பையும் கொண்டாடுகிறார்களா? இல்லை, அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பால்மிகி மற்றும் மாசாபீ சீக்கியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு சட்டமாக இல்லாமல் ஜியானி ஜெயில் சிங் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த 1975 ஆம் ஆண்டிலிருந்தே அரசாணையாக வழங்கப்பட்டு வந்தது. ஆந்திராவில் பட்டியலின பிரிவினர் மாலா, மாதிகா மற்றும் பல்வேறு சமுதாயங்களை நான்கு பிரிவுகளாக்கி இட ஒதுக்கீடுகள் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் உள் இட ஒதுக்கீட்டிற்கு இவர்கள் சொந்தம் கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை.
தமிழகத்தில் உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட காலகட்டம் மிக மிக முக்கியமானது. உத்திர பிரதேசத்தில் ’சமர்’ அதாவது, தமிழகத்தில் அருந்ததியருக்கு நிகரான சமுதாயத்தை சார்ந்த மாயாவதி அவர்கள் முதலமைச்சரான நேரம்; அதைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் அவரை சார்ந்த சமூகத்தினர் மற்றும் அனைத்து பட்டியலின மக்கள் மத்தியிலும் அரசியல் அதிகாரத்தை நோக்கிய ஒரு எழுச்சி ஏற்பட்டது.
தமிழகத்தில் பட்டியல் பிரிவில் உள்ள மூன்று பெரும் சமுதாயத்தினர் 25 சதவீதத்தைத் தாண்டிய வாக்கு வங்கியுடன் உள்ளனர். எனவே, பட்டியல் பிரிவினர் அரசியல் அதிகாரத்தை நோக்கிய ஒன்றிணைப்பு தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்படக் கூடும் என்று அரசியல் ’சாணக்கியர்’ கணக்குப் போட்டார். அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்படாததால் ஏற்பட்ட உயர் பதவிகளுக்கான மூன்றரை லட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தோம்.!
சமூக நீதி பேசிக் கொண்டே சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, பட்டியல் பிரிவு மக்களுக்கு மட்டும் ஏ.பி.சி என்று அழைக்கப்படக்கூடிய உயர் பதவிகளில் ஓரிருவரைக் கூட அமர்த்துவதற்கு மனமில்லாமல் ஆட்சி செய்தவர்களால் 3 ½ லட்சம் பேரை ஒரே நேரத்தில் பணியமர்த்துவதற்கு எப்படி மனம் வரும்? எனவே அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்; அக்கோரிக்கையை திசை திருப்ப வேண்டும். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, உள் இட ஒதுக்கீட்டைக் கையில் எடுத்தால், பட்டியலில் உள்ள மூன்று பிரிவினர் அரசியல் ரீதியாக ஒன்றாவதைத் தடுத்து விடலாம்; மூன்று பிரிவினரும் ஒன்று சேர்ந்து மூன்றரை லட்சம் பின்னடைவு பணியிடங்களுக்கு உரிமை கோருவதையும் தடுத்து விடலாம் என்பதற்காகத் தொடுக்கப்பட்ட சதித்திட்டமும், எடுக்கப்பட்ட ஆயுதமும் தான் ’அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு’ ஆகும். அதைத் தாண்டி அவர்களிடத்தில் எந்த நல்லெண்ணமும் இல்லை.
1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலும் சட்டமன்றத்தில் பட்டியல் பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வலியுறுத்திய போது, அந்த வெள்ளை அறிக்கை தயாரிப்பதற்கு அன்று இருந்த 13 அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களும், பல அரசுத் துறைகளும் ஒத்துழைக்காத போது, சட்டமன்றத்தில் அங்கம் பெற்ற அரசியல் கட்சிகளும், சட்டமன்றத்திற்கு வெளியே இருந்த அரசியல் கட்சிகளும் திராவிட கழகத்தைப் போன்ற சாதி – சமூக அடிப்படையிலான இயக்கங்களும் நம்முடைய கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுக்க முன் வரவில்லை.
தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் 65 அரசு கலைக் கல்லூரிகள் இருந்தன. அதில் விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என 5,000 பேர் பணிபுரிந்தனர். 18 + 1 ஆக 19 சதவிகிதத்தை ’நூறு புள்ளி சுழற்சி முறை’ கடைப்பிடித்திருந்தால் 1,200 – 1,300 பட்டியல் பிரிவு சார்ந்த கல்லூரி ஆசிரியர்கள் பணி புரிந்திருக்க வேண்டும். ஆனால், 1996 வரையிலும் கடைநிலை ஊழியர் உள்ளிட்டு மொத்தம் 320 பேர் மட்டுமே 65 அரசு கல்லூரிகளிலும் சேர்த்து பணிபுரிந்தனர்.
இந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டி, 1999 ஆம் ஆண்டு அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவரது வீட்டின் முன்பு, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தினம் ஒரு மாவட்டம் என 30 நாட்கள் மறியல் போராட்டம் நடத்திய பின்னர் தான் 100 கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னும் தொடர்ந்து ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி 1,200 இடங்களையும் பெற்றோம். நம்முடைய இந்த முயற்சிக்கு அன்று எவருமே துணை வரவில்லை. ஆனால், பட்டியலின மக்களைத் துண்டாட மட்டும் ஒன்று சேர்ந்தார்கள். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் என்ன பேசினோம்? என்பதை முற்றாக மறைத்துவிட்டு, ’விரும்பத் தகாத முறையில் நாம் நடந்து கொண்டோம்’ என வேண்டத்தகாத அறிக்கையை கூலி மணி வெளியிட்டு இருக்கிறார்.
வீரமணி அவர்கள் வயதிலும் பொது வாழ்விலும் மூத்தவர். எனவே அவரை கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அவர் வரலாற்றில் இழைத்த பிழைகளில் ஒரு சிலவற்றையாவது சுட்டி காண்பிக்காமல் இருக்க முடியாது.
அருந்ததியினர்க்கான உள் இட ஒதுக்கீடு குறித்த அனைத்து கட்சி கூட்டமோ அல்லது முடிவோ அந்த சமூகத்திலிருந்து எழுந்து வந்த நீண்ட நெடுநாளைய கோரிக்கையின் அடிப்படையிலோ அல்லது பெரும் போராட்டங்களுக்குப் பிறகோ உருவானதல்ல.! புதிய வாக்கு வங்கியை அவர்கள் மத்தியில் உருவாக்கும் எண்ணத்தோடு ஒரு கட்சியும், தாங்கள் சார்ந்த வகுப்பினருக்கு மிகப் பிற்பட்டோர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு கேட்பதற்கு ஏதுவாக இன்னொரு கட்சியும், நமது அரசியல் பயணத்திற்கு எதிராக ஒரு களத்தை உருவாக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடும், சில கறுப்பு ஆடுகள் மற்றும் கருங்காலிக் கூட்டத்தின் துணையோடு, ஒட்டு மொத்த பட்டியல் பிரிவினரும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து விடக்கூடாது; அரசியல் அதிகாரத்தை நோக்கி அவர்களது 25 சதவீத வாக்குகள் ஒருமுகப்பட்டு விடக்கூடாது; அவர்களை என்றென்றும் பிரித்து வைக்கப்பட வேண்டும்; 3 ½ லட்சம் பின்னடைவு இடங்களுக்கான போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் எடுக்கப்பட்ட விஷ ஆயுதமே உள் இட ஒதுக்கீடு.!
