புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம்

அறிக்கைகள்
s2 24 Views
  • Dr Krishnasamy
  • Dr Krishnasamy
Published: 25 Jan 2025

Loading

புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் 18.01.2025 சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் மாலை 06:00 மணி வரையிலும் கோயம்புத்தூர் பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர் ஐயா க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி உட்பட 61 உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் நிறைவில் கீழ்காணும் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :
மாணவப் பருவம் தொட்டு சமூக கொடுமைகளை நேரடியாக எதிர்கொண்டும், அவற்றை எதிர்த்துப் போராடியும் கல்லூரி வாழ்க்கையில் சிறை சென்றும், 1975 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக 9 மாதம் மிகக் கொடுமையான சிறைத் தண்டனையை அனுபவித்தும், சர்வதேச மற்றும் தேசிய, மாநில அளவிலான முற்போக்கு சித்தாந்தங்களை உள்வாங்கியும், வலுவான சமூக அமைப்பை உருவாக்கி ’மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை’ எனும் மகத்தான மூன்று வலுவான தத்துவங்களின் மீது ’புதிய தமிழகம்’ எனும் அரசியல் கட்சியை உருவாக்கி நமது தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தியாகி இமானுவேல் தேவேந்திரனா அவர்களின் பிறந்த மண்ணான இராமநாதபுரம் மாவட்டத்தில் 1998 டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநில மற்றும் துவக்க விழா மாநாட்டைச் சிறப்புற நடத்திக் காட்டினார்கள். அதன் தொடர்ச்சியாக 2 வது மாநில மாநாடு 2000 ஆம் ஆண்டு திருச்சியில் தேர்தல் சிறப்பு மாநாடாகவும், 3 வது மாநில மாநாடு 2002-ல் திருநெல்வேலியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மாநாடாகவும், 4 வது மாநில மாநாடு 2005 ஆம் ஆண்டு கோவையில் மண்ணுரிமை மாநாடாகவும், 5 வது மாநில மாநாடு 2008 ஆம் ஆண்டு மதுரையில் சமநீதி சமுதாய மாநாடாகவும், 6 வது மாநில மாநாடு 2018 ஆம் ஆண்டு விருதுநகர் பட்டம் புதூரில் உலக தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு மற்றும் அடையாளம் மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற மாநாடாகவும்;

