நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிருபர் நேச பிரபு மீது தாக்குதல்! குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும்!

அறிக்கைகள்
s2 42 Views
  • Dr Krishnasamy 2
  • Dr Krishnasamy 2
Published: 25 Jan 2024

Loading

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிருபர் நேச பிரபு மீது தாக்குதல்!
குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும்!

அவரின் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.!
பல்லடம் பகுதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிருபர் நேச பிரபு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனது வீட்டருகே சட்டவிரோத பார் நடைபெற்றுக் கொண்டிருந்ததை உடனடியாக அகற்றக்கோரி பலமுறை எச்சரித்தும், செய்ய மறுத்ததன் விளைவாக நியூஸ் 7 தமிழ் நிருபர் நேச பிரபு அதைச் செய்தியாக தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளார். இது ஒரு செய்தியாளருக்கான கடமை. அந்தச் செய்தியில் ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில் அச்செய்தியால் பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், வன்முறையைக் கையில் எடுத்து அவர் மீது குண்டர்களை ஏவி நடத்திய கொடூர தாக்குதலால் பலத்த காயமுற்று, கைகால் முறிவுகளுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வன்முறையின் உச்சக்கட்டம். இந்த சட்டவிரோத பார் நடத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. உடனடியாக அந்த நபரும், நேச பிரபுவின் மீது தாக்குதல் நடத்திய அந்தக் கூலிப்படை படை கும்பலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

நேச பிரபுவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அதிகமானவை என்பதால் அதற்கான சிகிச்சை செலவினங்களும் அதிகமாகும். மனிதநேயத்தின் அடிப்படையில் அதற்கான செலவு முழுமையையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, அவர் இன்னும் குணம் ஆகி, பணிக்குத் திரும்ப பல காலம் ஆகலாம். எனவே இதையெல்லாம் கணக்கிலே கொண்டு நேச பிரபுவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தற்காலிக மற்றும் நிரந்தர பாதிப்புகளுக்கான அனைத்து நட்ட ஈடுகளையும் நேச பிரபு மீது தாக்குதல் நடத்திய சட்டவிரோத பார் நடத்தியோரிடமே வசூல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவருடைய அசையும், அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்து அந்த நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும், பல்லடம் பகுதியில் இது போன்று அண்மைக் காலத்தில் பல சம்பவங்கள் நடைபெற்று விட்டன. எனவே குற்றப்பத்திரிக்கையை உடனடியாக தாக்கல் செய்யவும், அவர்களுக்கு உண்டான தண்டனையை விரைந்து பெற்றுக் கொடுக்கவும் தமிழக அரசு தயங்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.01.2024