அன்று வீரமணி அவர்கள், முன்பு தொடர்பிலிருந்த அரசியல் கட்சியோடு இருந்த தொடர்பை துண்டித்து விட்டு, புதிய துணை தேட அலைந்து கொண்டிருந்த காலகட்டம்.! எனவே, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அன்று வலிந்து வந்து உள் இட ஒதுக்கீடு குறித்துப் பேசினார். உள் இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் பேசிய முழு பேச்சையும் அவர் வெளியிட்டு இருந்தால் அது அரசியல் நாகரீகமாகும்; திட்டமிட்டு நமக்கு எதிராக ஒரு அவதூற்றைப் பரப்ப வேண்டும் என்று விரும்பும் ஒரு கட்சி அல்லது ஒரு குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றவோ, வேறு எவரெவருடைய விருப்பத்தையோ நிறைவேற்றவே கூலி மணியாகக் கூவுகிறார் எனத் தெரிகிறது. அவருக்கு இது வேண்டாத வேலை.! வலிந்து வந்து, அவரது அறிக்கையில் நமது பெயரைக் குறிப்பிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய கருத்தில் நேர்மை இல்லை; உண்மையில்லை. அவரது அவசியமற்ற விமர்சனம் கண்டிக்கத்தக்கது. எது விரும்பத்தக்கது அல்லது எது விரும்பத்தகாதது என்பது பூமி புத்திரனான இந்த ’சாமி’க்கு நன்கே தெரியும்.! இந்த மண்ணை சாராதவர்களுக்கும், திராவிட ’பூசாரி’களுக்கும், ஆசாமிகளுக்கும், அரசியல் அடிவருடிகளுக்கும் தெரியாது.!
வீரமணி அவர்கள் தனது பொது வாழ்வில் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உரிமைகள் மறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் கிடந்த கோடான கோடி தேவேந்திர குல வேளாளர் மக்களுக்காகவோ, அருந்ததியர்களுக்காகவோ, ஆதி திராவிடர் மக்களுக்காகவோ குரல் கொடுத்தவர் அல்ல! யாரோ அமைத்துக் கொடுத்த மாளிகையில் அமர்ந்து கொண்டு அறிக்கை அரசியல் செய்பவர். பிற்பட்டோர் என்ற கோட்டை தாண்டி இவர் ஒரு நாளும் பயணித்ததில்லை. இவருடைய சாதி ஒழிப்பு – சமூக நீதி என்பதெல்லாம் வறட்டு பிராமண எதிர்ப்பு மட்டுமே.! பட்டியலின மக்களின் வயல்களில் கடைமடைக்கும் தண்ணீர் வர வேண்டும் என்று கண்ணீர் சிந்தியவரோ, கடைமடைக்கு வரவேண்டிய தண்ணீர் அடைக்கப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவரோ அல்ல.!
1968 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள் உள்ளிட்ட 43 பட்டியல் இனத்தவர் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்தப்பட்ட போது இவரோ, இவரது இயக்கமோ ஒரு கண்டன குரல் எழுப்பியது உண்டா? 1978 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் 12 ஆதிதிராவிட இளைஞர்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட போது யார் விரும்பத்தக்க வகையில் இவர் மௌனம் காத்தார்?
1979 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனையில் கோவில் திருவிழாவில் குதிரை எடுப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஏழு தேவேந்திரகுல வேளாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அன்று, வீரமணி காட்டிய மௌனம் விரும்பக் கூடியதா? விரும்பக் கூடாததா? 1981 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி உள்ளிட்ட பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 89 பேர் மரணம் எய்தினார்களே, அதைத் தடுத்து நிறுத்த அனைத்து மக்களும் விரும்பக்கூடிய எந்த செயலை இவர் செய்தார்?
1996 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் காவல்துறையினரால் அழித்து ஒழிக்கப்பட்டனவே, அந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் விளிம்பு நிலை மக்கள் எனத் தெரிந்தும், வீரமணி அவர்கள் மௌனம் காத்தாரே, அந்த மௌனம் சமூக நீதி பேசும் அவர் விரும்பக் கூடியதா? அல்லது விரும்பக் கூடாததா?
1996 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த செகுடந்தாளியை முருகேசன் பேருந்தில் வைத்துக் கொல்லப்பட்டாரே, அன்று அவரது சமூகநீதி எங்கே போயிற்று?
