திண்டுக்கல் மாங்கரை கிராம தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.! திமுக ஆட்சியில் அதிகரிக்கும் கூலிப்படை கலாச்சாரம்.!

திண்டுக்கல் மாங்கரை கிராம தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.!
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் கூலிப்படை கலாச்சாரம்.!
பிப்ரவரி 10 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்.!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் மாங்கரைக் கிராமத்தில் பூர்வீகமாக வசித்து வருபவர் பாலன். இவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ’இயற்கை எரு’ தயார் செய்து ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அதே கிராமத்தில் 5 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி புதிய வீடு கட்டி குடியேறியுள்ளார். அந்தப் பகுதியில் பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் குடியிருக்கிறார்கள்.
பாலன் வீட்டிற்கு அருகாமையில் சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சுசீலா என்பவர் குடியிருந்து வந்துள்ளார். பாலன் அந்த இடத்தில் வீடு கட்டிய நாள் முதல் சுசீலா மற்றும் அவரது குடும்பத்தார் பல்வேறு தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர். தெரு வழியாக நடந்து செல்லுகின்ற போது ஜாதியைக் குறிப்பிட்டு பலமுறை இழிவுபடுத்தி உள்ளனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் அறிவுரை கூறியும், அதைக் கேட்காமல் ’மாவட்ட அமைச்சர் எனக்கு நெருங்கிய சொந்தக்காரர்’ என்று சொல்லி அனைவரையும் உதாசீனப்படுத்தியுள்ளார். ’சாதியைக் கூறி பாலனை அங்கிருந்து விரட்டாமல் ஓயமாட்டேன்’ என்று பலமுறை ஆணவத்தோடு பேசியதாக செய்திகளும் உண்டு. அதற்கு ஏற்ப அவரது மருமகன் சுரேஷ் என்பவன் அணைப்பட்டி பகுதி ரெட்டியார் சத்திரம் திமுக ஒன்றியத் துணைச் செயலாளர் துணையோடு ’மதுபானக்கூடம்’ நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 31.01.2025-ஆம் தேதி கிராமமே உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சுசீலாவின் மருமகன் சுரேஷ் தனது ஜாதியைச் சேர்ந்தவர்களையும் மற்றும் அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட கூலிப்படையினரையும் சேர்த்து அழைத்து வந்து அன்று நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் பாலன் வீட்டின் கதவை உடைத்து அவர்களைத் தாக்கி உள்ளனர். அக்குடும்பத்தினர் மீது நடத்திய தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பாலன் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்ததைப் பார்த்த கூலிப்படையினர் தாங்கள் வந்த வாகனங்களை விட்டுவிட்டு ஓடியுள்ளனர். இது சாதாரணமான சம்பவம் அல்ல இது மிகப்பெரிய வன்கொடுமை சம்பவம் ஆகும்.
ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவு நடந்த இச்சம்பவத்திற்கு புகாரளித்தும் முறையாகக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தும் அரசியல் தலையீட்டால் இச்சம்பவம் வெளியே வராமல் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்குச் சாதகமாக பாதிக்கப்பட்டவர்களை சமாதானமாகப் போகச் சொல்லி மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மாவட்ட முக்கிய அரசியல் புள்ளிக்கு சொந்தக்காரர் என்பதாலும், கூலிப்படையை அழைத்து வந்த சுரேஷ் என்பவரும் அணைப்பட்டி ஈஸ்வரன் என்பவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்கள் என்பதாலும் அவர்களைப் பாதுகாக்கத் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் தென் தென்தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. அதற்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்களே பக்கபலமாகவும் இருக்கிறார்கள்.
மாங்கரைச் சம்பவத்தில் புதிய தமிழகம் கட்சி தலையிட்ட பின்பே, செய்தி வெளிவந்ததுள்ளது. பின்னரே காவல்துறை நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டி இருக்கிறது. இருப்பினும் கூலிப்படையை அனுப்பி வைத்த குற்றவாளியையும், குற்றச் செயலில் ஈடுபட்ட இருபதுக்கும் மேற்பட்டோரையும் இதுவரை கைது செய்யவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் 1999 ஆம் ஆண்டு நிலக்கோட்டை வெறியப்ப நாயக்கன்பட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், கவுண்டம்பட்டியில் சங்கன் எனும் இளைஞர் மீது சிறுநீர் கழித்த வன்கொடுமை, ஆவாரம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் உறவினர் இறுதி ஊர்வலத்தில் கல் வீசித் தாக்குதல் நடத்தி, வீடுகளைச் சூறையாடி தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதுபோன்று பட்டியலின மக்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்ற போதெல்லாம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்பதற்கிணங்க பெரியாரையும் அண்ணாவையும் பெயரளவிற்கு சொல்லிக்கொண்டு சாதிய மனப்பான்மையோடு நடந்து கொள்கிறார்கள்.
மாங்கரை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்று நடைபெறும் சாதியத் தாக்குதல் சம்பவங்களையும் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் 10.02.2025 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.02.2025