துருக்கி, சிரியா பேரிடர் – இந்திய மக்களின் மனித நேயத்தை உலகிற்குப் பறைசாற்ற வேண்டிய நேரமிது
389 Views
![]()
பூகம்பத்தால் நிலைகுலைந்த
துருக்கி, சிரியா நாடுகளுக்கு
மீட்பு படை மட்டுமல்ல,
எவ்வித உதவியும் செய்திட
ஆயத்தமாவோம்.!
திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிற்கு மேலான பூகம்பத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்; 20,000 – 50,000 பேர் இடர்பாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டிடங்களுக்குள் சிக்கிய எண்ணற்றோர் மீட்கப்படாமல் குற்றுயிரும் குலையுயிருமாகக் கதறும் காட்சிகள் பார்ப்போர் நெஞ்சத்தைப் பதற வைக்கிறது; உறைய வைக்கிறது.
உயிரிழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி அல்லல்படக்கூடிய அந்நாட்டு மக்களுக்கு நமது அனுதாபங்களையும் ஆழ்மனதிலிருந்து தெரிவித்துக் கொள்கிறோம்.
7.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்திற்கே பல அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல் சரிந்தது கட்டிடங்களின் திறனற்ற தன்மைகளையும், கட்டுமான குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது.
நமது மண்ணிலும் இது போன்று பல அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டுவோர் மிக எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
உலகின் பல நாடுகளும் துருக்கி, சிரிய நாட்டு மக்களுக்கு உதவிட நேசக் கரம் நீட்டி இருக்கின்றன. பாரத பிரதமர் மோடி அவர்கள் துருக்கி மற்றும் சிரிய நாட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஏற்கனவே பேரிடர் மேலாண்மை படையை அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் கூடுதலாக தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்து இந்திய மக்களின் மனித நேயத்தை உலகிற்குப் பறைசாற்ற வேண்டுகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.02.2023.







