வங்கதேச ஆட்சி கவிழ்ப்பு! இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஓர் எச்சரிக்கை!!

அறிக்கைகள்
s2 136 Views
  • Dr K Krishnasamy 5
  • Dr K Krishnasamy 5
Published: 06 Aug 2024

Loading

பாரத தேசம் முழுமைக்கான விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரல் கொடுத்து போராடி, சுதந்திரம் பெறுவதற்கான எல்லைக்கோட்டை நெருங்கி வந்த சமயத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஜின்னா கொடுத்த அழுத்தம், ஆங்கிலேயர்கள் ஏற்கனவே அதற்கான களத்தை உருவாக்கி இருந்த சூழ்நிலைகள் பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக வழிவகுத்தது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட பகுதி மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட்டது; பிற நிலப் பரப்புகள் இந்தியத் தேசமாயிற்று!

அரசியல் நிர்ணய சபை ஒன்று உருவாக்கப்பட்டு, பல நாடுகளின் ஜனநாயக கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, ஒரு ஜனநாயக நாடாக ’இந்தியா’ பரிணமித்தது. பாகிஸ்தான் முழுக்க இஸ்லாமிய மத கருத்துக்களை உள்ளடக்கிய அடிப்படை மதவாத அரசியல் சாசனத்தைவகுத்துக் கொண்டனர். அந்நாடு உருவாக்கப்பட்ட பொழுது மேற்கு, கிழக்கு என இரு பகுதிகள் மொழிவாரியாக வேறு வேறு விதமாக இருந்தாலும், மதம் என்ற அடிப்படையில் மட்டுமே பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பாலும் மொழி ரீதியாக வங்காளம் பேசக்கூடிய வங்காள இனத்தைச் சார்ந்தவர்கள் இருந்தனர். மேற்கு பாகிஸ்தானியர்கள் உருது மற்றும் பஞ்சாபி பேசக்கூடிய இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். மதம் ஒன்றாக இருந்தாலும் மொழி மற்றும் இன ரீதியான பாகுபாடுகளுக்குக் கிழக்கு பாகிஸ்தான் ஆளாகியது. எல்லாவற்றிலும் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கமே மிஞ்சி நின்றது. எனவே கிழக்கு பாகிஸ்தானில் மொழி ரீதியான இன எழுச்சி போராட்டங்கள் உருவாகின; முஜிபூர் ரஹ்மான் அதற்கு தலைமை ஏற்றார்.

அவரது இயக்கம் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 300க்கு 300 இடங்களில் வெற்றி பெற்று இருப்பினும், சட்டமன்றத்தைக் கூட்டவோ அல்லது அதற்கு முதலமைச்சராகவோ ஆகிட அவரை மேற்கு பாகிஸ்தானின் அதிபர் புட்டோ அனுமதிக்கவில்லை. எனவே மேற்கு பாகிஸ்தானிலிருந்து வங்காள முழு விடுதலை பிரகடனத்தை 1971 ஆம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் அறிவித்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் ஏறக்குறைய 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் எனவும், 2 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் அப்பொழுதே வெளிவந்த செய்திகள் உண்டு.

மேற்கு பாகிஸ்தானின் ராணுவ கொடுமைகள் தாங்க முடியாமல் ஏறக்குறைய ஒரு கோடி பேர் இந்தியாவிற்குள் அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தங்குவதற்கு இடம், குடிநீர், உணவு போன்றவற்றை அளிப்பது அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி அவர்கள் துணிச்சலோடு இந்திய ராணுவத்தை அனுப்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சரணடைய வைத்தார். இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடக் கூடாது என அமெரிக்கா மிரட்டியது. தனது சக்தி வாய்ந்த விமானம் தாங்கி கப்பலான 7th fleet-ஐ இந்துமாக் கடலுக்குள் அனுப்பி வைத்தது. அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாத இந்திரா காந்தி அவர்கள் தீர்க்கமான முடிவெடுத்து மேற்கு பாகிஸ்தானின் ராணுவ கொடுமைகளைத் தடுத்து நிறுத்தியதோடு கிழக்கு வங்காள விடுதலைக்குத் துணையாக விளங்கினார். ”பங்களாதேஷ்’ என்ற புதிய தேசம் உருவாகிற்று. சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முஜிபூர் ரஹ்மான் அதன் அதிபர் ஆனார். மதம் ஒன்றாக இருந்தாலும் மொழி வாரி தேசிய இனங்கள் பிரச்சனை வேறு என்பது பங்களாதேஷின் உதயத்தில் இருந்து உலகிற்கு வெட்ட வெளிச்சமானது.

