உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், தேவேந்திரகுல வேளாளர்களுக்கு உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும்.!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்,
தேவேந்திரகுல வேளாளர்களுக்கு
உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும்.!
இந்திய ஜனநாயக அமைப்பு ஆட்சி, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளிலும் அனைத்துத் தரப்பினருக்கும் வேறுபாடுகள் இன்றி சம வாய்ப்புகளை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது.
அரசு நிர்வாகத்தில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 19 சதவீதமும், இதர பிற்பட்டோருக்கு 50 சதவீதமாக 69% இட ஒதுக்கீடுகள் உறுதியாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 3 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டால் ஒட்டுமொத்த 18 சதவீதமும் ஒரு சாதியினருக்கே பறிபோனது வேறு விஷயம். நீதித்துறை நியமனங்களில் மாஜிஸ்ட்ரேட் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் இருக்கும் இட ஒதுக்கீடுகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.
மதுரைக் கிளை உட்பட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். அதில் காலியாக போகும் 19 இடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்கும் பணி தொடங்கி உள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட நியமனங்கள் மாவட்ட நீதிபதிகளாக இருந்து பதவி உயர்வு பெற்று உயர் நீதிமன்ற நீதிபதிகளாக அமர்த்தப்படுகிறார்கள். மீதியுள்ள இடங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராகப் பணியாற்றக் கூடியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்கள் இந்த மண்ணை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அடர்த்தியாக வாழக்கூடியவர்கள் ஆவர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை துவங்கப்பட்டு 20 வருடங்கள் நிறைவுற்றுவிட்டன; எனினும் தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒருவர் கூட இதுவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படவில்லை.
அதேபோன்று வடக்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் பறையர் சமுதாயத்திற்கும் நீதித் துறையில் முறையான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பல சமூகங்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களுக்கு நீதித்துறையில் உரிய வாய்ப்பு வழங்கப்படாதது ஏற்புடையது அல்ல.
இட ஒதுக்கீடுகளும் சமூக நீதியும் முறையாக அமலாக்கப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்கக் கூடிய அமைப்பாக உச்ச நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றங்களும் இருக்கின்றன. அத்தகைய உயரிய அமைப்புகளில் அனைத்துச் சமுதாயத்தவரும் நீதிபதிகளாக அமர்த்தப்படும் போது தான் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்; சமூக நீதியும் நிலைநாட்டப்படும்.
எனவே, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக நியமிக்கப்பட உள்ள 19 நீதிபதிகள் நியமனத்தில் தகுதி வாய்ந்த தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதி திராவிட பறையர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு நேரடி நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களின் பங்களிப்பும் உரிய முறையில் இருக்கும் வகையில் நியமனங்கள் இருந்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொலிஜியம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.02.2025