1996 ஆம் ஆண்டு நாம் சட்டமன்ற உறுப்பினராகி, ஆய்வு மேற்கொண்டு ஏறக்குறைய 25 ஆயிரம் மேற்பட்ட கிராமங்களில் இரட்டைக் குவளை முறை இருந்ததை சுட்டிக் காட்டினோமே, அதை பள்ளிப் பருவத்திலிருந்து சாதி ஒழிப்பும், சமூக நீதியும், கடவுள் மறுப்பும் மேடை ஏறிப் பேசி வந்த வீரமணி கண்டித்தது உண்டா? நாம் இரட்டை டம்ளர் உடைப்பு போராட்டம் நடத்திய பொழுதாவது நம்மோடு துணை நின்று போராடியது உண்டா?
இட ஒதுக்கீட்டின் மூலம் மட்டுமே சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என்று பழைய பஞ்சாங்க சமூக நீதி பேசும் வீரமணி அவர்களுக்கு, நாம் 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பேசி, வெள்ளை அறிக்கை பெற்று அதன் மூலமாக பட்டியல் வகுப்பினருக்கு மூன்றரை லட்சம் பின்னடைவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று சுட்டிக் காட்டுகின்ற வரையிலும், அவர் அதில் கூட ஈடுபாடு காட்டாதது விரும்பக்கூடிய செயலா? விரும்பத் தகாத நாராச் செயலா?
தமிழகத்தில் பல்வேறு சாதித் தலைவர்களுடைய பெயர்கள் மாவட்டங்களும், போக்குவரத்துக் கழகங்களும், அவர் போற்றுகின்ற பெரியார் அவர்களின் பெயரிலும் ஒரு மாவட்டமும் இருந்தது. ஆனால், சுந்தர லிங்கம் என்ற ஒரு தேவேந்திர குல வேளாளர் சமூக தியாகி பெயரில் போக்குவரத்து கழகம் வந்தவுடன் அதற்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மிகப்பெரிய கடும் எதிர்ப்பு வந்ததே, அதை அவர் கண்டித்ததுண்டா? சமூக நீதி என்பது வீரமணிகளின் சாதிக்கான இட ஒதுக்கீட்டில் மட்டும் தானா இருக்கிறது? சமத்துவமும் – சம உரிமையும் – சம மதிப்பும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாததா?
கேரள மாநிலம் வைக்கத்தில் ஒரு வழக்கறிஞரை உள்ளே அழைத்துச் சென்றோம் என்று வரலாறு பேசுவோர் கண்டதேவி பட்டியலின மக்களுக்குத் தேர்வடம் இழுக்கும் உரிமை மறுக்கப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று அந்த உரிமையைப் பெற்றோமே, அதை அமலாக்க விடாமல் பல ஆண்டுகாலம் தடுத்தார்களே, இதை எல்லாம் நன்கு விரும்பி தான் வீரமணி அவர்கள் மௌனம் சாதித்தாரா? அவரது மௌனம் விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?
2008 ஆம் ஆண்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் வலியுறுத்தியது இதுதான். ”ஏறக்குறைய 10 ஆண்டுக் காலத்திற்கு மேல் போராடிக் கண்டறியப்பட்ட அருந்ததியர்கள், தேவேந்திர குல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் உள்ளிட்ட பட்டியல் பிரிவினருக்கான அரசு உயர் பதவிகளில் உள்ள மூன்றரை லட்சம் காலிப் பின்னடைவு பணியிடங்களை நிரப்புங்கள்; அதன் பின்னரும் இந்த மூன்று பிரிவில் அருந்ததியரின் பங்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு 3 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கொடுத்துக் கூட அவர்களுக்கான பங்கை அளியுங்கள்” எனப் பேசியதை வீரமணி ஏன் மறைக்கிறார்?
வீரமணியைப் போன்றோர் இழைத்த வரலாற்றுப் பிழையின் காரணமாக அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்க வேண்டிய சமூகங்கள் இன்று அரை சதவீத, கால் சதவீத இட ஒதுக்கீட்டுக்குக் கூட அரசியல் வியாபாரிகளிடமும், இம்மண்ணுக்கு அப்பாற்பட்டவர்களிடமும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். பட்டியல் பிரிவினருக்கான 3 ½ லட்சம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் அது யார் யார்க்கோ அன்று தாரை வார்க்கப்பட்டுவிட்டது.
