பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டு! தள்ளாடும் தமிழக பல்கலைகழகங்கள்.! தடுத்து நிறுத்துவாரா தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்?

அறிக்கைகள்
s2 76 Views
  • 1
  • 1
Published: 05 Feb 2025

Loading

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டு!
தள்ளாடும் தமிழக பல்கலைகழகங்கள்.!
தடுத்து நிறுத்துவாரா தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்?

கல்விப் பட்டங்கள் பெறுவதற்காக மாணவர்கள் பயில்கிற மற்றும் கல்வி சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறுகிற உச்ச உயர்நிலைக் கல்விக்குரிய நிறுவனம் பல்கலைக்கழகம் ஆகும். உலக அளவில் நோபல் பரிசு உட்பட பல ஆராய்ச்சியாளர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கும் தளங்கள் பல்கலைக்கழகங்கள். அதுபோன்று இந்தியாவிலும் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்துவதற்காக ஆங்கிலேயருடைய காலத்திலேயே சென்னை பல்கலைக்கழகமும் அதைத் தொடர்ந்து வேளாண்மை, மருத்துவம், தமிழ்க் கல்வி, கலை, சட்டம் எனத் துறை சார்ந்த பல்கலைக்கழகங்களும் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டன. எந்த நோக்கத்திற்காக பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டனவோ அதை தமிழக பல்கலைக்கழகங்கள் நிறைவேற்றுகின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். கல்வியின் தரம் மற்றும் ஆராய்ச்சிகள் வளர்ந்தனவோ இல்லையோ ஊழல் மட்டும் மிக அதிகமாக வளர்ந்துள்ளது. துணை வேந்தர்கள் நியமனத்திலிருந்து பேராசிரியர் மற்றும் பிற துறை ஊழியர்கள் என பல்கலைக்கழக பிற சாதனைகள் வாங்குவது வரையிலும் ஊழலின் ஊற்றுக் கண்களாகி ஆகிவிட்டன.

அதன் விளைவாக இன்று பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் நிதிச்சுமையில் சிக்கித் தள்ளாடுகின்றன. பிரசித்தி பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில் பல மாதங்களாக ஆசிரியர்களுக்கு மாதா மாதம் குறித்த காலத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. அரசு கையகப்படுத்திய பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டதால் மாணவர் எண்ணிக்கை ஒரு காலத்தில் 30 ஆயிரத்தில் இருந்த நிலை தற்போது வெறும் ஒன்பதாயிரம் மாணவர்கள் என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.
பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் இட ஒதுக்கீடுகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தற்போதைய நிலையில் 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் பல்கலைக்கழகச் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் உள்ளன. இந்நிலையில் நிர்வாகத்தைச் சீரமைக்க இடைக்கால ஏற்பாடாக நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததால் பல்கலைக் கழகங்கள் சரியாக செயல்படாமல் தள்ளாடுகின்றன.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் 1982ல் துவங்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். பிற பல்கலைக்கழகங்ளை போல் அன்றி, பாரதியார் பல்கலைக்கழகம் நல்ல நிதி நிலையில் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாத சூழலில், பல்கலைக்கழக மூத்த சிண்டிகேட் உறுப்பினர்களுக்குள் ஒருவர், ஆளுநர் பிரதிநிதி, தனியார் கல்லூரி பிரதிநிதி என மூவர் கொண்ட குழுவால் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பொறுப்புக் குழுவுக்கும் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பல்கலைக்கழகச் செயல்பாடுகள் நிலைகுலைந்து கிடக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முக்கியமான ஆராய்ச்சி கருவி வாங்கியதில் 2 ½ கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அவை ஊடகங்களில் வெளிவந்துள்ளன. துணைவேந்தர் இல்லாத சூழலில் பல்கலைக் கழக அதிகாரிகளின் கை ஓங்கி அங்கு எவ்வித முறைகேடுகளும் நடைபெற்று விடக் கூடாது.

எனவே, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகிய தாங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி துணைவேந்தர் பொறுப்புக் குழுவை முறைப்படி செயல்பட வழிவகை செய்திட அன்புடன் வேண்டுகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.02.2025