சங்கரன்கோவில் ஓட்டுநர் முருகன் கொலையில் திமுக மூத்த அமைச்சர் தலையீடு?? வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.!

அறிக்கைகள்
s2 272 Views
  • Dr K Krishnasamy 5
  • Dr K Krishnasamy 5
Published: 12 Mar 2024

Loading

சங்கரன்கோவில் வடக்கு புதூர் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் சங்கரன்கோவில் சரக காவலர்களின் தாக்குதலுக்குப் பலியாகி, நான்கு தினங்கள் ஆகிவிட்டன. குற்றத்தில் ஈடுபட்ட காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவருடைய உற்றார் உறவினர்கள் அவருடைய பிரதேதத்தை வாங்காமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள்; இன்று புதிய தமிழகம் கட்சி சார்பாக சங்கரன் கோவிலில் ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
இந்நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சர் இடைத்தரகர் மூலமாக கட்சி நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் கொடுக்க தயாராக இருப்பதாகவும், உடனடியாக பிரதேதத்தை பெற்று அடக்கம் செய்யவும், அந்த கொலைக் குற்றத்தை அப்படியே விட்டு விடவும் அந்த குடும்பத்தாரிடம் பேரம் பேசியதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படும். யாரோ செய்த குற்றத்திற்காக ஆளும் கட்சி எதற்காக பணம் தர வேண்டும்? இது மனித உரிமை மீறல் ஆகாதா? கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த மிகப்பெரிய குற்றம் ஆகாதா?
இது அக்குடும்பத்தாருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, தென் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதில் தேவையில்லாமல் குற்றவாளி காவலர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆளுங்கட்சி தலையிடுமேயானால் புதிய தமிழகம் கட்சி தமிழகமெங்கும் போராட வேண்டி இருக்கும் என்பதையும், இச்சம்பவத்தை மனித உரிமை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டி இருக்கும் என்பதையும் எச்சரிக்கை விரும்புகிறேன்.
வன்மம் கொண்ட மூன்று காவலர்கள் செய்த தவற்றைக் கண்டிப்பதற்கும், தண்டனை பெற்றுத் தருவதற்கும் பதிலாக ஒரு மூத்த அமைச்சரே இதுபோன்று பேரம் பேசுவது மிகப்பெரிய தவறான செயலாகும். ஆளுங்கட்சியினர் அந்த குற்றவாளிகளைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு, நீதியை நிலைநாட்ட குற்றம் இழைத்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், அவர்களைக் கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.03.2024.