வரலாற்றில் வீரமணி ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தவறி எங்கோ சென்று விட்டார். அதனால் அவரது மனசாட்சி இன்று உறுத்துகிறது. அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீடு பேசியாவது பாவ மன்னிப்பு தேட முயற்சி செய்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நாம் எதிரானவர் என்பதை போல யாரோ, எவரோ சொல்லிக் கொடுப்பதை மீண்டும் கிளிப்பிள்ளையை போல வலிந்து பேசுகிறார். அது அவருக்கு வேண்டுமெனில் கூச்சம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவர் சார்ந்த இயக்கத்திற்கு அழகல்ல. அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்லுகிறேன். நாளையும் சொல்லுவேன். அருந்ததியரோ அல்லது வேறு எந்த பிரிவினரோ அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப உள் இட ஒதுக்கீடு பெறுவதற்கு எவருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது. அவர்களுக்கான உரிமையை அவர்களுக்கு ஒதுக்கப்படும் பங்கில் மட்டும்தான் பெற வேண்டுமே தவிர, பிற பிரிவினருக்கான பங்கையும் சேர்த்து அபகரிக்க எண்ணக் கூடாது.
உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் அருந்ததியருக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்துவிட்டு, எஞ்சி உள்ள 15 சதவிகித இட ஒதுக்கீட்டிலும் அருந்ததியினருக்கே முன்னுரிமை கொடுத்து, தமிழகத்தின் கடந்த 15 ஆண்டுகளில் உருவான நீதிபதிகள், பதிவாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிட பறையர்களுக்கான உரிமைகள் முற்றாகப் பறிக்கப்பட்ட வரலாற்றுப் பிழையை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்தார்; அதற்கு உடந்தையாக வீரமணி துணை நின்றார். அதற்கு சில கறுப்பு ஆடுகளும், கருங்காலிகளும் துணை போனார்கள்.
கோடிக்கணக்கான ஏழை, எளிய தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மற்றும் ஆதிதிராவிட பறையர் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு உடந்தையாக இருந்து, விரும்பத் தகாத செயல்களைச் செய்தவர்; அதற்கு உடந்தையாக இருந்தவர் கூலிமணியும், அவரது கூடாரமுமே.! அவர்கள் இழைத்த வரலாற்றுப் பிழையையும் குற்றத்தையும் சுட்டிக்காட்டியது நான்! தலைகுனிய வேண்டியது வீரமணியே.! வரலாறு வீரமணி கும்பலை மன்னிக்காது.!
உள் இட ஒதுக்கீடு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் நான் பேசிய முழு பேச்சையும் வெளியிடுங்கள் வீரமணி அவர்களே!
பட்டியல் பிரிவினருக்கான மூன்றை லட்சம் பின்னடைவு பணியிடங்களைத் தட்டிப் பறிக்கவும்; அரசியல் அதிகாரத்தை நோக்கி 25 சதவீத வாக்குகள் ஒருமுகப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் எடுக்கப்பட்ட அரசியல் அஸ்திரமே உள் இட ஒதுக்கீடு.!
யாரையோ திருப்திப்படுத்த கூலி மணியாகி வேண்டத் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.! அடுத்த தலைமுறை தலைவருக்கும் பூசாரியாக இப்பொழுதே அடித்தளம் இடுகிறார்.!
நெஞ்சில் நேர்மை இருந்தால், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் பேசிய முழிப் பேச்சுகளையும் வெளியிட வேண்டும்.!
உள் இட ஒதுக்கீட்டால் கடந்த 15 வருடத்தில்,
தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் ஆதி திராவிட பறையர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொது மேடையில் விவாதிக்க வீரமணி அவர்களே தயாரா?
வேண்டாம்! வீரமணி அவர்களே!!
கூலி மணி ஆக வேண்டாம்!!
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.08.2024