அதேபோல, 1998 ஆம் ஆண்டு புளியங்குடியில் தேவேந்திரகுல வேளாளர்கள் அரசியல் எழுச்சி சிறப்பு மாநாடு, 1999 ஆம் ஆண்டு குற்றாலத்தில் சிறப்பு மாநாடு, 2002 ஆம் ஆண்டு விருதுநகரில் தேங்காய் தொழிலாளர்கள் மாநாடு; 2004-ல் டெல்லியில் தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு, கடைநிலை மக்களாட்சி செழிப்பிற்கு எளிய மக்களின் சுயநிர்ணய உரிமை, தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கோரி தேசிய மாநாடு, 2010 ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, 2012 ஆம் ஆண்டு கடையநல்லூரில் 15 ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு மாநாடு; 2013 ஆம் ஆண்டு தென்காசியில் விழி தமிழா! எழு தமிழா! மாநாடு, 2017 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மனித உரிமை மாநாடு, சென்னை YMCA-ல் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்றப் பிரகடன மாநாடு, 2018 –ல் தென்காசியில் மகளிர் அணி முதல் மாநில மாநாடு, திருச்சியில் மாநில இளைஞரணி மாநாடு, சேலத்தில் 22 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பட்டியல் வெளியேற்ற மாநாடு, 2021 ஆம் ஆண்டு மாவட்டந்தோறும் தமிழக அரசியல் வளர்ச்சி மாநாடாகவும், தென்காசி செங்கோட்டையில் உலக இந்துக்களின் எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு சிறப்பு – 25 ஆம் ஆண்டு துவக்க விழா மாநாடு; 2022 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 ஆம் ஆண்டு நிறைவு – வெள்ளி விழா மாநாடு; 2023 ஆம் ஆண்டு புளியங்குடியில் மதுவிலக்கு மக்கள் இயக்கத் துவக்க மாநாடு, இராமநாதபுரத்தில் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு என கடந்த 28 வருடத்தில் பல்வேறு மாநில, சிறப்பு மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்தி புதிய தமிழகம் கட்சியைப் புறக்கணிக்க முடியாத ’மாபெரும் சக்தியாக’ தமிழகத்தில் நிலைநாட்டியுள்ள தலைவர் டாக்டர் ஐயா அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:
2026 – ஆம் ஆண்டு ”கூட்டணி ஆட்சிக்கான அரசியல் களமாக” மாறியுள்ளது. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாட்டை 2025 டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று புதிய தமிழகம் கட்சியை தமிழக ஆட்சி – அதிகாரத்தில் அமர்த்திடும் ’அதிகார அமர்வு’ எனும் சிறப்பு மாநாடாக நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இம்மாநில மாநாட்டிற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் மக்களைத் திரட்டுவது எனவும்; மாநாட்டை வெற்றிகரமாக்கும் பொருட்டு சுவரெழுத்து பிரச்சாரம், துண்டுப் பிரசுரம் உள்ளிட்ட அனைத்து விதமான விளம்பரப் பணிகளையும் அந்தந்த மாவட்ட, ஒன்றிய பகுதி நிர்வாகிகள் உடனடியாகத் துவங்கிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3 :
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக தினமும் கொலை, கொள்ளைகளும்; பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களும்; கிராமப் பகுதியில் உள்ள தோட்டக் குடியிருப்புகளில் தனித்து வாழும் முதியோர், பெண்கள் குறி வைத்துத் தாக்கப்படுவதும், அவர்கள் எளிதாக கொலை செய்யப்படுவதும் கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்டி சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசை புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 :
தென் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதியப் படுகொலைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஆட்சி அதிகாரத்தில் அமைச்சர்களாக அமர்ந்து கொண்டு சாதி அமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதும், சாதி ஆதிக்க மனோபாவங்களைத் தூண்டுவதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். அது போன்ற செயல்பாடுகள் உள்ளவர்கள் அமைச்சராக இருப்பினும் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 :
தென் மாவட்டங்களில் தொடர் சாதிய மோதல்கள் நிலவுவதால் பொது அமைதி கெடுவதும், அதனால் தென்தமிழகத்தினுடைய தொழில், கல்வி உட்பட அனைத்து வளர்ச்சிகளும் தடைபடுவதும் சுழற்சி நிகழ்வாகிறது. சாதி ரீதியாக ஒரு தலைபட்சமாக செயல்படக்கூடிய காவல்துறையினர் மற்றும் தவறான தகவல்களை தரும் உளவுத்துறையினரை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6 :
தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து போய் உள்ளது. தமிழக அரசு உடனடியாக மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை புரையோடிப் போய் உள்ள ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7 :
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படக்கூடிய நியாய விலைக் கடை நியமனப் பணிகளில் வெளிப்படைத்தன்மையில்லாமல் பல்லாயிரக்கணக்கான பணிகளுக்கு அமைச்சர்கள், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கூறு போட்டுக்கொண்டு தகுதி, திறமை, இட ஒதுக்கீடு எதையும் கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் ரூ 7 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை பேரம் பேசி நடைபெறும் ஊழல் செயல்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறை அல்லது வேறு எந்தத் துறையின் பணிகள் நிரப்பப்பட்டாலும் முறையாக அறிவிப்பு செய்து வெளிப்படைத் தன்மையோடும், முறையாக இட ஒதுக்கீடு சுழற்சி முறைகளைப் பின்பற்றியும் பணியிடங்களை நிரப்பிட புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது; தவறும் பட்சத்தில் புதிய தமிழகம் நீதிமன்றம் செல்லத் தயங்காது என எச்சரிக்கிறோம்.

