இந்திய அரசியல் சாசனத்தின் இலட்சியத்திலிருந்து விலகிச் செல்லும் ஆட்சியாளர்களை எந்நேரமும் வீட்டுக்கு அனுப்ப ஆயத்தமாகுவதே குடியரசின் அடிப்படை நோக்கமாகும்.!
408 Views
![]()
இந்திய அரசியல் சாசனத்தின் இலட்சியத்திலிருந்து விலகிச் செல்லும் ஆட்சியாளர்களை எந்நேரமும் வீட்டுக்கு அனுப்ப ஆயத்தமாகுவதே குடியரசின் அடிப்படை நோக்கமாகும்.!
பல்வேறு படையெடுப்புகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் ஆட்பட்டிருந்த இந்திய தேசம் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளின் ஆட்சி முறைகளின் நல்ல அம்சங்களை எல்லாம் உள்ளடக்கி நமக்கான ஒரு ஆட்சி முறையும், அதற்கான எழுத்து வடிவிலான அரசியல் சாசனமும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அமலுக்கு வந்தது.
”We, The people of India” அதாவது இந்திய மக்களுக்காக இந்திய மக்களாலே வடிவமைக்கப்பட்டதே இந்திய அரசியல் சாசனம் ஆகும். ஜனநாயகம் என்பது பெரும்பாலான மக்களுடைய ஆட்சி என்று பொருள். குடியரசு என்பது பெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் மூலமாக ஆட்சி செய்வது என்பது பொருள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும்; அம்மக்களின் மனசாட்சிகளாகவும், இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மாவாகவும் விளங்கக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உயர்த்தி பிடிப்பவர்களாக இருந்திட வேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரக் கூடியவர்கள் தங்கள் குடும்பம், தங்கள் மக்களுடைய விருப்பங்களையும், நலன்களையும் முன்னிறுத்தக் கூடியவர்களாகவும், ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் செயல்படக் கூடியவர்களாகவும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாதவர்களாகவோ இருந்திடக் கூடாது.
குடியரசு என்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல. இந்தியாவில் வாழுகின்ற 140 கோடி மக்களின் சுதந்திரத்தையும், முழு வளர்ச்சியையும் உள்ளடக்கியது. ”தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம், ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி – அதிகாரம் நம்மிடம் இருக்கிறது” என்ற காரணத்தினாலேயே நிலை தடுமாறி அதிகார போதையில், அதிகார மமதையில் எவரும் செயல்படக் கூடாது.
மிதமிஞ்சிய இயற்கை வள சுரண்டல்கள், எங்கும் எதிலும் ஊழல், தாங்கள் எண்ணியதே ஜனநாயகம் என்ற ஆணவ மமதை போக்குகள் அனைத்துமே, இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்திய தேசம் பூகோள ரீதியாக ஒருங்கிணைந்தது. அதை மதம், இனம், மொழியின் பெயரால் சிதைக்கவோ, உடைக்கவோ எவரும் முயற்சிக்கக் கூடாது. ”ஆட்சி நிர்வாகம் பரவலாக்கப்பட வேண்டும். கடைக்கோடி மனிதனுக்கும் ஆட்சி – அதிகாரம் சென்றடைய வேண்டும்” என்பதற்காக மத்திய அரசு, மாநில அரசு, ஊராட்சிகள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், அந்த ஆட்சி – அதிகாரங்கள் நாட்டினுடைய எல்லையைத் தீர்மானிக்காது. பாரத தேச எல்லை ஏற்கனவே தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
எந்த மாடல்களும் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையக் கூடாது. இந்திய ஆட்சி – அதிகாரத்தின் மையமே ’CHECKS AND BALANCE’. இந்திய பாராளுமன்றம், நீதிமன்றங்கள், அரசின் நிர்வாகங்கள் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தனித்துவமாகவும் செயல்படும்; ஒன்றுக்கொன்று கட்டுப்பட்டும் செயல்படும். ஒன்றையொன்று ஒட்டித்தான் ஆட்சி – அதிகாரம் செய்ய முடியுமே தவிர, ஒன்றோடு ஒன்று முழுமையாக வெட்டிச்சென்று ஆட்சி செய்ய எண்ண இயலாது.
அரசியல் சாசனம் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பலராலும் பன்னெடுங்காலம் அலசி ஆராயப்பட்டு உருவாக்கப்பட்டது. தனி மனிதர்கள் ஆனாலும், உள்ளாட்சி பிரதமரோ, முதலமைச்சரோ, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினரோ அல்லது வேறு எவரோ அனைவருக்குமே வழிகாட்டி இந்திய அரசியல் சாசனம் தான். அதுவே மக்களாட்சி; அதுவே குடியரசு.
அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கங்களைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்கள் மக்களுக்கான சம உரிமை – சம நீதி – சம வாய்ப்பு – சம பங்கு ஆட்சியை நல்கிட வேண்டுகிறேன். அனைத்து மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில், இந்திய அரசியல் சாசனத்தின் இலட்சியத்திலிருந்து விலகிச் செல்லும் ஆட்சியாளர்களை எந்நேரமும் வீட்டுக்கு அனுப்பவும் ஆயத்தமாகுவதே குடியரசின் அடிப்படை நோக்கமாகும்.
அனைவருக்கும் குடியரசு வாழ்த்துக்கள்.!






