வேங்கைவயல் விஷயத்தில் மறைப்பதற்கும், யாரையும் பாதுகாப்பதற்கும் அவசியம் இல்லையெனில் தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.!

வேங்கைவயல் விஷயத்தில்
மறைப்பதற்கும், யாரையும் பாதுகாப்பதற்கும் அவசியம் இல்லையெனில்
தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு நடந்து, இரண்டு வருடங்கள் நிறைவுற்று விட்டன. இச்சம்பவத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்தன; குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வலியுறுத்தி பலரும் போராட்டம் நடத்தி விட்டனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அக்கிராமத்தில் உள்ள பலருக்கு டிஎன்ஏ சோதனைகளும் நடைபெற்றன. ஒரு நபர் நீதிபதி கமிஷன் அமைக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வேங்கை வயல் மனித உரிமை மீறலுக்கு ஏன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை? என பல தரப்பினரும் மீண்டும் மீண்டும் குரல் எழுப்பினர்; அரசு மவுனம் சாதித்தது.
இந்நிலையில் திடீரென ஜனவரி 24ஆம் தேதி அன்று புகார் அளித்த மூன்று பேர் குற்றவாளிகள் எனக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு வருடத்திற்கு மேலாகக் கண்டறியப்படாமல் நீடித்த இந்த வழக்கு இப்படி முடித்து வைக்கப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஒரு வருடத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதைப் பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை; அப்படி எனில் ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக லட்சக்கணக்கான மொபைல் எண்கள் ஆய்வு செய்து கண்டறியப்பட்டது அத்தனை விடயமும் பொய்யாகி விடுமா? என்று அரசுத் தரப்பும், ஆளும் கட்சிக்குச் சொம்பு தூக்கும் கும்பலும் பிதற்றுகிறார்கள்.
1993-ல் சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு வழக்கு முதல் எத்தனையோ தலித் மக்களின் புகார்கள் இறுதியில் அவர்கள் மீதே திருப்பி விடப்பட்டுள்ளன. எனவே, நீண்ட நாள் இழுபறிக்கு ஒரு முடிவுகட்ட காவல்துறை இது போன்ற ஒரு நிலைக்கு வந்துவிட்டதோ? என்ற சந்தேகம் பொதுவெளியில் எழாமல் இல்லை.
தங்கள் மீது பழி சுமத்தப் பட்டதைக் கண்டித்து வேங்கைவயல் மக்கள் மீண்டும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திப் போராடவும் தொடங்கியுள்ளனர். வேங்கை வயல் சம்பவத்தை பொருத்தமட்டிலும் அது அப்பட்டமான மனித உரிமை மீறல்; மாபெரும் குற்றம். உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பு. வேங்கை வயல் விஷயத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை! யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி,MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
27.01.2024.