முஜிபூர் ரஹ்மான் இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு முற்போக்குவாதியாக இருந்தார். பங்களாதேஷ் இன்று வரையிலும் ஒரு மதச்சார்பற்ற நாடாகவே இருக்கிறது. முஜிபூர் ரஹ்மானின் புதல்வி ஹசீனா பேகம் கடந்த 15 வருடங்களாக அந்நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். அவர் இந்திய நாட்டோடு நெருங்கிய நட்பில் இருக்கிறார். முஜிபூர் ரகுமான் பதவியேற்ற நான்கு வருடங்களில் அங்கு ஏற்பட்ட ராணுவ புரட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அமைத்துக் கொடுத்த மொழி ரீதியான தேசிய இன கட்டமைப்பை மதவாதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனுடைய வெளிப்பாடாகத்தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பங்களாதேஷில் வாழ்ந்த 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள், மற்றும் அவரது வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு புலம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது; தற்போது 8 சதவீதம் இந்துக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஆயுத பூஜை காலகட்டங்களில் இந்து ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல இந்துக்கள் உயிரிழந்தார்கள்; அவர்களது பல கோவில்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதைக் கண்டித்து நமது தலைமையில் சென்னையில் அப்பொழுதே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அங்கு தலை தூக்கிய இஸ்லாமிய அடிப்படை மதவாத அமைப்புகள் அடிப்படை வாதத்தை ஏற்றுக் கொள்ளாத பிரதமர் ஹசினா பேகத்தை ஆட்சியிலிருந்து இறக்கி, தனது சொந்த தேசத்திலிருந்தே வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். இது வெறும் அரசியல் ரீதியான ஆட்சி கவிழ்ப்பு அல்ல. பங்களாதேஷம் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக இருந்திட வேண்டும் என்ற சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாகவே இப்பொழுது அங்கு ஆட்சி கவிழ்த்து நடைபெற்று இருக்கிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை ராணுவம் கைப்பற்றி இருக்கிறது. முக்கிய சில நாடுகளின் கைங்கரியம் இல்லாமல் இந்த சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை.

ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பெரிய அளவிற்கு எல்லைப் பிரச்சினைஅல்லது நதிநீர் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவற்றை பேசி தீர்க்கக் கூடிய சூழல் இருந்தது. அந்த சமநிலையை முற்றிலும் மாற்றிடும் நோக்கத்தோடு இந்த ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றிருப்பதாக கருத வேண்டி உள்ளது. இந்தியா நிச்சயமாக இதில் கவனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் மேற்கில் அதிகமாகவும் வடக்கில் ஓரளவு போர் மேகம் சூழ்ந்து இருந்த இந்திய எல்லையில் இப்பொழுது கிழக்கு பகுதியிலிருந்தும் போர் மேகங்கள் உருவாகி உள்ள ஒரு அசாதாரண சூழல் உருவாகி இருக்கிறது.

களத்தில் இன்னொரு பாகிஸ்தான் அல்லது மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாவது என்பது எல்லையோர பிரச்சனை மட்டுமல்ல; வேறு கோணங்களிலும் இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும் என உணர்த்துகிறது; ஆட்சியாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். நமது அரசியல்வாதிகளும் குறுகிய கண்ணோட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு நம்மை காட்டிலும் தேசம் தான் பெரிது Nation First என்ற உணர்வோடு இந்தியா என்ற ஒற்றை உணர்வில் ஒருங்கிணைந்து நிற்க வேண்டியதே பங்காள தேசத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய அண்மைக் கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.!

வங்காள தேச ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து நாம் எச்சரிக்கையாகவும் இருப்போம்!! எந்த சூழலையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவும் இருப்போம்.!

வங்கதேச ஆட்சி கவிழ்ப்பு!
இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஓர் எச்சரிக்கை!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.08.2024