மேகதாது அணைப் பிரச்சனை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்!

அறிக்கைகள்
s2 7 Views
Mekedatu Dam Issue: An All-Party Meeting Must Be Convened Urgently
Published: 20 Jun 2026

Loading

மேகதாது அணைப் பிரச்சனை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்!
………………………………………

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது எனும் இடத்தில் அணை கட்டுவதால் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆதாரம் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை நாமும் வரவேற்றோம். எனினும், இப்பிரச்சனையை இதோடு விட்டுவிட்டால் அதற்கு நிரந்தர தீர்வை எட்ட முடியாது; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த கணமே, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, தமிழகத்தின் தீர்மானம் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தாது என அறிவித்துள்ளார்.

எனவே, விரைவாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேளாண்மை அமைப்புகள் உள்ளடங்கிய கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு, அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பாரதப் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து, மேகதாதுப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட ஒரு வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
20.06.2026

காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே ’மேகதாது’ என்னும் இடத்தில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது. அதனைக்கண்டித்துத் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை புதிய தமிழகம் கட்சியின் சார்பில் முழுமனதோடு வரவேற்கிறோம்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நீடித்துவரும் மேகதாது பிரச்சினைக்கு மத்திய அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக்காண முயற்சிக்க வேண்டும். அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வந்த காவிரி நீர்ப் பிரச்சினை, காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. இருப்பினும், ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பதற்கு ஏற்ப, கர்நாடகம் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சினையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும். அதனை வலியுறுத்தித் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
19.06.2026