தீர்மானம் 8 :
தமிழகத்தில் தற்போது நடைபெற்று இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுடன் கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் எந்தவித வசதியும் இன்றி அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ’100 நாள் வேலைத் திட்டம்’ கூட இல்லாமல் இன்று வரை அல்லல்பட்டு வருகிறார்கள். எனவே, தற்போதும் அதேபோன்று கிராம ஊராட்சிகளின் விருப்பத்திற்கு மாறாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுடன் இணைக்கும் திட்டத்தினைக் கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 :
பல கிராம ஊராட்சிகளில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதி திராவிடப் பறையர் இன மக்கள் சுயமாக வெற்றி பெற்று அதிகாரத்தை அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த மக்களின் வாக்கு வங்கியைச் சிதறடிக்கும் வகையில் ஊராட்சிகள், ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே அது போன்ற ‘அரசியல் சாதிய வன்மத்தோடு’ ஊராட்சிகள், வார்டுகள் பிரித்து உள்ளதை மீண்டும் சரி செய்து பழைய நிலையே தொடர வேண்டும் எனவும்; பல பகுதிகளில் ஒரு கிராமத்தையே வெவ்வேறு மாவட்டங்களில் பிரித்து வைத்துள்ள அவல நிலையையும், தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள இளையராசனேந்தல், சித்திரம் பட்டி, அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளை மீண்டும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 10 :
அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளாலும், அரசின் அக்கறையற்ற தன்மையாலும் நடைபெறும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் தாராள விற்பனையால் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் வாழ்வு நாசமாக்கப்பட்டு வருகிறது. சில ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். மதுவை விற்றுத் தான் ஓர் ஆட்சி நடைபெற வேண்டுமெனில் அதுபோன்ற அவல ஆட்சி தமிழக மக்களுக்குத் தேவையே இல்லை. எனவே தமிழ்நாடு எங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா, மது மற்றும் போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை அறவே கட்டுப்படுத்திடவும்; மது விலக்கை உடனடியாக அமல்படுத்திடவும் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11 :
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12 :
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடும் சின்ன உடைப்பு கிராம மக்கள், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடும் அக்கிராம மக்கள், மேலூர் டங்‌ஸ்டன் திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அத்திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தீர்மானம் 13 :
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்று பல நாடுகளை இணைத்து உருவான தேசமல்ல இந்தியா. பல மொழி, இனம், ஜாதி, மதங்களை உள்ளடக்கிய தேசம் இது. எனவே தமிழ்நாட்டை தனி நாடாக எண்ணி ஒவ்வொரு நாளும் மேதகு ஆளுநருடன் தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிப்பது தமிழக மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல. ஆளுநர் பதவி என்பது தவிர்க்கவே இயலாத பதவி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும்; இந்திய அரசியல் சாசனத்தின் பிரத்தியேகமான இருநிலை (DUAL) ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டு ஆளுநர் உடனான அவசியமற்ற மோதல் போக்குகளைத் தவிர்த்து மாநில அரசின் அதிகார வரம்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் திமுக அரசை புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14 :
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அருகே உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் 6 தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் மாஞ்சோலை மலையக மக்களின் இருப்பிட உரிமையையும், வாழ்விட உரிமையையும் அரசு அங்கீகரிக்க வேண்டும். காப்புக் காடுகள், புலிகள் காப்பகம் என்ற பெயரில் மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமைகளைப் பறிக்கும் எவ்வித செயலிலும் தமிழ்நாடு அரசு ஈடுபடக்கூடாது என அரசியல் உயர்மட்டக் குழு எச்சரிக்கிறது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ள 108 பக்க அறிவுறுத்தல்களையும் ஆணையையும் நிறைவேற்றி, அதன் மூலம் மாஞ்சோலை மலையக மக்களின் இருப்பிட உரிமையையும், வாழ்வுரிமையையும் மாஞ்சோலையிலேயே நிலைநாட்டிடவும்; தமிழ்நாடு அரசு செய்ய முன் வரும் அரசின் நலத்திட்டங்களையும் மாஞ்சோலையிலேயே செய்து தரவும் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 15 :
‘இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலம்’ என முழங்கும் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் அவர்களால் அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிட பறையர் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அபகரித்து ’அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு’ என்ற பெயரில் கடந்த 15 ஆண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான உயர் பதவிகளில் ’அருந்ததியர்’ என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே ஒட்டுமொத்த 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் தாரை வார்க்கும் ’அநீதி’ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து மட்டங்களிலும் தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிட பறையர்கள் உட்பட 76 சமூக மக்களுடைய பங்களிப்பு குறித்தும், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்ட பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணியிடங்களில் யார் யாருக்கு எத்தனை சதவீதம் வழங்கப்பட்டது என்பதையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

நீதிபதி ஜனார்த்தனன் கமிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, 3% உள் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டுமெனவும், உச்சநீதிமன்றம் அறிவித்தபடி தமிழக அரசு பட்டியல் பிரிவில் உள்ள 76 சாதிகளின் அனைத்துத் தரவுகளையும் வெளியிட வேண்டுமெனவும், காலம் தாழ்த்தாமல் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்பட்ட அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமெனவும், புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 16 :
தமிழக அரசின் தவறான கொள்கை முடிவின் காரணமாக அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட பறையர் ஆகிய இரு பெரும் தமிழ்ச் சமூக மக்கள் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதை மறைத்துவிட்டு அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீட்டால் அதிக அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி நன்மை செய்துள்ளதாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு பட்டியல் சாதி பிரிவில் உள்ள மற்ற 75 சாதியினருக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த நன்மைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு விவாதிக்கத் தயாராக உள்ளனரா? என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிட பறையர் சமூகம் உள்ளிட்ட 76 சமூக மக்களுக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள 18% இட ஒதுக்கீடு உரிமையைப் பறித்து நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் கூற்றுப்படி, 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு பேசும் ‘ஆதி ஆந்திரர்களுக்கு’ தாரை வார்த்து பெரும்பான்மை தமிழ் இன மக்களுக்கு திமுக அரசு இழைக்கும் துரோகத்தைக் கண்டித்து 2025 பிப்ரவரி மாதம் முதல் தமிழகமெங்கும் 1000 கண்டனக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 17 :
திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த முகம்மது ஜெர்சின் என்ற நபரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவருக்கு முறையாக சிகிச்சை அளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இழப்பீடாக ரூபாய் 25 லட்சம் உடனடி நிவாரணமும், பாதிப்பு ஏற்படுத்திய நபரின் தொழிற்சாலையை முடக்கி சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட அப்பெண்மணிக்கு வழங்கிடவும்; வழக்கை விரைந்து நடத்தி தண்டனை பெற்றுத் தரவும் வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

தீர்மானம் 18:
கடந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களைப் பட்டியில் அடைத்து வைத்து ஓட்டுக்குப் பணம் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டு ஆளும் கூட்டணியினர் வெற்றி பெற்றதை நாடே அறியும்.! எனவே, தற்போது நடைபெற உள்ள இடைத் தேர்தலிலும் ஆளும் கட்சி திமுக வேட்பாளரே போட்டியிடுவதால் அதை விட முறைகேடு செய்து அராஜகத்தில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புதிய தமிழகம் கட்சி முழுமையாகப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி,MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
21.01.2024.