நாங்குநேரி தலைமை ஆசிரியரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாணவர்கள்!! நல்ல பண்பைச் சொல்லிக் கொடுக்கப் போவது எப்போது??
நாங்குநேரி தலைமை ஆசிரியரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாணவர்கள்!!
பள்ளிகளில் வேகமாக பரவும் அரிவாள் கலாச்சாரம்!
கொலைக் களமாகும் பள்ளிக்கூடங்கள்!!
நாங்குநேரி பகுதியில் மாணவர்களுக்கு
நல்ல பண்பைச் சொல்லிக் கொடுக்கப் போவது எப்போது??
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நாங்குநேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சின்னத்துரை என்ற 12 ஆம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவர்களாலேயே கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி, நூலிழையில் உயிர் தப்பி மூன்று மாதம் தீவிர உயர் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. Knee Jerk Reaction என்பதற்கு இணங்க உடனடியாக மாவட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் பார்வையிட்டு அம்மாணவனைச் சொந்த ஊரிலிருந்து இடம்பெற வைத்தார்கள். அச்சம்பவத்தை ஏதோ தனி நிகழ்வாக மட்டுமே ஆட்சியாளர்கள் பார்த்தார்கள். நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10-15 கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்வேறு சமுதாயங்கள் மீது நடத்திடும் அராஜக – அதிகாரப் போக்குகளைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது நாம் வலியுறுத்தினோம். ஆனால் இந்த அரசு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அதன் விளைவாக இப்பொழுது பள்ளி மாணவர்களே கத்தி மற்றும் கத்தரிக்கோல்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வரும் அபாயகர போக்கு உருவாகி இருக்கிறது. ஒழுக்கம், நல்ல பண்புகளை எடுத்துச் சொல்லி பள்ளிப் பருவத்தில் படிப்பின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்க முன்வந்த தலைமை ஆசிரியரையே கொன்றுவிடத் துணிந்து, புத்தகங்கள் கொண்டுவர வேண்டிய பையில் கத்தியும் அரிவாளும் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றால் எந்த அளவிற்கு அப்பகுதியில் வன்முறை பால் வார்க்கப்பட்டு வளர்க்கப்படுகிறது எனத் தெரிகிறது. இதை ஒரு மோசமான ஒரு செயலாகக் கருதித் தடுக்கப்படவில்லை எனில் நாங்குநேரி தாலுகாவே மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாக மாறிவிடும்.
கடந்த பல வருடங்களாக பள்ளி மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்து வரும் வன்முறை நிகழ்ச்சிகள் உரிய நேரத்தில் தடுக்கப்படாததால் அரசுப் பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 1500 பேர் படித்து வந்த நாங்குநேரி சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது 150 மாணவர்களே படித்து வருகிறார்கள். நாங்குநேரி, விஜய நாராயணம், வள்ளியூர் உள்ளிட்ட நாங்குநேரி பள்ளிகளில் சரிந்து வரும் மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டும், கல்வி மீது ஆர்வம் இருக்கக்கூடிய மாணவர்கள் இடம்பெயராமல் அங்கேயே கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாகவும் அப்பகுதி பள்ளிக்கூடங்கள் முழுமையாக இயங்கிடவும் மனோதத்துவ நிபுணர்கள், குழந்தைகள் நலப்பிரிவு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழு அமைத்து நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் 25 முதல் 30 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முறையான மனநல ஆலோசனைகள் வழங்கிட நடவடிக்கை எடுத்தால் தான் இந்த வன் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.!
மூன்று மாதங்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் கொலையுண்ட ஒரு இளைஞனின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும், தேடித்தேடி பல்வேறு வழக்குகளை இளைஞர்கள் மீது புனைந்தும், அவர்களைச் சிறையில் அடைத்த காவல் துறை நாங்குநேரியை சுற்றி இந்த தொடர் வன்முறைகள் நிகழ்வதை அறிந்தும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்??
வாக்கு வங்கி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த அரசு செயல்படுமேயானால், வன்முறைக்கு நீர் பாய்ச்சி உரமிட்டு வளர்த்த வரலாற்று பிழைக்குக் காரணம் ஆகிவிடும். எனவே நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல நோக்கத்தோடு ஆசிரியர்கள் மாணவர்களைக் கடிந்து கொள்வதைக் கூட பெரும் குற்றமாகக் கருதி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களையே தீர்த்துக் கட்டுவதற்காக மாணவர்கள் ஆயுதங்களோடு பள்ளிக்கு வரக்கூடிய வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும்; நல்ல பண்புகளை கற்றுக் கொடுக்கவும்; மன நல ஆலோசனை வழங்கவும்; அதையும் மீறக் கூடியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.08.2024