உளுந்தூர்பேட்டை மாணவிக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை! நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏன்?
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, திருநற்குன்றம், மா.கோ. தெருவைச் சேர்ந்த வீரமணி என்பவரின் புதல்வி 18 வயது நிரம்பிய ரேக்கா, கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பை நிறைவு செய்து, மேற்கொண்டு படிக்க வசதியின்மையின் காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள ஒரு முகவர் மூலமாக சென்னை – திருவான்மியூரில் உள்ள ஆண்ட்டோ மதிவாணன் என்பவரது வீட்டில், வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். வேலைக்குச் சேர்ந்த 2 நாட்களிலேயே வேலைப்பளு மற்றும் வீட்டு உரிமையாளர்களின் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் வேலையை விட்டு நிற்பதாக அப்பெண் கூறியுள்ளார்; எனினும் அவர் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. கடந்த 6 மாதகாலமாக அவர் பல்வேறு உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு இடையே, உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தைக் காட்டிலும் மிகக்குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டபோதிலும், அனைத்தையும் சகித்துக் கொண்டு அவர் பணியாற்றி வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, மதிவாணன் குடும்பத்தார் ஒரு விசேச வீட்டிற்குச் செல்வதற்கு, 6 மணிக்குள்ளாக அவர்களுக்குத் தேவையான உணவைச் சமைப்பதற்குச் சிறிதுக் காலதாமதமானதன் காரணமாக ரேக்காவினுடைய முகம், கன்னம், கண் என உடம்பின் பல பகுதிகளில் பலத்தக் காயம் ஏற்படக்கூடிய அளவிற்குத் தாக்கப்பட்டிருக்கக்கூடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அங்குப் பணியாற்றக்கூடிய சூழ்நிலையில்லாததால், அங்கிருந்துத் தப்பித்த அப்பெண், தனது ஊருக்குச் சென்று, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். இது அம்மருத்துவமனையில் Medico Legal பிரிவில் பதிவுபெற்றதை அறிந்த காவல்துறையினர், ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில், அப்பெண்மணியிடம் நேரடியாக வாக்குமூலம் பெற்று, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவரை அம்மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மேலும் அப்பெண்மணியைத் தாக்கியவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், உளுந்தூர்பேட்டைக் காவல்துறையினரே சென்னை சென்று அவர்களை விசாரணை செய்து, தேவைப்படின் கைது கூட செய்திருக்க வேண்டும்.
ஆனால் உளுந்தூர்பேட்டைக் காவல்துறையினர் அவ்வாறு செய்யாமல், வழக்கைத் திருவான்மியூர் காவல் சரகத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்; அக்காவல் நிலைய அதிகாரிகள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. ரேக்காவிற்கு இழைக்கப்பட்ட அநீதி சாதாரணமானதாகத் தெரியவில்லை. முதலில் இது ஒரு பெண்மணிக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடுமை; இரண்டாவது இது ஒரு பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு; மூன்றாவது அப்பெண்மனி ஒரு பட்டியல் சமுகத்தைச் சேர்ந்தவர் என்றத் தகவலும் வருகிறது. தங்களிடத்தில் புகார் வந்த உடனேயே, தவறிழைத்தைவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு முன்பாக உளுந்தூர்பேட்டைக் காவல்துறையினரே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அந்த வழக்கை சென்னைக்கு அனுப்பியதால், அந்தப் பெண்மணி சென்னைக்கு வந்துப் புகார் அளிக்கட்டும் என்று அவர்கள் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. புகார் பெறப்பட்ட உள்ளூர் காவல்துறையினரே விசாரிப்பிதற்கு சட்டத்தில் எவ்விதத் தடையும் இல்லை; எனினும் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
இளம்பெண் ரேக்காவிற்கு ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது; எவ்விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாதது; அப்பட்டமான மனிதநேயமற்ற செயல்; அவர் பட்டியலின வகுப்புப் பெண்ணாக இருப்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்; ஒட்டுமொத்தத்தில் இது கடும் கண்டனத்திற்குரியது. கொடுமை இழைத்தவர்கள் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்களாக அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.01.2024