மாஞ்சோலையை – வலியோருக்குத் தாரை வார்க்க, எளிய (மாஞ்சோலை) மக்களை வஞ்சிக்கலாமா? வெளியேற்ற முயற்சிக்கலாமா?

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ”தாங்கள் ஆறு தலைமுறைகளாக வசித்து வரும் மாஞ்சோலை வனப்பகுதிகளிலிருந்து தங்களை வெளியேற்றப்படக்கூடாது; தங்களுக்கான வாழ்வாதாரத்தை தங்கள் பூர்வீகமான மாஞ்சோலை பகுதிகளிலேயே ஏற்படுத்தித் தர வேண்டும்” என கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
கடற் பகுதியிலிருந்து 1500 முதல் 2000 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர்ந்த சீதோஷ்ன நிலைக்கு பழக்கப்பட்டு, அங்குள்ள வனங்களைச் சார்ந்த தொழில்களில் மட்டுமே பயிற்சி பெற்ற 600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வனப்பகுதிக்கு வெளியே ஏற்படுத்த அரசு சிந்திப்பதே இயற்கை நியதிக்கு முரணானதும், 2006 வன உரிமைச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
8,373 ஏக்கர் வனப் பரப்பளவில் தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற வனப் பயிர்களைப் பயிரிட்டு வரும் பிபிடிசி நிறுவனம் 1951 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் சட்ட உரிமைகள் எதையும் வழங்காமலும்; தொழிலாளர்களை மனிதநேயமற்ற முறையில் கசக்கி பிழிந்ததோடு, மிகக் குறைவான சம்பளம் கொடுத்து வந்ததால்தான் 1998 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தது. இப்பொழுதும் அதேபோன்ற மனிதநேயமற்ற முறையில் மாஞ்சோலையை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
பிபிடிசி நிறுவனம் ஏற்கனவே அரசுக்கு குத்தகை வரிப் பாக்கி ரூ 300 கோடி மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி, ரூ 700 கோடி என ரூ 1,000 கோடிக்கு மேலாக அரசுக்குக் குத்தகை செலுத்த வேண்டி இருக்கிறது. கடந்த 99 வருடத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை அட்டைப் பூச்சிகளைப் போல சுரண்டி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபமீட்டிய ஜின்னா பேரனின் கம்பெனி தன்னுடைய மோசமான குணத்தைக் கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளாமல் தாங்கள் வெளியேறுகின்ற பொழுதும் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தைப் பறித்து, அவரது வயிற்றில் அடித்து, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ 1000 கோடியையும் ஏப்பம் விட்டு விட்டு ஓட நினைக்கிறது. இந்த மோசடி நிறுவனத்திற்கு அரசு துணை போகலாமா?
2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி தான் பிபிடிசி நிறுவனத்திற்கான இறுதிக் கெடு. அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பாகவே தொழிலாளர்களைத் திட்டமிட்டு வெளியேற்ற பிபிடிசி நிறுவனம் சதி செய்து விருப்ப ஓய்வு திட்டம் என்ற பெயரில் தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதன் உண்மைத் தன்மை குறித்து பல துறைகளை கையிலே வைத்திருக்கும் மாநில அரசு இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாகவே விசாரணை நடத்தி, பிபிடிசி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா?
ஜூன் மாதம் எட்டாம் தேதிக்கு முன்பாகவே கட்டாயப்படுத்தி தொழிலாளர்களிடத்தில் கையெழுத்து பெறப்பட்ட சம்பவம் அறிந்து, ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையரிடமும், இணை ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் குழு சார்பாக புகார் அளித்து ஒன்றரை மாதம் ஆகியும் அதை ரத்து செய்யாமல் ’மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ’ என்பதைப் போல ”தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் தொழிலாளர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் எனத் தொழிலாளர் நலத்துறையினர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்” என்று திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கொடுத்திருக்கிற அறிக்கையில் எவ்வித நியாயமும் இல்லை; உண்மையும் இல்லை.
தொழிலாளர்கள் சார்பாகவும், நமது சார்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 8 மற்றும் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, கட்டாய விருப்ப ஓய்வுக் கடிதங்களை ரத்து செய்கிறோம் அல்லது ரத்து செய்து விட்டோம் என்று நீதிமன்றத்தில் சொல்லத் தவறியது ஏன்?
