புதிய தமிழகம் கட்சியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.!

அறிக்கைகள்
s2 325 Views
  • Pongal 2024
  • Pongal 2024
Published: 14 Jan 2024

Loading

வாழ்த்துக்கள்.! உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கடைசி நாள் போகிப் பண்டிகை; தை ஒன்றாம் தேதி பொங்கல் தினமாகவும், தை இரண்டாம் தேதி மாட்டுப்பொங்கலாகவும், தை மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடை திருநாளை தைப் பொங்கலாகவும், உழவர்களுக்கு வேளாண்மைக்கு உற்ற துணையாக விளங்கிவரும் கால்நடைகளைப் போற்றக்கூடிய வகையில் மாட்டுப் பொங்கல் அல்லது உழவர் திருநாளாகவும் வெகுவாகப் போற்றப்படுகிறது.

50 வருடங்களுக்கு முன்பு வரையிலும், பொங்கல் திருநாள் என்பது கிராம அளவில் மட்டுமே இருந்த நிகழ்வு. ஆனால் இப்பொழுது நகர்ப்புறங்களிலும் அதே முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள் – உழவர் திருநாள் – தமிழர் திருநாள் என்று ‘பொங்கல் திருநாள்’ ஒன்றுபட்ட தமிழ் மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தக்கக்கூடிய விழாவாகவே உள்ளது. இந்த ஆண்டு சென்னை மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துவிட்டன. எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்துக் கொண்டாடக்கூடிய ஒரே திருநாள் தைத்திருநாள் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. தமிழர்களிடத்தில் இடைப்பட்ட காலத்திலே வேரூன்றிப் போய் இருக்கக்கூடிய சாதிய உணர்வுகள் ஒடுங்கி ’தமிழர்’ என்ற ஒற்றை உணர்வு ஓங்க வேண்டும் என்பதும், சம உரிமையும் சமத்துவமும் எல்லோரிடத்திலும் தளைக்க வேண்டும் என்பதுமே பொங்கல் திருநாளின் குறிக்கோள் ஆகும்.

இன்று போகிப் பண்டிகை, ’பழையன கழிதல்’ என்ற போர்வையில் இயற்கைக்குப் புறம்பாக இம்மண்ணையும் விண்ணையும் மாசுபடுத்தக்கூடிய வகையில் டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிப்பது என்பது உழவர் – தமிழர் திருநாளுக்கு ஒவ்வாதது ஆகும். நல்ல தூய்மையான காற்று, தூய்மையான குடிநீர், தூய்மையான மண், கலப்படமற்ற உணவு ஆகியவற்றை அடைவதே பொங்கல் திருநாளின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இம்மண்ணுக்கும் வேளாண்மைக்கு உற்ற துணையாக விளங்குகின்ற சூரியனுக்கு நன்றி சொல்லக்கூடிய இந்த மகத்தான நன்னாளில், சுற்றுச்சூழலைக் கெடுப்பதே பருவநிலை மாற்றங்களுக்கும், அதுவே காலம் தவறிய மழைக்கும் புயல்களுக்கும் காரணம் என்பதை மறந்து காற்றை மாசுப்படுத்தும் புகையை உண்டாக்கக் கூடாது. மாறாக கிராமங்களில் வீடுதோறும் போகிப் பண்டிகை என்று அழைக்கப்படக்கூடிய இந்த தினத்தில் வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் ‘பீளைப்பூ’ எனும் ஒருவகைப் பூக்களை வீட்டின் நான்கு புறமும் சொருகிக் காப்புக் கட்டும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அந்த காப்புக் கட்டுவது என்பது எந்த விதமான தீமைகளும் அந்த வீட்டையும் அண்டக் கூடாது; வீட்டில் இருப்பவர்களையும் தமிழ்நாட்டையும் அண்டக் கூடாது என்பதே முன்னோர் நம்பிக்கை.

இது வெறும் கொண்டாட்டத்திற்கான விழா அல்ல, வெயிலிலும் மழையிலும் திறந்த மேனியோடு உணவு உற்பத்தியில் ஈடுபடக்கூடிய அனைத்து வேளாண்குடி மக்களின் உழைப்பைப் போற்றுவோம்! நன்றி சொல்லுவோம்.! உறுதுணையாய் இருக்கக்கூடிய கால்நடைகளுக்கு நன்றி சொல்லுவோம்.! வேளாண்மைக்கு உற்ற துணையாக விளங்குகின்ற அனைத்து கைவினைஞர்களுக்கும் நன்றி சொல்வோம்.!
புத்தாண்டின் பிறப்பிலும், இது போன்ற பெரும் விழாக்களையும் வெறும் சடங்கு சம்பிரதாயத்திற்காக மட்டும் அனுசரிப்பதில்லை! அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும்; வெற்றியுடன் அமைய வேண்டும் என உத்வேகம் கொள்வதற்கும், உறுதியேற்பதற்குமான நன்னாள் ஆகும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான உத்வேகத்தையும், உணர்வையும் பெறுவோம்.! சபதம் ஏற்போம்.!

புதிய தமிழகம் கட்சியினர் அனைத்து கிராமங்களிலும் அடுத்து ஒரு வாரக் காலத்திற்குள் புதிய தமிழகம் கட்சியின் கொடிக் கம்பத்திற்கு புதிய வண்ணம் தீட்டி, புதிய கொடிகள் ஏற்றி, இனிப்புகளை வழங்கி அந்தந்த பகுதி மக்களுடன் பொங்கல் திருநாளைப் புத்துணர்வுடன் கொண்டாடிடுவோம்.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.01.2024