’மாஞ்சோலையை விட்டு வெளியே போகிறோம்; மாஞ்சோலைக்கு அப்பால் வீடு கொடுங்கள்; ஆடு கொடுங்கள்; மாடு கொடுங்கள்; இடம் கொடுங்கள்; கடனுதவி கொடுங்கள்’ என்று எந்த தொழிலாளியும் அரசை அணுகவும் இல்லை; மனு கொடுக்கவும் இல்லை. அவர்கள் கேட்பதெல்லாம் 2006 ஆம் ஆண்டு வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர்கள் வாழ்வுரிமை அங்கேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், அதைப்பற்றி சிறிதும் குறிப்பிடாமல் ”மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சலுகைகளை அரசு அள்ளி அள்ளித் தரும்” என்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கை வியப்பாக உள்ளது. அரசின் சலுகைகளும் ஏற்கனவே நடைமுறையில் ஏழை, எளிய – பட்டியல் இன மக்களுக்கான சலுகைகள் தான். இது போன்ற வேலை இழந்து வரக்கூடிய மக்களுக்காகப் புதிதாக எவ்வித திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை. மேலும், மாஞ்சோலையில் தினக்கூலியாக ரூ 450 என குடும்பமாக ரூ 900 வருமானம் பெறும் தொழிலாளர்களை, மாஞ்சோலையிலிருந்து தரைப்பகுதிக்கு இறக்கி வீடு தருகிறோம்; ஆடு, மாடு தருகிறோம்; கடனுதவி தருகிறோம் என்பதெல்லாம் ”நல்ல உடல்நிலையுடன் இருக்கும் ஒருவரை வலிந்து வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஒப்பானதாகும்.
1882 ஆம் ஆண்டு வன பாதுகாப்பு சட்டத்தின் படியும், 1927 ஆம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படியும், 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு சட்டத்தின் படியும் வனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. மாறாக, அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தான், புலிகள் பாதுகாப்பும், வன பாதுகாப்பும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றே விதிகள் இருக்கிறது.
நேற்றைய முன்தினம் (27.07.2024) அன்று 18 மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சென்னை அழைத்துச் சென்று, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம். அச்சந்திப்பில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே ”நாங்கள் எக்காரணம் கொண்டும் மாஞ்சோலையிலிருந்து வெளியேற மாட்டோம்; எங்களுக்கான வாழ்வாதாரத்தை அங்கேயே ஏற்படுத்தித் தர வேண்டும்; எங்களுக்கு அந்த வனப்பகுதியைத் தாண்டி எவ்வித வேலைகளையும் செய்யத் தெரியாது; எனவே இப்பொழுது நாங்கள் வாழக்கூடிய மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு பகுதிகளிலேயே வாழ அனுமதிக்க வேண்டும்; அரசு ஏதாவது உதவி செய்வதென்றால் வனத்தைச் சார்ந்த வேளாண்மைகள் செய்வதற்கும், அதை விரிவு படுத்துவதற்கும் அங்கேயே அவர்களுக்கான குடியிருப்புகளைப் புதுப்பித்துத் தருவதற்கும் ஏற்பாடு செய்திட வேண்டும்” என்று அவர்கள் அரசுக்கு உருக்கமாகக் கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் உறுதியான முடிவு உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் அனைவரது மனதிலும் பதிந்துவிட்ட நிலையில் ”மாஞ்சோலை எனும் சோலைப்பகுதியிலிருந்து வெளியேற்றி பாலைப்பகுதியில் குடியமர்த்த அரசின் சலுகை அறிக்கை” வெளியிடப் பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தமிழ் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டால் இதுவே தமிழகத்தில் வால்பாறை, கூடலூர், ஹை வேவிஸ் உள்ளிட்ட பிற மலைப் பகுதிகளில் வாழக்கூடிய லட்சக்கணக்கான தமிழர்களையும் வருங்காலங்களில் வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
நாளை (30.07.2024) நாம் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வருகிறது. கடந்த விசாரணையின் போது மாநில அரசு நல்ல தீர்க்கமான முடிவோடு வரவேண்டும் என்று நீதி அரசர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் வாழ்வுரிமையையும் பறித்துவிட்டு வாழ்வாதாரமற்றவர்களாக்கி அவர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து, அநாதைகளாக்கி, யாசகம் கேட்பவர்களாக மாற்றுகின்ற வகையில் அரசு உதவி என்ற பெயரில் மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் அறிக்கை பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை கூறுவதற்கு ஒப்பானதாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவளுடைய உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு அவர்களுடைய அறிக்கை முழுக்க முழுக்க ஏற்கனவே அரைத்த மாவு தான். இதைத்தான் கடந்த மூன்று மாத காலமாக பிபிடிசி மூலமாகத் தொழிலாளர்கள் மத்தியிலே பரப்பி வருகிறார்கள்; பிபிடிசி தான் அவர்களை வெளியேற்றுகிறது; அரசு அல்ல என்ற முகத்திரை விலகி அரசுதான் முழுக்காரணம் என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது.
உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒரு தீர்க்கமான உத்தரவு கொடுத்து இருக்கின்ற பொழுது, தங்களுடைய கருத்து எதுவாக இருந்தாலும் அதை நீதிமன்றத்தில் தான் தெரிவித்திருக்க வேண்டுமே தவிர, அதற்கு முன்பாக அரசு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொள்வதே ஏழை, எளிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தமிழ் மக்களை ஏமாற்றக் கூடியதும், வஞ்சிக்கக் கூடியதும், நீதிமன்றத்தையே தவறாக வழி நடத்துவதற்கும் ஒப்பானதாகும்.
பழங்குடி மக்களாக இருந்தாலும், இதர மக்களாக இருந்தாலும் 75 வருடங்களுக்கு மேலாக, வனப்பகுதிகளில் தொடர்ந்து வாழக்கூடியவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு வன பாதுகாப்பு சட்டப்படி தான் அவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வேறு குறுக்கு வழியில் எவ்வித தீர்வுகளையும் காண முயற்சி செய்யக் கூடாது. புலிகள் காப்பகமோ, யானைகள் காப்பகமோ, பாதுகாக்கப்பட்ட காடுகளோ எதுவாக இருந்தாலும் அங்கு வாழக்கூடிய மக்களைக் கட்டாயம் அப்புறப்படுத்த வேண்டும் என்ற எவ்வித விதிகளும் இல்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவுவது போல அரசு கொடுக்கக்கூடிய அறிக்கைகள் அம்மக்களுக்கு எவ்விதத்திலும் உதவாது; அவர்களது வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி விடும். எனவே உதவி என்ற பெயரில் அரசு கொடுத்திட முன் வரும் சலுகைகள் ’தேன் தடவிய விஷத்திற்கு’ ஒப்பானதாகும்.!
ஒவ்வொரு அணுவிலும் அந்த வனத்தோடும் இயற்கை சூழலோடும் பின்னிப் பிணைந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இலவச வீடுகள், ஆடுகள், மாடுகள், கடன் உதவிகள் என்ற ஆசை வார்த்தைகளைக் காட்டி மாஞ்சோலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றத் துடிப்பது கடலில் வாழக்கூடிய சுறா மீன்களை வெளியே கொண்டு வந்து பெரிய தண்ணீர் தொட்டி கட்டி வாழ வைக்கப் போகிறோம் என்று சொன்னால் அது எப்படி இயற்கைக்கு முரணானதாக அமையுமோ, அதற்கு ஒப்பானதாகும்.
நூறாண்டுக் காலம் அங்கு இருக்கக்கூடிய மாஞ்சோலை மக்களால் புலிகளுக்கோ, யானைகளுக்கோ, சிங்கவால் குரங்குகளுக்கோ, இயற்கை சூழலுக்கோ கிஞ்சித்தும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமும் புலிகளும் பெருகிடவும், மணிமுத்தாறு வன நீர் பிடிப்பு பகுதி செழித்திடவும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் – அவர்களது குடும்பங்களும் உற்ற துணையாக விளங்கியுள்ளனர்; இனியும் அவ்வாறே விளங்குவார்கள்.
எனவே, 2006 வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தை மட்டுமே அமல்படுத்த மாநில அரசு முயல வேண்டுமே தவிர, அதைத் தவிர்த்து வேறு எவ்விதமான தவறான நடவடிக்கைகளுக்கும் செல்லக்கூடாது என எச்சரிக்கிறேன்.
மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின்,
மாஞ்சோலை மக்களுக்கான சலுகை அறிக்கை
ஒரு காணல் நீர்! ஏட்டுச் சுரைக்காய்!!
சலுகை ஆசைகாட்டி மோசம் செய்யும் செயல்!!
யாரோ ஒரு சில வலியவர்களுக்கு மாஞ்சோலையைத் தாரை வார்க்க,
எளிய மாஞ்சோலை மக்களை வஞ்சிக்க இந்த அரசு முனைப்புக் காட்டக் கூடாது;
வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது;
வெளியேற்றும் முயற்சியை வரலாறும் மன்னிக்காது.!
வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
29.07.2024